Tuesday, October 20, 2020

pesum deivam

 

பேசும் தெய்வம்:         J K  SIVAN 
                                                 
  4    முன்னூறு ரூபா பணக்காரன் 

சுந்தரராமனின்  பெரியவா அனுபவம் தொடர் கிறது.  இது நான் எழுதும்  நான்காவது பகுதி.  சுந்தரராமன் சொல்வது தொடர்கிறது. கேளுங்கள்:

''எனது ஹை ஸ்கூல் தமிழ் வாத்யார்  ஒருவர். பெயர்   திரு  முருகேசனார்.  ஒருநாள் என்னைத் தேடி  என் அக்கா  வீ

ட்டுக்கு வந்தார்.   எதிர்பார்க் காத  வரவு மட்டுமில்லை,  ஒரு நல்ல சேதியும் கொண்டு வந்திருந்தார்.  அவர் ஒரு நாத்திகர்.  எனது தமிழாசிரியர்.   ஆகவே அவரை  வணங்கி னேன். 

''என்னப்பா  சுந்தர ராமா, நல்லா  இருக்கியா.  உனக்கு தெரியும் இல்லியா நான்  பெரியாரை பின்பற்று கிறவன். பிராமணர்கள்  சிலர்  நண்பர் கள் உண்டு என்றாலும்  அவர்கள் யார் வீட்டுக்கும் போகமாட்டேன்.  இங்கே ஏன் உன்னைத்  தேடி வந்தேன் என்றால் அதற்கு ஒரு  காரணம் உண்டு.  அது  உன்னை வாழ்த்தவே. 

நம்ம பள்ளிக்கூடத்திற்கு ஒரு நல்ல பேர், பெருமை உன்னாலே கிடைச்சிருக்கு.   SSLC  பரிக்ஷையிலே  தமிழ்நாடு மாநிலத்திலேயே  தமிழில்  முதல் மாணவ னாக நீ   பாஸ் பண்ணி இருக்கே. உன்னைப் போலவே  இன்னொருத்தனும்  முதல் மார்க் எடுத்திருக்கான்.  அவன் இருக்கிறது வேறே ஊர்லே
.
தர்மபுரம் ஆதீனம்  வருஷா வருஷம் SSLC லே  தமிழில்  முதல் மார்க்  வாங்கற மாணவ மாணவி யருக்கு  ரூபாய் முன்னூறு பரிசு தொகை  பரிசளிக்கிறது வழக்கம்.  நீ  முதல் மார்க்  நம்ம பள்ளி மூலமா எழுதி  வாங்கி யிருக்கிறதாலே,
அவங்க நம்ம பள்ளி  ஹெட்மாஸ்டருக்கு ஒரு தந்தி அடித்து  ஒரு  பிரதிநிதியை அனுப்பி  சென்னை தர்மபுரம் ஆதீனம் அலுவலகத்திற்கு போய்  பரிசுதொகையை பெற்றுக்கொள்ள சொல்லி இருந்தாங்க. நம்ம பள்ளிக்கூட  ஹெட்மாஸ்டர்  என்னை நியமித்திருக்கிறார்.  ரெண்டு பேர் பரிசுத் தொகைக்கு உரியவர் கள் என்பதால்  இரு மாணவர்கள் பெயரையும் சீட்டுகளில் எழுதி  எல்லோர் முன்னிலை யிலும்  லாட்டரி  குலுக்கலில்  யார்  பேர் வருகிறதோ அவருக்கு பரிசு என்று முடிவு
 உண்மையிலே  எனக்கு   எந்த  ஆதீனங்கள் மேலும்  மதிப்பு மரியாதை எல்லாம் கிடையாது.  ஆனால்  நமது பள்ளி  சிறந்த  தமிழ் மாணவன் என்பதால் இந்த ஆதீனத்திற்கு உன் சார்பாக செல்கிறேன்.  முருகேசனார் சிரித்துக்கொண்டே   நான் தீவிரமாக  பெரியார் கொள்கை பின்பற்றினாலும்,  ஆசாரியரை பின்பற்றும் பக்தனான உனக்காக ஆதீனம் செல்கிறேன்''  என்றார் .   எனக்கும்  என் அக்காவுக்கும்  ரொம்ப  சந்தோஷமாக இருந்தது இந்த சேதி. 

''ஐயா  நாங்கள்  பிராமணர்கள், எங்கள் வீட்டில் நீங்கள்  காப்பி  பால் ஏதாவது சாப்பிடுவீர்களா?''

