Sunday, September 6, 2020

PATAKACHERI SWAMI

  இவை நாய்களல்ல  தேவர்கள். J K SIVAN


கும்பகோணத்திற்கு தென் கிழக்கே  வெட்டாறு  கரையோடு  ஜிலு ஜிலுவென்று குளிர்ந்த காற்றில்  18 கி.மீ. போனால் தான் பாடகச்சேரி கிராமம் வரும். தஞ்சாவூரிலிருந்து 33 கி.மீ. ஆலங்குடியிலிருந்து  நடந்தே  3 கி.மீ. தூரம்.
பாடகம் என்பது  பெண்கள் காலில் போட்டுக்கொள்ளும்  தண்டை போன்ற ஆபரணம்.  மேலே  ராவணன் தூக்கிச்செல்லும்போது சீதை தனது காலிலிருந்து பாடகத்தைக்  கழற்றி  கீழே போட்ட இடம் என்று  சொன்னாலும் நான் எழுதப்போவது அங்கே வாழ்ந்த ஒரு மஹான்  ராமலிங்க ஸ்வாமிகள் பற்றி. இந்த ராமலிங்க  ஸ்வாமிகள்  அருட்பா எழுதிய  வடலூர்  ராமலிங்கம் பிள்ளை இல்லை என்றாலும்  அருட்பா  வள்ளலார் இந்த ஸ்வாமிகளுக்கு 12 வயதாகும் போது  ஞான உபதேசம்  வழங்கி இருக்கிறார்.   பாடகச்சேரி ஸ்வாமிகளுக்கு நாய்களை  ரொம்ப பிடிக்கும்  என்பதால்  அவரை பைரவ சித்தர் என்பார்கள்.   
ராகு க்ஷேத்ரம் கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் புணருத் தாரணத்துக்கு  கழுத்தில்  உண்டியலைக் கட்டிக் கொண்டு  வீடு வீடாக சென்று    யாராவது  ஒரு கால்  அணா   (மூன்று  தம்பிடி) கொடுத்தாலும்  பெற்றுக் கொண்டவர்.  பாடகச்சேரி அருகே பல கோவில்களை புனருத்தாரணம் செய்தவர். கோவில்களில் மூலவரை பிரதிஷ்டை பண்ணும்போது கூடவே இருப்பவர்.  இன்றும் அவர் பெயரில் மடம் ஒன்று  இருந்து அன்னதானம் நடைபெறுகிறது. சென்னையில் திருவொற்றியூரில் அவர் ஜீவ சமாதி ஒன்று இருக்கிறது.
பாடகச்சேரி ஸ்வாமிகள்  பெரிதாக உபதேசம் ஒன்றும் செய்யவில்லை, ஆஸ்ரமம் எதுவும் நிறுவ வில்லை. அமைதியாக  மக்களுக்கும்  மகேசனுக்கும்  சேவை செய்த ஒரு மஹான். 
 9.5.1876 அன்று கந்தசாமி- அர்த்தநாரி தம்பதியருக்கு பொள்ளாச்சியை சேர்ந்த மஞ்சம்பாளய கிராமத்தில் பிறந்தவர்.  தெலுங்கு பேசும்  ஆந்திராவிலிருந்து குடி பெயர்ந்த   வீர சைவ ஜங்கம  குடும்பம்.   பெல்லாரியை சேர்ந்த  எரிதாதா ஸ்வாமிகள்  தான் அவருக்கு  குரு. 
மஹா பெரியவா இந்த பாடகச்சேரி ஸ்வாமிகளை பற்றி ரொம்ப உயர்வாக  சொல்லி இருக்கிறார்.
பாடகச்சேரியில் ஸ்வாமிகள் புனருத்தாரணம் செய்த ஒரு அருமையான பெருமாள்  கோவில் இருக்கிறது. பெருமாள் பெயர் கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள். எதைக்கண்டு ? பக்தர்களையா? சீதையைத் தேடும்போது, லக்ஷ்மணன்  ''அண்ணா, இதோ பாருங்கள் சீதம்மாவின் கால்  பாடகம்'' என்று இந்த ஊரில்  பாடகத்தை காட்டியபோதா?   லக்ஷ்மணன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அவன் சீதையின் திருவடிகளை வணங்குபவன்.  ஆகவே  அவனுக்கு  சீதாதேவியின்  காலில்  என்ன அணிந்திருக்கிறாள்  என்று நன்றாக அறிவான். . மூக்குத்தி  தோடு எல்லாம் காட்டினால்  தெரியாதே என்பான். மூன்றரை அடி  உயர நிற்கும் பெருமாள். இந்த ஒரு கோவிலில்  பெருமாள் கண்கள் பக்தர்கள் கண்களை நேரடியாக நோக்கும் அற்புதம்.பாடகச்சேரியில் இன்னொரு கோவில்  ஸ்ரீ சௌந்தர்யநாயகி சமேத  ஸ்ரீ பசுபதீஸ்வரர். 
ஸ்வாமிகள் பாடகச்சேரி வருவதற்கு முன்  பட்டம் எனும் கிராமத்தில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்தவர். நவகண்ட யோகத்தில் அவரை ஊர்மக்கள் ஒருநாள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  தேகத்தை  ஒன்பது துண்டங்களாக  பிரித்துக்கொண்டு  யோகநிஷ்டையில் ஆழ்வது. ஷீர்டி சாய்பாபா, திருவண்ணாமலை விடோபா பாபா, ஆகியோர்  இந்த வகை நிஷ்டையில் ஈடுபட்டவர்கள். அவராய் மரியாதையோடு வணங்கி  பாடகச்சேரியில் தங்க வைத்தனர்.  எத்தனையோ பேருக்கு  வியாதிகள் நீங்க, கஷ்டங்களைப்  போக்கிய சித்தர்.  மஹாமஹ  சமயத்தில் லக்ஷக்கணக்கானோருக்கு அன்ன தானம் ஏற்பாடு செய்தவர்.  நல்லி குப்புசாமி செட்டியார் ஸ்வாமிகளை பற்றி எழுதி இருக்கிறார். அவரது மடத்தை புதுப்பித்து உதவியிருக்கிறார்.
ஸ்வாமிகள்  நாள் தோறும் ஏராளமான நாய்களைக் கூப்பிட்டு  உணவளிப்பார். ''இதெல்லா



