Sunday, April 1, 2018

SUNDARAR



சுந்தர மூர்த்தி நாயனார்  -- j.k. SIVAN 
                                                                                               பரவையிடம் தூது 

ஒரு மனைவி  தனது கணவன் மீது அளவற்ற அன்பும் காதலும் கொண்டவள், வெகுநாளாக யாத்திரை சென்றவன் திரும்பி வருகிறான் என்று அறிந்தால் எவ்வளவு சந்தோஷம் அடைவாள்?  இதை தெரிந்து கொள்ள நாம் திருவையாறு செல்கிறோம். அங்கே  பரவை பரிபூர்ண ஆனந்தத்தில் இருப்பதை காண்கிறோம்.  அன்று ரெண்டு சூரியன். ஒன்று வானத்தில் இன்னொன்று பரவை  வதனத்தில்.

'' அம்மா   அய்யா  ஊருக்கு வந்துகிட்டு இருக்கிறாரு '' என்று பரவையிடம்  தோழியர்கள் சொல்லும்போது தான் மேலே சொன்ன ரெண்டு சூரியனை பார்த்தோம். அடுத்த கணம் அங்கே ஒரு கிரஹணம் நடந்ததையும் பார்க்க வேண்டி இருக்கிறதே.  

''அப்படியா தடபுடலா அவரை வரவேற்கணும்.  

''ஆனால்  அம்மா......''''

''என்ன ஆனால்?''
''கூடவே ஒரு பொண்ணு அவரோடு வருது. 
''யாரு அது '
''அவரு தாலி கட்டின மனைவி சங்கிலி ன்னு பேராம் '''

உலகம் சுழன்றது. ஒரு இருள் சூரியனை கவ்வியது. எங்கும் வெள்ளம் ஓ வென்ற பேரிரைச்சலுடன் உலகத்தை மூடியது.  பரவை  காது கேட்ட இடியில் வாடி கண்ணீரால் நிரம்பினாள் . துக்கம் தொண்டையை அடைத்து பேச்சு வரவில்லை. பரவையைச்  சேர்ந்தவர்கள் சுந்தரரை வீட்டை நெருங்க விடவில்லை. 
சுந்தரர் விஷயம் அறிந்து திகைத்தார். சில பெரியவர்களை அனுப்பி பரவையைச் சமாதானம் செய்ய சொல்லியும் எந்த பயனுமில்லை. முயற்சி தோல்வியில் முடிந்தது.

''தியாகராஜா எல்லாம் உன் திருவிளையாடல். நான் ஒரு துரும்பு. என்னை ஆட்டுவிப்பது நீ தானே. உன் சித்தம் எவ்வாறோ அப்படியே நடக்கட்டும்.'' என நெக்குருகி வேண்டினார்.  இரவெல்லாம் சிவனை வேண்டி கண்ணீர் வடித்தார் சுந்தரர். உனக்கு  நல்லது நடக்கும் கவலைப் படாதே. பொறுமையாக இரு'' என்கிறார் சிவன்.
மறுநாள் காலை யாரோ கதவை தட்ட பரவை வாசலில் ஒரு முதிய பிராமண  சிவனடியார் நிற்பதைக்  கண்டு உபசரித்தாள்.  அன்றாடம் எத்தனையோ பேர் வருவார்கள்.  உணவளிப்பாள் .

தான் ஊரில் விஷயம் கேள்விப்பட்டதை  அறிந்து பரவையை சமாதானப்படுத்தி சுந்தரரையும் சங்கிலி
யையும் ஏற்றுக்கொள்ள  பறவையிடம் சிபாரிசு செய்தார்.  பரவையின்  பிடிவாதம் வென்றது. தோல்வி கண்ட முதியவர் சுந்தரரிடம் சென்று நிலைமையை எடுத்துச்  சொன்னார்.
  
''வேறு வழி இல்லையென்றால் நான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்'' என்று கலங்கினார் சுந்தரர்.

''மீண்டும் சென்று சொல்லி பார்க்கிறேன்'' என்கிறார் முதியவர். 

