4. எதிர்பாராத திருப்பங்கள்...
காலம் எப்படி வேகமாக ஓடுகிறது. இதோ 1906ம் வருஷம் வந்துவிட்டதே. தமிழில் விஸ்வாவஸு வருஷம். சுப்ரமணிய சாஸ்திரி காஞ்சி காம கோடி மடம் ஜகத் குரு 66வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதிகளை தரிசித்து ஆசிபெற குடும்ப சகிதம் சென்றார். பெரியவா அப்போது திண்டிவனம் அருகே பெருமுக்கல் எனும் கிராமத்தில் வாசம் செய்து கொண்டி ருந்ததால் விழுப்புரத்தில் இருந்து கொஞ்சம் கிட்டே தானே என்று இந்த சந்தர்ப்பத்தை வீணாக்காமல் சாஸ்திரிகள் புறப்பட்டுவிட்டார்.
பெரியவா நித்ய பூஜை பண்ணும்போது அவரது அருள் கடாக்ஷம் சிறுவன் ஸ்வாமிநாதன் மேல் விழுந்தது. பூஜை எல்லாம் முடிந்து சாஸ்திரி களிடம் அவர் குடும்பத்தை பற்றி பெரியவா விசாரித்தார்.
என்னவோ பெரியவா மனதில் அவருக்கு அடுத்த படியாக பீடாதிபதியாக இந்த சிறுவன் வருவான் என்று தோன்றிஇருக்கலாம். ஞானிகளுக்கு தீர்க்க தரிசனம் உண்டே. ஏனென்றால் அதற்கப் பறம் நடந்த சம்பவங்களின் படு வேகம் இதை நிரூபிக்கிறதே.
பெருமுக்கல் கிராமத்தில் மடத்தில் சாஸ்திரிகள் குடும்பம் ரெண்டு நாள் தங்கி முடிந்த போதெல் லாம் பெரியவா தரிசனம், ஆசீர்வாதம் பெற்றார் கள். ஒவ்வொரு முறையும் சுவாமிநாதனை பிரத்யேகமாக அழைத்து அவனிடம் நிறைய கேள்விகளை பெரியவா கேட்டார். அவனுடைய சாதுரியமான பதில், அவனது தோற்றம், காந்தம் போல் கவரும் தேஜஸ் அவரை மகிழ வைத்துவிட்டது.
''இவன் ஒரு மஹா புருஷன்.'' பீடாதிபதிகள் இந்த வார்த்தையைக் கேட்ட சாஸ்திரி தம்பதிகள் பேரானந்தம் கொண்டார்கள். இந்த 13 வயது சிறுவன் சில நாட்களில் தங்களை விட்டு ஒரேயடியாக பிரிந்து சன்யாசி யாகப் போகி றான் என்று துளியும் எண்ணவில்லை அவர்கள்.
ஆச்சார்யரை வணங்கி உத்தரவு பெற்று சாஸ்திரிகள் குடும்பம் திண்டிவனம் திரும்பியது.
போகும்போது ஆச்சார்யர் சாஸ்திரிகளிடம் என்ன சொன்னார் ?
'' சாஸ்திரிகளே , உங்கள் பையன் ஸ்வாமி நாதனை அடிக்கடி மடத்துக்கு அழைச்சுண்டு வாங்கோ''
சாதூர் மாஸ்யம் முடிந்து ஆச்சார்யர் பெரு முக்கலை விட்டு செல்லும் வரை அடிக்கடி சாஸ்திரிகள் சுவாமிநாதனை அவரிடம் அழைத்துச் சென்றார். பல முறை சந்திப்பு நிகழ்ந்தது. ஆச்சார்யாளின் கருணை, ஆசி, சிறுவன் சுவாமிநாதனை ஒளி பெறச் செய்துகொண்டே வந்தது.
ஒருநாள் திண்டிவனம் வீட்டில் ஸ்வாமிநாத னைக் காணோம். எங்கே போனான் சொல்லாமல் கொள்ளா மல்? குளம் குட்டை, கிணறு என்று எங்கெல்லாமோ அவனைத் தேடினார்கள். எங்கும் கிடைக்கவில்லை. பெற்றோருக்கு அன்ன ஆகாரம் செல்லவில்லை.
ரெண்டு நாள் ஆகியது. அன்று மாலை பெரு முக்கல் கிராமத்திலிருந்து பெரியவா மடத்து ஆள் ஒருவன் வந்தான். ஐந்து மைல் தள்ளி இருக்கும் ஊர்.
