Sunday, May 23, 2021

LIFE LESSON

 



ரகசியம் சொல்கிறேன் கேளுங்கள்.  --  நங்கநல்லூர்  J K  SIVAN  


ஒவ்வொருநாளும் எப்படி  கழிய வேண்டும்?  
ராமசாமி படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போதே  கடுகடுவென்று இருப்பான். பற்களை ஏனோ நறநற என்று கடிப்பான்.  உஷ்ணப் பெருமூச்சு.   இது நாள்  முழுதும்  தொடராமல் என்ன  செய்யும்?

எழுந்திருக்கும்போதே ஒரு புத்துணர்ச்சி தோன்றவேண்டும்.  இன்று இதைச்  செய்யவேண்டும், அதைச் செய்யவேண்டும் என்ற ஆர்வம்   நமக்கு  முன்பே  படுக்கையை விட்டு   எழும்ப வேண்டும்.   நன்றாக  ஆரம்பிப்பது நன்றாகவே முடியும் என்று ஆங்கிலத்தை சொல்வோமே.. ''what begins well ends well'' அது தான் இது.

சோம்பேறியாக படுக்கையில் உருளும்போது  என்னன்னவோ  எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றி மறையும் . துளியும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமே இல்லை.  இந்த  தளர்ச்சி,  குழப்பம்  நாள் முழுதும் ஒவ்வொரு செயலிலும் எண்ணத்திலும் தலையை நீட்டும்.   இதனால்  ஒரு அருமையான  நாள் வீணாக பாழாகும்.

சந்தோஷத்தோடு  பொழுதை  வரவேற்போம்.  ''ஹை;;  சொல்வோம்.  ஒரு புன்சிரிப்போடு  எழுந்திருப்போம்.  ஆஹா,   நமக்கு ஒரு புது நாள் கிடைத்திருக்கிறதே  என்று  மகிழ்வோடு வரவேற்போம். புன்சிரிப்போடு கண்ணாடி முன்  நிற்போம்.  இது தான் ஸார்  பாசிட்டிவ்  சிக்னல்.  பாசிட்டிவ்  என்றவுடன் எல்லோருக்கும்  பயப்படுகிறோம்  கொரோனா  பாசிட்டிவ்   இல்ல இது.    நமது மூளைக்கு நாம் தரும்  பாசிட்டிவ் சிக்னல்.

மாடியில் இருந்தால்,   ஜன்னல், பால்கனி இருக்குமே.  அங்கே சென்று வெளியே சுற்றும் முற்றும்  பாப்போம். சூரியன் கிழக்கே மேலே கிளம்புவானே. பார்க்க சுகமாக இருக்கும்.  பால்கனி இருந்தால்  சில்லென்று காற்று மேலே படும்.  பறவைகள் கத்துவது கேட்க பிடிக்கும்.   கண்ணுக்கு தெரியாத இதோ ஒரு சின்ன பறவை இலைகள் இடையே  நமக்காக பாடுமே  அதை ரசிப்போம்.   யாருக்காவது முதல் நாள் நாம் செய்த ஒரு நமக்கு த்ருப்தியளித்த ஒரு நல்ல செயல், சொன்ன ஒரு நல்ல வார்த்தை நினைவு கூர்வோம். அதற்கு அந்த  மற்றவர் பாராட்டியதை  நினைப்போம்.   இது தான் பாசிட்டிவ்  எனெர்ஜி. நாள் முழுதையும்  சந்தோஷமாக்கும் மந்திரம்.

தாகம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை .மடக் மடக்கென்று  ரெண்டு டம்ளர் நிறைய  தண்ணீர்  உள்ளே போகட்டும் வயிற்றை நிரப்பட்டும்.  வெந்நீர்  நல்லது.  அப்புறம் தான்  டீ ,  காப்பி எல்லாம்.   நமக்கு தேவைப்படும்  ஆக்சிஜன், ப்ராணவாயுக்கு அடுத்தபடி  இந்த தண்ணீர் ரொம்ப அவசியம்.  உடம்பு அசதி, தளர்வு எல்லாம்  கொழுப்பினால் உருவாவது.  தண்ணீர் அதை வெறும் வயிறில்  காலையிலேயே ஒரு இடத்தில் தங்காமல் கரைத்து விடுகிறது.  ஒவ்வொரு   நாளையும்   நன்றாக துவக்க  முதன் முதலில்  பருகவேண்டியது  நல்ல குடி நீர்  மட்டும் தான்.     

