Saturday, April 7, 2018

AINDHAM VEDHAM




ஐந்தாம் வேதம். J.K. SIVAN
பீமனுக்கு வி (சே) ஷ உணவு

இந்த மஹாபாரதம் கொஞ்சம் அசந்தால் ஆளை மாற்றி விடும் தன்மை கொண்டது. நிறைய தலைகள் இதில் வருகிறது. யார் யாரோ கதைகள் சொல்கிறார்கள்.

உதாரணமாக நைமிசாரண்ய குளுகுளு வனத்தில் எல்லா ரிஷிகளும் சுத பௌராணிகர் (சௌதி, உக்ரஸ்வரர்) முன்னொரு காலத்தில் வைசம்பாயன மகரிஷி ஜனமேஜயனுக்கு சொன்னதை நேரில் பார்த்தமாதிரி சொல்கிறார்.

'' பிறகு என்ன ஆயிற்று?
அரண்மனையில் உணவு அருந்த பல முறை அழைப்பு வந்தும் கூட ஜனமேஜயன் அதை லக்ஷியம் பண்ணவில்லை.

'வைசம்பாயன ரிஷி பெருமானே'' என் முன்னோர்கள் வம்ச சரித்திரம் என்னை கொள்ளை கொள்கிறது. அவசியம் நான் மேலே என்னவாயிற்று என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறேன். சொல்லுங்கள் '' என்கிறான் ஜனமேஜயன். ரிஷி தொண்டையைக் கனைத்துக்கொண்டு மேலே தொடர்கிறதை நாமும் கேட்போம்.

''அடுத்த இளவரசன் யார் என்ற முக்கிய கேள்வி ஹஸ்தினாபுரம் அரண்மனையில் பிறந்தது.''
''விதுரர், பீஷ்மர், மற்ற குரு வம்ச பெரியோர்கள் என்ன சொன்னார்கள்?'' என்றான் ஜனமேஜயன்.

''தர்ம ஞாய நீதி மான் விதுரன் ''அண்ணா, இந்த வம்சத்துக்கு அடுத்த இளவரசன் யுதிஷ்டிரன் என்பது அவன் முதலில் பிறந்தவன் என்பதால் தெளிவாயிற்று. ஆனால் முக்யமாக கவனிக்கவேண்டியது உனது முதல் மகன் துரியோதனன் பிறந்ததும் நேர்ந்த அப சகுனங்களைப்பற்றி. நான் விசாரித்து அறிந்த வகையில் அவன் பிறந்தவுடன் திடுக்கிடும் அறிகுறிகள் தோன்றியதாக பெரியோர்கள் கூறுகிறார்கள். அவனால் இந்த வம்சம் அழியும் உற்பாதம் பயங்கரமானது எனும் விஷயம் என்னை உலுக்கியது. நாம் அவனை உடனே கைவிட வேண்டும். மற்ற 99 மக்கள் இருப்பதால், கேடு விளைவிக்கக்கூடிய இந்த முதல் மகனை துரியோதனனை, குல நன்மை, நாட்டு நன்மை, மக்கள் நன்மை கருதி விலக்குவது அவசியம்'' என்றார்கள் விதுரரும் மற்ற சாஸ்திர ஞானிகளும்

திருதராஷ்டிரனுக்கு துர்யோதனன் மேல் இருந்த பாசத்தில் யார் எது சொன்னாலும் .அவன் காதில் எதுவும் நுழையவில்லை.

ஜனமேஜயன் ''மகரிஷி வைசம்பாயனரே, அந்த நூறு சகோதரர்கள் பேரை சொல்லுங்கள் என்று கேட்க அவர் நூறு பேர்களையும் 101வதாக பிறந்த ஒரு பெண் பேரையும் சொல்கிறார்.

(அந்த பெயர்கள் நமக்கு எதற்கு? உதாரணமாக தமிழ் நாட்டில் எத்தனை முனுசாமிகள் என்று தெரிந்து கொள்வதால் நேரம் தான் வீணாகும் என்பதால் நான் அவர்கள் பெயர்களை இங்கே எழுதவில்லை.)

ஒரு விஷயம் மீண்டும் இப்போது நினைவு கூர்வோம்.

ரிஷியின் சாபத்தால் புத்திர பாக்கியம் இழந்த பாண்டு தனது மனைவி குந்திக்கு துர்வாசர் அளித்த வரத்தால் யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன் சகாதேவன் ஆகியோர் பிறந்து பாண்டவ வம்சம் நீடித்தது. யுதிஷ்டிரர் துரியோதனைவிட முன்பாக பிறந்ததால் பட்டத்து இளவரசன்.

துரியோதனனனுக்கு பாண்டவர்களை ஆரம்பத்திலிருந்தே, அவர்கள் வந்ததிலிருந்தே பிடிக்கவில்லை. அதிலும் பீமன் அவனோடு ஒரே நாளில் பிறந்தாலும் அதிக பலமிக்கவன். அவன் ஒருவனே துரியோதனாதியர் 100 பேரையும் ஒரே நேரத்தில் வெல்லக்கூடியவன் என்பதால் அவன் மீது த்வேஷம் வளர்ந்தது. எப்படியாவது பீமனைத் தொலைத்து விட்டால் யுதிஷ்டிரன் அர்ஜுனன் ஆகியோரை சிறை வைத்து தான் நாட்டை ஆளலாம் என்கிற எண்ணம் அவனைப்போலவே நாளுக்கு நாள் அவன் மனதில் கூடவே வளர்ந்தது.

