Monday, September 21, 2020

PESUM DEIVAM

 


பேசும் தெய்வம்   J K   SIVAN  


                                          அற்புத  சந்நியாசியின்  அருஞ்செயல்   


மஹா பெரியவா  யுகபுருஷர்.  அவர் என்ன நினைக்கிறார் என்பது எவராலும் கண்டறியமுடியாத ஒன்று. அவர் தான் நினைப்பதைப் பக்தர்களின்மூலம் நடத்திக்கொண்டு விடுவார்” என்கிறார் அகிலா கார்த்திகேயன்.


”மஹா  பெரியவா  பீடாரோஹண மணிவிழாவைக் கொண்டாட  நவரத்ன  மணிகள்  கொண்ட   தங்க கிரீடத்தை அவருக்குச் சூட்டவேண்டும் என  சில ஆந்திர பக்தர்கள் விரும்பினார்கள்.  மணிமகுடத்தோடு  ரூபாய் 2 லக்ஷம்  நிதியும் திரட்டி, காஞ்சி மடத்துக்குக் கொடுக்க ஏற்பாடு.   மஹா பெரியவா  அனுமதி இல்லாமல் இதெல்லாம் செய்யமுடியுமா?  ஆகவே  சுவாமிகளைத் தரிசித்து நமஸ்கரித்துவிட்டு, தங்களது நிதி காணிக்கை குறித்து மெள்ளத் தெரிவித்தனர்.

”பணம் வசூல் பண்றதை உடனே நிறுத்திடுங்கோ!”    மஹா பெரியவா  வார்த்தையில் கடுமை இல்லை; ஆனால், உறுதி இருந்தது. தெலுங்கில் அதை  அவர்களுக்கு ஒருவர்  மொழி பெயர்த்து சொன்னார். 

 ஏன் பெரியவா அப்படி சொன்னார்?    ஒரு மடாதிபதி, பண பலமோ ஆள்கட்டோ இல்லாமல் தனித்து ஒதுங்கி இருக்கும்போது தான் அவரது  தவத்தாலும் ஒழுக்கத்தாலும் சமூகத்தின் மரியாதை, மதிப்பைப்  பெறமுடியும். சந்நியாசிக்கு  எந்த உடைமையும்  இல்லை. தனது ஊர் என்று எதுவும்  கிடையாது.  அதனால் தான்  ஊர் ஊராக  தேசாந்திரம் செய்யணும்  என்று சாஸ்திரம்.

”சாதுக்களும் சந்நியாசிகளும் தான் தர்மாச்சார்யர்களாக, செய்ய வேண்டியதையெல்லாம்  செய்யமுடியும்.  அவர்களுக்கென்று ஸ்தாபனம் இருந்தால்தான், இது சாத்தியமாகும். மடாதிபதி எனும் பொறுப்பை ஏற்பது இதற்காகத்தான். அவசியத்துக்கு மேல்  அதிகமாக  சன்யாசியிடம் எதுவும்  கூடாது என்ற கட்டுப்பாடு.   மஹா பெரியவா வரவு செலவு கணக்குகளில்  கண் குத்திப் பாம்பாக அதனால்  கவனமாக இருப்பவர்.  மடத்தைக் கட்டி ஆளுகிற சாமர்த்தியம் மட்டும் போதாது; தன்னைத்தானே கட்டி ஆளுகிற மனோபலமும் வேண்டும்!

மஹா பெரியவா சொன்னதை கேளுங்கள்: 

''இந்த காஞ்சி  மடம் அவசியமான செலவுகளுக்கே வழியின்றித் திண்டாடிய காலமும் உண்டு. ஆனால், போதிய அளவுக்கு திரவியங்கள் கிடைப்பதற்கு, ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் அருள் புரிந்திருக்கிறார். சில தருணங்களில், கொஞ்சம் நிறையவே பண்ணிவிடுகிறபோது சுவாமி நம்மைச் சோதனை பண்ணுகிறாரோன்னு தோணும். பணம் சேரச் சேர, ஏதாவது நற்பணிகளை அந்த நிதியைக் கொடுக்கச் சொல்லிடுவேன். மீதின்னு எதுவும் மிஞ்சாமலே மடம் நடக்கிறபடி சர்வ ஜாக்கிரதையா இருந்துண்டு வரேன். இப்போ பணம், தேவைக்கு ஏத்த அளவுக்கு இருக்கு. அதை இன்னும் கூட்ட வேண்டாமேன்னு பார்க்கறேன். எத்தனை நிதி வந்தாலும், அதை உபயோகப்படுத்தறதுக்கு நல்ல காரியங்கள் நிறையவே இருக்கு. ஆனா, அதிலே மடம் நேரடியா ஈடுபட்டுச் செய்தால், சுய பாத்தியதை மாதிரியான அம்சம் வந்துடும். அதனால், தானே எல்லாத்தையும் பண்ணணும்னு அட்சதை போட்டுக்காமல், மத்த சத்சங்கங்கள், ஸ்தாபனங்களைக் கொண்டு அந்த நல்ல காரியங்களைச் செய்யலாம். மடம், அவங்களுக்கு அட்வைஸ் பண்றதோட நிறுத்திக்கலாம்!” – பெரியவா சொல்வதை, கவனமாகக் கேட்டுக்கொண்டனர்  ஆந்திரா பக்தர்களும் மற்றவர்களும். 


