Thursday, May 20, 2021

PESUM DEIVAM


 பேசும் தெய்வம்   --   நங்கநல்லூர்  J K  SIVAN  


 ஜோசியம் பலித்தது.  இன்று  127  வது  ஜயந்தி  


இன்றைக்கு  2021ம்  வருஷம்  மே மாதம்  20ம்  தேதி. இன்றைக்கு என்ன விசேஷம்? ஞாபகம் இருக்கி றதா? இந்த நாளில் தான் 127 வருஷங்க ளுக்கு  முன்பு  ஒரு பேசும் தெய்வம் ஒரு சாதாரண குடும்பத்தில்  கன்னடம் பேசும்  ஸ்மார்த்த ப்ராமண குடும்பத்தில்  ஸ்வாமிநாதன் என்று  குலதெய்வமான  சுவாமிமலை  முருகன்  பெயரோடு  விழுப்புரத்தில் பிறந்தது. அப்பா சுப்ரமணிய ஐயர் , அம்மா  மஹாலக்ஷ்மி.  சுப்ரமணிய ஐயர்  வெள்ளைக்கார அரசாங் கத்தில் கல்வி அதிகாரி.  பள்ளிக்கூடங்களுக்கு திடீரென்று சென்று எல்லாம் முறையாக நடக்கிறதா, குழந்தைகள் நன்றாக கற்பிக்கப்  படுகிறார்களா என்று சோதனை செய்யும் உத்யோகம்.  DEO  அடிக்கடி   ஊர் ஊராக  பள்ளிக்கூடங்களுக்கு  செல்ல வேண்டிய உத்யோகம்.

ஸ்வாமிநாதன்  திண்டிவனத்தில்  ஆற்காட் அமெரிக்கன் மிஷன் ஹை ஸ்கூலில் படித்த   போது  அங்கே  அவன் தந்தை  ஆசிரியராக இருந்தார்.   படிப்பில் ஸ்வாமிதான் கெட்டிக்கா ரனாக இருந்ததில் ஒரு ஆச்சர்யமும் இல்லை.  1905  பைபிள் ஒப்பித்து  முதல் பரிசு வாங்கிய மாணவன்.   அப்புறம்  உபநயனம் ஆயிற்று,  வேத பாடம்  கற்றுக்கொள்ள   தகுந்த  ஆசிரியரிடம்  சிஷ்யன்  ஆனான். 

இந்த மாணவன் யார்? இது வரை சொன்னதில்  ஒன்றும் ஆச்சர்யம் இல்லையே என்றால் இனிமேல் தான் ஆச்சர்யங்கள் வரிசையாக நிற்கின்றது.  

ஒருநாள்   குழந்தை ஸ்வாமிநாதன் ஜாதகத்தை அப்பா சுப்ரமணிய ஐயர்  எடுத்துக்கொண்டு ஸ்வாமி நாதனோடு ஒரு ஜோசிய நண்பரைப்   பார்க்கச்  சென்றார்.
  
''வாங்கோ  சுப்ரமணிய ஐயர் , சௌக்கியமா. எங்கே இந்தப்பக்கம்  ஆச்சர்யமா இருக்கு?''

 இது என் ரெண்டாவது குமாரன்  ஸ்வாமிநாதன். அவன் ஜாதகம் இது.  நீங்க  பார்த்துட்டு  அவன் படிப்பு, தேக ஆரோக்யம்,   எதிர்காலம் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டு போக  வந்தேன்''  

 ஜோசியர்  ஜாதகத்தை திரும்ப திரும்ப  பார்த்துக் கொண்டே இருந்தார்.  அவரையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்த ஸ்வாமிநாதன் முகத்தையும்  அடிக்கடி உற்று உற்றுப்  பார்த்துக்கொண்டே இருந்தார். 

 ஜோசியர் முகம் வியர்த்தது. கை  கால்கள்  நடுங்கின.

''என்ன ஜோசியரே, என்ன ஆயிற்று உங்களுக்கு,  ஏதாவது ஜாதகத்தில்  குறை, தப்பு இருந்தால் பயப்படாமல் சொல்லுங்கள். தயக்கம் வேண்டாம்''

''நான் என்னத்தைச்   சொல்வேன் சுவாமி'' என்று   சொன்ன  ஜோசியர், தடாலென்று  ஸ்வாமிநாதன் காலடியில் விழுந்தார்.

''ஜோசியரே   என்ன இது?'' 

''இவன் கால்  அடியிலே  நான் இப்போ விழுந்தேன். ஒருநாள்  உலகமே இவன் காலடியில் விழப்போ றது''.  

சுப்பிரமணிய  ஐயர்  திகைத்தார்.  ஸ்வாமிநா தன் சிறுவன்  இதெல்லாம்  வேடிக்கையாக பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.  

