Wednesday, January 10, 2018

SESHADRI SWAMI ARADHANA DAY




''புது வீடும் யோகாப்பியாசமும் ''
J.K. SIVAN

ஆரம்பம், உதயம் என்று ஒன்று இருக்குமானால் அதற்கு முடிவு, அஸ்தமனம் என்பது நிச்சயம் என்பது காலத்தின் நியதி. மனிதர்களில் இதை பிறப்பு இறப்பு, ஜனனம் மரணம் என்போம். ஒவ்வொன்றுக்கும் ஏதாவது காரணம் கற்பிப்பது நமக்கு வழக்கம்.

''நகரங்களில் விசேஷமான காஞ்சி. ('' நகரேஷு காஞ்சி''. ஆதி சங்கரர்) மஹா பெரியவர் வாழ்ந்த ஊர். ஏக ஆம்ரம் (ஒத்தை மாமரம்) புகழ் பெற்ற ஏகாம்பரேஸ்வரர் அருள் பாலிக்கும் இடம். இடறி விழுந்தால் ஏதாவது ஒரு சிவன் அல்லது விஷ்ணு கோவில் மேலே எனும்படியாக ஏராளமான புண்ய ஸ்தலங்கள். காஞ்சிபுரம் இன்னொரு கும்பகோணம். பல்லவர்களின் தலைநகரம்.

ஒரு முப்பது வைதீக குடும்பங்கள் ஒருகாலத்தில் அங்கு குடியேறின. ஒன்று காமகோடியார் பரம்பரை. 30 குடும்ப அதில் பத்து பௌரகுத்ஸ கோத்ரம். இன்னொரு பத்து கௌண்டின்ய கோத்ரம். மீதி பத்து கௌசிக கோத்ரம். மொத்தத்தில் பாதி பேர் எங்கள் அஷ்டஸஹஸ்ர வகுப்பு. மீதி பாதி வடமர். காலப்போக்கில் பிழைக்க வழி தேடி இந்த குடும்பத்தில் பலர், வேத சாஸ்த்ரா, புராண ஞானம் இருந்ததால் எங்கெங்கோ பல ராஜ்யங்களுக்கு, சமஸ்தானங்களுக்கும் சென்று பல வருஷங்கள் கழித்து கொஞ்சம் பேர் மீண்டும் காஞ்சிக்கே வந்தன.

அதில் ஒன்று காமாக்ஷி அருள் பெற்ற காமகோடி சாஸ்திரி குடும்பம். வேத, சாஸ்திரம் சகலமும் அறிந்தவர் ஆயிரத்தெட்டுக்கு குறையாத காயத்ரி மந்திரம் உச்சரித்து நித்ய அக்னி ஹோத்ர ஹோமம் செய்யும் குடும்பம். நிறைய சிஷ்யர்கள். கந்தர்வ வேதம் தெரிந்ததால் காமகோடி சாஸ்திரி மனமுருகி அற்புத கானம் செய்வார். நிறைய கீர்த்தனைகள் எல்லா தேவதைகள் மேலும் இயற்றியவர். வந்த வாசியில் வழூர் என்று ஒரு கிராமத்தில் ஒரு ஆஸ்ரமம் போன்ற வீடு ஒன்று பக்தர்கள் கட்டி கொடுத்தார்கள். பலகாலம் அங்கே வாழ்ந்த காமகோடி சாஸ்த்திரிக்கு புத்ர பாக்கியம் இல்லாமல் அண்ணா சிதம்பர சாஸ்திரி யின் குழந்தைகளை தம் குழந்தைகளாக பாவித்து மகிழ்ந்தார். சிதம்பர சாஸ்திரிக்கு ரெண்டு பிள்ளை ரெண்டு பெண். ஒரு பெண் மரகதம். காமாக்ஷி தேவியின்அம்சமாக வளர்ந்தாள். பன்னிரண்டு வயசிலேயே சாஹித்ய சங்கீத கலாநிதியாக்கினார் காமகோடி சாஸ்திரி.