''சுந்தரம்,  உனக்கும் எனக்கும் உள்ள உறவு,  ஆசிரியர், சிறந்த  மாணவன் என்பதால் இங்கே  மீதி விஷயங் களுக்கு இடம் இல்லை.  சந்தோஷ மாக  நீங்கள் கொடுக்கும்  பாலை சாப்பிடுவேன்.'' 

மூன்று நாள் கழித்து  ஹெட்மாஸ்டர் வேலாயுதம் பிள்ளை, பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு பையனை அனுப்பி எனக்கு  முன்னூறு ரூபாய் பரிசு கிடைத்திருப்பதாக  சேதி வந்தது. தருமபுர  ஆதீனத்தில்  சென்னையில்  லாட்டரியில் எனக்கு  பரிசா? 

அடுத்த  நாள் பள்ளியில்  ஒரு சிறிய  விழா.  எனது பெயர்  பெரிதாக  ஒரு பலகையில் எழுதி பரிசு பெற்ற மாணவனாக  அறிவிப்பு . மரியாதை. எனக்கு  பரிசுத் தொகை வழங்கினார்கள்.
எதிர்பாராத விதத்தில்  இந்த பணம் பரிசாகப்   பெற்றதை  சின்னகாஞ்சிபுரம் சென்று பெரியவா கிட்டே சொல்ல கிளம்பினேன்.  அப்போது  அவர்  சிவஸ்தானத்தில் இருந்தார்.  நமஸ்கரித்தேன். அவர் எதிரில் மூங்கில் தட்டில்  முன்னூறு ரூபாயை  வைத்தேன்.  ஆச்சர்யத்தோடு என்னைப் பார்த்தார்.   பெருமையாக  நான் பரிசு   பெற்ற  விஷயம் சொன்னேன். 

''பரவாயில்லையே,   கேட்க  ரொம்ப சந்தோஷம்.  அது சரி.  சிதம்பரத்தில்  ரத்தினசாமி செட்டியார்  நீ  110 ரூபாய் கேட்க போகும்போது என்ன சொன்னார்?  

நான்  அவர்  அடமானம் வைக்க  ஏதாவது சொத்து, ஆபரணம் இருக்கிறதா?'' என்று கேட்டார். என்னிடம் எதுவும்  இல்லையென்றதும் , அவர்  அப்படியென்றால் பணம் ரூபாய் 110 கடன் கொடுக்க முடியாது என்று சொன்னதைக்  கூறினேன்.   ராமகிருஷ்ண சாஸ்திரிகளுக்கு தெரியுமே அவர் வந்து சொல்லி இருப்பார் என்று நினைத்தேன்.  ஒருவேளை நான் சொன்ன விவரம் முழுசாக  பெரியவாளிடம் அவர்  சொல்லவில் லையோ?

“ பகவான் எப்படி அதிசயமாக  ஒவ்வொன்றையும்
  செய்கிறார்  பார்த்தாயா?”

''பெரியவா  எனக்கு  உங்களைத் தவிர வேறே பகவான் யாரும் தெரியாது''

''ஓஹோ  அதனால் தான் நீ  நல்ல சமாச்சாரம் சொல்லி  உன் பணத்தை என் முன்னால்  வைத்து விட்டு எடுத்துக்கொண்டு போக வந்தியா?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார். நான் பதில் சொல்லவில்லை. 

''இதை எப்படி செலவு செய்யணும்னு  ஏற்கனவே, மனசிலே  பிளான் போட்டுட்டியோ?''

''அப்பா  ஆபரேஷனுக்கு  டாக்டருக்கு  100 ரூபாய்  பாக்கி தரணும்.  ஒரு நூறு ரூபாய்க்கு ஒரு பழைய சைக்கிள் வாங்கலாம்னு இருக்கேன். நடக்க கஷ்டமா இருக்கு காலேஜுக்கு. ''

''அப்போ கைவசம் இன்னும்  நூறு ரூபாய் இருக்கே.  பணக்காரன் தான் நீ '' 

பிரசாதம் கொடுத்து சிதம்பரம் அனுப்பினார்.
சிவஸ்தானம்  கோவில் அமைதியாக மனதிற்கு ரம்யமாக என்னை கவர்ந்தது.  பெரியவாளிடம் விடைபெற்று க்கொண்டு  அந்த சிவன் கோவிலை பிரதக்ஷணம் வந்தேன். முதல் பிரதக்ஷணம் வந்ததும்  ஒரு இளம் வயது அய்யங்கார்  வைதீகமாக  பஞ்சகச்சம், திருமண்  எல்லாம் அணிந்து  கோவில் வாசலில் நின்றபடி 