1906ல் அப்போதைய காஞ்சி காமகோடி   66வது   பீடாதிபதி ஜகத்குரு ,   திண்டிவனம்  பக்கத்தில் ஒரு கிராமத்தில் வருஷாந்திர  சாதுர்மாஸ்யத் துக்கு வந்திருந்தார்.   நாற்பது நாட்கள் போல் அங்கே தங்கி இருந்து பக்தர்களுக்கு தரிசனம் பிரசாதம் எல்லாம் கொடுத்தார்

ஸ்வாமிநாதன் குடும்பமும் அவரை தரிசித்தது.  சுப்ரமணிய ஐயர்  அடிக்கடி  மடத்துக்கு செல்வார்.  அவரோடு சுவாமிநாதனும் செல்வது வழக்கம்.  66வது   பீடாதிபதிகளுக்கு  சுவாமிநாதனை ரொம்ப பிடித்து விட்டது.

1907 பிப்ரவரி மாதம்  காஞ்சி மட நிர்வாகிகள்   சுப்ரமணிய ஐயரின்  மனைவி சகோதரி மகன் 67வது பீடாதிபதியாக  நிச்சயிக்கப்பட்டதை சொன்ன போது  ரொம்ப  ஆச்சரியப்பட்டார். என்ன பாக்யம்? 

66வது பீடாதிபதிக்கு  அம்மைநோய்  கண்டு, அது  நிவாரணம்  இன்றி  முற்றி  அவர் விரைவில் சமாதிய டைவார் என்கிற மாதிரி  பேச்சு அடிபட்டது.  ஆகவே  சுவாமிநாதனின்  ஒன்றுவிட்ட சகோதரன்  லட்சுமிநாதன் எனும் சிறுவனுக்கு   அடுத்த பீடாதிபதியாக  ஜகதகுரு ஆரோகண உபதேசம் செய்கிறார்  ஜகத்குரு  என்பது செய்தி.
 
இந்த  வைபவத்தில் கலந்துகொள்ள  சுப்ரமணிய ஐயர்  குடும்பம் கலவைக்கு  செல்லவேண்டிய சமயத்தில் ஐயருக்கு  உத்யோக விஷயமாக கட்டாய மாக  திருச்சி செல்வதை  தவிர்க்க முடியாததால்  மஹாலக்ஷ்மி அம்மா குழந்தைக ளோடு  கலவைக்கு  புறப்பட்டார்.  

தனது  சகோதரி கணவனை இழந்தவளுக்கு இருந்த ஒரே ஆதரவான  மகனும் சந்யாசியாகி விட்டதற்கு ஆறுதல் சொல்ல  மஹாலக்ஷ்மி அம்மாள் ரயிலில்  சென்றாள் . காஞ்சிபுரம்  வரை ரயில் பிரயாணம் செய்து அன்றிரவு  காஞ்சி  மடத்தில்  தங்கினார்கள்.

துரதிர்ஷ்டவசமாக  அடுத்த ஜகத் குருவாக நியமிக்கப்பட்ட  லட்சுமிநாதனும் நோய்வாய்ப்  பட்டான். இந்த  செய்தி  லட்சுமிநாதன் தாய்க்கும்  மகாலட்சுமிக்கும்  பேரிடி  தலையில் விழுந்தது போல்  வாட்டியது.
   
கலவையில்  67வது காமகோடி பீடாதிபதி ஜகதகுரு  ஆரோஹண வைபவம் எப்படி நடத்துவது என்று  அதிர்ச்சி. 

அப்போது நடந்த விஷயத்தை  பின்னர்  68 வது பீடாதிபதியாகிய  மஹா பெரியவா  ( பூர்வாச்ரம பெயர்:  ஸ்வாமிநாதன்)  சொன்னது இது தான்: 


''இது நடந்தது குமர கோஷ்ட தீர்த்தத்தில்,.  கலவையிலிருந்து  மடத்தைச் சேர்ந்த  ஒரு குதிரை வண்டி  காஞ்சிபுரத்துக்கு வந்தது.  அந்த வண்டியில்   66வது பீடாதிபதி  சமாதி அடைந்த  10வது நாள்  காரியங்கள் மற்றும் மேற்கொண்டு நடக்க வேண்டிய  மஹா பூஜைக்கு  தேவையான சாமான்  துணிமணி  எல்லாம்  வாங்க  மட நிர்வாகி கள் சிலர்  வந்திருந்தார்கள்.  அவர்களில் ஒருவர்  மடத்தில் வம்சாவழியாக  மேஸ்திரியாக இருப்பவர்.  எனக்கு அவரை நன்றாக தெரியும்.   பார்த்திருக்கிறேன்.

''என்னோட வரியா  கலவைக்கு? ''  என்று  கேட்டதும்  நான் சரி என்று ஒப்புக்கொண்டு அவரோடு வண்டியில் புறப்பட்டேன்.  இன்னொரு வண்டியில்  என் தாயும்  மற்றவர்களும்  வந்தார் கள்.  

