Thursday, September 3, 2020

BALAJI DHARSAN

 

                  அன்று கேட்ட  அதே குரல்    J.K  SIVAN 


1977  ஜனவரி  21 அன்று என்று ஞாபகம்.  திருமண நாளில் குல தெய்வ தரிசனம் செய்ய  ஆசை. ஆபீசுக்கு  ஒருநாள் லீவ் போட்டாகி விட்டது.   எப்போதுமே  திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய  பஸ்ஸில் போய் தான் பழக்கம். பாலாஜி எக்ஸ்பிரஸ் என்று  ஒரு ரயில் அறிமுகப்படுத்தி இருந்தாலும்  என்னவோ பஸ்ஸில் போனால் திருப்தி.   என் ஆபிஸ் எதிரே தான்  எஸ்பிளனேட்  பஸ்  நிலையம். பத்து நிமிஷத்துக்கு ஒரு பஸ், ஆந்திரா பஸ் தமிழ்நாடு அரசாங்க பஸ்  ஏதோ ஒன்று கோட்டை  பஸ்  நிலையத்திலிருந்து பறந்து கொண்டே இருக்கும்.   ஒன்றில் தொத்தி ஏறிக்கொண்டு என் குடும்பத்தோடு திருப்பதி பயணம்.

லக்ஷோப லக்ஷம் ஜனங்கள் திரள் திரளாக  எங்கெல்லாமோ இருந்து வரும் ஒரு ஆலயம் திருப்பதி திருமலை வேங்கடேச பெருமாள் ஆலயம்.    அனைவருக்கும்  அரைநொடியாக தரிசனம் செய்ய  வழிவகுத்து இருக்கிறார்கள். 'பார்த்தாகி விட்டதே போ''  என்று ''  ஜருகண்டி''அப்படி பிடித்து தள்ளாவிட்டால் யார் தான் அவன் முன்னிருந்து நகருவார்கள். இன்றெல்லாம் பார்த்தாலும் அலுக்காதவன் அல்லவா அழகன் அவன்.

ஒவ்வொருநாளும் எத்தனையோ  பூஜைகள்,சேவார்த்திகள்.  இலவச தரிசனம், வித வித கட்டணங்கள்.  எலெக்ட்ரானிக் மெயில் தரிசனங்கள் கூட இருக்கிறது. e dharshan  . எண்ணற்ற விடுதிகள், ஏராளமாக  சிகப்பு வண்ண இலவச பஸ்கள். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாறுதல் இங்கே தான் முடியும். சாதாரண நாட்களிலேயே லக்ஷம் பக்தர்களை சமாளிக்கும் இந்த ஆலய நிர்வாகம் விசேஷ காலங்களில் எப்படிதான் ஒரு வித குறைபாடும் இன்றி பல மடங்கு ஜனங்களை நிர்வாகம் பண்ணுகிறார்களோ என்று நினைக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. பல மணி நேரங்கள் காத்திருந்து கூண்டுகளில்  அடைபட்டு, அங்கே நீர், ஆகாரம், ஒய்வு, கழிப்பறை வசதிகளோடு பக்தர்கள் தரிசனம் செய்யவேண்டிய  நிர்பந்தம். வரும் அத்தனை பக்தர்களுக்கும் தலா  ரெண்டு லட்டு. இலவச உணவு. அவரவர் வசதிக்கேற்ப  வெங்கடாசலபதி தரிசனம் தருகிறார்.

 இதெல்லாம் விட அதிகம் மக்கள் விரும்புவது மன நிறைவு. மலைப்பாதைகளில் முன்பெல்லாம் பஸ்களில் ஏறுவதற்கு இரகுவதற்கும் சண்டை போட்ட காலம் உண்டு.  மலையில் இறங்கும் பஸ்களில்  இருந்து எந்த நேரமும் பலர் வாயில் எடுத்து உமிழ்வது மறக்கவில்லை. வளைவுகளில் கோவிந்தா சப்தம்அதிகமாகவே கேட்கும். போக வர ஒரே பாதை அப்போது. இப்போது  நிலை வேறு.   பாதுகாப்பு. அதிக வேகம் கூடாது என்று குறித்த நேரம் கொடுத்திருக்கிறார்கள். வேகமாக பயணித்தவர்களுக்கு அபராதம். நவீன எலெக்ட்ரானிக் வசதிகள் எல்லாவற்றிக்கும் பதில் தயாராக வைத்திருக்கிறது. செருப்பிலிருந்து செல்போன் வரை பாதுகாத்து தரப்படுகிறது.

ஒருமுறை  பகலில் சென்னையிலிருந்து பம்பாய் பிரயாணம் செய்யும்போது  விமானத்திலிருந்து கீழே அழகிய தங்க கோபுர சொப்பு பொம்மையாக திருமலை தெரிந்தது. ஒரு வினாடி கால கோபுர தரிசனம். 

