Sunday, October 4, 2020

LIFE LESSON

 

       சுப்புவுக்கு சொன்னது எல்லோருக்கும் பொருந்துமா?

                                                             J K  SIVAN 

உலகில்  ஒவ்வொருவரும்  எத்தனை வருஷம்  மூச்சு விட்டுக்கொண்டு இருக்க போகிறோம் என்று யாருக்காவது தெரியுமா?  இதில் ஏழை, பணக்காரன், ஆண்  பெண்,  குழந்தை,  தாத்தா , கருப்பன்,

சிவப்பன்,ஹிந்து முஸ்லீம் கிருத்துவன்  என்ற வித்யாசம் ஏது ? பகவானுக்கு இந்த வித்யாசம் எல்லாம் கிடையாது.  எல்லாம் நாமே உண்டாக்கிக் கொண்டு  அதன் பின் விளைவை  ஏற்க நேரிடுகிறது. 

நண்பன் சுப்ரமணியம் வந்து கேட்டபோது என்ன சொன்னேன்?  
'' சிவன் சார்  எனக்கு  60 ஆயிடுத்து,  ரிட்டையர் ஆகிவிட்டேன். என்ன செய்வது என்றே  புரியவில்லை?  ஏதோ ஒரு இனம்புரியாத  பெரிய  கேள்விக்குறி  எதிரே நிற்கிறது.   எப்படி குடும்பம்  நடத்துவது?   சேர்த்து வைத்தது போதுமா?  இன்னும் எத்தனை  வருஷத்துக்கு அது  தாளும் ? குழந்தைகளுக்கு செட்டில்  பண்ணவேண்டுமே ? எனக்கு அப்புறம்  என்ன ஆகும் ?  பயமா,  நம்பிக்கையின்மையா  என்ன வென்றே  தெரியவில்லை.  ஏதாவது சொல்லுங்களேன்''

''சுப்பு,  எதற்கு வேண்டாத கவலையெல்லாம்?   எது  நம்மிடம்  இருந்தாலும் ஒருநாள் சொல்லாமல் புறப்படும்போது கூட கொண்டுபோக முடியுமா?  எத்தனை பேர் பெரிய பெரிய  கோட்டை எல்லாம்  கட்டிவிட்டு  வெறுங்கையை  கட்டிக்கொண்டு போகிறவர்கள்? பார்த்தும்  ஞானம் வரவில்லை என்றால் தப்பு நம்முடையது தானே. கூட  வராததை எதற்கு கட்டி க் காக்க வேண்டும். முடிந்தபோதே  நல்லவிதமாக, நல்ல வழியிலே மனசுக்கு நிம்மதியாக  தருவோம்,  யாராவது ஒருவனுக்கு   எனக்கு அப்புறம்  உனக்கு தான் எல்லாம்  என்று சொல்லிப்பார்.  சொன்னவன்  எப்போது மண்டையைப் போடுவான்  என்று கழுகாய் காத்திருப்பவர்கள் அநேகர்  உலகில்  என தெரியாதா?

அப்புறம் நமக்கு நடக்கப்போவதை நாம்  அறியப்போவதில்லை. வந்த இடம் போய் சேர்வோம்.  மண்ணோடு கலப்போம். ஒரு உணர்ச்சியும் இருக்கப்போவதில்லை. யார் என்ன சொன்னாலும் காதில் விழப்போவ தில்லை. போற்றல் தூற்றல் எதுவும் நெருங்கப்போவதில்லை.  எதுவும் நம்முடையதில்லை என்றாகிவிடும்.  பேர் நம்மை விட்டு பிரியும். 

பிறந்ததை எல்லாம் வளர்த்தோம், படிக்க வைத்தோம்.   முடிந்த வசதிகள் செய்து கொடுத்தோம்.
 பறவைகளுக்கு ரெக்கை முளைத்ததும்  அது தானாக பறந்துவிடும். கொடுக்க முடிந்ததை கொடுத்தோம், செய்யவேண்டியதை செய்தோம் என்ற திருப்தி மட்டும் போதும்.  அவரவர் கர்ம வினைப் பயன் படி அவரவர் வாழ்க்கையை எதிர் கொள்ளவேண்டியதை யாரும் தடுக்க முடியாது.

 எந்த எதிர்பார்ப்பும் எவரிடமிருந்தும்  தேடவேண்டாம். பிறருக்கு  முடிந்தபோதெல்லாம் உதவ வேண்டியது நமது கடமை. நம்மை  அப்படித்தானே  நமது பெற்றோர்  பலனெதிர்ப்பார்க்காமல் உழைத்து பாதுகாத்து வளர்த்தார்கள். 

