Sunday, May 2, 2021

OLDEN DAYS WEDDING

 பழைய நினைவுகள்.----      நங்கநல்லூர் J K SIVAN  



ஜகத்குரு  பரமாச்சார்யா அனுக்கிரஹம்....

 அப்போதெல்லாம், வருபவர்களோ  செல்பவர்களோ,   ராகு காலம் எமகண்டம்  பார்த்து தான் எங்குமே  நகர்வார்கள்.  இன்னிக்கு  மாப்பிள்ளை வீட்டிலே   வருகிறார்கள் என்று சேதி கேட்டதும்  காலையிலே  பெண் வீட்டில் களை  காட்டிவிடும்.

நாயனக்காரர் கோஷ்டி,  வீட்டு  வாத்யார் கோஷ்டி, பசுமாடு கன்னுக்குட்டி,  வெற்றிலை பாக்கு தாம்பூல தட்டுகள்,  பெண்கள்  மடிசார் கட்டிக்கொண்டு,தெருவெங்கும் கோலம் போட்டு  அழகாக  சிங்காரித்து வைத்திருப்பார்கள்.  ஊர்க் கோடி எல்லையில்  தயாராக  காத்திருந்து  வில் வண்டி வருவது தெரிகிறதா என்று பார்த்துக்  கொண்டு  இருப்பார்கள்.  சம்பந்திகள்  ரயிலில் வருவதாக  அறிந்தால்,  ஊரில்  ரயில் நிலையம் இருந்தால்  அங்கே  சென்று  ரயில் எத்தனை  மணிக்கு வரும் என்று கேட்டு துளைத்துக் கொண்டே இருப்பார்கள்  அப்போது எல்லாம் ரயில்கள் சொன்ன நேரத்தில் வராது.  புகை வண்டி தான்  ஜிகு புகு என்று வந்து சேரும்.  மேலெல்லாம்  கரித்தூளோடு  ஹோலி பண்டிகையில் மாட்டிக்கொண்டு வந்தவர்கள் போல்  பிரயாணிகள் வெளியே வருவார்கள். 

 முதல் வகுப்பு   ரிசர்வேஷன் எல்லாம் கிடையாது.   பென்ச் தான்.   கம்பார்ட்மெண்ட்  நம்பர்   ரயில் பெட்டி  எண்  எல்லாம் கிடையாது.   வரவேற்பவர்கள்,   கையில் மாலையோடு  ஒவ்வொரு  பெட்டி  ஜன்னலுக்குள்ளும்  எட்டிப்  பார்த்துக்கொண்டே   பிள்ளை வீட்டுக்கார்களைத்  தேடி  ஓடுவார்கள்.

வண்டியைப் பார்த்ததுமே  மேள  தாளத்துடன் குதூகலமாக  ஒலிக்க  மாப்பிள்ளை வீட்டாரை  பூரண கும்ப  உபசாரத்தோடு    பெண் வீட்டுக்கோ   அவர்கள் தங்க  ஏற்பாடு செய்த வீட்டுக்கோ  அழைத்து வருவார்கள். 

முக்கியமாக  காசி யாத்திரைக்கு முன்பாக முதல் நாளே   நிச்சயதார்த்தம்  செய்து  லக்ன பத்திரிகை படிக்கும் வழக்கம் இல்லை.   லக்ன  பத்திரிகை  கல்யாணம் நிச்சயமானதை அறிவிப்பது.  அடுத்தநாள்  பிள்ளை காசிக்குப் போகும்போது அவரை அழைத்து  காசிக்கு போகவேண்டாம்  என் பெண்ணைத்  தருகிறேன் என்பது கல்யாண   ஒப்பந்தத்துக்கு முரண்பாடானது இல்லையா?  இப்போது காலத்தை உத்தேசித்தோ  அதன் அர்த்தம் தெரியாமலோ  இதெல்லாம் நடக்கிறது. வேடிக்கை தான்.