மீண்டும் வீட்டுக்கு வந்த அந்த பெரியவரை பரவை  கோபத்துடன் ''சிவபெருமானை இந்த அல்ப விஷயத்துக்கு  இழுத்து  அவமதிக்காதீர்கள். அவர் இதற்கெல்லாம் உடன்படுபவர் அல்ல''

''ஓஹோ,  அப்படியா.  நான் சொல்வதை  பரமேஸ்வரன் சொல்வதாக ஏற்றுக்கொள் அம்மா .  மறுக்காதே.  வேண்டுமானால் அவரையே நீ நேரில் கண்டு கேளம்மா''  என்று முதியவராக தூது வந்த பரமேஸ்வரன் பரவைக்கு காட்சி தந்து அருள்கிறார்.  

''ஈஸ்வரா,  தாங்களா ப்ராமண முதியவராக வந்து என்னை சோதித்தது.  அடியேன் செய்த பெரும்பிழையை மன்னித்தருளவேண்டும்.  என் குடிசைக்கு வந்து என்னை ஆசிர்வதித்த உங்கள்  சொல்லை மறுப்பேனா. என் தவறை  புறக்கணித்து என் மீது கருணை காட்டவேண்டும் தியாகராஜ  ப்ரபோ''. ஆஹா  என்ன பாக்கியவான் சுந்தரர்  உங்களை  நள்ளிரவும் பகலும் என்னை தேடி தூது செல்ல வைப்பதற்கு. அவரது பக்திக்கு முன் நான் ஒரு துரும்பு. அவர் திருவடிகளில் வீழ்ந்து என் தவறை  மன்னித்து ஏற்றுக் கொள்ள செய்கிறேன்.''

பரவை சுந்தரரை நோக்கி ஓடுகிறாள். அதற்குள்  முதியவர்  சுந்தரரை சந்தித்து ஆறுதல் சொல்கிறார்:

''சுந்தரரே,  இனி   நீங்கள் பரவை இல்லத்தை நோக்கி செல்லுங்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறாள். ஒருவாறு சமாதானப் படுத்தி விட்டேன் '' 

முதியவரை வணங்கிய சுந்தரர் நிமிர்வதற்குள்  பிராமணர் மறைகிறார்.  சுந்தரர்  தூதுவனாக வந்த முதியவர் தியாகராஜரே  என அறிந்து நன்றியால் கண்ணீர் வடிக்கிறார்.   பரவை சுந்தரர் திருவடிகளில் விழுந்து வணங்கி அவரை வரவேற்று தனது தவறுக்கு வருந்துகிறாள். குடும்பம் ஒன்று சேர்ந்தது.

சுந்தரர் சங்கிலியை வேற்றூரில் மணந்தது,  திருவாரூர் திரும்பிய அவரையும் சங்கிலியையும் பரவை  வெறுத்தது,  இணைய மறுத்தது  பிறகு சிவனையே தூது செல்லவைத்து சுந்தரர் பரவையுடன் மீண்டும் இணைந்த செய்தி காட்டுத்தீ போல் அந்த  சிறு திருவாரூர் கிராமத்தில் மட்டுமல்ல அண்டை அசல் ஊர்களிலும் பரவியது. 

எல்லோரும் இதெல்லாம் கேட்டு ஆச்சரியப்பட  இந்த செய்தி ஒருவர் காதில் மட்டும்  காய்ச்சிய ஈயம் போல் நுழைந்து  அவரை  துடிக்க வைத்தது. அவர்  ஒரு சிறந்த சிவ பக்தர்.  சிவனையே மூச்சாககொண்டு வாழ்ந்த ஒரு சிவனடியார்.  

'என்ன அநியாயம் இது.? ஸாக்ஷாத்  சிவபெருமானையே வா  அந்த சுந்தரர் இவ்வாறு ஏவி அற்பமாக நடத்தினார்?  என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை...'' என்று  நெருப்பை, அனலை  மூச்சாக வெளி விட்டார்.  அவ்வளவு கோபத்துடன் அவர் என்ன செய்தார்?

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...