Monday, September 28, 2020

SVKARAI AGRAHARAM

 


  சரித்திரம்  படைத்த சாம்பவர் வடகரை  - 6       J K  SIVAN     


                                                    கோட்டை வாசல்

சாம்பவர் வடகரை  கிராம  அக்ரஹார  விவரங்கள்  அந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கும்  விறுவிறுப்பாக  ருசியுள்ளதாக  இருக்கிறது என்று அறியும்போது மட்டற்ற மகிழ்ச்சி.  வாஸ்தவம். நான் அந்த  ஊரைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு  யாத்ரீகன்.  அந்த ஊரில்  மூன்று நாட்கள் இருந்து பல விஷயங்களை சேகரித்து அளிக்கும்போது  அங்கிருந்து மகிழ்ந்ததை விட  கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது.

இன்று ஒரு அற்புத விஷயம்.  கோட்டையே இல்லாத ஒரு  இடத்துக்கு  கோட்டை என்று பெயர்  எப்படி வந்தது என்ற ருசிகர தகவல்.  ஸ்வாரஸ்யமாக இருந்தது எனக்கு.

 சாம்பவர் வடகரை வடக்கு தெருவிற்கு கிழக்கு  முனையில் கோட்டை வாசல் என்கிற திறந்த வெளி ஒரு காலத்தில்  இருந்தது.  அங்கே  ஸ்ரீ விஷ்ணு துர்கையம்மன் ஆலய வளாகத்தில் பதினைந்தடி விட்டமுள்ள பெரிய கிணறு ஒன்று இருந்தது. இப்போது சில வருடங்கள் முன்பு   அதை மூடி விட்டார்கள்.  இந்த கிணறு நிலத்தடி தண்ணீர் சேமிப்பிற்கு உதவியாக இருந்தது. இது தவிர,    அந்த  கோட்டை வாசலை ஒட்டி ஒரு பெரிய மில் கட்டிடம்,  தாசில்தார் / கிராம அதிகாரி அலுவலகம், அஞசல் ஆபீஸ், சானிட்டரி ஆபீஸ்-பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகம், ஆரம்ப பள்ளிக்கூடம் முதலானவை இருந்தன. சானிட்டரி ஆபீஸ்- பிறப்பு /இறப்பு பதிவாளர் மேற்பார்வையாளர் ஸ்ரீ முத்துக்கிருஷ்ணய்யர் என்பவர்  வடக்குத் தெரு வாசி.  சாம்பவர் வடகரை  ஆரம்ப பள்ளிக்கூட தலைமையாசிரியர்  ஸ்வாமிநாத சார் ஒற்றைத் தெருவில் வாழ்ந்தவர்.  

 ஸ்கந்தஷஷ்டியை ஒட்டி வடக்குத் தெரு கோட்டைவாசலில் வருஷாவருஷம்  கோலாகலமாக  முன்பெல்லாம்  சூர சம்ஹாரம் நடக்கும். ஸ்ரீ வேதநாராயண பெருமாள் கோவிலில் இருந்து  சிங்க முகன், யானை முகன், மஹா சூரன்  வேஷமிட்டுக்கொண்டு கோட்டை வாசலில் ஸ்ரீ முருகன் சப்பரம் முன்பு ஆட்டங்கள் ஆடி பின்பு ஸ்ரீ முருகனால் சம்ஹாரம்  செய்யப்படுவார்கள்.

இந்த ஊர்க்காரர்   காலஞ்சென்ற  சங்கர கிருஷ்ணய்யர் என்பவர்  சிறந்த  கார்ட்டூன் சித்ரக்காரர்.   அவர்  வரைந்த சில படங்களை அவர் வீட்டில் வாழ்ந்தபவர்கள் காட்டினார்கள் அசந்து போய் விட்டேன்.   சில்பி  கோபுலு  மணியம்  அளவுக்கு  அற்புதமான திறமை கொண்டவராக இருந்திருக்கிறார் ஸ்ரீ  சங்கர கிருஷ்ணய்யர்.  இவரைப் பற்றி பின்னால் மீண்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.  அவரது சில அற்புதமான படங்கள் ஒரு சிலவற்றை   இத்துடன் இணைக்கிறேன். 

