Monday, May 17, 2021

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்  -   நங்கநல்லூர்   J K  SIVAN



'' பால்யத்திலே தான் பக்தி வளரணும் ''


மஹா பெரியவாவைப்  போல,  எந்த வித  மனிதர்களானாலும்   வயசு  அந்தஸ்து வித்தியாசமில்லாமல்  அவர்களுக்குச் சமமாக  சம்பாஷிக்க முடிந்தவர்களைப் பார்ப்பது  எளிதில்   நடக்கும் காரியம் அல்ல.   குழந்தைகளோ, பெண்களோ, படித்தவர்களோ, பாட்டிகளோ, வெளிநாட்டவர்களோ, சங்கீத வித்வான்களோ,  சிற்பிகளோ, எழுத்தாளர்களோ,  கலை வல்லுனர்களோ,   சமையல் காரரோ,  பெரிய  நிறுவன அதிபர்களோ, பாமரர்களோ, பரம ஏழைகளோ,  எவராக இருந்தாலும் அவருக்கு ஒன்றே தான். அவர்களோடு அன்போடு இணைந்து அன்பை அருளி, என்ன உதவியோ அதை செய்யும் கலியுக கண்கண்ட தெய்வம் என்பதால் தான்  இன்றும் என்றும்  உலகம் அவரை மறக்கவில்லை.  ஒவ்வொரு பூஜை அறையிலும் தெய்வமாக வழிபடப்படுகிறார்.

ஒரு முறை பக்தர்   காஞ்சிபுரம் மடத்துக்கு வந்திருந்தார்.    பெரியவாளை  தரிசித்துவிட்டு  தயங்கினார். 

''என்ன சொல்லணும்?'    பளிச்சென்று பெரியவா கேட்டார்.

 "சுவாமி!   நானும் எவ்வளவோ  சொல்லிப்பார்க்கறேன்.  குழந்தைகளுக்கு சாதாரணமா  பக்தியில் நாட்டம் வருவதில்லையே... அதற்கு காரணம்  காலம் போகப் போகத் தான் பக்தியின் ருசி அவர்களுக்குப் புரியத் தொடங்கும்.. வாழ்வில் வரும் அனுபவங்களைப் பொறுத்து, அவர்களின் மனம் கடவுளை நாடத் தொடங்கும், அப்படித்தானே சுவாமி ?''.. அது வரை  நாமும்  பொறுமையுடன் இருக்கத் தானே வேண்டும்? வலுக்கட்டாயமாக பக்திப் பயிரை விதைத்தால் பலன் கிடைக்காது.  அப்படித்தானே  சுவாமி ?''

மஹா பெரியவா  அவரை  ஒருமுறை  பார்த்தார்.   பிறகு பேசினார்: 


"உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்கிற  பழக்கம்  உண்டா? ''  என்கிறார்  பெரியவா.
(இது  நடந்த காலத்தில்  ஆவின்  பட்டர் BUTTER, FRIDGE    எல்லாம்  கிடையாது )

" சுவாமி,    எங்க அகத்திலே,  தினமும் தயிர்ப் பானையில் மத்தை வைத்து, கயிறு கட்டி இழுத்துக் கடைவார்களே..." 

*"எந்த வேளையில் கடைவார்கள்... காலையிலா, மத்தியானமா?"*

*"அதிகாலையில் தான் சுவாமி"*

*" மத்தியானம், அல்லது சாயந்திரம் கடைவதில்லையே ஏன்?"*

*....................''       பதில் தெரியாமல் திகைத்தார் பக்தர்..*

* நானே  சொல்றேன்.    அதிகாலை சுபமான வேளை. அந் நேரத்தில் வெயில் ஏறாததால் சுற்றுப்புறம் குளிர்ச்சியாக இருக்கும்.. அப்போது கடைந்தால் வெண்ணெய் பந்தாக திரளும்.. உருகாமல் கெட்டியாகவும் இருக்கும்.. சூரியன் வானில் உக்கிரமாகி விட்டால் போச்சு.. வெண்ணெய் திரளாமல், கடையக் கடைய உருகி விடும் இல்லையா" 

சிறிது மௌனம்.  பெரியவா மேலும் தொடர்கிறார்.

 " அது போல  தான்  , வயதான காலத்தில் மனதில் பல சிந்தனைகளும் அலை மோதும். அப்போது பக்தி என்னும் வெண்ணெய் திரள்வது கடினம். குழந்தைகளின் மனம் குளிர்ச்சியானது.. அதில் காம, குரோத சிந்தனை இருக்காது.. அப்போது கடவுள் சிந்தனை என்னும் மத்தால் கடைய, பக்தி எனும் வெண்ணெய் சுலபமாகத் திரளும்.. "*

" அதுக்காகத் தான்,   அப்பா அம்மாக்கள்,  வாரம் ஒரு  தடவையாவது,  குழந்தைகளை  கோயிலுக்கு அழைத்துக்  கொண்டு போகணும்.   இந்தப் பழக்கம்  குழந்தைகளுக்கு  நல்ல  பாதுகாப்பு அளிக்கும்.. கொஞ்சம் புரியற வயசு வந்தப்பறம்   கஷ்டம், துயரம்,  துன்பம் வந்தாலும் கடவுள் அருளால் அது நம்மை பாதிக்காது என்ற சிந்தனை உருவாகும்..

''இதை எதுக்கு சொன்னேன் என்றால்,  பக்திக்கு ஏற்ற வயது இளமைப் பருவம் தான்.. புரிகிறதா? " 

பக்தரும் இதயம் கனிந்து, கண்ணீர் மல்க பெரியவா பாதம் பணிந்து நமஸ்கரித்தார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...