இன்னொரு விஷயமும்  கவனிப்பதில்லை.   கன்னூஞ்சல் என்பது  சாஸ்திரப்படி கல்யாணம் ஆனபிறகு தம்பதிகளாய்  பெண்ணையும் பிள்ளையையும் சேர்த்து    ஊஞ்சலில்   உட்காரவைத்து   கௌரவித்து  கொண்டாட வேண்டிய விஷயம்.   கோவில்களில் ஸ்வாமிக்கு  கல்யாண உற்சவங்களில் விவாஹம் ஆன பிறகு தான் திவ்ய தம்பதிகளை ஊஞ்சலில் வைத்து பூஜிக்கிறோம். லாலி  பாடுவார்கள்.   கல்யாணத்திற்கு முன்னால்   அவர்கள்  தம்பதிகளாகாத   போது  எப்படி   சேர்த்து வைப்பதை   ஒப்புக்கொள்ளமுடியும்?  இப்போதுள்ள   நிலையில்  ஏதாவது ஏற்பட்டு விவாஹம் தடைபடுகிறது.    அப்போது  அவர்களை தம்பதிகளாக கௌரவித்து கொண்டாடியதற்கு என்ன அர்த்தம்?   பெண்  கழுத்தில்  மாப்பிள்ளை கட்டும்  தாலி ஏறும் வரை  அவர்கள் தம்பதிகள் இல்லையே.  

பண்டைய காலத்தில் இன்னொரு விஷயத்திலும் ரொம்ப  கண் குத்தி பாம்பாக  இருந்தார்கள்.  சுபமுகூர்த்தம் பார்த்து நிச்சயித்து   அந்த  நல்ல லக்னத்தில் மாப்பிள்ளை பெண்ணின் கரத்தை க்ரஹிக்க வேண்டும்  என்பது தான்  பாணிக்ரஹணம்.   இப்பொழுது முதலிலேயே (ஊஞ்சல் பிறகு) கையைப் பிடித்துக்  கொள்ளச்சொல்லி வாத்தியார்கள்  அவர்களை   மணமேடைக்கு அழைத்து   வருகிறார்கள். கைப் பிடிக்கும் வேளை ராகு காலம் எமகண்டமாய் இருக்கலாம்.   ஊஞ்சலுக்கு  பிறகு  பெண்ணும் பிள்ளையை  கை பிடிக்கும்  நேரம்  சுப லக்னமாக  நல்ல நேரமா என்று  யார்  பார்க்கிறார்கள்?  அப்புறம்   மேடையில்  பாணிக்ரஹணம் அர்த்தமில் லாமல் போகிறதே.  

பழைய காலத்தில்  நூல் புடைவை தான் கூறைப்புடைவை. விவாஹம் செய்யும்போது பாவத்தை  தேடிச்  சென்று சேர்த்துக்கொள்ளக்கூடாது.  ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொன்று பட்டு இழை எடுக்கிறார்கள். ஆகையால் பாவம் சேர்ந்த இந்த பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால் விவாஹம் பாவத்திற்கு உட்படுகிறது. தம்பதிகள் க்ஷேமத்திற்கு உதந்ததல்ல   பலமுறை  மஹா பெரியவா  இதற்காகத்தான் பட்டுப்புடவையை  கட்டிக்கொள்ளாதீங்கோ என்று  சொல்லி இருக்கிறார். அவரைப் பார்க்க வரும்போது பட்டுப்புடவையோடு வந்து  நமஸ்காரம் பண்ணினால்  என்ன செய்வார்?   அஹிம்ஸா பட்டு உடுக்கலாம்.

ஒரு பழக்கம் கொஞ்சம்  மனதை உறுத்துவது போல்  அப்போது இருந்தது.  விவாஹப் பணம் (Dowry):  எனும் வர தக்ஷிணை தான் அந்த விஷயம்.    மாப்பிள்ளை வீட்டார் எதிர் ஜாமின் வகையறா வாங்குவது சாஸ்திர விரோதம். மேலும் விரதங்களை தங்கள் வீட்டில் செய்து   கொண்டு  தான் கல்யாணத்திற்கு வர வேண்டும். இது  பிள்ளை வீட்டாருடைய  முக்கிய  பொறுப்பு. இப்படிச் செய்தால் சத்திரத்திற்கு காலையில் வந்தால் போதும். நேரே விவாஹம் மந்தர பூர்வமான சடங்குகளைப் பிரதானமாகச் செய்யலாம். நிறைய வேத வித்துகளுக்கு தக்ஷிணைக் கொடுத்து அக்னி சாக்ஷியான விவாகத்தைச் சிறப்பாக நடத்தலாம். சிலவும் குறையும். நகை ஆடம்பரம் தவிர்த்து ஒருவேளை ஆகாரத்துடன் முடித்து மிச்சமாகும் பணத்தை ஒரு ஏழைக் குடும்ப கல்யாணத்திற்கு உதவலாம் அல்லது சேமிக்கலாம்.

