Tuesday, January 2, 2018

குந்தியின் பிரார்த்தனை



குந்தியின் பிரார்த்தனை   - 3.           ஜே.கே. சிவன் 

வாயிலில்  தாருகன் ரதத்தில்  குதிரைகளைபூட்டி  தயாராக நின்றான். கிருஷ்ணன் இன்னும் ஹஸ்தினாபுர அரண்மனையை விட்டு வெளியே வரவில்லை.  விடை பெற இவ்வளவு நேரமா  என்று தாருகன் அதிசயித்தான்.
குதிரைகள் கனைத்தன.


கிருஷ்ணன் குந்தியின் மனையில் நின்று கொண்டிருந்தான். அவனது இரு கைகளையும் பிடித்துக்கொண்டு மண்டியிட்டு தரையில் அமர்ந்திருந்தாள் குந்தி. கண்களில் கங்கையும் காவிரியும் சேர்ந்து வெள்ளத்தை  உண்டாக்கின.  நாக்கு தழுதழுக்க பிரார்த்திக்கிறாள்.

கிருஷ்ணன் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு நிற்கிறான். இதழில் புன்னகை.  

''அத்தை, உன் மனம் புரிகிறது''  என்றான்.

yathā hṛṣīkeśa khalena devakī
kaṁsena ruddhāticiraṁ śucārpitā
vimocitāhaṁ ca sahātmajā vibho
tvayaiva nāthena muhur vipad-gaṇāt

கிருஷ்ணா,  ஹ்ரிஷிகேசா,  எதைச்சொல்வேன்  எதை விடுவேன். நீ செய்த உதவிகள் காலத்திலும் மறக்கமுடியாதவை அல்லவா.  நீ  உன் தாய் தேவகியை, தந்தை வசுதேவரை மட்டுமா  கம்சனின் சிறையிலிருந்து மீட்டவன்.?  என்னையும்  என் குழந்தைகளையும் அல்லவா  இடைவிடாத, எண்ணற்ற  துயர துன்ப கொடுமையின் சிறைகளிலிருந்து மீட்டவன்.  மஹாத்மா,  பரமாத்மா,  உன்னை தஞ்சம் அடைந்தல்லவோ நாங்கள் ஜீவிக்கிறோம்.

viṣān mahāgneḥ puruṣāda-darśanād
asat-sabhāyā vana-vāsa-kṛcchrataḥ
mṛdhe mṛdhe ’neka-mahārathāstrato
drauṇy-astrataś cāsma hare ’bhirakṣitāḥ

கிருஷ்ணா  நினைத்துப் பார்த்தால்  உடல் நடுங்குகிறதே.  ஒன்றா இரண்டா எங்களுக்கு வந்த சோதனைகள். விஷ உணவை கொடுத்தான் துரியோதனன். அரக்கு மாளிகையில் கூண்டோடு எங்களை  தீயில்  எரிக்க திட்டமிட்டான்.  எண்ணற்ற அசுரர்களை  எங்கள் வாழ்வில் சந்தித்தோம்.  காட்டில் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி அலைந்தோம், ஒருநாளா இரு நாளா, பன்னிரண்டு வருஷங்கள்,  படைகளை வேறு ஏவி  எங்களை அழிக்க ப்ரயத்தனம் செய்தான்.   மஹா ரதர்கள்  எதிர்த்தார்கள். கடும் ஆயுதங்கள் அஸ்திரங்கள் என் குழந்தைகளை அழிக்க  வந்தன.  துரோணன் மகன் அஸ்வத்தாமன்  எங்கள் வம்சத்தை நாசமாக்கினான்.அவனது கொடிய ஆயுதத்திலிருந்து உத்தரை வயிற்றில்  வம்சம் வளர பரீக்ஷித் உயிரை காப்பாற்றினாய்.   எந்த துன்பம் வந்தபோதிலும் அவற்றிலிருந்தெல்லாம் அவ்வப்போது தக்க தருணத்தில் வந்து எங்களை காப்பாற்றினவன் நீ அல்லவா?  தீன  ரக்ஷகா. திக்கற்றோர்க்கு  தெய்வமே துணை என்பதின் அர்த்தம் புரியவைத்தவனே கிருஷ்ணா.

namo ’kiñcana-vittāya
nivṛtta-guṇa-vṛttaye
ātmārāmāya śāntāya
kaivalya-pataye namaḥ

நமஸ்காரம் கிருஷ்ணா,  ஒன்றோ ரெண்டோ சொன்னால் போதாது. வாழ்நாள் பூரா, அடுத்து வரும் ஜென்மங்களில் எல்லாம் விடாமல் சொல்லவேண்டும். பரம தாரித்ரியத்தில்  இருந்த எங்களை வாழவைத்த தெய்வமே.  எங்கள் மீது அன்பு கொண்ட  பக்த வத்சலா, பேரானந்த ஸ்வருபனே,  சாந்த மூர்த்தி,  ஆபத் பாந்தவா உன்னை தாள் தொட்டு வணங்குகிறேன் அப்பா. ஏழை பங்காளா.  இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டவன், எதிலும் விருப்பு வெறுப்பற்றவனே, பரமானந்த மூர்த்தி உன்னை நமஸ்கரிக்கிறேன்.

manye tvāṁ kālam īśānam
anādi-nidhanaṁ vibhum
samaṁ carantaṁ sarvatra
bhūtānāṁ yan mithaḥ kaliḥ

கிருஷ்ணா,  நீ   காலத்தால் மாறாத ஸாஸ்வதன். புருஷோத்தமன்.  ஆதி அந்தமில்லாதவன். சர்வவியாபி. காருண்ய மூர்த்தி. அஞ்சேல் என அடைக்கலம் கொடுப்பவன்.  எங்கும் எதிலும் நிறைந்தவன். எண்களைப்போன்று உணர்ச்சிகளால் உந்தப்படாதவன்.

கிருஷ்ணன் குந்தியை பார்த்துக்கொண்டே  நிற்கிறான். அவளோ கடல்மடை போன்று  உணர்ச்சி வெள்ளத்தில் கண்ணன் செய்த உதவிகளை வரிசைப்படுத்தி சொல்லி  பிரிய மனமில்லாமல் அரற்றுகிறாள். இனி ஹஸ்தினாபுரத்திற்கு கண்ணன் வரப்போவதில்லை. குந்தியும் இனி கண்ணனை காணப்போவதில்லை  என்ற எண்ணம் அவளை வாட்டுகிறது.
(குந்தியின் பிரார்த்தனை தொடரும்)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...