Thursday, January 4, 2018

AVATHARAM ENDS



                   
  சாபம்  நிறைவேறியது -   J.K. SIVAN 

மஹா பாரத  யுத்தம் பதினெட்டு நாள்  நடந்து முடிந்தது.  குருக்ஷேத்ரம் மயான அமைதியில் உள்ளது. காந்தாரி தன மக்கள் இறந்த இடத்தில் சுற்றி சுற்றி வருகிறாள்.  சோகம் நிறைந்த கோபத்தின் எல்லை கடந்து கொதித்தாள். நூறு பிள்ளைகளை இழந்த தாய். எதிரே அதற்கு காரண கர்த்தா என்று பதைத்தாள். வார்த்தைகள் பகபகவென்று  அடிவயிற்றிலிருந்து பொங்கி எழுந்து சாபமாகவே வெளிப்பட்டது.  அவள்  காந்தார நாட்டு (இன்றைய காந்தஹார்  மன்னனான சுபாலனின் மகள். காந்தார மன்னன் சகுனியின் சகோதரி.  குருவம்ச மஹாராணி.  

'கிருஷ்ணா, நீ மனது வைத்திருந்தால் இந்த யுத்தம் நிகழ்ந்திருக்காது. என் மக்கள் நூறு பேர் உயிரும் போயிருக்காது. நீ அப்படிச் செய்யவில்லையே. கௌரவர்கள் அழியவேண்டுமென்பதற்காகத்தானே  நீ  பார்த்தசாரதியாகி  இந்த அழிவு நேர்ந்தது. எங்கள் குரு  வம்சமே நாசமாகி விட்டது. உனக்கும் இதுவே நீராட்டும். உன்  யாதவ  வம்சமும் பூண்டோடு அழியட்டும். உன் ஊர் இருக்குமிடம் இல்லாமல் போகட்டும்.'' என்று அலறினாள், சபித்தாள்  காந்தாரி. அழிவைத்தேடிக்கொண்டது  துரியோதனின் பிடிவாதம், பொறாமை குணம் ஒன்றே, அவனுக்கு எவர் நல்லுபதேசமும் சமாதான அறிவுரையும் செவியில் ஏறவில்லை என்பதை  கண்ணன் எடுத்துச் சொல்லியும் அவள் புரிந்துகொள்ளவில்லை.   

மகாபாரத மெளஸர பர்வம்  கடைசி பாகத்தில் அவரவர் கர்மத்தின் பலனை அனுபவித்தே  தீரவேண்டும் என்கிறது.  கிருஷ்ணனுக்கு  ஆச்சரியம்  அதிர்ச்சி ரெண்டுமே இல்லை.   அவனுக்கு நன்றாக தெரியும்.  காந்தாரியின் சாபம் இன்னொரு காரணம்.  அவ்வளவு தான். அவன் முடிவும் அது தான்.  அவதாரம் முடியும் நேரம் வந்துவிட்டது.  சில காரியங்கள் நடந்தே தீரவேண்டும். 

கிருஷ்ணன் இருக்கும் பெருமையால்  அவனது யாதவ குலத்தினர் செருக்கடைந்தனர்.  அடக்கம், பணிவு, பிறர்நலம் மறைந்தது. அகந்தையும், செல்வச் செருக்கும் கண்களை மறைக்க  அவர்கள் முடியும்  நேரம் நெருங்கியதை கண்ணன் உணர்ந்தான். 

துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணனின் தந்தை வசுதேவர் ஒரு யாகம் நடத்த,   விஸ்வாமித்திரர், துர்வாசர், வசிஷ்டர், நாரதர் முதலிய அநேக ரிஷிகள் பங்கேற்க வந்தனர்.   அகந்தையால்  ஆணவத்தால் புத்தி இழந்த யாதவ விருஷ்ணி இளைஞர்கள் ரிஷிகளை அவமதிக்க திட்டம் போட்டு  கிருஷ்ணரின் மகன் சாம்பனுக்கு  ஓரு கர்ப்பஸ்திரீ  வேடம் தரித்து அந்த ரிஷிகளிடம்  சென்றனர்.   வெகு பவ்யமாக  “முனிவர்களே இந்தப் பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும்?” என்று கேட்டனர்.

விஸ்வாமித்ரர் நாரதர், துர்வாசர் வசிஷ்டர்  போன்றோர் முக்காலமும்  உணர்ந்த  ஞானிகள்.  அறிவற்ற  யாதவ இளைஞர்கள் எண்ணம் புரியாதா? 
 “இவளுக்கு ஒரு இரும்புத் தடி பிறக்கும்; அதுவே உங்கள் விருஷ்ணி குலம் அழிவுக்குக் காரணமாகும்” என்றனர்.

விளையாட்டு விபரீதமானதைக்கண்டு  பயந்த  இளைஞர்கள்  உக்கிரசேன மகாராஜாவிடம் சென்று நடந்தவைகளை கூறி, ரிஷிகளின் சாபம் பலிக்காமல் தடுக்க  சாம்பன் வயிற்றில் தோன்றிய  இரும்புத் துண்டைப் பொடிப்பொடியாக்கிக் கொண்டுபோய் கடலில் தூவினார்கள் .  ஒரு சிறு இரும்புத் துண்டு மட்டும் பொடியாகாததால் அதைக்  கடலில் போட்டு  ''அப்பாடா   தப்பித்தோம்'' என்று  மகிழ்ந்தனர்.