அழகும் அறிவும் வாய்ந்த தனது சிஷ்யன் வரதராஜனுக்கு மணமுடிக்க அவன் தந்தை சேஷாத்திரி ஜோசியரும் சம்மதிக்க, ஜாம் ஜாம் என்று கல்யாணம் நடந்து. வரதராஜன் மரகத தம்பதிகள் MADE FOR EACH OTHER என்போமே, ஒருவருக்காகவே படைக்கப்பட்ட மற்றொருவராக வாழ்ந்தும் புத்ர பாக்யம் இல்லை. சேது யாத்திரை,.தான தர்மம், மங்கள சஷ்டி விரதம் ஓன்று பாக்கியில்லை. காமகோடி சாஸ்திரி காமாக்ஷி கோவில் சென்று அவள் முன் த்யானம் செய்தார். மனமுருகி வேண்டினார்.

''காமகோடி, எதற்கடா உனக்கு கவலை. நவநீதம் கொடு, ஞான கலை உதிக்கும் '' என்று அருள் பாலித்தாள் காமாக்ஷி. பசுவின் வெண்ணை எடுத்து காமாட்சியை ஜெபித்து இருவருக்கும் அளித்தார் சாஸ்திரி.உத்தராயணம் பிறந்தது. நதிகள் தடாகங்கள் நிரம்பின. நெல் கதிர்கள் வயல்களில் உயர்ந்தன.காமாக்ஷி புன்னகை புரிந்தது தீப ஒளியில் தெரிந்தது. சுக்ல வருஷம் தை மாதம் கிருஷ்ண ஷஷ்டி, சனிக்கிழமை, ஹஸ்த நக்ஷத்திரத்தில் 'சேஷாத்திரி' (சனிக்கிழமை என்பதால்) பிறந்தான். சேஷாத்திரி வளர்ந்து தனித்துவத்தோடு பரம ஞானியாக, பிரம்மச்சாரியாக, லோக சம்ரக்ஷணம் இன்னும் விடாமல் பண்ணி வருகிறார். மஹான், பரம ஹம்சர், எளிமையான ஒரு ரிஷி, காருண்ய மூர்த்தி, அஷ்டமஹா சித்தி அருளிய வீடு தேடி, கதவைத்தட்டி பக்தர்களுக்கு அருளிய தங்கக்கை ஞானி, நாற்பது ஆண்டுகளே வாழ்ந்தாலும் நாலுயுகம் நினைவில் இருப்பவர். அவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த புண்யாத்மா. விசித்திரமான பாஷைகள், ஜாடைகள், குறிப்புகள், நடை உடை பாவனைகளில் லட்சோப லட்சோப பக்தர்கள் வாழ்க்கையில் பலன் பயன் எதிர்நோக்காது நன்மை புரிந்த நடமாடும் தெய்வம். எவ்வளவு பேருக்கும் இன்றும் கூட மனோரதம் பூர்த்தி பண்ணிக்கொண்டிருக்கும் ஜீவன் முக்தர். மகரிஷி ரமணரை தாய் போல் காத்து உலகுக்கு அளித்த உத்தம ஞானி.

ஸ்ரீ பராசக்தி அம்சமான சேஷாத்திரி ஸ்வாமிகள். 1929ம் வருஷம் ஜனவரி 4ம் தேதி மார்கழி சித்திரை நக்ஷத்திரம், நவமி திதி -- அதாவது இன்று -- பூவுலகத்தில் இருந்து அவதாரம் பூர்த்தியாகி விண்ணில் கலந்தார். சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தர்கள் எங்கும் ஆராதனை நடத்துகிறார்கள்.

இதற்கு முன் நடந்த ஒரு சம்பவம். சுருக்கமாக சொல்கிறேன். அவரது பக்தை சுப்புலக்ஷ்மி வீட்டுக்கு செல்கிறார்.
''சுப்பு , எனக்கு கொஞ்சநாளா மனசுலே என்ன தோணறது தெரியுமோ?
''சொல்லுங்கோ சுவாமி''
''உன்னை ஒரு யோசனை கேட்கணும். நீ தீர்மானமா சொல்லணும், நான் அப்படியே நடந்துக்கிறேன்''
''கேளுங்கோ. எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்''
''என்னை இந்த உலகத்துல ரொம்ப தொந்தரவு பண்றா. அதனாலே இப்படி பண்ணலாமோன்னு தோணித்து''
''என்ன பண்ணணும் ?''
''புது வீடு கட்டிக்கொண்டு யோகாப்யாஸம் செய்யட்டுமா?''
''ரொம்ப நன்னா இருக்கு. நீங்களாவது ஒரு புது வீடு கட்டறதாவது. '' என்று சிரித்தாள் சுப்புலக்ஷ்மி.'
''என்ன அப்படி சொல்றே சுப்பு?''
''பின்னே என்ன, இடுப்பு துணிக்கு மாத்து துணி இல்ல உங்க கிட்டே. தெருத் தெருவா அலையறேள். புது வீடு கட்டணும்னு ஒரு ஆசையா? இருக்கிற இடத்திலே இங்கேயே திண்ணையிலே உட்கார்ந்துண்டு யோகாப்யாஸம் பண்ணுங்கோ''

