Thursday, April 12, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J.K. SIVAN 25. துரோணரின் நட்பு? மஹா பாரதத்தை படிக்கும்போது ஒரு உண்மை புலப்படும். நாம் எண்ணற்ற பிறவிகள் எடுத்துள்ளோம். இன்னும் எவ்வளவு பாக்கியோ? நமது பிறப்பின் ரகசியம் நமக்கே தெரியாது. ஆனால் மகாபாரதத்தில் சில, அல்ல, பல பாத்திரங்களின் ஜென்ம ரகசியங்கள் தெரிகிறது. பூமியில் பிறப்பவர்கள் ஏதோ ஒரு சாபத்தால் தான் இங்கே வந்து கர்மம் தொலைக்க அவதரிப்பவர்கள். துரோணர் கிருபர் இனி மகாபாரத்தில் தலை காட்டுகிறார்கள். எனவே அவர்கள் யாராக இருந்தவர்கள் என்பது பற்றி அறியப்போகிறோம். கௌதமர் என்கிற ஒரு ரிஷிக்கு சரத்வான் என்று ஒரு மகன். பிறக்கும்போதே கைகளில் அம்புகளுடன் பிறந்த அவன் தனுர் வேத சாஸ்திரத்தில் சிறந்தவன். சரத்வானுக்கு இரட்டை குழந்தைகள் . அவர்களில் ஒருவன் கிருபன். சிறு குழந்தையாக இருந்தபோது கோதம ரிஷியால் கானகத்தில் விடப்பட்டு சந்தனு மகாராஜாவின் சேவகன் ஒருவனால் கண்டெடுக்கப்பட்டு சந்தனுவின் அரண்மனையில் வளர்ந்தவன். சரத்வானின் இரட்டைகுழந்தைகளில் ஒன்று பெண். அவள் பெயர் கிருபி. கிருபரின் மற்றொரு பெயர் கௌதமர். தனுர் வேதத்தில் நிகரற்றவர். இவரைத் தான் ஹஸ்தினாபுரத்திற்கு திருதராஷ்டிரன் வரவழைத்தான். பீஷ்மர் ஹஸ்தினாபுரத்தில் திருதராஷ்ட்ரனின் 100 குழந்தைகளுக்கும், பாண்டுவின் ஐந்து குழந்தைகளுக்கும் தானே சகல வித்தைகளையும் கற்பிக்கிறார். கூடவே கிருபரையும் தனுர் வித்தை கற்றுக்கொடுக்க ஏற்பாடு செயகிறார். இது போதாது என்று துரோணாச்சார்யரரையும் நியமித்தார். பாண்டவர்களும் கௌரவர்களும் அவரிடமும் தனுர் வித்தை பயின்றனர். ''வைசம்பாயனரே, யார் இந்த துரோணர்?'' என்று கேட்டான் ஜனமேஜயன். அவனோடு சேர்ந்து நாமும் தெரிந்து கொள்வோம். கங்கை நதிக்கரையில் ஆஸ்ரமம் ஒன்று. அதில் ஒரு ரிஷி இருந்தார். அவர் பெயர் பாரத்வாஜர். அவருக்குப் பிறந்தவர் துரோணர். துரோணன் தனுர் வித்தையில் ஈடு இணையற்றவன். பாரத்வாஜருக்கு ஒரு நண்பர். ப்ரிஷாதன் என்ற அவன் பாஞ்சால தேசத்து அரசன். அவன் மகன் துருபதன். துருபதன் பரத்வாஜர் ஆஸ்ரமத்துக்கு அவரிடம் கல்வி கற்க வருவான். துருபதன் சிறுவயதில் அங்கிருந்த சம வயதினனான துரோணனின் நெருங்கிய நண்பனானான். காலம் ஓடியது. தந்தை ப்ரிஷாதன் மறைவுக்குப் பிறகு துருபதன் பாஞ்சால தேச அரசனானான். பாரத்வாஜரும் விண்ணுலக மெய்தினார். தனியே ஆஸ்ரமத்தில் வாழ்ந்த துரோணன், மேலே சொன்ன கிருபரின் இரட்டையரில் ஒருவளான கிருபியை மணந்தான். அவர்களுக்கு அஸ்வத்தாமன் என்று ஒரு குழந்தை பிறந்தது. பிறந்த உடனேயே அஸ்வத்தாமன் உச்சைஸ்ரவஸ் என்கிற தேவலோக குதிரையைப் போன்று கனைத்தான். அந்த காலத்தில் வாழ்ந்த இன்று பிரபல ரிஷி ஜமதக்னியின் குமாரர், வில் வித்தையில் பெரும் புகழ் பெற்ற பரசுராமர் தனது அஸ்த்ரங்களையும் தனுர் சாஸ்திர வித்தைகளையும் தான் மகேந்திர மலை செல்வதற்கு முன் பிராமணர்களுக்கு தானம் செய்யப்போகிறார் என்று அறிந்த துரோணர் பரசுராமரிடம் சென்று வணங்கி ஆசி பெறுகிறார். 'துரோணா, உனக்கு என்ன வேண்டும் சொல்?. என்னிடமிருந்த செல்வங்களை எல்லாம் ஏற்கனவே பிராமணர்களிடம் கொடுத்துவிட்டேனே! என் உடலும் சில ஆயுதங்களும் மட்டுமே உள்ளன.எதை வேண்டுமானாலும் நீ எடுத்துக்கொள்''என்றார் பரசுராமர். ''குருநாதா, உங்கள் ஆயுதங்களையும், அவற்றைப் பிரயோகிக்கும் முறைகளையும் எனக்கு அருள்வீர்'' என்றார் துரோணர். அஸ்த்ரங்களையும், அவற்றை செலுத்தும் மந்திரங்கள், மீண்டும் அவற்றைப் பெறும் மந்திரங்கள், பிரயோக முறை எல்லாவற்றையும் பரசுராமரிடமிருந்து கற்று துரோணர் இளம் வயது நண்பன் ராஜா துருபதனை நோக்கிச் செல்கிறார். துருபதனைக் கண்டதும் ''என் இனிய நண்பா'' என்று துரோணர் அரசவையில் அழைத்தது துருபதனுக்கு ஏனோ இனிக்கவில்லை. அவன் இப்போது பாஞ்சால மன்னன். அரச வைபோகத்தில் இருப்பவன். பழைய ஏழை பிராமண நண்பன் துரோணனை இன்னமும் நண்பனகவா கருதுவான்?. ''ஏழைப் பிராமணரே, தாங்கள் என்னை தங்களுடைய பிரிய நண்பனாக அழைப்பது தவறு. அரசனுக்குரிய மரியாதை குறையக்கூடாது. ஏதோ ஒரு காலத்தில் இளம் வயதில் உங்களுக்கு தெரிந்தவன் என்கிற உறவு எப்போதும் நிலையல்ல. அவரவர் அந்தஸ்தில் தான் நட்பு தொடரும். உமக்கும் எனக்கும் நட்பு அல்ல.'' துருபதனின் ஆணவப் பேச்சால் புண் பட்ட துரோணர் நேரே ஹஸ்தினாபுரம் செல்கிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...