Sunday, January 28, 2018

MY ANCESTORS



எங்கள் முன்னோர் கதை: J.K. SIVAN
பரசுராம அப்பா அக்ரஹார குடும்பம் ஒன்று
எதுவுமே சாஸ்வதமில்லாதது என்பது தான் உலகம். மாற்றம் ஒவ்வொரு கணமும் தொடர்ந்து இருக்கிறது. இந்த மாற்றம் ஒன்று தான் உலகம் தோன்றியதிலிருந்து இன்று, இக்கணம் வரையிலும் கூட, ''மாறாமல் '' நடைபெறுவது. அதன் விளைவாக பழசு புதிதாகி அதுவும். பழசாகிவிடுகிறது. அப்படி காணாமல் போவதால் தான் நமக்கு பழசு மேல் பாசம் ஏற்பட்டு ஒரு பெருமூச்சு வெளியே வருகிறது.
அக்ரஹாரங்கள் எத்தனையோ இப்படி மாறிவிட்டன. மறைந்துவிட்டன. ஒருகாலத்தில் அமைதியாக, பிராமண சமூகத்தால் நிறைந்து சுறுசுறுப்பாக இயங்கியவை இப்போது இல்லை. மண் வீதிகள், எதிரும் புதிருமாக வடக்கு தெற்காக பார்த்த ஒட்டு வீடுகள், வாசல் திண்ணைகள், ஒன்றை ஒன்று ஒட்டிய வரிசை வரிசையாக வீடுகள், பின்னால் ஓடை, ஆறு, உள்ள புழக்கடை. நீண்ட அடுக்கு அடுக்கான அறைகள். முதல் கட்டு, ரெண்டாம் கட்டு, மூன்றாம் கட்டு, உக்ராணம், காமிரா அறை, ரேழி, நடை, என்று பெயர்களில் நீண்டு கொண்டே போகும். நடுவே பெரிய சூரிய ஒளி படும் முற்றம். வலிமையான வழ வழ வென்ற தூண்கள். முற்றத்தின் ஒரு பக்கம் பெரிய ஊஞ்சல். வீசி ஆடுவதற்கு நிறைய இடம். மேலே மர உத்தரங்கள் சுவர்களில் விளக்கு வைக்கும் மாடப்பிறைகள். மேலே பேன் (fan ) கிடையாது. காரைச் சுண்ணாம்பு அடித்த சுவர்கள். நிலை வாசல்படி வைத்த கனமான கதவுகள். கதவுகளில் கடவுள் பிம்பங்கள், அருமையான தேக்கு மர கதவுகள். வேலைப்பாடுகள் நிறைந்தது.. மாடி இல்லாத ஒட்டு வீடுகள், முன்னே கூரை சார்பு கொண்ட சில வீடுகள்.
எல்லோரும் அமர்ந்து சந்தோஷமாக விழாக்கள் நடத்த, கல்யாண கூடங்கள் என்று பெரிதாக இருந்தன. இப்போது கல்யாண கூடங்கள் வாடகைக்கு பெரிதாக கட்டப்பட்டவை . அப்போது தெருவையே வளைத்துப் போட்டு பந்தல் அமைத்து கல்யாணங்கள் நடந்தது.
இப்போது எங்கே அதெல்லாம்? அக்ரஹார வாசல்கள் சாணி மெழுகி, பெருக்கி, மழமழ வென்று பரிசுத்தமாக இருக்கும். வேப்பிலை வாசனை கம்மென்று மணக்கும். மரத்தடியில் கன்றும் பசுவும் நிற்கும். வில் வண்டிகள் சில மரத்தடியில் தரையில் சாய்ந்து நிற்கும். வண்டிக்குள்ளே வைக்கோல் மேல் ஜமுக்காளம் தான் குஷன். ஆடி அசைந்து தூக்கிக் கொண்டு போகும்போது ஜிலுஜிலுவென்ற காற்றில் தூக்கம் வரும். காலைத்தொங்க போட்டுக்கொண்டு ஓரமாக உட்காருபவன் விழாமல் ஒரு கம்பி குறுக்கே. அதை பிடித்துக்கொண்டு பிரயாணம். இந்த சுகமான அனுபவம் எத்தனை பேருக்கு உண்டு?.
ராஜாக்கள் கொடுத்த மான்யங்களில் உருவான அக்ரஹாரங்கள் ஒரு தெருவில்லாமல் ஊராகவே இருந்தது. அவை தான் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டன. கணபதி அக்ரஹாரம், டபீர் அக்ரஹாரம் என்று ஊர்கள். பரசுராம அப்பா அக்ரஹாரம் அப்படித்தான் தஞ்சாவூரில் எங்கள் கொள்ளு, எள்ளு தாத்தாக்கள் காலத்தில் இருந்தது.
தஞ்சாவூரில் கரந்தை என்று தற்போது வழங்கும் கருந்திட்டைக்குடி, (கருத்தட்டாங்குடி என்று வழக்கமாகச் சொல்லும் பெயர் ) யில் அப்போதெல்லாம் கம்மாளர்கள் எனும் நகை செய்யும் பொற் கொல்லர்கள், குடும்பத்தொழிலாளர்கள், அநேகர் அங்கு வசித்தனர் என்பதால் ''தட்டான் குடி'' பேர் வழக்கத்தில் வந்தது.
சிவாஜி ராஜா அரண்மனையில் வேலை பெற்ற பஞ்சு அய்யர் கருத்தட்டான்குடியில் பரசுராம அப்பா அக்ரஹாரத்தில் தனது உறவினரோடு வசித்தார். அங்கு பல காலம் பரம்பரையாக சங்கீத வித்வான் கனம் கணபதி சாஸ்திரிகள், அவர் குமாரன் தோடி சீதா ராமய்யர் ஆகியோர் வசித்தனர். பஞ்சு அய்யர் தம்பி நாகு பாரதி, திருவையாற்றிலே கல்யாணம் செய்துகொண்டு கண்டியூரில் அப்பா ராமஸ்வாமி பாரதி ஆரம்பித்த சத்துமா கைங்கர்யம் தொடர்ந்து நடத்தி வந்தார்.
நாகு பாரதியின் சத்துமா கைங்கர்யம், காரைக்குடியிலிருந்து வந்திருந்த நாகுவின் நண்பர், பெரிய சுப்பையர், (நகரத்தார்களுக்கு ப்ரோஹிதர்) காரைக்குடியை சேர்ந்த ஒரு கன தனவான், சூரா. மா. தவக்கை. ராமன் செட்டியாருடன் வந்திருந்தார். (நகரத்தார்கள் பெயர்கள் இப்படித்தான் நிறைய முன் எழுத்துக்களோடு சேர்ந்து அவர்கள் வம்ச, குடும்ப அடையாளம் காட்டும். இன்றும் செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டையில் பல பெயர்களை இப்படி படித்து ரசித்திருக்கிறேன்)
இந்த இருவருக்குமே நாகு பாரதியின் சத்துமா கைங்கர்யம் மகிழ்ச்சியைத் தந்தது.

