Monday, April 23, 2018

MY ANCESTORS



என் தாய் வழி முன்னோர்

                                                                   என்  தாத்தா

பழைய நினைவுகள் பற்றி சிந்திக்கும்போது அல்லது எழுதும்போதோ, சொல்லும்போதோ , கம்ப்யூட்டர் மாதிரி வரிசையாக வருவதில்லை.  முன்னும் பின்னுமாக  எத்தனையோ எண்ணச் சிதறல்கள். அவற்றை பின்னால் வரிசைப் படுத்திக் கொள்ளலாம். அவை தோன்றும்போது முடியாது.


புரசைவாக்கத்தில் டிராம் ஓடியதாக ஞாபகம்.  வெள்ளாள தெரு  என்று பிரபலமான ஒரு தெரு. எனக்கு ஐந்தோ ஆறோ வயது.  அது ஒரு பழையவீடு. உள்ளே கால் வைத்ததும் பெரிய முற்றம், மேலே இருந்து கண்ணாடி வழியாக சூரிய வெளிச்சம்  முற்றத்தில் விழும்.  எதிரும் புதிருமாக  சில அறைகள், வலது கை  பக்கத்தில் சமையல்கட்டு. பின்னால் கொல்லை.  என் மாமாக்கள் சிலர் கல்யாணம் ஆகி சிலர்  பிரம்மச்சாரியாக இருந்த காலம்.   வாசல் கதவை ஒட்டி மேலே மாடிப்படி வீட்டுக்குள்ளேயே. மேலே ஒரு சிறு அறை , அதில் ஒரு கட்டிலில் வயதான கண் தெரியாத என் தாத்தா  ப்ரம்ம ஸ்ரீ வசிஷ்ட பாரதிகள் படுத்துக் கொண்டிருந்தார்.  நான்  அவரை முதல் முதலாக, அதே நேரம் கடைசியாக பார்த்த சம்பவம்.

இந்த தொடரில்  நான்  எழுதிவரும்  முன்னோர்கள்  சரித்திரம்  தமிழகத்தில்  சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின்  வாழ்க்கை நிலையை எடுத்துக்காட்டும் ஒரு  மைல்  கல்.  ஆங்கிலேயர் ஆட்சி வேரூன்றி வந்த காலம். பல குறுநில மன்னர்கள், வெள்ளைக்காரனின் அடிமையாக  பேரளவுக்கு
 மன்னர்கள் நடத்திய பொம்மை  அரசாட்சி.  வெள்ளைக்கார  கவர்னர்கள், கலெக்டர்கள் தான் உண்மையில் ராஜாக்கள்.  அரசர்களை நம்பி வாழ்ந்த பல கலைக் குடும்பங்களின் வாழ்க்கை முறை எல்லாம் தெரியவரும்.

 இந்த  சரித்திரம்   எழுத மூலகாரணமாக   இருந்த  அம்மாவைப்  பெற்ற  தாத்தா  மகா பெரியவரிடம்  பிரம்மஸ்ரீ  புராண சாகரம்   என்று    ஆசியும் பட்டமும்  பெற்ற சிறந்த தமிழறிஞர்.  ராம பக்த குடும்பம். குடும்பத்தில் அனைவருக்கும்  ஏதோ ஒரு ராமன் என்ற பெயர் இன்றும் தொடர்ந்து வருகிறது.   .  இதே புரசைவாக்கம் வீட்டில் தான்  அவரிடம்  தமிழ் இலக்கிய, ராமாயண  பிரசங்க  பயிற்சி பெற்றவர்களில்  ஒருவர் தான்  பிரபல  ராமாயண  மகாபாரத  ப்ரவசன  கர்த்தா  காலம்சென்ற  பிரம்மஸ்ரீ 
T. S. பாலகிருஷ்ண சாஸ்திரிகள்.
தாத்தா  மாடி அறையில்  கிழிந்த நாராக  எலும்புக்கூடுக்கு  துணி சுற்றினது போல் கிடந்தார். நினைவு நன்றாக இருந்தது.  மேலே  ஜன்னல் காற்று வீசிக்கொண்டிருந்ததால்  மின் விசிறி தேவைப்படவில்லை.

யார்  வந்திருக்கிறார்கள் என்று   நாங்கள் சொன்னபோதும், மாமாக்களில் ஒருவரான  வெங்கிட்டு என்கிற  வெங்கட்ராமன்  எடுத்துச் சொன்னதும் அவர் முகத்தில் சந்தோஷம். 

''வாப்பா, வாடி ஜம்பா ...  என்று என் அப்பாவையும் அம்மாவையும் வாயார அழைத்தார்.  அருகே சென்றவர்களை முகத்தை தடவினார். தலையை தடவிக் கொடுத்தார். என் சகோதரர்களை எல்லாம் அருகே இழுத்து அணைத்துக்கொண்டார். என்னை எங்கே '' அந்த ஹிட்லர்''  என்று கேட்டார். 