இதற்கு முக்ய காரணம் பீமன் சக்தி வாய்ந்த பலமிக்க வாயுபகவானின் அனுக்ரஹத்தில் அவர் சக்தியைக் கொண்டு பிறந்தவன். வஜ்ர தேகம் படைத்தவன். பதினாயிரம் யானை பலம் கொண்டவன் என்று வேத வியாசர் பல இடங்களில் பீமனைப் பற்றி கூறுகிறார். வ்ருகோதரன் என்று ஒரு பெயர் அவனுக்கு. ஓநாய், டாபர் மேன் வேட்டை நாய் போல வயிறு சிறுத்து இருக்கும். மார்பு தோள்கள் கண்டு கண்டாக பலம் நிரம்பி இருக்கும். ' V'' ஷேப் ஆள். ஆண்கள் உள்ளாடை விளம்பரத்தில் சில உருவங்கள் இப்படி கண்ணை உறுத்தும்.

பாண்டுவின் மரணத்தோடு மாத்ரியும் உடன்கட்டை ஏறியதால் பெற்றோரற்ற பாண்டவ சிறுவர்கள் குந்தியோடு ஹஸ்தினாபுரம் அரண்மனையில் பீஷ்மர், விதுரர், திருதராஷ்டிரன் மேற்பார்வையில் 100 கௌரவ சிறுவர்களும் 5 பாண்டவ சிறுவர்களுமாக வளர்ந்தனர். பீமனின் அமானுஷ்ய பலம், அதி தீர வீர பராக்கிரம செயல்கள் துரியோதனின் பொறாமையையும் விரோதத்தையும் நாளுக்கு நாள் வளர்த்து அவன் தூக்கம் இழந்தான். பீமனை முதலில் தொலைத்துவிட திட்டங்களும் அவனோடு வளர்ந்தன.

உதக விராணா என்ற ஒரு மாளிகை கங்கைக் கரையில் தயாரானது. அது பெரிய திட்டம். ரொம்ப நாசூக்காக துரியோதனன் தனது சகோதரர்களுடனும் பாண்டவர்களுடனும் பொழுது போக்குவதற்கு ஏற்பாடு செய்தான். அனைவரும் சென்றனர். ஏராள சிறந்த விருந்துகள் தாயாராகியது. கூடவே கொடிய நாக விஷமும் நிறைய கலக்கப்பட்டு பீமனுக்காக தனி மரண உணவும் காத்திருந்தது. துரியோதனனே பீமனுக்கு அந்த விஷம் கலந்த உணவை உபசரித்து அளித்தான். இளைஞர்கள் அனைவரும் கங்கையில் நீராடி விளையாடி நன்றாக உண்டு களித்தனர்.பீமனும் தனக்கு அளிக்கப்பட ''விசேஷ விஷ உணவை'' நிரம்ப உண்டு களித்தான். விரைவில் களைத்து மயங்கி விழுந்தான். உள்ளே விஷம் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டதே.

ஆவலாக காத்திருந்து இதை எதிர்பார்த்த துரியோதனன் நீண்ட கொடிகளால் பீமஸேனனைப் பிணைத்து கங்கையின் வெகு ஆழமான பகுதிக்குக் கொண்டு சென்று மயக்க நிலையில் பீமன் கங்கை நதியில் வீசப்பட்டான்.



அந்த ஆழமான நதிக்கடியில் நாகலோகம் போகும் பாதை இருந்தது. பீமன் மயங்கி நீரில் தள்ளப்பட்டபோது விஷம் அவன் உடலில் வேலை செய்ததால் கைகால் வேறு பிணைக்கப்பட்டு அவன் நினைவு இழந்த நிலையில் ஆற்றின் நீரின் அடியில் போய் விழுந்ததால் ஆயிரக்கணக்கான விஷ நாகங்கள் அவனைத் தீண்டின. கடித்தன. தங்களது கொடிய விஷத்தை அவன் உடலில் பாய்ச்சின. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும், விஷத்தை விஷத்தாலே தான் எடுக்க வேண்டும் என்பார்களே. நாகங்களின் விஷம் அவன் உடலில் கலந்து ஏற்கனவே அவன் உடலில் இருந்த விஷத்தை முறித்தன. விரைவில் பீமன் விழித்தெழுந்தான். தன்னை பிணைத்திருந்த கொடிகளை அறுத்து எறிந்தான். அணுகிய நாகங்களை த்வம்சம் செய்தான். எஞ்சியவை ஓடின. நாகலோக அரசன் வாசுகியிடம் செய்தி போனது. அப்புறம் நடந்தவை ஆச்சர்யமாக இருக்கவேண்டுமே, காத்திருப்போமா ?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...