இதே போல் ராமேஸ்வரத்துக்கு அடுத்த சேதுக்கரையில் மணலில் ஒரு சத்திரம் கட்டி, அங்கே அற்புதமாக நெல்லைப் பொரித்து, இடித்து, மாவாக்கி நித்யம் தயிரில் கலக்கி, சேதுவில் ஸ்நானம் பண்ணித் திரும்பும் பக்தர்களுக்கு பிராமணர்களை வைத்துக்கொண்டு விநியோகம் செய்தனர். செட்டியார் ஏராளமான முதல் போட்டு இதை நிறுவி பல வருஷங்கள் இந்த தொண்டு நடந்து வந்தது.
ராமஸ்வாமி பாரதி குடும்பம் பெருகியது. பிள்ளைகள் பெண்கள் அவர்கள் சந்ததிகள் எல்லாம் தத்தம் குடும்பத்தில் எங்கெங்கோ பிரிந்து சென்று வாழ்ந்தனர். காலம் சென்று கொண்டே இருக்கிறதே. 81 வயதில் புத்திர பௌத்ராதிகள் சதாபிஷேகம் செய்து வைத்தார்கள். நோய் நொடியின்றி தனது 83வது வயதில் திட சரீரியாய் (சித்திரை மாதம் சப்தஸ் தானம் மகோற்சவம் கண்டு களித்துவிட்டு வைகாசியில் ஸ்ரீ ராமனிடம் கலந்தார்.
அவர் சகோதரர் நாகு பாரதிகளும் விடாது சத்துமா கைங்கர்யம் நடத்தி வந்து தனது 75 வது வயதில் மறைந்தார். அவர் மகன் பரசுராம பாரதி.
சுமார் முன்னூறு வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மராட்டிய சிவாஜி சரபோஜி வம்சத்தால் ஆளப்பட்டு வந்தது அல்லவா?
அப்போதைய சரபோஜி ராஜா மிகுந்த பக்திமான். கல்விமான். ஜனங்களிடம் விஸ்வாசம் கொண்டவர். சங்கீதத்தில் கொள்ளைப் பிரியம். நிறைய வித்வான்கள் அவர்மேல் கீர்த்தனங்களை இயற்றி பாடி பரிசு பெற்றிருக்கிறார்கள். நிறைய சாஸ்திரங்கள், சம்ப்ரதாயங்கள், பல மொழிகளில் உள்ள இலக்கியங்கள், தத்துவங்கள் , சித்தாந்தங்கள், சித்திரங்கள், சகலமும் சேகரித்து வாழ்நாளில் பெரும்பகுதியை இதில் செலுத்தி அரும்பாடு பட்டு, ஒரு கட்டிடத்தில் பாதுகாத்து அதற்கு சரஸ்வதி மஹால் என்ற பெயரும் கொடுத்தார். அவருக்கு ஒரு ஜெர்மன் பாதிரியார் நட்புடன் இருந்ததால், சில அரும் புத்தகங்கள் இங்கிருந்து ஜெர்மனி சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ராஜா காசி ராமேஸ்வர யாத்திரை எல்லாம் சென்றவர். சாலை சத்திரங்கள் அமைத்தவர். அனேக கிராமங்களை மான்யமாகவும் தானமாகவும் கொடுத்தவர். நாகூர் தர்காவுக்கு 500 வேலி நிலம் சர்வ மான்யமாக கொடுத்தவர். வட தேசத்திலிருந்தெல்லாம், குஜராத், பூனா, சிந்தி,கடப்பை, யிலிருந்தெல்லாம் பசுக்கள் தருவித்து, தட்டிமால் (பசுக்கோட்டம்) அமைத்தவர். கோபூஜை, கோதர்சனம் செய்யாமல் ஒரு நாளும் உண்டதில்லை. அவர் குமரர் சிவாஜி.
அவர் அரண்மனையில் தான் குதிரை வைத்தியநாதய்யர் பணி புரிந்து வந்தார். ...
இன்னும் மேலே சொல்கிறேன்...





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...