அந்த சங்கரகிருஷ்ணய்யர்  மேலே சொன்ன  சூர ஸம்ஹார ஆட்ட வேஷதாரிகளில் படங்களையும் வரைந்திருக்கிறார்.  சங்கர கிருஷ்ணய்யர்  இப்போது இல்லை, அவர் குடும்பமும் வேறு ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள்.  கடைசி காலத்தில் கூட  சங்கரகிருஷ்ணய்யர் எப்படியோ உடம்பு முடியாத நிலையிலும் சாம்பவர் வடகரை வந்து உத்சவங்களில் கலந்து கொண்டார் என்று அறியும்போது அவரது  பிறந்த மண் பற்று போற்றத்தக்கது. சங்கரகிருஷ்ணய்யர்  குடும்பம் தற்போது வசிக்கும்  இலத்தூர் வீட்டிற்கு சென்றபோது அவர் மனைவி, மற்றும் குடும்பத்தினர்  நிறைய  அவர் வரைந்த படங்களை காட்டினார்.  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  அவற்றை ரசித்தேன். அத்தனையும் இங்கே  இணைப்பது இயலாது.என் மனத்தில் இருத்திக் கொண்டிருக்கிறேன். 
சங்கர கிருஷ்ணய்யர்  படங்களில் உயிரோட்டம் இருப்பது தெள்ளது தெளிவாக புரிந்தது.  அதுசரி  அது என்ன  விந்தன் கோட்டை என்று நான் கேட்டு அறிந்தது: 

முன்னொருகாலத்தில்  சாம்பவர்  வடகரை அக்ரஹாரத்தில் உள்ள  குளத்திற்கு தென்புறம் விந்தன் கோட்டை என்ற ஒரு ஊர் இயற்கை வளம் கொழித்த ஊராக  ஆச்சர்யமாக   இருந்திருக்கிறது.  சாம்பவர் வடகரை கிராமம் ஆரம்பத்தில்  இந்த செழிப்பான  விந்தன் கோட்டை பகுதியில் இருந்து  பின்னர் இப்போதிருக்கும் இடத்தில் குடும்பங்கள் குடி பெயர்ந்தன.

திருநெல்வேலியை  ஆண்ட  ஸார்வ பௌமன் என்ற பாண்டிய அரசன் ஒரு முறை   திருக்குற்றாலம் சென்று நீராடிய பிறகு தென் வடக்கு திசையில் பரந்து கிடக்கும் காட்டில் புகுந்து வேட்டையாடத்  தொடங்கினான்.
அப்பொழுது அங்குள்ள ஓர் சாதாரண  சிறிய   முயலானது  ராஜாவின்   பெரிய  வேட்டை  நாயை  எதிர்த்து  கடித்து கொன்று விடவே அதைக் கண்டு ஆச்சரியமுற்ற  ராஜா  அருகில்  இருந்த ஒரு  அழகிய ஆசிரமத்தையும் அதில் ஒரு முனிவர் தவம் புரிந்து கொண்டிருப்பதையும் கண்டு அவரை தரிசித்து முறைப்படி  வணங்கி ஆசி கோருகிறான். இங்கே என்ன விசேஷம் என கேட்கிறான்.

