யாரிந்த கவிஞர்? 3 --- நங்கநல்லூர் J K SIVAN --
விவேக சிந்தாமணி
''பொருட்பாலை விரும்புவார் காமப் பா விடைமூழ்கிப் புறள்வர்
கீர்த்தி யருட்பாலர் மறப்பாலைக் கனவிலுமே விரும்பார்க ளறிவொன் றில்லார்
குருப்பலர்க் கடவுளர்பால் வேதியர்பால் புரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே யடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித் தீவார். (7அ)
செருப்பாலே யடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித் தீவார். (7அ)
இது கவிஞரின் கொஞ்சம் வினோதமான பாடலாக உள்ளது.
பொருள் மீது ஆசை கொண்டு தனது வாழ்நாள் பூரா அதைத் தேடி அலைந்து சாவார்கள் உண்டு. காமத்தில் இச்சை கொண்டு மாதர் பின்னே சென்று சொத்து உடல் எல்லாவற்றையும் இழப்பவர்கள் உண்டு. தர்மம் தானம் கோயில் குளத்துக்கு ஒரு சல்லிக் காசும் கொடுக்க மனம் வராது. வேதம் ஓதுபவர், ஏழைகள் இவர்களுக்கு உதவ பணம் கொடுக்க மனம் வராது, ஆனால் தன்னை செருப்பால் அடிக்கும் அளவுக்கு பயமுறுத்தும் கொடியவர்கள் தயவைப் பெற, அவர்களிட மிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள எவ்வளவு செம்பொன் வேண்டுமா னாலும் கொடுக்கத் தயாராக இருப்பார்கள், அவர்களிடம் அத்தனை பயம்... என்ன உலகமடா இது ? சில அரசியல் தலைவர்கள் காரில் ரயிலில் எங்கு செல்லும்போதும் குண்டாந்தடி எடுத்துக்கொண்டு நான்கு தடியர்களோடு தான் பிரயாணம் செய்வதாக அறிகிறோம். என்னை வாழ்க்கையோ இது?
இன்றைய நிலையில் செருப்பால் அடிப்பவர் கள் யார், என்று யோசித்தால் நாம் தேடிப் பிடித்து நம்மை ஆள்வதற்கு தேர்ந்தெடுத் தவர்களா என்று புரியவில்லை. அதிகாரம் யாரிடம் இருக்கிறது, பலம் யாரிடம், வாக்களிப்பவனா , வாக்கைப் பெறுபவனா ? செருப்பால் அடிப்பது இப்போது எதற்கெடுத்தாலும் காசு பிடுங்காமல் ஒரு வேலையும் எங்கும் நடக்காமல் செய்வது என்பதோ என்று இந்த சர்ச்சை யை கிளப்பி விடுகிறார் யாரோ இந்தப் பேர் தெரியாத புலவர்.
குடும்பத்தில் அப்பா அம்மாவுக்கு, பிறந்த குழந்தை ஆண் என்று தெரிந்தால் ரெட்டிப்பு சந்தோஷம். குழந்தை வளர்ந்தான். கோலி பம்பரம் விளையாடினான். பள்ளிக்கு போனான், படித்தான். சண்டை போட்டான். சட்டை கிழிந்தது. காலேஜுக்கோ வேலைக் கோ போனான். கல்யாணம் ஆகியது. அவனுக்கு இப்போது ரெண்டு குழந்தைகள். அப்பா அம்மா தாத்தா பாட்டி. வயோதிகர்கள், அமெரிக்காவில் இருப்பவன் அவர்களை லக்ஷியம் செய்வதில்லை. அப்பா பேச்சு கொஞ்சமும் பிடிக்காது. போடா உனக்கென்ன தெரியும் ? என்கிறான். அப்பா சொல்வதையா கேட்கப்போகிறான்?