''சாஸ்திரிகளே, உங்கள் பையன் ஸ்வாமிநாதன், தானாகவே பெரியவாளை பார்க்க 5 மைல் தனியா நடந்து வந்துருக்கான். பெரியவா உங்களுக்கு அவன் அங்கே வந்தது தெரியுமா தெரியாதான்னு கேட்டுட்டு அவன் ஜாக்கிரதையா அங்கே இருக்கான்னு சொல்ல சொல்லி என்னை அனுப்பினார்'' என்கிறார் மடத்து சிப்பந்தி.
பெற்றோர்கள் வயிற்றில் பாலை வார்த்தது இந்த செய்தி. ரெண்டு நாள் கழிந்தது. ஒரு ஆள் துணையோடு ஸ்வாமிநாதனை திண்டி வனத்துக்கு திருப்பி அனுப்பினார் பெரியவா.
1907ம் வருஷம் பெப்ருவரி மாதம் . முதல் வாரம். காஞ்சி மடத்திலிருந்து ஒரு தந்தி சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கு வந்தது.
''உடனே ஸ்வாமி நாதனோடு வரவும்''
ஒரு விஷயம் சொல்லவேண்டும். 66வது பீடாதிபதிக்கு சுவாமிநாதனை தனக்கு அடுத்த பீடாதிபதியாக்க வேண்டும் என்று விருப்பம். காத்திருந்தார். அதற்குள் அவருக்கு வைசூரி என்னும் கொடிய பெரியம்மை நோய் தொற்று ஏற்பட்டு உடல் நிலை க்ஷீணமாகிக் கொண்டு வந்தது. தக்க மருந்தில்லை அப்போது.
ஸ்வாமி நாதன் அடுத்த பீடாதிபதியாக காலம் கடந்து கொண்டு வந்தது. அதற்குள் தனது முடிவு நெருங்கிவிடும் என்று உணர்ந்த 66வது பீடாதிபதி அவருக்கு உதவியாளனாக சிஷ்யனாக இருந்த சுவாமிநாதனின் ஒன்றுவிட்ட சகோதரன் (அம்மாவின் சகோதரி மகன் ) லட்சுமிநாதன் எனும் சிறுவனை உடனே அடுத்த 67வது பீடாதிபதியாக உபதேசித்து அவர் ஜகதகுரு ஆனார். 66வது பீடாதிபதியும் சமாதி அடைந்தார். அடுத்த பீடாதிபதி யாகிய லட்சுமிநாதன் குருவை நெருங்கி அவருக்கு சிச்ருஷை செய்யும் காலத்தில் அவருக்கும் அம்மை தொற்று உண்டாகி கவலைக்கிடமாக படுக்கையில் இருந்த சமயம் தான் தந்தி வந்தது.
சுப்ரமணிய ஐயர் குடும்பம் கலவைக்கு செல்ல முடியாதபடி உத்யோக விஷயமாக கட்டாயமாக திருச்சி செல்வதை தவிர்க்க முடியாததால் மஹாலக்ஷ்மி அம்மா குழந்தைகளோடு கலவைக்கு புறப்பட்டார்.
தனது சகோதரி கணவனை இழந்தவளுக்கு இருந்த ஒரே ஆதரவான மகனும் சந்யாசியாகி விட்டதற்கு ஆறுதல் சொல்ல மஹாலக்ஷ்மி அம்மாள் ரயிலில் சென்றாள் . காஞ்சிபுரம் வரை ரயில் பிரயாணம் செய்து அன்றிரவு காஞ்சி மடத்தில் தங்கினார்கள்.
துரதிர்ஷ்டவசமாக அடுத்த ஜகத் குருவாக நியமிக்கப்பட்ட லட்சுமிநாதனும் நோய்வாய்ப் பட்டான். இந்த செய்தி லட்சுமிநாதன் தாய்க்கும் மகாலட்சுமிக்கும் பேரிடி தலையில் விழுந்தது போல் வாட்டியது.
கலவை காஞ்சி புறத்திலிருந்து 30 மைல் தூரத்தில் உள்ளது. கலவையில் 67வது காமகோடி பீடாதிபதி ஜகதகுரு ஆரோஹண வைபவம் எப்படி நடத்துவது என்று அதிர்ச்சி.
அப்போது நடந்த விஷயத்தை பின்னர் 68 வது பீடாதிபதியாகிய மஹா பெரியவா ( பூர்வாச்ரம பெயர்: ஸ்வாமிநாதன்) பின்னர் ஒரு பெரிய செயதி நிறுவனத்துக்கு பேட்டி அளிக்கும்போது நினைவு கூர்ந்து சொன்னது இது தான்:
''இது நடந்தது குமர கோஷ்ட தீர்த்தத்தில்,.நான் நித்யகர்மான்ஷ்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அப்போது கலவையிலிருந்து மடத்தைச் சேர்ந்த ஒரு குதிரை வண்டி காஞ்சிபுரத்துக்கு வந்தது. அந்த வண்டியில் 66வது பீடாதிபதி சமாதி அடைந்த 10வது நாள் காரியங்கள் மற்றும் மேற்கொண்டு நடக்க வேண்டிய மஹா பூஜைக்கு தேவையான சாமான் துணிமணி எல்லாம் வாங்க மட நிர்வாகிகள் சிலர் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் மடத்தில் வம்சாவழியாக மேஸ்திரியாக இருப்பவர். எனக்கு அவரை நன்றாக தெரியும். பார்த்திருக்கிறேன்.
