Tuesday, September 15, 2020

SAINT GNANDEV

 21 வயதில் ஜீவ சமாதி J K SIVAN

பண்டரிபுரத்தில் ஒருநாள் பொழுது விடிய இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. சூரியன் இன்னும் ரெண்டு நாழிகை கழித்து தான் கிழக்கே சிவப்பாக தலையை தூக்குவான். குளிர் காற்று முதல் நாள் இரவில் பெய்த மழையின் குளிர்ச்சியை பரப்பியது. சீக்கிரமாக எழுந்துவிட்ட ஒரு சில பறவைகளின் கூச்சல் மரங்களில் கேட்டது. நாமதேவர் ஆலய மண்டபத்தில் படுத்திருந்தவர் எழுந்தார். அவரை அறியாமல் கால்கள் பாண்டு ரங்கனின் சந்நிதிக்கு இழுத்து சென்றது. அங்கே அமர்ந்து கண்மூடி உள்ளே பாண்டுரங்கனோடு உறவாடினார். அப்பொழுது தான் ஞானதேவர், அவர் சகோதரர்கள் நிவிருத்தி, சோபன் மற்றும் சகோதரி முக்தாபாயுடன் ஆலயத்தில் நுழைந்தார். அவருக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது.
ஞானதேவர் தந்தை விட்டல் பந்த், தாய் பந்தர்பூர் அருகே ஆலந்தி கிராமத்தை சேர்ந்த ருக்மா பாய். விட்டல் பந்த் குடும்பத்தை விட்டு காசிக்கு சென்று சந்நியாசியாகி, அங்கே ராமானந்தர் சிஷ்யன் பவானந்தன் ஆகிவிட்டார். குருவுக்கு சிஷ்யன் மணமானவன், மனைவி குடும்பத்தை விட்டு ஓடிவந்தவன் என்று தெரியாது.
ஞானதேவருக்கு 21 வயதிலேயே வாழ்க்கை சலித்து விட்டதால் மனது வைகுண்டத்தை நாடியது.ராமானந்தர் ஒரு முறை தெற்கே ராமேஸ்வர யாத்திரை வந்தார். வரும் வழியில் ஆலந்தியில் ஒரு சில நாள் தங்கியபோது ருக்மாபாய் அவரை தரிசிக்கிறாள். அவள் கணவன் தான் தனது சிஷ்யன் பவானந்தன் என்று தெரிகிறது. ஞான திருஷ்டியால் அவனை உடனே ஊருக்கு திரும்பி இல்லறத்தில் ஈடுபட கட்டளையிட்டார். மேலே சொன்ன நிவ்ரித்திநாத், ஞானதேவ், சோபன், முக்தாபாய் என்ற நான்கு குழந்தைகள் பிறக்கிறது.சந்நியாசி மீண்டும் கிரஹஸ்தாச்ரமம் மேற்கொண்டதற்காக ஊரே எதிர்ப்பு. காட்டி ஊரை விட்டே வெளியேற்றினார்கள். பிராயச்சித்தம் செய்வதாக முடிவு செய்து விட்டல் பந்தும் ருக்மா பாயும் இந்திராயணி ஆற்றில் மூழ்கி மறைகிறார்கள். நான்கு சிறு குழந்தைகளும் தாமாகவே ஊரார் உதவியின்றி வளர்ந்தனர்.பண்டரிபுரத்தில் ஞானதேவருக்கு நாமதேவர் நட்பு கிடைத்தது. இருவரும் பாண்டுரங்கனின் இரு கண்கள். பல க்ஷேத்ரங்களை தரிசித்தனர்.ஞான தேவருக்கு ஜீவ சமாதி அடைய எண்ணம் தோன்றி பண்டரிநாதனை வேண்டுகிறார்.. அதற்கு தான் அன்று ஆலயம் வந்தார் என்று மேலே பார்த்தோம்.
''ஹே, ஆத்மாவே நீ அங்கிருந்து தானே என்னுள் இந்த பூலோகத்தில் வந்து புகுந்தாய், அங்கேயே போகவேண்டாமா? உனக்கு எதற்கு இனியும் இந்த உடலில் வாசம்? ''பாண்டுரங்கா, விட்டலா, போதுமய்யா, இந்த நாடகம். இத்தனை காலம் என்னை நீ எப்படியெல்லாம் ஆடவிட்டாயோ அப்படி நிறைய ஆடி விட்டேன், பாடி விட்டேன், ஓய்ந்துவிட்டேன் அப்பா, இங்கேயே உன் காலடியில் பண்டரிபுரத்தில் என் பிராணனை ஏற்று, இந்த பூத உடலை அடக்கம் பண்ணிவிட்டு என் ஆத்மா உன்னுடன் ஐக்கியமாகி விடட்டுமே. இந்த ஆசையை நிறைவேற்றுவாயா?'' என்று வேண்டினார் ஞானதேவர். " இல்லை, ஞானதேவா, உன் சமாதி இங்கில்லை, ஆலந்தியில் தான் என்று ஏற்கனவே முடிவு செயதாகி விட்டது.''
