Wednesday, October 14, 2020

PESUM DEIVAM


 பேசும் தெய்வம்   J K  SIVAN 


                                      நவராத்ரி சமயம்  பெரியவா 

குழந்தைக்கு முதலில்  இனிப்பு ருசி தெரியாது.  உண்ண  மறுக்கும்.  ஒரு நாள் துளி அதன் நாக்கில் பட்டதும்  கண்ணும்  கையும்  இனிப்பை தேடும்.  அது போல் தான்  பெரியவா பற்றி இன்னும் தெரியாதவர்கள் இருக்கலாம். ஏதேனும் ஒரு சம்பவம், நிகழ்ச்சி, அவரைப்பற்றி அறிந்து கொண்டபின்  மேலும் மேலும் அவரது பக்தர்களின் அனுபவங்களை தேடிப்பிடித்து  படித்து ரசிப்பார்கள். இது நான் என்  அனுபவத்தில் கண்டது.  முதலில் எனது ''பேசும் தெய்வம்''  புத்தகத்தை  பலர்  தொடவில்லை.  பிறகு அநேகர்  என்னை தொடர்பு கொண்டு எங்கே கிடைக்கும் இந்த புத்தகம்  என்று கேட்கும்போது என்னிடம் புத்தகம் இல்லை. அதற்கு விலை கிடையாது என்பதால்   கேட்டவர்களுக்கு எல்லாம் தந்துவிட்டேன். மிக்க சிரமத்தோடு மறுபதிவு 1000 பிரசுரித்து அதுவும் தீரும் நிலையில் உள்ளது.  ரெண்டு பாகங்கள் இவ்வாறு பரவி  மூன்றாவது பாகம்  அச்சேற  காத்திருக்கிறது. 

ஏற்கனவே  பதிவிட்ட  ஒரு  பெரியவா பக்தர் அனுபவம் மீண்டும் சந்தோஷமாக அனுபவிக்க சொல்கிறேன்;
மகா பெரியவாளைப் பற்றி எந்த  பழைய  விஷயமாக இருந்தாலும்  யார் சொன்னாலும் அதில் ஏதாவது ஒன்று புதிதாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. கடலில் நிறைந்து இருக்கும் முத்துக்களில் எல்லாமே சிறந்தவை தானே.  

வடக்கு சென்னை பகுதியில் இருக்கும் ஒரு ஊர் எண்ணூர். எங்கும் நிறைய உப்பங்கழிகள், கடல் நீர் உள்ளே பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்த இடம். எண்ணூருக்கு அருகே காட்டுப்பள்ளி என்று ஒரு ஊர் இருக்கிறது. . அங்கு நவராத்திரி பூஜை ஒரு சமயம் நடந்தது. காட்டுப்பள்ளி அவ்வளவு எளிதில் அடையக்கூடிய இடம் இல்லை. தீவு மாதிரி. எண்ணூர் போய் அங்கிருந்து ஒரு படகில் பிரயாணம். கயிற்றைக் கட்டி படகை இழுத்து செல்வார்கள். பெரியவா இந்தமாதிரி தனிமையான இடம் கண்டால் விட மாட்டார்., வனாந்திரம் மாதிரி, இயற்கையின் எழில் கொஞ்சும் ஜன சஞ்சாரம் அதிகம் இல்லாத அந்த இடத்தில் பெரியவா அந்த வருஷ
நவராத்திரியில் காஷ்ட மௌனமாயிருந்தார். அந்த நவராத்ரி ஒன்பது நாளும் உபவாசம். அதோடு கூட மௌன விரதம். சைகையால் கூட எதுவும் பேசமாட்டார். உயிருள்ள ஒரு தெய்வச்சிலை.