கடலில் போட்ட அந்த இரும்புத் துகள்கள் கரையொதுங்கி அங்கெல்லாம் வளர்ந்திருந்த நாணல் புதர்கள் இரும்புத்  தடிகளைப் போல தடித்து வளர்த்தன.

குருக்ஷேத்திர யுத்தம் முடிந்து   முப்பத்தாறு ஆண்டுகள்  கிருஷ்ணன் துவாரகையை ஆண்டான்.  தனது அவதார நோக்கம்  முடிந்து கிருஷ்ணன் நாராயணனாக  வைகுந்தம்  திரும்பும் நேரம்  வந்துவிட்டது.  எனவே முதலில்  சுதர்சன சக்கரம்  பாஞ்சஜைன்யம்  ஆதிசேஷனான  பலராமன்  அவனது கலப்பை ஆயுதம் எல்லாம்  ஒவ்வொன்றாக  திரும்பின. ஓஹோ  இது தான் காந்தாரி சாபம் நிறைவேறும் நேரமோ?  அதுவும்  பலித்து தானே  தீரவேண்டும். 

யாதவர்கள் விருஷ்ணிகள் செய்த பாவங்கள் தீர அவர்களை ப்ரபாஸ புண்ய க்ஷேத்ர  யாத்திரை செல்ல கிருஷ்ணன் பணித்தான். ஒரு கிரகண சமயத்தில் கிளம்பினார்கள். அது  ஒரு கெட்ட சகுனமாகியது.  யாத்திரை புறப்பட்டவர்களுக்குள் குருக்ஷேத்திர யுத்த விவாதம் வியாஜ்யமாக துவங்கி  கைகலப்பில் முடிந்தது.  மஹாபலசாலிகள்  சாத்யகிக்கும்  கீர்த்திவர்மனுக்கும் தகறாறு மூண்டு கீர்த்திவர்மனை சாத்யகி கொன்று விட   யாதவர்கள் இரு பிரிவுகளாகி ஒருவரையொருவர் கடற்கரையில் உலக்கை அளவில் வளர்ந்திருந்த நாணல் தடிகளைக் கொண்டு தாக்கிக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். இது வளர்ந்து பெரும்  போராகி  உச்ச கட்டத்தில் கிருஷ்ணனின் மகன்களும், பேரப்பிள்ளைகளும், சகோதரர்களும் மாண்டார்கள்.

வருத்தத்தோடு பலராமன் காட்டுக்குள் தவம் செய்யச் சென்று மறைந்து ஆதிசேஷன் வைகுண்டம் சென்று நாராயணனுக்கு காத்திருந்தது.  கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சேதி அனுப்பி  செய்தி சொல்லி அனுப்பி எல்லோரையும் துவாரகையை விட்டு கிளப்பி  ஹஸ்தினாபுரம் சேர்க்க முடிவு..

இதற்கிடையில்ஷி விருஷ்ணிகள்   சாம்பன் வயிற்று இரும்பு உலக்கையை
ப் பொடித்து கடலில் கலந்த போது ஒரு சிறிய துண்டு பொடியாகாமல்  அதை ஒரு மீன் விழுங்கி அந்த மீனை  ஒரு மீனவன் பிடித்தான். அதன் வயிற்றில் இருந்த  இரும்புத் துண்டை  கூறாக்கினான். அது பிறகு  ஒரு அம்பின் கூர் முனையானது. 

கிருஷ்ணன் எதிர்பார்த்தபடி  தனது இனம் மட்டுமல்ல தனது  முடிவும் நெருங்கிவிட்டது  என்பதை உணர்ந்து  அருகிலுள்ள ஒரு வனத்தினுள் சென்றான். நீண்டு வளர்ந்திருந்த ஒரு புல் வெளியில்  ஓய்வெடுக்க கால்நீட்டிப் படுத்தான். 

உடல் முழுவதும்  புல்லில் மறைந்துவிட  சிவந்த தாமரைப்   பாதங்கள் மட்டும் ஒன்றின் மேலொன்றாக தெரிந்தது.  வனத்தினுள் வேட்டைக்கு வந்தவனுக்கு அது தூரத்தில் புல்வெளியில் மான் ஒன்று தலையை நீட்டிப் படுத்திருப்பது போல மாயத் தோற்றம் உண்டாக  கிருஷ்ணன் கால்களை குறிவைத்து அந்த அம்பை எய்தான்.  சாம்பன் வயிற்று இரும்புத்துண்டு கிருஷ்ணன் பாதங்களைத் துளைத்து உள்ளே சென்றது. கிருஷ்ணனின்  முடிவு  பாதங்கள்  மூலம் என்பது அவருக்கு தெரியும். காந்தாரி கொடுத்த சாபம் பூரணமாக  நிறைவேறியது.

தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...