'' இங்கே யாரோ பணக்காரர் இருக்கார். அவரை பெரியவா  பார்க்கணுமாம்'' என்று உரக்க சொல்லி கொண்டிருந்தார். கிட்டத்தட்ட நாற்பது ஐம்பது பேர் அங்கே நின்று கொண்டிருந்தவர்கள் யாரும்  இதற்கு  பதிலளிக்கவில்லை. அசைய வில்லை.   நான் ரெண்டாவது ப்ரதக்ஷிணம் வரும் போதும் அதையே திரும்ப  உரக்க சொல்லிக் கொண்டிருந்தார்.  ஒருவரும் அதற்கு  பதிலளிக்க வில்லை. அய்யங்கார் உள்ளே சென்று பெரியவாளிடம் விஷயம் சொன்னார்.   எனது மூன்றாவது ப்ரதக்ஷிணம் ஆகி  நான் உள்ளே  போய் கற்பூர ஹாரதி தரிசித்து விட்டு வெளியே வந்தேன்.   அப்போது  ஐயங்கார் மறுபடியும்  வாசலில் வந்து

''இங்கே முன்னூறு ரூபாய்  பணக்காரர் யாரோ இருக்கார். அவரை பெரியவா கூப்பிடறா'' என்கிறார்.
எனக்கு புரிந்துவிட்டது. உள்ளே ஓடினேன்.  குடிசையில் பெரியவா இருக்கும் இடம் சென்றேன். 

''என்னடா நீயா நான் தேடின பணக்காரன்' னு  வாய் விட்டு சிரித்தார்  மஹா பெரியவா.  அந்த குழந்தை சிரிப்பு  உள்ளத்தை கொள்ளை கொள்ளும். 

''பெரியவா, எங்கிட்டே  இப்போ  முன்னூறு ரூபா இருக்கு. அது உங்களுக்கே  தெரியும். ''

''அப்போ  எனக்கு  முப்பது ரூபா  கொடுப்பியா?

'' நான்  பெரியவா முன்னால்  இருந்த மூங்கில் தட்டில் முன்னூறு ரூபாயை வைத்தேன்.

'' எனக்கு  முப்பது ரூபாயே  போதும்''  என்கிறார்.
நான் முப்பது ரூபாயை  தட்டில் வைத்து விட்டு மீதியை எடுத்து வைத்துக் கொண்டேன். 
வாசலில்  உரத்த குரலில்  கூப்பிட்ட  ஐயங்காரை  சுட்டிக்  காட்டி  '' நீ  உன் தமிழ்   ஞானத்திற்காக  இந்த பரிசு பெற்றாய்.  அவர்  தன்னுடைய  ஸம்ஸ்க்ரித  பாண்டித்யத்தை சொல்லிக் கொடுத்து  பிழைக்க  விரும்புகிறார் அது விஷயமாக  ஏதோ  பட்டப்பரீக்ஷை  ஒரு  தனியார் நிறுவனத்தில் எழுதி,  பரிக்ஷையில்  பாஸ் ஆகணும். நாளைக்கு தான் கடைசி நாள் பரிக்ஷைக்கு பணம் கட்ட. என் கிட்ட வந்து முப்பது ரூபாய் கேட்டார். என் கிட்டே  ஏது  காசு.  உன் ஞாபகம் வந்தது. வாசலில் போய் குரல் கொடுங்கோ''  என்று சொன்னேன். இந்த தட்டிலே நீ வைச்ச  முப்பது ரூபாயை உன் கையினாலே யே  எடுத்து  அந்த ஐயங்கார்  ஸம்ஸ்க்ரித பண்டிதர் கிட்டே கொடு. பரிக்ஷை எழுதி பட்டம் பெற்று நாலு குழந்தைகளுக்கு  ஸமஸ்க்ரிதம்  சொல்லி கொடுக்கட்டும்''.

அப்படியே செய்தேன்.  அவர் என்னை  வாயார புகழ்ந்தார். 

'' இருங்கோ,   நாம ரெண்டு பேருமே  யாருக்கு தேங்க்ஸ் சொல்லணும்  தெரியுமா'' என்று சொல்லி மஹா பெரியவா இருந்த பக்கம் காட்டிட்டு சிதம்பரம் திரும்பினேன்
(.தொடரும் )

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...