''தம்பி,  இப்போ நீ என்னோட வரியே.  அப்புறம் கலவையிலிருந்து நீ   திரும்பி வரமுடியாதபடி  போயி  மடத்திலேயே  தங்கிடும்படி  ஆயிடி ச்சின்னா   என்ன செய்வே? பரவாயில்லையா?''   என்று மேஸ்திரி வழியில் கேட்டார். 

எனக்கு என்  ஒன்றுவிட்ட அண்ணா  தான் அங்கே  மடாதிபதியாச்சே.   அவன்   நான்  அங்கேயே இருக்கணும் னு ஆசைப்பட்டா  நாம  இருந்திடு வோம். படிக்க இங்கேயே  மடத்தில் வசதி  பண்ணி கொடுப்பான்னு  தோணித்து.  அதனாலே ஒரு விதத்தில் சந்தோஷமாத்தான்  இருந்தது.  
குதிரை வண்டி  ஓடியது.  மேஸ்திரி கெட்டிக் காரர்.  குதிரை  வண்டி தான் வேகமாக ஓடியதே தவிர அவர் மெதுவாக விஷயத்தை அவிழ்த்து விட்டார்.  

''நம்ம  பெரிய  சாமிக்கு  (66வது பீடாதிபதி)  அம்மை வாத்திருந்து  ஜுரம் அதிகமாகி  ஜன்னி (DELIRIUM ) கண்டுடுச்சி   போய்ட்டார்.  அதனாலே தான் தம்பி உன்னை அழைச்சுக்கிட்டு கலவைக்கு  போறேன் . எனக்கு தூக்கி வாரி போட்டது.   அப்படியே குதிரை வண்டியில் முழங்கால்களை  மடக்கி   நமஸ்கரித்தவாறு  சாய்ந்து விட்டேன். ''ராம  ராம ராமா '' என்று விடாது ஜெபித்தேன்.  அது ஒரு பிரார்த்தனை தான் எனக்கு தெரிந்தது.   அம்மாவும் மற்றவர் களும்  அப்புறமாக கலவை வந்தார்கள்.  அம்மா  அவள் அக்காவுக்கு  ஆறுதல் சொல்ல வந்தவளுக்கு அவள் அக்காவே  தங்கைக்கு  அவள் மகன் சன்யாசியானதற்கு  ஆறுதல் சொல்லும்படியாக  நிலைமை மாறிவிட்டது''.......


காலம்  எவ்வளவு மாறுதல்களை அள்ளி  வீசுகிறது.   66வது பீடாதிபதி தேகவியோகம் அடைந்து சமாதியாகி பத்து நாள்களில்  அடுத்த பீடாதிபதியாக  நியமிக்கப்பட்ட   லட்சுமி நாதனும்  67வது பீடாதிபதியாக  பட்டம் பெற்று  நோய்வாய்ப்பட்டு    7 நாட்களில்  அவரும்  மறைந்து விட்டாரே.

எங்கேயோ  விழுப்புரத்தில் இருந்த ஸ்வாமிநாதன் காஞ்சிபுரம்வந்து, கலவைக்கு அழைத்துச் செல்லப்பட்டு  யாரும் எதிர்பாராமல்   1907  (பிரபவ வருஷம் )  பிப்ரவரி மாதம்  13ம் நாள்   மாசி மாதம்,    13ம்  வயதில்   68 வது  பீடாதிபதி ஸ்ரீ  சந்திர சேக ரேந் திர சரஸ்வதியாகியது  ஆச்சர்யமில்லையா.  இதற்கு பின்னால் தெய்வ சங்கல்பம் இவ்வாறு அமையவேண்டும் என்று இருக்கிறதே. 

1907  மே  மாதம்  68வது பீடாதிபதி  பட்டாபிஷேகம்  கும்பகோணம் சங்கரமடத்தில் நடைபெற்றது.   தஞ்சாவூர் சிவாஜி மஹாராஜா,  அரசாங்க உத்யோகஸ்தர்கள்,   மடத்து நிர்வாகிகள்,  பக்தர்கள்,  வித்வான்கள் , சாஸ்திரிகள், பண்டிதர்கள் எல்லோரும்  இதில் கலந்து கொண்டார்கள்.  

ஜகத்குரு 13 வயதே நிரம்பியவர் என்பதால்  மடத்தின் சொத்துக்கள், நிர்வாகம் அனைத்தும்  நீதிமன்றத்தால்  வாரிசுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்,  கொளிஞ்சிவாடி  C H. வெங்கட்ரமண  அய்யர்  பாதுகாவலராக  பொறுப்பாளராக  நியமிக்கப்பட்டார். 

1915 சங்கர ஜெயந்தி அன்று  68வது பீடாதிபதி நமது மஹா பெரியவா காஞ்சி மட பொறுப்பேற் றுக் கொண்டார். அதற்கப்புறம் நடந்ததெல்லாம் நமக்கு நன்றாக தெரியுமே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...