நான் எதற்காக  ஹிட்லர் என்று அழைக்கப்பட்டேன் என்று சிந்தித்தேன்.  அப்போது வெள்ளைக்காரர்கள் மீது இந்தியர்கள் அனைவருமே கோபமாக இருந்தார்கள். காந்தியின்  தேசிய, சுதந்திர போராட்டம் வலுப்பெற்று வந்த நேரம்.  உன் எதிரி எனக்கு நண்பன்  என்ற முறையில் இங்கிலாந்துக்கு  தலைவலி யாக இருந்த  ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை பலர்  விரும்பினார்  வரவேற்றனர் புகழ்ந்தனர்.  என் தாத்தாவும் ஒருவர் போலிருக்கிறது.  அதற்கு செல்லமாக நான்  ''ஹிட்ல'' ராக்கப்பட்டேனோ? என் தாத்தாவை நான்  கடைசியாக  பார்த்தது  அப்போது தான்.  கண்கள் தெரியாது என்றாலும் காது கேட்கும்.   உதடுகள் சதா
சர்வ காலமும்  ஸ்ரீ  ராமா   என்றே உச்சாடனம்  செய்து கொண்டிருக்கும். கையினால்  என்னை  முகம் மார்பு  தலை எல்லாம்  தடவிக்கொடுத்தார்.  ஸ்ரீ ராமன்   அருளால் இவன்  நன்றாக  இருப்பான்,  நீண்ட ஆயுசோடு  புகழோடு இருப்பான்  என்று  என்   தாய் தந்தையிடம்  சொன்னார்.   வெகுநேரம் அவர் கைப்பிடியில் இருந்த நான்  கொஞ்சம் கொஞ்சமாக  மெதுவாக நழுவி கீழே படி  இறங்கி விளையாட  சென்று விட்டேன்.   தான்  சிறந்த ராம குடும்பத்தின் ஒரு  முக்ய  கடைசி  பிரதிநிதி  அவருக்குப்பிறகு   ராம  கதா பிரசங்கங்களில் சந்ததிகள்  எவராவது  ஈடுபட்டதாக நினைவில்லை. ஒரு  பெரிய  கலைக்குடும்பம்.    ராமனும்,பக்தியுமே  வளர்த்த அந்த குடும்பத்தில்  சிலர்  நாங்கள்  அவரை  இன்னும் நினைத்து வாழ்கிறோம்.  நான்  ராமன் கிருஷ்ணன் என்று நிறைய புத்தகங்கள் எழுதுகிறேன். பிரச்சாரம் செயகிறேன். பிரசங்கம் செயகிறேன். காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திரசரஸ்வதிகள்  ''பகவத் சேவா ரத்நா ''விருது கொடுத்தது என் தாத்தாவின் ஆசீர்வாதமாக இருக்கலாம்.  அவரை மனதார வணங்கும் 
என்னை  எழுதச்செய்வதே அவரது ஆசிதானோ? 

என் அண்ணா பிச்சை என்னும்  ரத்நமையரை பாடச் சொன்னாள் என் அம்மா.  ''பயமென்ன மனமே '' என்று  MM  தண்டபாணி தேசிகர் பாடிய ஒரு பாடலை அவன் பாட ரசித்து கேட்டார்.  என் அம்மா கொண்டுவந்த ஏதோ பக்ஷணத்தை துளி வாயில் கொடுத்தது நினைவிருக்கிறது. நன்றாக இருக்கிறது என்கிறார்.  

''அடிக்கடி வாங்கோ ''  என்ற அந்த குரல் காதில் நிற்கிறது. அனால் அவர் எங்களை வரவேற்க காத்திருக்கவில்லை என்று பிறகு அறிந்தோம்.

ஏதோ கனவில் அவரை காண வேண்டும் என்ற ஒரு ஆவல் என் தாய்க்கு ஏற்பட்டு என் தந்தை எங்களை தாத்தாவை பார்க்க அழைத்து சென்றார். 

1945 மே  மாதம் என் தாத்தா  தான் எழுத முடியாததால் ஒரு மாமாவை விட்டு எழுதைவைத்து  பென்சிலில்  எழுதப்பட்ட அந்த  போஸ்ட் கார்டில்   என்ன அட்ரஸ்தெரியுமா.  ;  '' 

''ஜே கிருஷ்ணய்யர்,  B.A .L.T 
நுங்கம்பாக்கம் உயர்நிலை பள்ளி ஆசிரியர்,
வடபழனி கோயில் அருகே 
கோடம்பாக்கம். 

தாத்தா எழுதின அந்த கடுதாசு இத்துடன் இணைத்திருக்கிறேன்.

இப்படி  யாராவது கடிதாசு அனுப்பினால் இப்போது போய் சேருமா?  கோடம்பாக்கம் அப்போது பாதி காடாக, தோட்டமாக இருந்தது.  பெரிய  பெரிய  உலகப்புகழ் படைத்த  சினிமா ஸ்டுடியோக்கள் அங்கே குடியேறவில்லை.  வட பழனி முருகன் கோவில்  கூரைக்கட்டு  ஆலயமாக இருந்தது. சுந்தர குருக்கள் குரல் கணீரென்று ஒலிக்கும். நன்றாக பாடுவார்.  என் அப்பா அவரை தினமும் பழனியாண்டி சந்நிதியில் பாட சொல்லி கேட்போம்.   வடபழனி ஆண்டவனுக்கு  பக்தர்கள் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக தனியாக இருந்த அற்புத நேரம். கதவு சாற்றுவதில்லை, ஒரு தடுக்கு தடை. அதை நகர்த்திவிட்டு  யார் வேண்டுமானாலும் உள்ளே போய் விளையாடுவோம். நந்தவனம் பெரிது. நிறைய  பூக்கள் சொறிந்து  காணப்படும். மர நிழலில் விளையாடுவோம், எதிரே குளம் அதில் படி கால் வழுக்கும். ஜாக்கிரதையாக இறங்கி குளிப்போம்.


 








No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...