''என்னோட வரியா கலவைக்கு? '' என்று மேஸ்திரி கேட்டதும் நான் சரி என்று ஒப்புக் கொண்டு அவரோடு வண்டியில் புறப்பட்டேன்.
இன்னொரு வண்டியில் என் தாயும் மற்றவர் களும் பின்னால் வந்தார்கள்.
''தம்பி, இப்போ நீ என்னோட வரியே. அப்புறம் கலவையிலிருந்து நீ திரும்பி வரமுடியாதபடி போயி மடத்
திலேயே தங்கிடும்படி ஆயிடி ச்சின்னா என்ன செய்வே? பரவாயில்லையா?'' என்று மேஸ்திரி வழியில் கேட்டார்.
எனக்கு என் ஒன்றுவிட்ட அண்ணா தான் அங்கே மடாதிபதியாச்சே. அவன் நான் அங்கேயே இருக்கணும் னு ஆசைப்பட்டா நாம இருந்திடு வோம். படிக்க இங்கேயே மடத்தில் வசதி பண்ணி கொடுப்பான்னு தோணித்து.
அதனாலே ஒரு விதத்தில் சந்தோஷமாத்தான் இருந்தது.
குதிரை வண்டி ஓடியது. மேஸ்திரி கெட்டிக்காரர். குதிரை வண்டி தான் வேகமாக ஓடியதே தவிர அவர் மெதுவாக விஷயத்தை அவிழ்த்து விட்டார்.
''நம்ம பெரிய சாமிக்கு (67வது பீடாதிபதி) அம்மை வாத்திருந்து ஜுரம் அதிகமாகி ஜன்னி (DELIRIUM ) கண்டுடுச்சி. அவர் போயிடுவார் போலிருக்கு. அதனாலே தான் தம்பி உன்னை அழைச்சுக்கிட்டு கலவைக்கு போறேன் . எனக்கு தூக்கி வாரி போட்டது. அப்படியே குதிரை வண்டியில் முழங்கால்களை மடக்கி நமஸ்கரித் தவாறு சாய்ந்து விட்டேன். ''ராம ராம ராமா '' என்று விடாது ஜெபித்தேன். அது ஒரு பிரார்த்தனை தான் எனக்கு தெரிந்தது. அம்மாவும் மற்றவர்களும் அப்புறமாக கலவை வந்தார்கள். அம்மா அவள் அக்காவுக்கு ஆறுதல் சொல்ல வந்தவளுக்கு அவள் அக்காவே தங்கைக்கு அவள் மகன் சன்யாசியானதற்கு ஆறுதல் சொல்லும்படியாக நிலைமை மாறிவிட்டது''.......
தந்தி அனுப்பிய சிறிது நாட்களில் 66வது பீடாதிபதி பிரபவ வருஷம் மஹா க்ரிஷ்ணாஷ் டமி அன்று சித்தி அடைந்துவிட்டார். 35 வருஷங் கள் மட்டுமே வாழ்ந்தவர். அவர் சித்தி அடையும் முன்பு தனது சிஷ்யன் 18 வயது லட்சுமி நாதன் எனும் ரிக்வேதம் கற்றுத் தெரிந்த மாணவனை அவசரமாக அடுத்த 67வது பீடாதிபதியாக பட்டம் கட்டி விட்டார்கள். ஆச்சார்ய பரம்பரை யில் பீடாதிபதியாக பட்டமேற்பவர்கள் ரிக்வேதிகளாக இருக்க வேண்டும். சன்யாசம் மேற்கொண்ட ப்ரம்மச்சாரிகளாக இருக்க வேண்டும். ஆகவே காஞ்சி காமகோடி மட 67வது பீடாதிபதியாக லட்சுமிநாதன் ஜகத் குருவானார் . ஏழு நாட்கள் மட்டுமே அவர் பீடாதிபதியாக இருந்து வைசூரி நோயிலிருந்து மீளாமல் சமாதி அடைந்தார்.
இந்த நிலையில் தான் 13 வயது ஸ்வாமி நாதன் கலவைக்கு வந்து சேர்ந்தான்.
தொடரும்
No comments:
Post a Comment