படுக்கையை விட்டு எழுந்ததும் கை,  கால்களை, முதுகை, வயிற் றை,  தலையை,    நன்றாக  நீட்டி மடக்கி வளைத்து    தூங்கும் தசைகளை  எழுப்பி  இயக்க வேண்டும். ஆபிஸில்  நீண்ட நேரம்  அமர்ந்து வேலை பார்க்கும்போது கூட நடுநடுவே  இப்படி எழுந்து நின்று  உடலை  முன்னும் பின்னும் வளைத்து,  கைகள் கால்களை நீட்டி மடக்கி  கொஞ்சம்  அதிர்வு கொடுக்க வேண்டும்.   தலையை நாலாபக்கமும் மெதுவாக திருப்பவேண்டும்.   ரெண்டு மூன்று அடிகள் அங்கேயே   நடக்கலாம்.  இதற்கு குறிப்பிட்ட  நேரம்  தேவையில்லை. எவ்வளவு செயகிறோமோ அவ்வளவு நல்லது.  மூளைக்கு ரத்தம் சென்று நன்றாக யோசிக்க முடியும்.  சௌகர்யமாக இருக்கும் 

காலை உணவு  ராஜா மாதிரி  சாப்பிடவேண்டும் என்பார்கள்.  எதை  சாப்பிடுவது?  புஷ்டியாக இருக்க என்ன சாப்பிடுவது?  பழங்கள், பால், தானியங்கள், கீரைகள், பழ ரசம்,  பாதம்  வேர்க்கடலை  போன்ற விதைகள் நல்லவை.

தினமும்  இட்லி தோசை பொங்கல் வேண்டாம். சாப்பிடுவதில்  ஆர்வம் வேண்டும்.   இல்லையேல்  அது மாத்திரை  விழுங்குவது போல் ஆகி திருப்தி அளிக்காது.  பார்க்கும்போதே  சாப்பிடவேண்டும் என்று பசி எடுக்க வேண்டும்.   தக்காளிபழம்  ரொம்ப நல்லது.  மன அழுத்தம் குறைக்கிறது.  தினமும் ரெண்டாவது   நன்றாக கழுவி  நறுக்கி,  கடித்து  சாப்பிடலாம். எளிதில் எல்லோருக்கும் கிடைக்கும் ஒளஷதம்.

இன்று என்ன செய்யலாம், செய்யவேண்டும், அல்லது இந்த வாரம் என்னென்ன  செய்யலாம் என்று திட்டமிடலாம்.   முடிந்தவரை அவற்றை திருப்திகரமாக ஆர்வத்தோடு ஈடுபட்டு முடிக்கலாம்.  காலையில் உள்ளமும் உடலும்  சக்தி குறையாமல் புத்துணர்வோடு இருக்கும் நேரம் இதை யோசிக்கலாம்.

மனதுக்கு இதம் தரும்  சங்கீதம் கேட்கலாம்.  நிறையபேர்  ஸ்லோகங்கள் ஸ்தோத்திரங்கள்  தெய்வீக பாடல்கள் கேட்கிறார்கள். நல்ல பழக்கம்.    ரசித்து கேட்கும்போது  இருதயத்துக்கு ரத்த ஓட்டம் நன்றாக சீராக செல்கிறது .  நாமே  சந்தோஷமாக பாடினால்  அதைவிட  இன்னும் சுகம். நல்லது.  சிரித்துப்  பேசவேண்டும்.  ரத்த அழுத்தம் காணாமல் போகும்.பிராணவாயு சீராக  ஓடும்.   இரவில்  படுக்கும் முன்  சிலர்  காமெடி சீன்கள்  பார்க்கிறார்கள்,  ஜோக்ஸ் கேட்கிறார்கள், சிரிக்கிறார்கள். ஆனந்தமாக ஆரம்பித்த   நாள் ஆனந்தமாகவே    இரவோடு நிறைவு பெறுகிறது.

கடைசியாக  ஒரு ப்ரம்ம ரகசியம்.  வயதாகி விட்டது என்ற எண்ணமே கிட்ட வரக்கூடாது.  உங்களை  ஒரு நோயாளி போல் வைத்துக்  கொள்ளாமல்  நீங்களே ரசிக்கும் அளவுக்கு  உற்சாகமாக இருக்கவேண்டும்.  

''என்ன ஆந்த ஆளுக்கு இந்த வயதிலும் ஒரு  மிடுக்கு, வசீகரம் பார்த்தாயா''  என்று நாலு பேர் சொல்லும் படியாக இருந்தால், மரண பயம் நெருங்காது.   நோய் அருகே வராது.  ஊக்கம் ஆக்கம் கூடும்.   ஆள் பாதி ஆடை பாதி என்று சொன்னது இதற்கு தான்.  
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...