மனைவி மட்டும் என்ன ஒசத்தி. ஒருகாலத்தில் கல்யாணமான புதிதில் கட்டுப்பெட்டி. அப்புறம் குழந்தை குட்டி பெற்றாள் . அதிகாரம் தூள் பறக்கிறது. எது சொன்னாலும் எதிர் பேச்சு பேசுகிறாள். எங்கிருந்து கற்றாள் இதெல்லாம்.?
கல்வி கற்பது பற்றி பேசும்போது இன்னொரு விஷயம் ஞாபகம் வருகிறது. சீடன் ''அனா ஆவன்னா '' தெரியாமல் வந்தவன் எல்லாம் கற்றுக்கொண்டு அப்புறம் குருவுடனேயே தர்க்கம் வாதம் செய்கிறான். அவருக்கென்ன தெரியும் என்கிறான்? அவனுக்கிப்போது குரு உதவாக்கரை..
உதவாக்கரை என்கிறபோது ராமசுப்பு பண்டிதர் ஞாபகத்துக்கு வருகிறார். நல்ல மருத்துவர். எல்லா நோய்க்கும் ஒரே கலர் மாத்திரை, கஷாயம், பிரவுன் கலர் சூரணம் தேனில் கலந்து நாக்கில் தடவி வியாதி குணமாகி விட்டது. முன்பெல்லாம் ஏதாவது வியாதி இருந்தபோது பண்டிதர் தேவைப் பட்டார். இப்போது அவர் வேண்டாம். அவர் பாட்டுக்கு வந்து திண்ணையில் உட்கார்ந்து விட்டு நீர் மோர் குடித்துவிட்டு ரெண்டு வாழைக்காயையும் அரைப்படி அரிசியும் யாராவது கொடுத்தால் வாங்கிக் கொண்டு போகிறார். அவர் வைத்தியம் எவருக்கும் தேவையில்லை.
இதெல்லாம் ஏதோ சிலர் வீட்டில் மட்டும் நடக்கிற விஷயம் இல்லை ஸார் . இது தான் பொதுவாக எல்லா இடங்களிலும் நாட்டு நடப்பு. ஜனங்கள் குணம் அப்படித்தான் என்கிறது இந்த விவேகசிந்தாமணி பாடல். படியுங்கள் மேலே சொன்ன அர்த்தம் புரியும்.
''பிள்ளை தான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான்
கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் போராளி
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உளன் நோய் பிணிகள் தீர்ந்தா லுலகனார்பண் டிதரைத் தேடார்''
இன்னொரு சுகமான பாடலோடு நிறுத்திக் கொள்கிறேன்
டாமி, ஜிம்மி, டைகர், மணி என்று நாய் களுக்கு பெயர் வைத்து கொஞ்சு கிறோம். ஒரே படுக்கையில் படுக்கிறது. . சரிதான். அடுத்த வீட்டுக்காரன் புனுகுப் பூனை கூண்டில் வைத்து வளர்க்கிறான். புனுகு நல்ல விலைக்கு விற்கிறான். நல்ல சம்பாத்தியம். நமது டைகர், டாமியையும் அப்படி வளர்த்தால் என்ன? டாமியைப் பிடித்து ஒரு கூண்டினில் வைத்து, வேளா வேளைக்கு புஷ்டியாக ஆகாராதிகள் கொடுத்து, அதற்கு மஞ்சள் பூசி குளிக்க வைத்து சாம்பிராணி புகை பிடித்து, குங்குமம் தடவினால் அது புனுகுப் பூனை ஆகுமா?. நாய் நாய் தான். பெரிய பணக்கார அரசியல் தலைவன் வீட்டிலும் ராஜா வீட்டில் வளர்பவனும் அவ்வாறே. அவன் பிறவி குணம் மாறாது என்கிறார் பேர் தெரியா புலவர்.
''குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணஞ் செயதாலும் தான்
அக்குலம் வேற தாமோ வதனிடம் புனுகுண் டாமோ
குக்கலே குக்க லல்லாற் குலந்தனில் பெரியதாமோ''.
இன்னும் சொல்லட்டுமா?
No comments:
Post a Comment