எல்லாவற்றையும் அறிந்து  பாரபட்சமின்றி  நம்மை வழி  நடத்திச் செல்லும் இறைவனை மறக்காதே. நன்றி சொல்லு.  அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் அசையாத நம்பிக்கை வேண்டும்.  இதுவரை இல்லையென்றால் இப்போது முதலாவது  உணர்ந்து  உண்மையை புரிந்து கொள்ளவேண்டும்.   அப்போது உடல்,  உள்ள,   நலம்  பாதிப்பு இருக்காது.  மனம் நிம்மதி பெறும்.  பார்ப்பதெல்லாம் சந்தோஷத்தை கொடுக்கும்.  ஆனந்தம் என்றால் என்னவென்று அறிந்து அனுபவிக்க முடியும்.  திருப்தி, சந்தோஷம் இல்லாமல் கழித்த ஒவ்வொருநாளும் நரகம்.  நரகம்  ஸ்வர்கம்  வேறு எங்கோ மேலே இல்லை.  இப்போது  இங்கே அனுபவிப்பது தான்.  எண்ணம், செய்கை  இரண்டும் நல்லதாகவே இருக்கும்.

சில  அற்புத  விஷயங்கள்  சொல்கிறேன்:

வாழ்வும்  சாவும்  சந்தித்தபோது   ''ஏண்டா நண்பா, வாழ்க்கையே,  எல்லாரும் உன்னை  விரும்புகிறார்கள் என்னை வெறுக்கிறார்கள்?'' என்று மரணம் கேட்டபோது  வாழ்வு  என்ன சொன்னது?  ''நான்  அழகான  பொய் என்பதால் என்னை நம்பி  மகிழ்கிறார்கள்.  நீ  அருவருப்பான அப்பட்டமான  உண்மை. அதனால் தான் உன்னை பிடிக்கவில்லை '' என்றது.

துன்பங்கள் கஷ்டங்களை கண்டு  ஏன்  துவளவேண்டும்?  அது உனக்கு எப்படி அதை கடக்கவேண்டும் என்று அறிவுரை சொல்வதுடன்  இனி எப்படி அது நேராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற பாடம் புகட்டுகிறது.
இளம் வயதில் நிறைய சக்தி இருந்தபோது  பணம் இல்லை.   வளர்ந்து  பணம்  சம்பாதிக்க சக்தி இருந்தபோது அதை அனுபவிக்க நேரம் இல்லை.  வயதானபோது  பணம் சேர்ந்தபோது, அனுபவிக்க  சக்தியோ, அதிக நேரமோ  இல்லையே.   கானல் நீராக வாழ்கிறோம்.

நம்முடைய  தவறுகளை சரியென்று சப்பை கட்டுவதில் நாம் ஒவ்வொருவரும் மிகப்பெரிய  வக்கீல்கள். எல்லோருமே  பல்கிவாலா,  ஜெத்மலானி தான்.  அதே சமயம்  இன்னொருவர் தப்பை அலசுவதில் நாம் பெரிய  நீதிபதிகள் - இப்படி ஒரு வேடிக்கை விளையாட்டு விளையாடுவதில்   ஏன் அலுப்பே இல்லை?. 

நல்லவர்களையே நாடு,  தீயவர்களை  சேர்க்காதே,  என்று சொல்லும்போது  ஒன்றை மறந்து விடுகிறோம். எல்லோரிடமும் இருக்கும் நல்லதை எடுத்துக்  கொண்டு   கெட்டதை , பிடிக்காததை, தள்ளிவிட  ஏன் மறுக்கிறோம்.  யார்  ஒரு தப்பும் இல்லாமல்  முழுவதும்  சரியாக  perfect  ஆக பிறந்தவர்கள்?

தலை நிமிர்ந்த  கர்வம் அகம்பாவம்  வேண்டாம்.   உலகில் நீயே  முதல் என்று பதக்கம் கொடுத்தாலும் நீ தலை குனிந்து தான் அதை கழுத்தில் பெறவேண்டும்.  குனிவு  கனிவு ரெண்டும் வாழ்வில்  ரெண்டு கண்கள். ஒவ்வொரு நாளையும்  நேற்றை விட இன்று மிகவும் சிறந்த நாள் என்று  வரவேற்போம்.  தோல்விகளை  சந்திக்கும்போது  வெற்றி கொஞ்சம்  மெதுவாக  லேட்டாக  நடந்து வருகிறது என்று  வர காத்திருப்போம்.  மஹா பெரும் சமுத்திரத்தில் கப்பல் மிதக்கும்போது    நிறைய   பெரிதாக  கடல் நீர் இருந்தாலும்  கப்பலை  மூழ்கடிக்க முடியாது.  கப்பலில் ஓட்டை ஏற்பட்ட பொது தான்   உள்ளே  நீர்   நுழையும்போது  தான் கப்பல் மூழ்கும் இல்லையா? கவலைக்கும்  தீய எண்ணங்களுக்கும்  சோகத்திற்கும்  இடம் கொடுக்காமல் வாழ்க்கை எனும் கடலில் சுகமாக மிதப்போமே.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...