விருபாக்ஷர் என்ற  அந்த முனிவர் அருகில் இருக்கும் ஸ்ரீமூலநாதர் என்ற   சிவாலய க்ஷேத்ரத்தின் மகிமையை  ராஜாவுக்கு  விவரித்துக் கூறி அங்கு எழுந்தருளிருக்கும் ஸ்ரீ மூலநாதப் பெருமானுக்கு விமானம் பிரஹாரம்   முதலான அங்கங்களுடன் பெரிதாக ஒரு சிவாலயம் திருப்பணி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அரசன் முனிவர் விரும்பிய படியே சிவபெருமானுக்கு சிறந்த ஆலயம் திருப்பணி செய்வித்து அதன் வலது பக்கத்தில்  ஓடும்  ஹனுமான்  நதியை இடது பக்கதத்தில் ஓடுமாறு  ஆழப்படுத்தி  வெட்டி, நதியின் போக்கை மாற்றி அவ்வாற்றின் கரையில் சோபன மண்டபம் முதலானவைகளும், கோயிலின் தென்மேற்குக் கோடியில் அக்ரஹாரமும்  கட்டுவித்து  ஸ்ரீ மூலநாதசுவாமியுடைய நித்திய பூசைக்குரிய ஒழுங்கு முறைகளையும்  ஏற்படுத்தினான்.  

 சிவபெருமான்  ஆஞைப்படி முயல் நாயைக் கொன்ற இடத்தில் ஆச்சரியபுரம் என்ற நகரையும்  உண்டாக்கி னான்.  அந்த ''விந்தை நகர் '   காலப்போக்கில்  ஆச்சர்யபுரமாக, விந்தைநகராக  மாறி இப்போது விந்தன் கோட்டை என்ற  உருமாறி விட்டது.   இன்னொரு  ஆச்சர்யம்  புலியும் முயலும் இங்கே   ஒன்றாக விளையாடியது என்று சொல்வதாலா? 
அக்கால ராஜாக்கள் மண்ணில் கட்டிய கோட்டை மண்ணோடு மண்ணாகி விட்டது.  இப்போது  விந்தன் கோட்டை எழுத்தில் தான் இருக்கிறது

பராக்கிரம பாண்டியன்  என்ற பாண்டிய ராஜா,  விந்தனூரில்   நிர்மாணித்த  சார்வ பௌம வடகரை   அக்ரஹாரம் நாளடைவில்  சாம்பவர் வடகரை  அக்ரஹாரமாகியது என்று கேள்விப்பபட்டபோது  ஓஹோ இந்த  சாம்பவர் வடகரை அக்ரஹாரத்துக்கு  இப்படியும் ஒரு காரணப்பெயரா என்று  ஆச்சர்யமாக இருந்தது. 

பாண்டியனை  இந்த ஊர்  கல்வெட்டுகள்   ''விந்தைப் போர் கடந்த பாண்டியன் என்று   சொல்வதால்   இந்த விந்தன் கோட்டை இருந்த இடத்தில்  ஒருகாலத்தில்  பெரும் போர் நடந்திருக்கிறது  நிச்சயம்.   பாண்டியன் யாருடன் போர் புரிந்தான்? அக்ரஹாரம் பிரதிஷ்டிக்கிறதுக்கு  முன் விந்தனுர் எவ்வாறு  இருந்தது என  யூகிக்க  ஒரு  ஆதாரமும்   இதுவரை கிடைக்கவில்லை.  விந்தனுர் ஒரு  க்ஷத்ரிய  ஸ்தலம்.  படை  நடந்தபோது   அழிக்கப்  பட்டதென்று  ஆவூர் கிராம சைவர்கள்  கர்ணபரம்பரையாக  சொல்வார்கள்.

விந்தனுரில் கோட்டை எனப்படும் சிதைந்த மண்கோட்டையும் அருகில் உள்ள பாழடைந்த பெருமாள் கோவிலையும் முன்பிருந்த நகரின் அறிகுறிகளாக காட்டுகின்றனர். பாண்டிய சாஸனங்களில் விந்தனுர் ''பராக்கிரம பாண்டிய சதுர் வேதி மங்கலம்,பெருமாள் அகரம்''   என்றும் நாயக சாஸனங்களில் ''வடகரை விந்தனூர்''  என்றும் குறிப்பிடப் படுகிறது. புராணத்தில் கூறப்படும்   ஆச்சரியபுரம் என்பது விந்தை என்பதின்  வடமொழி என்பதில் சந்தேகமில்லை.  