ம்  நாய்கள்  இல்லை.  தேவர்கள்'' என்பார். பாடகச்சேரியில்  பைரவ வழிபாட்டுக்கு முதல் நாள் சாயந்திரம்  பக்கத்து கிராமங்கள் ஆலங்குடி, செம்மங்குடி, புளியங்குடி, அம்ருதவல்லி - இங்கெல்லாம் போய்  அங்கே இருக்கும் எல்லா நாய்களுக்கும்  இன்விடேஷன்  கொடுப்பார்.   பைரவ வழிபாடு அன்று சுமார் முந்நூறு பேருக்கு சமையல் . வடை  பாயசம் என்று   பாத்திரங்கள் நிரம்பி இருக்கும்.  இந்த பொட்டல்  கிராமத்தில் அத்தனை பேர் எங்கிருந்து வந்து சாப்பிடுவார்கள்??  என்று சமையல் காரர்களுக்கு  ஆச்சர்யம்.   ஆனால்   சமையல் முடிந்து பூஜை ஆனதும்   அந்த இடத்தில்  வெட்டவெளியில்   வாழை இலையை விரித்து. மனிதர்களுக்குப் பரிமாறுவது போல் சமைக்கப்பட்ட அனைத்து பதார்த்தங்களும்  இலைகளில் பரிமாறினதும்   ஸ்வாமிகள் தன்னுடைய கையில் இருக்கும்  குச்சியால்  தரையை  டக்  என்று ஒரு தட்டு தட்டுவார்.  அவ்வளவு தான் 
எங்கிருந்துதான் வருமோ தெரியாது,  நூற்றுக்கணக்கான   நாய்கள்  பாய்ந்து வந்து வந்து இலையின் முன்பாக  அமைதியாக  சமர்த்தாக  உட்காரும்.  வேடிக்கை பார்க்கும் ஜனங்கள் கண்ணனுக்கு நாயாக தெரியுமே தவிர  ஸ்வாமிகளுக்கு அவை  மனித ரூபம். 

சுவாமிகள் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்திலேயே சமாதி ஆக விரும்பினாராம். ஆனால், அவரின்  சென்னை பக்தர்கள்  வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 1949ம் வருடம் அம்பாளுக்கு உரிய ஆடிப் பூர தினத்தில் திருவொற்றியூரில் ஜீவ சமாதி ஆனார்.  அவர் கடைசியாக கூறியது: ‘‘நான் மறைந்தாலும், என்னை நம்பி இருப்பவர்களுக்கு நான் என்றும்  துணையாக இருப்பேன். என்னை நம்பாதவர்களுக்கும் நம்பிக்கை வரும் பொருட்டு உதவிகள் செய்து வருவேன்!’’
திருவொற்றியூர் செல்பவர்கள்   பாடகச்சேரி ஸ்வாமிகள் ஜீவசமாதியை தரிசிக்கலாம். திருவொற்றியூர்  வடிவுடை அம்மன் ஆலயம் அருகே 1 கி.மீ.திருவொற்றியூர்  மார்க்கெட்டிலிருந்து  அரை கி.மீ. திருவொற்றியூர் ரயில் நிலத்திலிருந்து 1.1/2 கி.மீ.  திருவொற்றியூர் ஒரு புண்ய க்ஷேத்ரம்.  பட்டினத்தாரிலிருந்து இன்னும்  சில சித்தர்கள் சமாதிகளும் அங்கே உண்டு. அவற்றை பிறகு சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...