அதிசயம் ஆனால் உண்மை... நங்கநல்லூர் J K SIVAN
அழகிய இயற்கை வளம் கொஞ்சும் ஸ்தலம். தென்னிந்தியாவில் ஒரு திரிவேணி சங்கமம். (பவானி , காவேரி மற்றும் வடக்கே சரஸ்வதி போல் கண்ணுக்கு தெரியாத அம்ரிதா ) நதிகளின் சங்கமம் தான் பவானி எனும் திருநணா. அங்கே ஒரு பழைய சிவஸ்தலம். சிவன் பெயர் பொருத்தமாக சங்க மேஸ்வரர். ஸ்வயம்பு. அம்பாள் வேத நாயகி. ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மி. , சேலத்திலிருந்து 56 கி.மி. தூரம்.
பவானியின் வடகரையில் 4 ஏக்கர் பரப்புடைய பெரிய கோயில். ரெண்டு வாயில்கள். 5 நிலை பிரதான கோபுரம். ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் உண்டு. ஆயிரம் வருஷங்களைக் கடந்த இந்த சிவாலயத்தை நிர்மாணித்தவன் பல்லவ ராஜா மகேந்திர வர்மன்.
பவானி படித்துறையில் காயத்ரி லிங்கேஸ்வரர் கோவில். விஸ்வாமித்திரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம். இங்கு தகனம் செய்யப்பட்டவர்கள் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லையாம். காரணம் இங்கே பூமியில் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால். இலந்தை ஸ்தல விருக்ஷம். இலந்தை பழம் நைவேத்யத்திற்கு முக்கியம்.
இங்கே ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. சரித்திர பூர்வமானது. மதுரையில் பீட்டர் ரோஸ் என்ற ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பனி கலெக்ட ருக்கு மதுரை மீனாட்சி அருள்புரிந்து காட்சி கொடுத்து அவன் உயிரைக் காப்பாற்றிய அதே கதை தான். இடமும் பெயரும் தான் வேறு. ஆனால் நடந்தது வாஸ்தவம்.
வெள்ளைக்காரன் வில்லியம் காரோ (1760-1840) படித்தவன் அறிவாளி, பாரிஸ்டர், கோயம் பத்தூர், சேலம் ஜில்லாக்களுக்கு கலெக்டர். ஈரோடு பவானி எல்லாம் அடிக்கடி உத்யோக விஷயமாக செல்வான். பவானியில் வேதநாயகி அம்பாளின் மஹிமை பெருமைகளை ஊரார் சொல்லக் கேட்டபோது அவனை அறியாமால் அந்த அம்பாள் மேல் மட்டற்ற மரியாதை, பக்தி வந்தது. அவளை தரிசிக்க வேண்டும் என்ற தீராத தாகம். தனது வாசஸ்தலத்தை பவானிக்கு மாற்றிக் கொண்டான்..
அவனது அம்பாள் பக்தி கோயில் அதிகாரிக ளுக்குத் தெரிந்து மகிழ்ந்தனர். பிற மதத்தவன் என்பதால் அவனால் சந்நிதிக்குள் செல்வதற்கு வாய்ப்பில்லை. அவனுக்கோ அம்பாளை தினமும் தரிசிக்க ஆவல். ஆகவே தன்னுடைய பங்களாவை கோவிலை ஒட்டி அமைத்துக் கொண்டான்.
கோவிலில் வேதநாயகி அம்பாள் சந்நிதியில் மூன்று துளைகளை நிர்வாகிகள் அமைத்து கொடுத்தார்கள். அதன் வழியாக நாள் தோறும் காரோ அம்பாளை தரிசித்தான். அந்த துளைகளை இன்றும் பவானி வேதநாயகி அம்மன் சந்நிதியில் காணலாம்.
மேலே சொன்ன அதிசயம் ஒருநாள் நிகழ்ந்தது. இது கட்டுக்கதை அல்ல. அது நடந்த நாள் 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.