விந்தன் கோட்டை பற்றிய  இன்னொரு கதையும் கேள்விப்பட்டேன்.  இந்த  ஊரை ஆண்ட ஒரு ராஜாவுக்கு ஏழு பெண்கள்.   ஒருநாள்  அந்த  ராஜா தனது   காவல்காரனை கூப்பிட்டு '' நீ ஜாக்ரதையாக   என் ஏழு  பெண்க ளையும்   பார்த்துக் கொள்'' என்று சொல்லிட்டு  அவன் பொறுப்பில் அவர்களை தனியாக விட்டு  விட்டு   எங்கோ வேட்டையாட சென்றான்.  இரவில்  தூக்கத்தில்  காவல்காரனின் கால் இடறி கோட்டை கதவு மேல் பட்டு பெரிய சப்ததத்துடன் அது  திறந்தது.   இந்த  சத்தம் கேட்டு அந்த  ஏழு பெண்களும்  ''ஆஹா , அப்பா  இல்லாத நேரத்தில் தமக்கு ஏதோ ஆபத்து''   என்று ஓடி பக்கத்தில் இருந்த குளத்தில் விழுந்து உயிரை விட்டார்களாம். அவர்களே இன்றும் அங்கே சிலையாக  சப்த கன்னிகைகளாக காண்கிறார்கள்.    சப்த கன்னிகை சிலைகளை பார்த்தபோது இந்த கதை காதில் விழுந்தது. 

சாம்பவர் வடகரை கிராமத்தை ஒட்டி ஓடும்  ஹனுமான் நதி  மழைக்காலத்தில் வெள்ளமாக பெருகி  ப்ரவாக நீர் வெளியேற  உருவான பல மடைகளில் ஒன்று அருகே இருக்கும் ''கன்யா மடை''  .  S  R  கிருஷ்ணன் எனக்கு இந்த  மடையைக் காட்டினார். 

தன்னால் தான் இந்த ஏழு பெண்களும்  மாண்டார்கள் என்ற துக்கத்தில் தன்னுயிரைப் போக்கிக்கொண்ட காவல்காரன் தான் இன்றும்  கோட்டை மாடன்  என்ற பெயரில் அரூபமாக  வாழ்ந்து வருகிறான் என்று ஊர்மக்கள் வழிபடுகிறார்கள். கிராம மக்கள்  அவனுக்கு  தை  மாதம் பொங்கலிடுகிறார்கள். ஆடும் வெட்டப் படுகிறதாம்.

விந்தன் கோட்டை  கண்ணுக்கே தெரியாமல்  காணாமல் போனாலும் அதை பற்றிய  புராணங்கள் வளர்ந்து கொண்டு தான் வருகிறது. இதோ  ரெண்டு கதை கேட்டதற்காக   ஒன்று  இலவசம்.  FREE. 
                                                   
விந்தன் கோட்டை ராஜா ஒருவன் தனது சிவபக்தி மஹிமையாலும், அபூர்வ சக்தியாலும் தினமும் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசிப்பது வழக்கமாம்.  பின்னர் உடல்நலம் குன்றி,  ப்ரம்ம ஹத்தி தோஷம் வேறு சேர்ந்து கொண்ட பொது  விடாது வயிற்று  வலியால்  துவண்டான். காசிக்கு போகமுடியவில்லை.  ''விஸ்வநாதா, இனி உன்னை தரிசிப்பது எப்படி?'' என்று வேண்ட, சிவன்   ஒருநாள் கனவில் அவனுக்கு  என்ன பதில் சொன்னார் தெரியுமா?

''கவலைப்படாதே, நான் உன்னைத் தேடி வருவேன். நாளைக் காலை  நீ எழுந்ததும் உன் கண்ணில் ஒரு எறும்பு கூட்டம் சாரி சாரியாக வரிசையில் செல்வதை பார்ப்பாய். அந்த எறும்புகள் எங்கே நிற்கிறதோ அங்கே நீ என்னை காணலாம்'' என்கிறார் காசி விஸ்வநாதர்..

