Sunday, April 8, 2018

SUNDARAR



சுந்தர மூர்த்தி நாயனார்   
J.K. SIVAN 

         முதலை வாய் மதலை

நான்  என் நெருங்கின உறவினர் வீட்டுக்கு திருப்பூர் செல்லும்போது  எனக்கு கிடைத்த அரிய  சந்தர்ப்பம் அவ்வப்போது அவிநாசி சிவன் கோவிலுக்கு செல்லும் பாக்யம்.அவிநாசி திருப்பூர்  எல்லாம் கொங்கு தேசம். தமிழ் கொஞ்சும்.  அவிநாசிக்கு  திருப்புக் கோழியூர் என்று முற்காலத்தில் பெயர். கொச்சி போகும் வழி.


அவிநாசிக்கு ஒரு புகழ். '' காசியில் வாசி அவிநாசி '' என்று.  வாராணாசி , காசி போய்  விஸ்வநாதனை வழி படுவதில் பாதி பலன் அவிநாசியில் அவிநாசிலிங்கத்தை  தரிசனம் செய்தால் என்பார்கள். விநாசம் என்றால் அழிவு என்று அர்த்தம். அவிநாசி என்றால் நிரந்தரம்,சாஸ்வதமான பாப விநாசம் :மோக்ஷம். சுந்தரபாண்டியன் கட்டிய  ஆயிர வருஷ கால ஆலயம். 

சுற்றுவட்டார மக்களுக்கு பக்தர்களுக்கு  இது கருணையாத்தாள்  கோவில். தக்ஷிண வாரணாசி.  எல்லா இடத்திலும் சிவனுக்கு இடப்புறம் உள்ள அம்பாள் இங்கே வடக்கு பக்க சக்தி. 


இந்த கோவிலுக்கு சுந்தரர்  வந்து சேர்ந்தார். எங்கும் ஒரே கூக்குரல்  ஜனங்கள் சோகத்துடன் அழுகுரல். மறுபுறம் மேளதாளத்துடன் ஏதோ விசேஷம். என்ன இது ? என்ன நடக்கிறது இங்கே?  ஒருபக்கம் சோகம், அழுகுரல், இன்னொருபக்கம்  உற்சாகம்.?

''யாருக்கு என்ன ஆயிற்று  இங்கே ?''  என்று கேட்கிறார் அருகே யாரையோ  சுந்தரர்.  எதிரே  குளம். அதன் கரையில்  சில  பிராமண அக்ரஹார வீடுகள். அங்கே தான்  ஏராளமாக கூட்டம்.

பராபரியாக  இங்கொன்றும் இங்கொன்றுமாக  சேதி காதில் விழுந்ததில்  சாராம்சம் என்னவென்றால்  ரெண்டு பிரம்மச்சாரி பிள்ளைகள் அந்த பிராமண குடும்பங்களில் நண்பர்கள்  குளத்தில் இறங்கி குளிக்கும்போது ஒருவனை  ஒரு முதலை விழுங்கி விட்டது. அந்த குளத்தில் முதலை இருப்பது தெரியாது.  ரெண்டு பையன்களில் ஒருவன் இவ்வாறு முதலை விழுங்கி மரணமடைய , மற்றொரு பையனுக்கு அன்று  உபநயனம்.  ஒரே பிள்ளை, உற்சாகமாக கொண்டாடுகிறார்கள் பெற்றோர் சுற்றத்தார். ரெண்டு   ஏழு எட்டு வயது  பையன்களும் நல்ல நண்பர்கள்.  மற்றவன் உயிரோடு இருந்தால் இன்று அவனுக்கும் கோலாகலமாக உபநயனம் நடந்திருக்கும்.  விதி என்ன தலையில் எழுதியிருக்கிறதோ அதை மீற முடியுமா?

இந்த கதை சுந்தரரை  உலுக்கி விட்டது. அவர் மனது கரைந்தது. அந்த முதலை விழுங்கிய பையன் மீது பரிதாபம் ஏற்பட்டது. அவருக்கு எந்த உணர்ச்சியும்  சிவன் சாத்தப்பட்டது தானே.  

சுந்தரர் அந்த இறந்த பையன் வீட்டு வாசலில் வந்து நின்றார்.  கண்களில் கண்ணீர்.  உள்ளே இருந்து  அவன் பெற்றோர் மற்றும் உறவினர் வந்து சுந்தரரை வணங்கினார்கள்.  சுந்தரர் சிலையாக நின்றார். கண்களை மூடினார். 

''அவிநாசி லிங்கேஸ்வரா, உன்னை தரிசிக்க வந்த எனக்கு இந்த துன்பச் சுமை வேறா? நீ அப்படியாவது அந்த முதலை வயிற்று  பையனை திரும்ப உயிரோடு கொண்டுவந்து தருவாயா?''  


வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ 

ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே 
பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை 
இழியாக் குளித்த மாணிஎன் னைக்கிறி செய்ததே. 

எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்கால் 
கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பார்இலை 
பொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியே 
எங்கோ னேஉனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே.

 உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய் 
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் 
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே 
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.

'' பரமேஸ்வரா,   நீ  அந்த யமனிடம்  சொல்லி முதலையின் வாய் திறந்து அந்த பிள்ளையை ஜாக்கிரதையாக உயிரோடு தரச்சொல்லு ''



அவிநாசி லிங்கேஸ்வரன்  என்ன செவிடா?  சுந்தரன் தமிழ் இனிக்காதா. அந்த இனிப்பு  முதலையின் வாயை ஆ வென்று பிளக்க செய்யாத. உள்ளே இருந்த பையன் ஜம்மென்று வெளியே குதிக்க மாட்டானா. அப்பா அம்மாவிடம் ஓடமாட்டானா?''   முதலைவாய் மதலை பிழைத்தது. எல்லாம் ஒரு பதிகத்தால்.

உபநயன வீட்டாரை விட இங்கே இந்த அதிசயப்பையன் வீட்டில் கோலாகலம். அவன் பெற்றோருக்கு அவனோடு சேர்ந்து சுந்தரர் காலில் விழுந்து உயிர்கொடுத்த அந்த சிவனடியாரை வணங்குகிறார்கள். இந்த அதிசயம் விரைவில் எங்கும் செயதியாக  பரவுகிறது. 
அந்த பையனை கை பிடித்து சுந்தரர்  அவிநாசி லிங்கேஸ்வரன் சந்திக்கு அழைத்து சென்று நன்றி தெரிவிக்கிறார். தானே அவனுக்கு பூணல் அணிவித்து உபநயனம் அவனுக்கும் நடைபெறுகிறது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...