பேசும் தெய்வம் -- நங்கநல்லூர் J K SIVAN
16. மடத்தில் மடை திறந்த இசை வெள்ளம்.
மஹா பெரியவாளின் ஒரு மிக உயர்ந்த குணம் எல்லோரையும் காந்தம் போல் அவரிடம் இழுத்தது. அது என்னவென்றால், அவர் எந்த நிமிஷமும் எந்த மதத்தினரையும் வெறுக்கவில்லை. யார் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்களோ அந்த மதத்தை மதிப்பவர் மஹா பெரியவர். இந்த தாராள, பரந்த மனப்பான்மை மற்ற மதத் தலைவர்களை அவர் மீது மட்டற்ற மரியாதை கொள்ளச் செய்தது.
ஜீனராஜ தாஸா ப்ரம்ம சமாஜ சபையை சேர்ந்தவர். அவர் முடிந்தபோதெல்லாம் மஹா பெரியவாளிடம் உலக மதங்கள் பற்றி சம்பாஷிப்பது வழக்கம். மஹாபெரியவளின் கருத்துக்களை மதித்து ஏற்றுக் கொள்பவர்.
நான் ஏற்கனவே பல முறை சொல்லி இருக்கிறேன். மஹா பெரியவருக்கு சங்கீதம் என்றால் கொள்ளை ப்பிரியம் . சங்கீத சாஸ்திரத்தை நன்றாக அலசி ஆராய்ந்தவர். அவரும் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரும் சந்தித்தபோது நிகழ்ந்த சங்கீத சம்பாஷணைகளை முன்பே எழுதியிருந்தேன். சங்கீத வித்வான் களை அழைத்து அவர்கள் நிகழ்ச்சிகளை உன்னிப்பாக கவனித்து ரசிப்பார். யோசிந்து ஆராய்வார். மிக பிரபல வித்வான்கள் வந்து அவர் முன் அமர்ந்து பாடி, வாத்தியங்களை வாசித்திருக்கிறார்கள் .வித்வான்களிடம் அவர்கள் பாடும் க்ரிதிகளின் வார்த்தைகள் ராகங்களின் பொருத்தம் , அர்த்தம் பற்றி கேள்விகள் கேட்பார். ராக தாள பாவ நுணுக்கமான விவரங்களைக் கூறுவார். அவரது கேள்விகளின் ஆழமும், விளக்கங்களின் அற்புதமும் வித்வான்களை, கலைஞர்களை, தேனுண்ட வண்டாக மயக்கும். அவருக்கு தெலுங்கு மொழி வெகு நன்றாக தெரியும் என்பதால் தியாகராஜர் அன்னமாச்சார்யார் போன்ற தெலுங்கு மஹான்களின் கிருதிகளை நன்றாக புரிந்து பக்தி ரசத்தை ரசிக்கமுடியும்.
சங்கீத வித்துவான்கள் தாம் பாடும் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்க்ரித க்ரிதிகளின் ஸ்லோகங்கள் அர்த்தங்களை நன்றாக தெரிந்து கொண்டு புரிந்து கொண்டு அப்புறம் தான் சபையில் பாடவேண்டும் என்று கேட்டுக் கொள்வார். அர்த்தம் புரிந்து பாடினால் தான் பாவம், பக்தி உணர்வு நன்றாக வெளிப்படும் என்பார். பழைய காலத்து வித்வான்கள் இவ்வாறு ஞானஸ்தர்களாக திகழ்ந்தார்கள். ஸ்ரீ சாமா சாஸ்திரிகள், ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் கிருதிகள் அர்த்தம் தெரிந்து பாடினால் இன்னும் அற்புதமாக சபையோரால் கேட்டுணர முடியும் என்பார்.
அதேபோல் தான் கதாகாலக்ஷேபம் பண்ணும், சங்கீத உபன்யாசம் பண்ணும் , கலைஞர்களும் மஹா பெரியவா முன்பு தங்கள் நிகழ்ச்சிகளை அளிக்க பெரிதும் விரும்பினார்கள்.