பவானியில் மழை கொட்டி தீர்த்தது. எங்கும் வெள்ளம் போல் நீர்க்காடு . .
இரவில் வில்லியம் காரோ தனது மாளிகையில் மாடியில் கட்டிலில் படுத்திருக்கிறான். நல்ல தூக்கம். மின்சாரம் இல்லாத காலம். முணுக் முணுக் என்று தீபம் ஒன்று மங்கிய ஒளியை வீசிக்கொண்டிருக்கிறது. அவனுக்கு திடீரென்று ஒரு கனவு. அதில்.....
யாரோ ஒரு அழகிய சிறுமி. ''காரோ சீக்கிரம் எழுந்திரு'' என்று எழுப்புகிறாள் .. அசந்து தூங்கிய அவனை கையைப் பிடித்து இழுத்து விழிக்க வைக்கிறாள் அந்த சிறுமி. யார் இந்த சிறுமி, எதற்கு, எப்படி இந்த நேரத்தில் என் அறைக்குள் வந்தாள்? ஏன் எழுப்புகிறாள், ஆனால் அவள் முகம் பரிச்சயமாக இருக்கி றதே.. ஓஹோ என் வேதநாயகி மாதிரி அல்லவா இருக்கிறாள்.... அவன் யோசிப்பதற்குள் கனவில் அந்த பெண் ''சீக்கிரம் ம்ம் சீக்கிரம், உடனே எழுந்து என்னோடு வெளியே வா ....'' அவனை விரட்டுகிறாள்.. வெளியே வருகிறான் அந்த பெண் சட்டென்று ஓடி எதிரே பவானி அம்மன் வேத நாயகி சந்நிதிக்குள் ஓடி மறைகிறாள்.
தூக்கம் கலைந்தது. காரோ எங்கும் கனமழை யால் வெள்ளக்காடாக இருப்பதை காண்கிறான். தனது பழைய பங்களாவை விட்டு வெளியே அந்த பெண் சொன்னபடியே இயந்திரம் போல் நடக்கிறான். பங்களாவிற்கு வெளியே வந்தவன் ஆலயவாசலில் நிற்கிறான்.
டமால் என்று பேர் இடி போன்ற ஒரு சப்தம் காதைப் பிளக்க அவன் குடியிருந்த அந்த பழைய பங்களா நொறுங்கி விழுந்து தரையைத் தொட்டது.
''அம்மா, நீயா என்னை எழுப்பி காப்பாற்றி யவள்.!! இனம் தெரியாத, புரியாத பக்தி பரவசத்துக்கு ஆளானான் வில்லியம் காரோ.
கட்டிலில் தூங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி என் உயிரைக் காப்பாற்றிய தாயே, உனக்கு என்னாலான ஒரு சிறு காணிக்கை இந்தா, என்று தந்தத்தில் ஒரு கட்டிலோ, தொட்டிலோ செய்து அம்பாளுக்கு பக்தியோடு சமர்ப்பித்தான் வில்லியம் காரோ. அந்த தந்தத் தொட்டிலில்/கட்டிலில் அவன் பெயர் வில்லியம் காரோ என்று அவன் கையெழுத்தோடு இருக்கிறதாம்.
அந்த கட்டில் இன்னும் ஆலய நிர்வாகிகள் பொறுப்பில் ஜாக்கிரதையாக இருக்கிறதாம்.
யாராவது அதன் புகைப்படத்தை வெளிப்படுத்தி பக்தர்களை மகிழ்த்த வேண்டாமா?. அந்த கட்டிலோ, தொட்டிலோ காணாமல் போவதற்கு முன்பு அது இருந்ததற்கு ஒரு தடயம் வேண்டு மல்லவா?, அதை பக்தர்கள் காண வேண்டு மல்லவா?. நான் தேடிப்பார்த்தேன் ஒரு படமும் கிடைக்கவில்லை. ஏன்?? யாரிடமாவது அதன் படம் இருந்தால் எனக்கு அனுப்புங்களேன்.
No comments:
Post a Comment