மறுநாள்  விடியற்காலையிலிருந்தே   ராஜாவுக்கு  பொறுமை இல்லை. எப்போது சூரியன்  வருவான் வெளிச்சம் தெரியும் என்று காத்திருந்தான்.    எங்காவது எறும்புகள் தெரிகிறதா என்று தரையையே பார்த்துக்கொண்டு  அரண்மனை  வாயிலில் காத்திருந்தான்.  திடீரென்று எங்கிருந்தோ ஒரு எறும்புக்கூட்டம் ஒரு மரத்தின் ஓரமாக போவதை பார்த்துவிட்டான்.   எறும்புகளை தொடர்ந்து சென்று அவை நின்ற இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பதை காண்கிறான்.   அந்த இடம் தான்  இப்போது தென்காசியில் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டு  வானளாவி நிற்கும் காசி விஸ்வநாதர் கோவில் என்பது ஆச்சர்யமாக  இருக்கிறதா? இல்லையா? விந்தன் கோட்டை ராஜா அப்புறம் என்ன பண்ணினான்?

கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததும் எல்லோரும்  வாசலை தாண்டி வெளியே போகும்போது தன்னை மிதித்து செல்ல வேண்டும் என்று வாசல் கருங்கல் படியில் தன்னுருவத்தை செதுக்க செய்தான்.  இந்த  விஷயம் கேட்கும்போது  குலசேகர ஆழ்வார் கதை நினைவுக்கு வருகிறது. பெருமாள்  கோவில்களில்   குலசேகர படி  பார்த்திருக் கிறீர்களா. யாரும் அதன் மேல் காலை வைக்கமாட்டார்கள். தாண்டி தான் உள்ளே செல்வார்கள்.

இந்த விந்தன்கோட்டை ராஜா சிறந்த சிவபக்தன் என்பதால் ஜீவ சமாதி அடைந்து அவன் ஜீவ சமாதி அடைந்த இடம் விந்தன் கோட்டையில் ஒரு சிறு மேட்டில் காணப்படுகிறது.

புதர்களுக்கு இடையே ஒரு சிறு செங்கல் சிதிலம்  சூழ்ந்த மண் மேடு  இருந்ததை எனக்கு காண்பித்தார் ஸ்ரீ   S.R  கிருஷ்ணன்.    அதன் மேல் யாரோ ஒரு குட்டி சிவலிங்கம் வைத்திருக்கிறார்கள்.  அங்கு வருவோர் போவோர்  புஷ்பங்கள் சாற்றுகிறார்கள் போல் தோன்றுகிறது.  அந்த சிறிய  சிவலிங்கம் மேல்  சில காட்டுப்பூக்கள் வைத்திருந்தது.  அந்த பக்கம்  அதிக ஜனநடமாட்டம் இல்லை.  பள்ளமும் மேடும் நிறைந்த ஹனுமான் நதிக்கரை.    








அந்த ஜீவசமாதியைத்   தாண்டி சற்று தூரத்தில் ஒரு கல் நடப் பட்டிருந்தது.   அதில் ரெண்டு பக்கமும்  வாளை  ஓங்கிக்கொண்டு ஒரு வீரன் உருவம் தெரிந்தது.  ஒருவேளை  அது தான்  கோட்டை மாடனாக மாறிய காவல் காரனோ?.   வெகு பழங்கால சின்னங்கள் இவை.

யாராவது இரவில் தனியாக செல்லும்போது  பின்னால் ''ஜல் ஜல்' என்று கோட்டை மாடன்  உதவி செய்ய காவலுக்கு வருகிறான் என்று  சொல்லுகிறார்கள்.
அருகிலிருக்கும் ஆய்க்குடியில்  ஸ்கந்த  ஷஷ்டி உத்ஸவம்  விமரிசையாக இன்றும் கொண்டாடப் படுகிறது.
மேலும் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...