சுவாமிகளின் பரிபாஷைக்கு அர்த்தம் அந்த பேதைப் பெண்ணுக்கு தெரியுமா? வந்த காரியம் ஆகிவிட்டது. இந்த தேகத்தை விட்டு விட்டு விதேஹ கைவல்யம் அடையட்டுமா?'' என்று கேட்டிருக்கிறார்.

இதோடு விஷயம் முடிந்ததா? சில நாள் கழித்து அவளிடம் அதே கேள்வி. அப்போதும் சுப்பலக்ஷ்மி 'எதுக்கு இந்த உதவாக்கரை பேச்சு'' என அலட்சியமாக பதில் சொல்ல விடாமல் ரெண்டு மூன்று நாட்கள் திரும்ப திரும்ப அதே கேள்வி. சுப்பலக்ஷ்மிக்கு இப்போது பயம் வந்துவிட்டது. தான் நினைப்பதை விட்டு வேறு ஏதோ சொல்ல விழைகிறார் என்று மனதில் பட்டது. ஸ்வாமிகளுக்கு கோபம் வந்துவிட்டால் என்ன செய்வது?

ரெண்டுநாள் கழித்து விடிகாலையில் கதவை தட்டினார். திறந்தாள். ஸ்வாமிகள் அதே கேள்வியை கேட்டபோது '' ''அதுக்கென்ன சுவாமி , ஆஹா, தாராளமா நீங்க புது வீடு கட்டிக்குங்கோ. அதிலே யோகாப்யாஸம் பண்ணுங்கோ'' என்றாள்.
''நீ அப்படித் தான் சொல்வேன்னு நான் நினைச்சேன். சரி அப்படியே ஆகட்டும்''

சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் ஸ்வாமிகள். உடனே நகர்ந்தார். அப்பறம் அவள் வீட்டுக்கு வரவும் இல்லை. அந்த கேள்வியை கேட்கவும் இல்லை. பராசக்தியின் உத்தரவு, காமாக்ஷி தான் சுப்புலக்ஷ்மி வாயால் . வந்து விட்டதே . எல்லா ஸ்த்ரீகளும் அவருக்கு பராசக்தி காமாக்ஷி அல்லவா?
++
நேரம் நெருங்கியது. எதற்கோ என்ன காரணமோ சில பக்தர்களுக்கு திடீரென்று சேஷாத்திரி ஸ்வாமிகளுக்கு அபிஷேகம் செய்வித்து அலங்காரம் பண்ணவேண்டும். போட்டோ எடுக்கவேண்டும் என தோன்றி ஒன்று சேர்ந்து திட்டமிட்டு நாள் குறித்தாகிவிட்டது.
அந்த நாளில் அவரை எங்கிருந்தோ தேடிக்கண்டு பிடித்து முதலில் தாடி மீசை எல்லாம் க்ஷவரம் பண்ணி ஸ்நானம் பண்ணி வைக்க முயலும்போது,

''ஸ்நானம் வேண்டாம். சீத ஜ்வரம் வந்துடும்.வேணாம்'' என்கிறார். அவர் பேச்சு தான் புரியாதே . விடாப்பிடியாக அவருக்கு பன்னீர் குடம் குடமாக அபிமானத்தோடு வாஞ்சையோடு அபிஷேகம் பண்ணினார்கள். அருணாச்சலேஸ்வரர் கோவில் சின்ன குருக்கள் வீட்டுக்கு எதிரே இது நடந்தது. அங்கே இருந்த கிணற்றிலிருந்து குடம் குடமாக ஜலம் எடுத்து அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் இந்த மாதிரி ஒரு அறிய சந்தர்ப்பத்தை நழுவ விடுவார்களா. ஸ்வாமிகள் தலையில் ஆளுக்கொரு குடம் ஜலம் கொண்டுவந்து சிரத்தில் மணிக்கணக்கில் அபிஷேகம். சிவகங்கை குளமே காலி ஆகிவிடும்போல் ஆகிவிட்டது. சுவாமி கைவல்ய சித்தி அடைய தீர்மானித்துவிட்டார். அபிஷேகம் முடிந்தது. ஸ்வாமிகளுக்கு புது ஆடை, விபூதி பூசி, புஷ்ப மாலை, ருத்ராக்ஷ மாலைகள் நிறைய அணிவித்தார்கள். சிரித்தார். புகைப் படம் பிடித்தார்கள். அந்த படத்தை, கடைசி படத்தை, இணைத்திருக்கிறேன்.

