ஆதிசங்கரர் --- நங்கநல்லூர் J K SIVAN
சாதனா / உபதேச பஞ்சகம் - 1
பஞ்சகம் என்றால் ஐந்து. ஆதி சங்கரர் ஒரு அக்ஷரத்திலும் ஆயிரம் ஸ்லோகங்களிலும் உபதேசிக்கக் கூடியவர். முப்பத்திரெண்டு வயதில் முன்னூறு ஜென்மங்களுக்கான விஷய ஞானம் அருளியவர். நமக்கு அதைவிட அதிக ஜென்மங்கள் கொடுத்தாலும் நாம் முழுதும் புரிந்து கொள்ள தகுதி இல்லாதவர்களாக இருந்தால் அவர் என்ன செய்வார்? திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
எழுத காகிதம், பேனா, கம்பியூட்டர் இல்லாத காலத்திலேயே ஓலைச்சுவடியில், ஆணியால் ஓட்டை குத்தி எழுதவேண்டிய காலத்திலேயே 32 வயது குறுகிய காலத்திலேயே, ஆதிசங்கரர் இவ்வளவு எழுதி இருக்கிறாரே, நான் மேலே சொன்ன வசதிகள் வேகமான உபகரணங்கள் இருந்தால் நமக்கு இன்னும் செல்வம் எவ்வளவு கிடைத்திருக்கும். எத்தனையோ பொன் முட்டை இடும் வாத்துகளை இழந்தவர்கள் நாம்.
இன்னொரு சிந்தனை குறுக்கிடுகிறது அதை மடக்க. ''ஆமாம் போங்க ஸார் , நீங்கள் ரொம்ப பொறுப் பானவர்கள். இருப்பதையே ஒழுங்காக வைத்துக்கொண்டு உபயோகப்படுத்தி நடைமுறையில் பயனடைய தெரியாதவர் களுக்கு இவ்வளவு பேராசையா?'' . இதற்கு பதில் நாம் தலை குனிந்து கொள்வது தான். கேள்வி ஞாயம் தானே.
எத்தனையோ அற்புத காவியங்கள் நூல்களை படைத்த ஆதிசங்கரின் ஒரு ஐந்து ஸ்லோகங்கள் இன்று அறிந்து கொள்வோம். சாதன பஞ்சகம் எனவும் உபதேச பஞ்சகம் என்றும் இதற்கு பெயர். வேதாந்தத்தை கசக்கி பிழிந்து சாரமாக ஐந்து ஸ்லோக ஏணிப்படிகள். . ஒவ்வொன்றும் 4 வரி X ரெண்டு = 8 படிகள். எனவே ஐந்து ஸ்லோகங்களில் 40 படிகள் கடக்கவேண்டும். சாதனை அப்போது தான் பயன் தரும். படிகளில் ஏறுவோமா? உயர்வோமா?
वेदो नित्यमधीयतां तदुदितं कर्म स्वनुष्ठीयतां
तेनेशस्य विधीयतामपचितिः काम्ये मतिस्त्यज्यताम्।
पापौघः परिधूयतां भवसुखे दोषोऽनुसन्धीयतां
आत्मेच्छा व्यवसीयतां निजगृहात्तूर्णं विनिर्गम्यताम्॥१॥\
வேதோ நித்யமதீயதாம் ததுதிதம் கர்மஸ்வ நுஷ்டியதாம்
தேநேஸஸ்ய விதீய தாமப ச்சிதி காம்யே மதிஸ்த்யஜ்யதாம்
பாபௌக: பரிதூயதாம் பவஸுகே தோஷோஅநுஸந்தியதாம்
ஆத்மேசா வ்யவஸீயதாம் நிஜகிருஹாத்தூர்ணம் விநிர்கம்யதாம்
நமது இந்து சனாதன தர்மம் வேத மதம். மற்ற மதங்களை போல் ஒருவரால் உண்டாக்கப்பட்டதல்ல. எண்ணற்ற ரிஷிகள், மந்திர சக்தியால் உணர்ந்ததை மொத்தமாக சேர்த்து அளிக்கப்பட்ட வசதி. வேதம் என்றால் பகவானின் மூச்சு. எனவே தான் படிப்படியாக ஏணியில் ஏறி முன்னேறு. மேலே செல். கீழேயே எத்தனை காலம் இருப்பாய்?
1.தினமும் வேதம் கொஞ்சமாவது படித்து தெரிந்துகொள். நிச்சயம் முடியும். ஆத்மா மெதுவாக புரியும். வேதம் வெறும் எழுத் துகளின் கூட்டம் அல்ல. எத்தனையோ ரிஷிகளின் ஞான சாராம்சம். பிரம்மத்தை அறியும் வழி.
2. அனுஷ்டானங்கள் அதில் சொன்னபடி செய்.
3. சொல்லப்பட்ட தெய்வங்களை வணங்கு. வழிபடு.
4. செய்யும் காரியத்தை சுய லாபத்துக்கு செய்யாமல் பரோபகாரமாக விருப்பு வெறுப்பின்றி செய்.
5. பாபங்கள் தனியாக வராது. கூட்டமாக தான் வரும். கிட்டே அணுகாமல் காத்துக் கொள்.
6.இது வரை என்ன என்ன தவறுகள், தப்புகள், செய்தாய். கணக்கு வைத்துக்கொள். நீ வைத்துக் கொள்ள தவறினாலும் ஒருவன் கறாராக வைத்துக் கொண்டிருக்கிறான். சித்ரகுப்தன். தக்க நேரத்தில் எஜமானன் எமதர்மனிடம் போட்டுக் கொடுத்துவிடுவான்.
7. ஆத்மாவா ? யார் அவர்? கொஞ்சமாக அவரை தெரிந்துகொள், அறிந்துகொள்.
8. சம்சாரம் (மனைவி அல்ல, வாழ்க்கை) எனும் பந்தத்திலிருந்து, கட்டிலிருந்து , மெதுவாக விடுபடு.
சாதன பஞ்சக ரெண்டாவது ஸ்லோக எட்டு ஏணிப்படிகளை அடுத்த கட்டுரையில் அறிந்து கொள்வோம். எழுதிக்கொண்டே போனால் ரொம்ம்ம்ம்ப நீளமாக போகிறதல்லவா.. இப்போதைக்கு மேலே சொன்னதை நினைவில் வைப்போம்.
தொடரும்
No comments:
Post a Comment