மஹா  பெரியவா  மேலே  தொடர்ந்தார்… ”ஆகையினால லட்சக் கணக்கில் பணம் எதுவும் வசூல் பண்ணவேண்டாம். நாளைக்கே ஏதேனும் பெரிய திட்டம் மடத்திலே செய்றதுக்குத் தீர்மானமாகும்போது, வெக்கப்படாம நானே உங்ககிட்டே கேக்கறேன். நம்ம முயற்சியை நிறுத்திட்டாரேனு நீங்க வருத்தப்பட வேண்டியதே இல்லே. உங்க மனசும் ஆர்வமும் எனக்குத் தெரியாம போயிடலே. அதனால நிறைய ஆசீர்வாதம் பண்றேன்!” 

காஞ்சி பெரியவாவின்  விளக்கத்தில்  ஆந்திர பக்தர்கள் நெகிழ்ந்து போனார்கள். 

''பெரியவா ஏற்கனவே  நாங்க பணம் வசூலித்துச் சேர்ந்த தொகையை என்ன செய்யறது ன்னு சொல்லுங்கோ?''”இதுவரை எவ்ளோ வசூல் பண்ணியிருக்கேள்?” 

”அறுபதினாயிரம் ரூபாய்!” ”அறுபதுக்கு அறுபது பொருத்தம்தானே!”  - சொல்லிவிட்டு, குழந்தை மாதிரி சிரித்தார் பெரியவா. ”பீடாதிபத்ய அறுபதாம் ஆண்டு நிறைவுக்கு அறுபதாயிரமோ? சரிதான்… பொருத்தமான கட்டத்தில்தான் நிறுத்தச்சொல்லி அம்பாள் உங்களை இங்கே அனுப்பியிருக்கா. வசூல் பண்ணினதை அப்படியே வெச்சிண்டு இருங்கோ.  நானே தேவைங்கிறபோது உங்ககிட்டேர்ந்து வாங்கிக்கறேன்!” 

அன்பும் கருணையும் பொங்கச் சொன்னார். ''இன்னொரு  விஷயம்  பெரியவா.   ஏற்கனவே  நாங்கள்  பெரியவா மணி விழாவுக்கு  ஒரு  தங்க  மணி மகுடம் பண்ணி வைச்சுட்டோம். அதையாவது பெரியவா  தட்டாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்.''.


பெரியவா தனக்கே உரிய வாஞ்சையுடன் தலையசைத்துச் சம்மதித்தார்.  ''ஆனால்  நான் துறவி.  சிரசில்  நேராக  தங்க மகுடம் எல்லாம்  தரிக்க்கூடாது.  பிரதோஷத்தின்போது பூஜை வேளையில் நான்  அணிகிற ருத்திராட்ச கிரீடத்தின் மேலேயே உங்களுடைய  தங்க  கிரீடத்தையம் வச்சிடுங்கோ.''


இது நடந்து  ரெண்டு வாரம்  ஆயிற்று.  ஆந்திரா பக்தர்களிடம்  ''நீங்கள் வசூல் செய்த  60,000 ரூபாயை குருக்ஷேத்திரத்தில் கீதோபதேசக் காட்சியும், கீதாபாஷ்யம் செய்த  ஆச்சார்யருக்கு சலவைக் கல்லில் பிம்பம் செய்யும் நற்பணிக்குமாக அனுப்பிவையுங்கோ ''   என்று  பெரியவா கேட்டுக் கொண்டார். 

 ஆந்திர பக்தர்களும் அப்படியே செய்தனர்.  அது சரி  ருத்திராட்ச கிரீடத்தின்மீது வைக்கப்பட்ட  தங்க கிரீடம் ஏற்றுக்கொண்டாரா?   ஹு ஹூம்… அதுதான் இல்லை. அப்புறம்  என்ன ஆச்சு.?

தஞ்சாவூர்  பெரிய  கோவில் ஸ்ரீபிரகதீஸ்வரருக்கு எழுப்பி,  தேவாரத் திருமறைகளை  பாடு பாட்டு கண்டறிந்து, அவற்றை  தினமும் ஓதுவதற்கு வழி  கோலிய  ராஜராஜசோழனின் ஆயிரமாவது ஆண்டு விழா 1984-ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது  மஹா  பெரியவா 

 ”ராஜா என்றாலே முடி சூடணும். அதுவும் இந்த ராஜராஜன், சிவபாதசேகரன்.  பரமேஸ்வரன் பாதத்தை முடியில் கொண்டவன். அவனுக்கு நாம் முடிசூட்டியே ஆகணும்!”  எனக் கூறி, தஞ்சை ராஜராஜ சோழனுக்கு அணிவிக்க, தனக்கு  அணிவித்த  தங்கக் கிரீடத்தில் சற்றே மாறுதல் செய்து  தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தார்.அப்போதைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அதை  ராஜராஜனுக்கு சூட்டினார். சந்திரசேகரரே, தனது பக்தனான சிவபாதசேகரனுக்கு மகுடம் சூட்டிப் பெருமைப்படுத்திய அதிசயம் இது.

இப்போது இருக்கும்  சில  மடாதிபதிகள், சந்யாசிகள்  இப்படி செய்தால்  அதிசயம்.  ஆ னால் மஹா பெரியவா  தனக்கு அளிக்கவந்த   60,000 ரூபாயும், பெற்றுக்கொண்ட பொற்கிரீடமும்,  துளியும்  சந்நியாச தர்மத்தை மீறாத வகையில், பொதுவான நற்பணிக்குப் போய்ச்சேரும்படியாக செய்தவர் . அதனால் தானே  அந்த  கருணாமூர்த்தி என்றும் தெய்வமாக  நம் மனதில் வாழ்கிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...