அன்று மாலையே குளிர் ஜ்வரம் வந்தது. படுக்கவும் இல்லை, எங்கும் சாயாவும் இல்லை. அப்படியே உட்கார்ந்திருந்தார். சிவனுடைய சிரத்தில் சிவகங்கை ஏறிவிட்டது. குளிர்ந்து விட்டது. இப்படியே ஒரு மண்டலம் நெருங்கியது இன்னும் எட்டே நாள் பாக்கி.

41வது நாள் சின்ன குருக்கள் வீட்டு திண்ணையில் ஸ்வாமிகள் சாய்ந்தார். சுவாமி படுக்கமாட்டாரே இப்படி. சின்ன குருக்கள் ரெண்டு தலையணைகள் மெத்தை கொண்டுவந்து போட்டு ஸ்வாமியை படுக்க வைத்தார். விஷயம் காற்றில் கசிந்து திருவண்ணாமலையே திரண்டு வந்துவிட்டது திண்ணைக்கு. பழம், பால், கல்கண்டு, திராட்சை என்று நிறைய மலை போல் சின்ன குருக்கள் வீட்டு வாசலில், திண்ணையில். ஊரில் ஒருத்தர் பாக்கியில்லை. சென்னையிலும் டாக்டர்கள் யாரும் இல்லை. எல்லோரும் தான் திருவண்ணாமலையில் மொய்த்து விட்டார்களே. எந்த டாக்டர் என்ன செய்ய முடியும்?. ஸ்வாமிகள் தான் தீர்மானித்து விட்டாரே!

ஸ்வாமிகளுக்கு அன்ன ஆகாரம் கிடையாது. யாரும் அவர் கிட்டே நெருங்கவே பயம் வேறு. பி.வி. நரசிம்ம சுவாமி ஸாயீ பக்தர். சேஷாத்திரி ஸ்வாமிகளின் பக்தர் வேறு. அவர் குழுமணி நாராயணஸ்வாமி சாஸ்திரிகளுக்கு சேதி அனுப்பினார்.

''சீக்ரம் வா. இருப்பதை பார்த்தால் ஸ்வாமிகள் நம்மை விட்டு பிரிந்துவிடுவார் என்று தோன்றுகிறது. நாற்பது நாளாக ஒரு உத்ரணி தீர்த்தம் கூட ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். ஒருவேளை நீ வந்தால் துளசி ஜலம் உன் கையால் ஒருவேளை ஏற்றுக்கொள்வாரோ பார்க்கலாம்''.

அநேக பக்தர்கள் கொடுத்த பழங்கள், சால்வைகளோடு சாஸ்திரிகள் ஓடிவந்தார். இரவாகி விட்டது. நேராக திண்ணைக்கு வந்தவரை இதுவரை யாரையும் கண் திறந்து பார்க்காத ஸ்வாமிகள் சாஸ்திரிகளை கண்டதும் கண் விழித்து பார்த்தார்.

''ஹர ஹர மகாதேவா'' என்று ஜனத்திரள் ஒரே சப்தம் போட்டது. ஸ்வாமிகள் எழுந்து உட்கார்ந்தார். சாஸ்திரி கையில் இருந்து ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்து பக்கத்தில் தரையில் வைத்து கையால் குத்தி நசுக்கி அதை முகர்ந்து பார்த்து விட்டு தெருவில் வீசி எறிந்தார். இது தான் ஆகாரம் நாப்பது நாளுக்கு பிறகு.

மூன்று நாளாகவே வானத்தில் மூட்டம். மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. காற்று சில்லென்று வீசியது.

''சுவாமி, சாஸ்திரிகள் சேலத்திலிருந்து உங்களுக்கு ஒரு சால்வை கொண்டு வந்திருக்கிறார். மழையும் குளிருமாக இருக்கே. போர்த்தி விடட்டுமா''என்கிறார் சின்ன குருக்கள். போர்த்தி விடுகிறார். சுவாமி ஒன்று சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறார்.