நிறைய பேர் அவரை தரிசிக்க அங்கே சென்றபோது பெரியவா ஒரு மரத்தடியிலே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர்கள் சென்ற சமயம் ஒன்பது நாள் காஷ்ட மௌன விரதம் முடிந்திருந்தது.
சென்றவர்களில் ஒருவர் ஸ்ரீ ராமமூர்த்தி சர்மா, மற்றும் சில பிரவசனம் செய்பவர்களும், ஒரு வருமானவரி துறையில் பணி புரியும் முக்கிய நபரும் இருந்தனர். பக்தியோடு பெரியவா எதிரில் அமர்ந்திருந்தார்கள்.

பெரியவா ஸ்ரீ ராமமூர்த்தி சர்மாவைப் பார்த்து முகத்தில் புன் சிரிப்போடு திடீரென்று ஒரு கேள்வி கேட்டார்.
‘உனக்கு மாதம் எவ்வளவு வருமானம் வரும்?
“சுமார் ரூ 300/- வரை வரும்” .
“நீ கடன் வாங்குவியா?” .
“அப்பப்போ ரூ 10, 20ன்னு வாங்குவேன்”
உடனே அருகிலிருந்த வருமானவரி ஆபிசரை நோக்கி, “உனக்கு எவ்வளவு சம்பளம்?” என்று கேட்டார்
“ரூ 10,000/- வரும். அதுவும் போராததால் அப்பப்போ ரூ 3000/- கடன் வாங்குவேன். குடும்பத்துலே இது சகஜம் தானே” என்றார் வருமான வரி.
“நீங்கள் சொல்வது வாஸ்தவம் தான். எவ்வளவு இருந்தாலும் போறாதுதான். ஏன்னா நாம் தான் நமது தேவைகளை பெருக்கிக் கொண்டே போகிறோமே . போதும் என்று எண்ணம் எப்போ வருதோ அப்போதான் நல்ல கார்யம் செய்ய முடியும்” என்றார் பெரியவா. பேசிக்கொண்டே, கையில் ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து உரித்தார். தோலை தன் கையிலேயே வைத்துக்கொண்டு பழத்தை வருமானவரி ஆபிஸரிடம் கொடுத்தார். கொடுத்ததோடு இல்லாமல், ஒரு கேள்வியையும் வருமான வரியிடம் கேட்டார்.
“அதில் எத்தனை சுளை இருக்கு பார்த்து சொல்லு ?”
வருமான வரி அந்த பழத்தை இரு பிளவாக செய்து “ இந்த பக்கம் 6, அங்கே 5 மொத்தம் 11” என்றார்.
“இந்த பழத்தை ஷட் பஞ்ச பலம் (ஷட் – 6 , பஞ்ச – 5) என்று சொல்லலாம் இல்லியா? ஆறும் அஞ்சும்  6X 5
இருக்கிறதால ஆரஞ்சு.  வெள்ளைக்காரன் நம்ம கிட்டே இருந்து கேட்டு பேர் வைத்தானோ?''
இதற்கு பின்னால்  ஒரு  சூக்ஷ்மம் இருக்கிறது.
ஸ்ரீ ராமமூர்த்தி சர்மா தான் அந்த வருமானவரி ஆபிஸர் வீட்டுக்கு புரோஹிதம் செய்வது வழக்கம்.
ஒரு சமயம் அவசரத்தில் ஆரஞ்சு பழத்துக்கு சமஸ்கிருதத்தில் நாரங்க பலம் என்பதற்கு பதிலாக
ஷட்பஞ்ச பலம் என்று சொல்லி  வருமான வரி அதிகாரியிடம் வசை வாங்கிக் கட்டிண்டார். அது வேத வாக்கு
பொய்யாகாது என்பதை எவ்வளவு ஞாபகமாக சூக்ஷ்மமாக மகா பெரியவா உணர்த்தினார் என்று சம்பந்தப் பட்ட  வருமான வரி அதிகாரிக்கும்  புரிந்தது. 

மஹான்கள் நம்மைப் போல் நேரடியாக பட்டவர்த்தனமாக பேச மாட்டார்கள். குறிப்பால் அவர்கள் உணர்த்துவதை புரிந்து கொள்ளும் சக்தி நமக்கு வளரவேண்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...