ரிசப்ஷன்  எனும்  வரவேற்பு இப்போதெல்லாம்   கல்யாணத்துக்கு   முதல் நாளே   காலத்தின் கட்டாயத்தால் வைத்துக் கொள்கிறார்கள்.   இது  சாஸ்திரப்படி கல்யாணம் நடத்த ஆசைப்பட்டால் ரொம்ப தப்பு.   தம்பதிகளாகச் சேரும் முன் இருவரையும் ஒன்றாய் உட்காரவைப்பது தவறு. நமது கலாசாரத்திற்கு முரண்பட்டது. கோவில்களில் கல்யாணம் செய்தால் வரவேற்பு ஏதாவது சத்திரத்தில் காலியாயிருக்கும் தினத்தில் (கிழமை பார்க்க வேண்டாம்) செய்யலாம். சிலவு குறையும்.

திருமங்கல்ய தாரணம்: விவாகம் என்பது  வெறுமே  தாலி காட்டும்   திருமங்கல்ய தாரணம் மட்டும் அல்ல. வேத பூர்வமான மந்த்ரம்  திருமங்கல்ய தாரணத்திற்கு இல்லை. ஸ்லோகம்தான்.   மந்த்ர பூர்வமான விவாகம்தான் முக்கியம் உதாரணமாக 9-10:30 முகூர்த்தம் என்றால் 10:30க்குள் திருமங்கல்ய தாரணம் செய்துவிடுகிறார்கள். எல்லாரும் எழுந்து போய்விடுகிறார்கள். உண்மையான விவாகச் சடங்குகள் பிறகுதான் நடக்கின்றன. முகூர்த்தத்துக்கு எல்லோரையும்  நேரம் கொடுத்து அழைப்பது அவர்கள்  கல்யாணத்துக்கு சாக்ஷி,   மனமுவந்து இந்த கல்யாணம் நடைபெற்றதும்  அக்ஷதை, புஷ்ப  ஆசீர்வாதம் பண்ணவேண்டும்  என்பதற்காக.  அந்த நேரம் சாப்பிட போய்விடுகிறார்கள்.  அல்லது அப்புறம் வருகிறார்கள்.  

முகூர்த்த காலத்திற்குப் பின் ராகுகாலம், எம கண்டம் இருக்கலாம். ஆகையால் எல்லாம் சப்தபதி உள்பட முகூர்த்த காலத்திற்குள் முடித்துவிட வேண்டும். சுபகாலத்தில் தான் சடங்குகள் செய்ய வேண்டும். அப்போதுதான் தம்பதிகளுக்கு க்ஷேமம் உண்டாகும்.

கூறைப்புடைவை என்று சொன்னேனே, அதன் பின்னணி தெரியுமா?  மாயவரத்திற்கு அருகில் கொறை நாடு என்ற ஊரில்தான் முகூர்த்தப் புடவை செய்வது அக்கால  வழக்கம். கொறை நாடு புடவை என்பது தான்   கூறை ப்புடவை   ஆகிவிட்டது.  

பருத்தி  நூலில் சிவப்புக் கட்டம் போட்டு அழகாக நெய்வார்கள். உண்மையான கூறைப்புடவை என்றால் நூல் புடவை என்று அர்த்தம். நாம் தற்போது பணவசதியால் பெருமைக்கு ஆசைப்பட்டுப் பட்டு ஜரிகையை, ஆயிரக்கணக்கில் செலவு செய்து பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.    

1966-ல்  மஹா பெரியவா  ஒரு உத்தரவு போட்டார்கள்.  அது எத்தனை பேருக்கு  ஞாபகம் இருக்கிறதோ தெரியவில்லை.  

 “என் நிபந்தனைகளுக்கு உட்படாமல் செய்யப்படும் விவாஹப் பத்திரிகைகளில் என் பெயரைப் போடுவது தவிர்க்கப்பட வேண்டும்” ஏனென்றால்  சாஸ்த்ர விரோதமாக  எல்லாவற்றையும் கூசாமல் செய்துவிட்டு ''  ஜகத் குரு காஞ்சி பரமாச்சார்யா  அனுக்ரஹத்தோடு ..   என்று  ஏன் என் பெயரை  போடுகிறீர்கள்  என்று அவர் கேட்டது பரம ஞாயம் என்றே படுகிறது.  

 காஞ்சிக்கு  பத்ரிகை எடுத்துக் கொண்டு  நேரில் செல்பவர்கள்,  காஞ்சிபுரத்தில் பல கடைகளில் பட்டுப்புடவை பேரம் பேசி முடித்து வாங்கிக்கொண்டு தான்  மடத்திற்கு சென்று பெரியவாளை தரிசித்து பத்ரிகை வைத்து  நமஸ்கரித்து   அனுக்ரஹம்  கேட்கிறார்கள்.


  . 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...