'' ஏன் விட்டலா, என்னை பண்டரிபுரத்தில் ஏற்காமல் புறக்கணித்து வேறு எங்கோ செல் என்கிறாய்?
'' ஞானதேவா, இங்கு வரும் பக்தர்கள் என்னை தான் நினைப்பார்கள், அவர்கள் உன்னை நினைக்க செய்ய வேண்டும் என்று என் விருப்பம். அதற்கு தான் ஆலந்தி என்று முடிவு செய்தேன் . பிரத்யேகமாக உன்னை தரிசிக்க மட்டுமே அங்கு எல்லோரும் வருவார்கள். உனது சமாதியை தரிசிக்க ஆலந்தியில் ஆஷாட
மாசம் கிருஷ்ண பக்ஷ ஏகாதசி அன்று திரள்வார்கள்.
''விட்டலா, என்னே உன் கருணை என்மேல். அது சரி, ஆலந்தி என்று ஏன் தீர்மானித்தாய், எதற்கு அதை புனித க்ஷேத்ரம் என்கிறாய்?'
"கேள், ஞானதேவா, சொல்கிறேன். சிவபெருமானும் பார்வதியும் ஆலந்தியில் ஒருமுறை நடந்து சென்ற போது இந்திரன் பார்வதியை கேலியாக ''எப்படி நீ இந்த புலித்தோல், ஜடாமுடி சந்நியாசியை மணக்க தேர்வு செய்தாய்? '' என்றான்.
பார்வதி கோபமேலிட்டு இந்திரனை சபித்தாள். உனக்கு ஒரு பெண் பெயர் தான் இனிமேல் அதுவும் நீ நீர் உருவமாக மாறிவிடுவாய்''
சிவனிடம் சென்று மன்னித்தருள வேண்டுகிறான் இந்திரன். சரி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார் சிவன் .
''பார்வதி இட்ட சாபத்திற்கு விமோசனம் தந்தால் போதும் பரமேஸ்வரா''
''பார்வதி நீ என்ன சொல்கிறாய்? பாவம் இந்திரன் ஏதோ தெரியாமல் உளறிவிட்டான்''
''நாதா இந்திரன் நீராக மாறவேண்டாம், பெண்ணாகவும் வேண்டாம். அவன் உடலிலிருந்து ஒரு அருவி உண்டாகட்டும், அவன் பெயரால் பெண்ணாக அந்த நீர் அருவி அழைக்கப்படட்டும். சாபம் பலித்ததாக ஏற்போம்'
''இந்திராயணி என்ற புனித நதி இவ்வாறு பெயர்க் காரணம் கொண்டது. ஞானதேவா. அதன் கரையில் உண்டானது தான் ஆலந்தி. சிவன் அருள் பெற்ற ஸ்தலம்.
''விட்டலன் தீர்மானித்தபடி ஞானதேவர் சகோதர்கள், நாமதேவர், முக்தாபாயுடன் ஆலந்தி சென்றார். ஏகாதசி உபவாசம் இருந்து மறுநாள் துவாதசி பாரணை முடித்தார். பதின்மூன்றாம் நாள் பாண்டுரங்கன் ஞானதேவ் முன் தோன்றி ''ஞானதேவா நீ வைகுண்டம் செல்லும் நேரம் வந்துவிட்டது'' என்கிறார். ஞானதேவை கைபிடித்து அழைத்துக்கொண்டு இங்கு தான் உன் சமாதியென்று ஒரு இடம் காட்டுகிறார். சிவன் கோவில் நந்தி அடியில் ஒரு குழி பாண்டுரங்கனே தோண்டி அதில் ஒரு மான் தோல் ஆசனம் வைத்திருந்தது. உள்ளே காய்ந்த மரங்களை வைத்து நிவ்ருத்தி தேவ் அக்னி மூட்ட, அந்த புகையை சுவாசித்த ஞானதேவர் கண்மூடி சாய்கிறார் . அந்த குகை, குழியின் வாசலை ஒரு பெரிய கல் பாறையால் நிவ்ருத்தி தேவ் மூடுகிறார். ஞானதேவரின் ஆன்மா வைகுண்டம் செல்கிறது. அவருடைய தண்டம் குகையிலிருந்து வளர்ந்து ஒரு தங்க அரசமாகிறது. பாண்டுரங்கன் நட்ட இரு மரங்களும் கிளைகளும் அந்த குகை வாயிலை மறைக்கிறது. அந்த மரங்கள் இருப்பதாக இன்றும் வழிபடுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷம் ஏகாதசி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலந்தியில் கூடுகிறார்கள்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...