Sunday, April 8, 2018

ADVICE





சில வார்த்தைகள் -- J.K. SIVAN

தோட்டத்தில் -- வீட்டைச்சுற்றி கொஞ்சம் மண் தெரியும் அந்த சிறிய இடம் தான் தோட்டம். அதற்குள் போட்டி போட்டுக்கொண்டு ள்நிறைய புல்லும் காட்டுச் செடியும் யாரும் நீர் வார்த்து வளர்க்காமலேயே முளைத்து விடுகிறது. நான் விதைத்த தக்காளி, மிளகாய்க்கு மட்டும் ஏனோ கல்மனம். இன்னும் தலை நீட்டவில்லையே.

வாசலில் என் பேரன் -- ''தாத்தா உங்களை பார்க்க கமலா டீச்சர் வந்திருக்கா'' கமலா ஒரு அருமையான சிந்தனையாளி. எப்போதும் எதையாவது யோசனை பண்ணிக்கொண்டு அர்த்தம் கேட்பவள்.

''இந்தாங்கோ தாத்தா..... ''
''என்ன இன்னிக்கு எனக்கு பலாச்சுளை?''
''இப்போ பலா சீசன் போல் இருக்கு தாத்தா, மார்க்கெட் போனேன். நிறைய வண்டி வண்டியா விக்கிறான் '. உங்களுக்கும் கொஞ்சம் சேர்த்து தான் வாங்கினேன். உங்க நினைவு வந்த போது தான் யோசித்தேன். உறவு மனிதர்களுக்கு ஏற்படும் ஒரு அற்புதமான உணர்வு இல்லையா தாத்தா.
''ஆமாம் கமலா. உறவுகள் எல்லாமே ஒரு வித முகம் காட்டும் கண்ணாடி தான். நாம் பழகும் விதம் எப்படியோ அதன் பிம்பம் காட்டும்.

''நல்ல நண்பர்கள் அப்படி தான் அவசியம் இல்லையா ஒருவனுக்கு?''

''வள்ளுவர் சொன்னதை நினைத்துப்பார். ''அவிழும் இடுப்பு வேஷ்டியை தானே உடனே சென்று தடுத்து இழுத்து சொருகுகிறதே அது தான் நண்பன். நிலை தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவன், பாதை மாறும்போது நம்மை தட்டிக் கேக்கறவன் தான் உண்மை நண்பன்.

''திடீர்னு கோபம் வந்து நட்பை பாதிக்கிறதே தாத்தா.''
''நம்மை நன்றாக புரிந்து கொண்டவனுக்கு கோபமே வராதே. புரிஞ்சிக்காதவன் கோபம் பற்றி நமக்கு என்ன கவலை.'' .அமைதியாக இருப்பவனுக்கு கோபமே வராது. பேச்சை குறைத்தாலே பாதி அமைதி வந்து சேரும்.

குழந்தைகள் மாதிரி நாம் இருக்கணும். குழந்தைகளிடம் பக்கத்தில் போய் உட்கார்ந்து சிறி. புதுசாக பார்த்தாலும் உன்னை கவனிக்கும். பிறகு வெகுநாள் பழகியது போல் சிரிக்கும். விளையாடும் உன்னோடு. வயசானவனோடு பழகு. எப்படி இருந்தோம் இனிமே எப்படி இருக்கணும் என்று சொல்லிக் கொடுக்கும் நட்பு அது.

சில பேருக்கு ஒரு பழக்கம். எப்போதும் காரணமில்லாமல் நம்மை புகழ்வார்கள். அதை அப்படியே எடுத்துக்காதே. ஒரு நமுட்டு சிரிப்போடு காதைப் பொத்திக்கொள். உள்ளே வாங்கி கொள்ளாதே. அவர்கள் மற்றவரை குறை கூறுவார்கள். அப்போதும் வாயை மூடிக்கொண்டு விடு. இதனால் துன்பம் வராமல் தவிர்க்கலாம்.

சிலர் வந்து எனக்கு ரொம்ப கஷ்டம், துன்பத்துக்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருக்கிறது. என்பார்கள். தேடிப்பார் எவனுமே துன்பப்படாமல் துயரப்படாமல் இல்லை. சிலர் அழுவார் சிலர் சிரிப்பார். வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்கள். அது தான் வித்யாசம்.
எல்லாம் நல்லதற்கே. இதைவிட பெரிசாக துன்பம் வராமல் பக்வான் விட்டானே என்று அவனுக்கு நன்றி சொல். \

பணம் உன்னிடம், இருந்தால் ஆதாயம் தேடி நண்பர்கள் உறவுகள் உன்னை வெல்லத்தை ஈ மொய்ப்பது போல் சுற்றும். உன் பர்ஸ் இளைத்து விட்டால் , நீ வறட்சியில் இருந்தால் அப்போது யார் கூட இருக்கிறார் என்பதில் உண்மை நண்பன் தெரிவான்.

ஏனோ சிலருக்கு எதிலும் வெற்றி, ஆதாயம், பலன் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைய உண்டு. வெற்றி தோல்வி எதுவுமே சொல்லி வைத்து வருவதில்லை. ஒவ்வொரு காரியத்தின் பலனுக்கும் நாம் தானே காரணம். வெற்றியும் தோல்வியும் நமதே.

தாத்தா சார் சிரித்துக்கொண்டே இருக்கிறாரே என்று நாலு பேர் சொல்லும்போது ஆமாம் நான் எப்போதும் எதையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற உறுதி உன்னை இளமையாக்கும். என் அனுபவம் இது.

பாதி ப்ராபளம் வருவதற்கு காரணமே நாம் எது நமக்கு அவசியம் தேவை என்பதை தெரியாமல் அவசியமில்லாததற்கெல்லாம் காசை கொட்டி கரியாக்கி சொந்தம் கொள்கிறோம். அப்பறம் அவசியமானதையே விற்று வாழ வேண்டிய நிலைமை வருகிறது.

தானாகவும் தெரியாது, சொன்னாலும் புரியாது என்ற ஒரு வகை , யார் சொன்னாலும் கேட்பது என்ற இன்னொரு வகை ஆசாமிகளிடம் மாட்டிக்கொண்டால் அவ்வளவு தான். அவர்களில் ஒருவனாக நாமும் மாறவேண்டிய நிலை ஏற்படும். ஜாக்கிரதை. புத்திமதியை கேட்பவர்களுக்கு தான் கொடுக்கவேண்டும். உலகிலேயே அதிகம் இலவசமாக நமக்கு கிடைப்பது அறிவுரை தான். ADVICE IS THE WORST FORM OF VICE.

கோபுவை ஏமாற்றிவிட்டேன் என்று சந்தோஷமா? ஏமாந்தது நீ. கோபு உன்மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டாயே!

எண்ணங்களை சீராக வைத்துக்கொண்டவன் தான் அழகன். உண்மையில் நன்றாக வாழத்தெரிந்தவன் . மரியாதை என்பதை பெறுவதற்கு தலை நரைக்க வேண்டாம். வயதாக வேண்டும். கையில் கொம்பு வேண்டாம். பணம் வேண்டாம். பதவி வேண்டாம். உன் ஒவ்வொரு செயலும் தான் உன்னை அடையாளம் காட்டி, உன்னை மதிக்க வைக்கிறது.

''கமலா டீச்சர் நீங்க கொடுத்த பலாச்சுளை இனிக்கிறதம்மா?''

''தாத்தா சார் உங்க பேச்சு அதைவிட ரொம்ப ரொம்ப இனிச்சுது சார். அப்பறம் மறுபடி வருவேன்.''





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...