மறுநாள் மாலை நாலு மணி இருக்கும். ஸ்வாமிகளை திண்ணையில் காணோம். எழுந்து அருணாச்ச லேஸ்வரர் கோவிலுக்கு நடந்துவிட்டார். ஒரு பக்கம் சாஸ்திரிகள், இன்னொரு பக்கம் மாணிக்க சாமி.

ஆலயத்தில் சிவகங்கை பிரகாரத்துக்கு அருகே இரு இலுப்பை மரங்கள் நடுவே ஒரு பள்ளம். அதில் முழங்கால் அளவு மழை ஜலம் தேங்கி இருந்தது. விடுவிடுவென்று சுவாமி அதில் போய் படுத்துக் கொண்டு விட்டார். மார்கழி மாச குளிர். மழை, காற்று . துளி கூட லக்ஷியம் பண்ணாமல் அதில் படுத்துக் கொண்டு விட்டார். இருட்டு. இரவு 8மணிக்கு ஜனங்கள் போய்விட்டனர். ராத்தரி பதினோரு மணிக்கு மாணிக்கமும் போய்விட்டார். சாஸ்திரி அங்கேயே இருந்தார். பிறகு சுவாமி சொட்ட சொட்ட ஜலத்தோடு எழுந்து மீண்டும் திண்ணைக்கு வந்தார். படுத்தார். போர்வையை வீசி எறிந்தார்.

மறுநாள் காலை பி.வி. நரசிம்ம சுவாமி வந்துவிட்டார். ''சுந்தரகாண்டம் பாராயணம்'' பண்ணுவோமா. ஸ்வாமிகளுக்கு குணமாகாதா. ஸ்வாமிகள் எந்த வைத்தியரையும் கிட்டே நெருங்க விடவில்லையே. அவர் காலடியில் உட்கார்ந்து கொண்டு இருவரும் சுந்தரகாண்டம் 68 சர்க்கமும் மாலை மூன்று மணிவரை பாராயணம். சுவாமி கேட்டுக் கொண்டிருக்கிறாரா? கண்கள் திறக்கவில்லை. யோக நித்திரை. கற்பூர ஆரத்தி காட்டினார்கள். கண் திறக்காமலேயே ஸ்வாமிகள் ஒரு கை நிறைய ஜலம்கேட்டு வாங்கி சாஸ்திரிகள் மேல் ப்ரோக்ஷணம் பண்ணினார். தொடர்ந்து ரெண்டு நாள் பாராயணம் நடந்தது.

சுப்பலக்ஷ்மியம்மாள் அழுதுகொண்டே நின்றாள். சுவாமி கண்களை திறந்து அவளை பார்த்தார். மெல்ல பேசினார்
'சுப்பு லட்சுமி பாத்தியா.'' என்கிறார்
''ஐயோ நான் மஹா பாவி. நான் ''இந்த ''புதுவீட்டையும் யோகாப்யாஸத்தையும் பண்ணுவேள்'' என்று தெரியாமல் சரி ன்னுட்டேனே ''

விபவ வருஷம் மார்கழி 21ம் நாள். 4.1.1929 அன்று வெள்ளிக்கிழமை உதயமாயிற்று. ஸ்வாதி நக்ஷத்திரம். பிதா அருணாச்சலேஸ்வரரும், மாதா அபீதா குஜாம்பாள் தங்கள் அருமை மகனை ஏந்திக் கொள்ள தயாரானார்கள். ஸ்வாமிகள் மாத்ரா ஸ்பர்சங்களை ஒவ்வொன்றாக உப சம்ஹாரம் பண்ணி க்கொண்டு ஹ்ருதயத்தில் அடக்கினார். பிராண வெள்ளம் தேக்கப்பட்டது. அந்தக் கரணங்கள் அசைவற்று நிலைத்தன. சுவாமி பிரம்மானந்த அனுபவத்தில் திளைத்தார். முகம் மலர்ந்தது. மெதுவாக பரப்பிரம்ம ஸ்வராஜ்யத்தை அடைந்து விட்டார்.



MY FREE BOOK ON SESHADRI SWAMIGAL IN TAMIL ON HIS LIFE TITLED ''ORU ARPUDHA GNANI'' CAN BE HAD FROM ME. CONTACT. 9840279080

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...