உமையாள்புரம் ஸ்வாமிநாதய்யர் (photo attached) , மஹா வைத்யநாதய்யரின் சிஷ்யன். ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் வழி வந்தவர். அவர் கும்பகோணத்தில் வசித்து வந்த காலம் அது. தினமும் காஞ்சி மடத்துக்கு வந்துவிடுவார். மகா பெரியவா தரிசனம் பண்ணாமல் அவரால் இருக்க முடியாது. ராகங்கள் கிருதிகள் பற்றி மணிக்கணக்காக சம்பாஷிப்பார்கள், விவாதமும் கூட உண்டு. அவருக்கு மஹா பெரியவா ''நாதானுபவ சாரஞ '' என்ற விருது அளித்து கௌரவித்தார். திருக்கோடிகாவல் கிருஷ்ணய்யர் அக்கால பிரபல பிடில் வித்வான். அடிக்கடி மடத்துக்கு வந்து மகா பெரியவா முன்பு வாசிப்பார். மாயவரம் வீணை வைத்யநாத ஐயர் இன்னொரு வித்வான். அவருக்கு இரு மகன்கள். சபேசய்யர் . இன்னொருத்தர் கிருஷ்ணமூர்த்தி ஐயர் . சபேசய்யர் வீணை வாசிப்போடு வாய்ப்பாட்டும் சேர்ந்து இனிய குரலில் பாடுபவர். கணேஷ் குமரேஷ் என்ற சகோதர்கள், சிறந்த வயலின் வித்தவான்கள் . அவர்களில் கணேஷ் இப்படி வயலின் வாசித்துக்கொண்டு நன்றாக பாடுவதை கேட்டிருக்கிறேன்.
சபேசய்யர் தேவி உபாசகர். தேவி மீது கிருதிகள் வாசிக்கும்போது இனிய குரலில் பாடுவதை ரசிகர்கள் பெரிதும் விரும்பி கேட்பார்கள். சரஸ்வதி கடாக்ஷம் நிரம்பியவர். மகன் சபேசய்யர் வீணை வாசிப்பது தொடர்ந்ததும் வீணை வைத்யநாதய்யர் வாசிப்பதை நிறுத்தி விட்டார்.
ஒருமுறை சபேசய்யர் மஹா பெரியவா முன்னால் வீணை வாசித்துக்கொண்டு பாடும்போது வீணை வைத்யநாதய்யர் தன்னை மறந்து ''சபாஷ் என் அப்பனே'' என்று சந்தோஷத்தில் உரக்க பாராட்டினார். மஹா பெரியவா சிரித்துக்கொண்டே
''நீங்களே உங்கள் புத்ரனை மேடையில், பொது நிகழ்ச்சியின் போது, மெச்சிப் பாராட்டக்கூடாது, மற்றவர்கள் பாராட்டை அவர் பெறும்போது தான் அவருக்கு மதிப்பு உயரும். பெருமை தரும் . நீங்கள் உங்கள் மனதளவில் ரசித்து பெருமை பட்டுக்கொண்டு மகிழலாம்'' என்கிறார்.
வைத்யநாதய்யர்
'' சந்தோஷத்தில் நான் என்னை மறந்துட்டேன்'' என்று மஹா பெரியவாளுக்கு நமஸ் கரித்தார். புல்லாங்குழல் நாகராஜ ராவ் அடிக்கடி மடத்துக்கு வருவார். அவருக்கு வயலின் வாசிக்க செம்மங்குடி நாராயணஸ்வாமி கூடவே வருவார். சாக்கோட்டை ரங்கு அய்யங்கார் மிருதங்கம், உமையாள்புரம் சுந்தரம் ஐயர் கடம் வாசிப்பார். அற்புதமான கச்சேரி நடைபெறும். கச்சேரி முழுதும் மஹா பெரியவா முன்னால் அமர்ந்து கேட்டு ரசிப்பார். நடுநடுவே சிலாகித்து விமர்சிப்பார் உற்சாகப் படுத்துவார்.
கதாகாலக்ஷேப வித்துவான் திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள் கும்பகோண வாசி. மடத்தில் கதா காலக்ஷேபங்கள் அடிக்கடி நிகழ்த்துவார். அப்போதெல்லாம் ஒலிபெருக்கிகள் கிடையாது. இருந்தாலும் அமைதியாக ஆயிரக்கணக்காக ரசிகர்கள் மடத்தில் எங்கும் காணப்படுவார்கள். கதைகளை சுவாரஸ்யமாக கேட்பார்கள். மிருதங்கத்தில் அழகநம்பி,(photo attached) அப்புறம் கோதண்டராம ஐயர் பக்க வாத்யம். எடுத்து வாங்கி பாடுவதற்கு நல்லூர் விஸ்வநாத ஐயர், மாதிரி மங்கலம் நடேசய்யர், குஞ்சுபாகவதர்.
பஞ்சாப கேச சாஸ்திரிகள் ஆதிசங்கர பகவத்பாதாள் சரித்திரம் அற்புதமாக கதாகாலக்ஷேபம் செய்வார். மஹா பெரியவா ஆதரவோடு நீளமான ஆதிசங்கர சரித்திரம் ஒரு சப்தாஹம், ஏழுநாள் அற்புதமாக நிறைவேற்றினார்.
மேற்கொண்டு கும்பகோணம் போவோம்.....
No comments:
Post a Comment