என் நினைவு பழசை நோக்கி அடிக்கடி போகிறது.

 திருப்பதி  வெங்கடாசலபதியை  தரிசனம் செய்ததில் எனக்கு ஒரு  அற்புத அதிசய பாக்யம் ஒரு முறை கிட்டியது.    வேங்கடேச பெருமாளை   இரண்டடி  தூரத்தில் அருகே நின்று தொடும் அளவு பக்கத்தில் நின்று பல நிமிஷங்கள் தரிசனம் செய்த பாக்கியவான் நான்.  

வெறுமே தரிசனம் அல்ல.  அவரை துயில் எழுப்ப.  இதற்கு வழிவகுத்தவர் என்னுடைய சக ஊழியரின் தந்தை. அவரது  வாசம் திருமலையில். 

முதல் நாள் இரவே அவரை  ஆலயத்தில் கண்டுபிடித்து  பார்த்துவிட்டோம்.  

''யாரு நீங்கள்?
''உங்க மகன் ராமதுரையோடு வேலை பார்க்கிறேன்? உங்களைப்  பார்க்க சொல்லி அனுப்பினான்.''
''ஓ  ஷிப்பிங்கா?  தரிசனம் ஆயிடுத்தா,பண்ணனுமா?'
''இல்லை .  இனிமேல் தான் தரிசனம் ஆகணும். அதுக்கு தான் உங்களை தேடி வந்திருக்கோம்.
' யார் உங்களோடு வந்திருக்கா?''
' நான் என் மனைவி  நாலு குழந்தைகள்''
''காலம்பற  மூணு மூணேகாலுக்கு கோவில் வாசல்லே இருங்கோ. நான் வரும்போது கூட வரலாம் ''
அப்போது மேலே சொன்ன க்யூ வரிசைகள் இல்லை. நேரே ஆலய வாசலில்  விடிகாலை  ரெண்டே முக்காலுக்கே குளித்துவிட்டு எல்லோரும் நின்றுகொண்டு  அவருக்காக  காத்திருந்தோம்.  விர்ரென்று குளிர் காற்று.  குழந்தைகள் பற்களை கடித்துக்கொண்டு நடுங்கி நின்றனர்.   
ஆஜானுபாகுவாக  சற்று கரிய நிறத்தில், இருட்டில்  விடு விடு வென்று நடந்து வந்தவர் எங்களைப்   பார்த்துவிட்டார்.    பேசவில்லை,   ''கூட  வா''   என்று கையால்  ஜாடை.   நாலுபேரும் பின்னே சென்றோம்.

 விடிகாலை ஸ்ரீ அனந்தசயனம் அய்யங்கார் --  ஆறு அடிக்கு மேலே கொஞ்சம் இருப்பாரோ? ஆஜானுபாஹு -  தலையில் கட்டுக் குடுமி, அதிகம்  பேசாத அந்த குரல் கணீரென்று திருமலை எங்கும் எதிரொலித்தது. அவரது சுப்ரபாதம் கேட்டு தான் ஸ்ரீனிவாசன் துயில் எழுவார்.  எம்.எஸ்.  சுபபலக்ஷ்மி வெங்கடேச சுப்ரபாதம் பாடாத காலம் அது.

அதை தொடர்ந்து கத்யம். எண்ணற்ற மரங்கள், காலங்கள், கனிகள்,குளங்கள், நதிகள், மலைகள், புஷ்பங்கள் என்று பெயர்கள் தொடர்ந்து வரும் gadhyam  கேட்பதற்கு அற்புதமாக இருக்கும்.   அந்த குரலை  பல வருஷங்களுக்கு பிறகு  யூட்யூப் இல்   ஒரு நாள் கிடைத்தது.  நான் உததேசமாக  நம்பிக்கை இல்லாமல் தேடினேன். என் அதிர்ஷ்டம் அவர்  குரல் இருந்தது.  யாரோ புண்யவான் அதை பதிவு செய்த்திருக்கிறார். அவர் குளம் நீடூழி வாழ்க.  பல வருஷங்களுக்கு பிறகு அதே குரலை நேரில் கேட்டது போலவே மீண்டும் கண்களில் நன்றிக்கண்ணீர் வழிய கேட்டேன்..

இன்று இரவு  மீண்டும் கேட்கும்போது பழைய நினைவு வந்தது.  உங்களோடு மறுபடியும் அதை பகிர்ந்து கொள்கிறேன்.

கொடுத்திருக்கும் லிங்க் சொடுக்கி  

https://www.youtube.com/watch?v=vEThIe-5HwY வெங்கடேச சுப்ரபாதம்
]]https://www.youtube.com/watch?v=LTwzHj4y7  ஸ்ரீனிவாச கத்யம்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...