Friday, May 21, 2021

viveka chindhamani



 

யாரிந்த கவிஞர்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 
விவேக சிந்தாமணி.

இன்றும் சில  அற்புதமான  பாடல்களை ரசிப்போம்.  அட்ரஸ் இல்லாத இந்த அற்புத கவிஞரின்    விவேக சிந்தாமணி பாடல்கள் பல நூறு ஆண்டுகளாக  எண்ணற்றோரால்  விரும்பப்பட்டவை என்றால் அது மிகையல்ல.  

''அல்லல்போம் வல்வினைபோம் அன்னை  வயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்- நல்ல
குணமதிகமாகும்   அருணைக் கோபுரத்துச் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.

சாதாரணமாகவே  விக்னேஸ்வரனை கும்பிட்டு விட்டு தான் எதையும் நாம் தொடங்குபவர்கள்.  வினை தீர்க்கும் விநாயகன் அவன்.   அப்படி இருந்தாலும் இன்னும் ஒரு விசேஷ  கணபதியைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்வோம்.  திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர்  கோவிலுக்குச் சென்றவர்கள்,  செல்பவர்கள் அங்கே  மூல விக்ரஹ  கர்ப்ப  க்ரஹம்  வாசலில் உள்ள கோபுரத்தில்  காட்சி தரும் கண்ணுக்கி னிய  செல்வ கணபதியைப் பார்த்து  வணங்கி யதுண்டா?  இல்லையென்றால் அடுத்ததடவை போகும்போது மறக்க வேண்டாம்.  அதற்கு நடுவே   இதோ அவர்  புகைப்படம் தந்திருக்கிறேன். அவரை வணங்கி வேண்டியதைப் பெறுங்கள்.
விவேக சிந்தாமணி கவிஞர்  இந்த அருணாசல கணபதியைக் கை தூக்கி  கும்பிட்டால் நம் துன்பங் கள்(அல்லல்) மறைந்துபோகும். வலிமைமிக்க  ஊழ்  வினைகள் (கர்மவினை) அழிந்து போகும். தாய்   வயிற்றிற் பிறந்த  பிறவித் துன்பம் அழிந்துபோகும் (மீண்டும் மீண்டும் பிறந்து துன்புறும் பிறவாநெறி கிடைக்கும்). என்றும் மறைந்து  போகாத துயரங்கள் நீங்கும். நல்ல குணம்(நற்பண்புகள்) ஓங்கிவளரும்  என்கிறார் கவிஞர்.

''வானரம் மழைதனில் நனையத் தூக்கணம், தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும், ஞான மும் கல்வியும் நவின்ற நூல்களும், ஈனருக் குரைத்திடில் இடர தாகுமே.

மழை கொட்டுகிறது.  குரங்கு ஒன்று  மழையில் நனைந்து தும்முகிறது.  அதற்கு  மழை மீது எரிச்சல். இந்த நேரத்தில் வீட்டுக்கு போக முடியாமல், அந்த வீடே  மரக்கிளை தானே,  அதற்கு சென்றாலும் மழையிலிருந்து தப்ப முடியாதே  என்று  எண்ணிக்கொண்டி ருக்கும் போது  

''என்ன குரங்காரே , யோசனை?''  குரல் வந்த திக்கில் பார்த்தது குரங்கு. ஒரு தூக்கணாங்குருவி   மழையில் நனைந்த குரங்கைப் பார்த்து சிரிக்கிறது. அது கூட்டுக்குள் உட்கார்ந்து இருக்கிறதே.''ஏன் சிரிக்கிறே என்னைப் பார்த்து?'' என்றது குரங்கு.''இல்லே,  நீ கெட்டிக்காரனா   இருந்தா  மழை வருமே என்று தெரிந்து முன்னாலேயே  என்னைப் போலவே  நீயும்  ஒரு கூடு கட்டிக்  கொண்டிருந்தால்  இப்போது  மழையில் நனைந்து அவதிப்படவேண்டாமே, ஏன் நீ   யோசிக்கவில்லை? என்று சிரித்தேன். 
''ஓஹோ,    நீ  வீடு கட்டிக்கொண்டு மழையில் தப்பிய  பெருமையா உனக்கு. இதோ பார்  உன்னையும் என் நிலைக்கு கொண்டு வருகிறேன்''

 என்று குரங்கு சொல்லிவிட்டு தாவியது.  ஒரு நிமிஷத்தில் தூக்கணாங்குருவி அரும்பாடு  பட்டு கட்டிய  கூட்டை சின்னாபின்னமாக  பிய்த்து எறிந்துவிட்டது . குருவி உயிர்தப்பி  ஒரு உச்சாணி கிளையில் போய் அமர்ந்தது.   சே  நமக்கு ஏன் இப்படி புத்தி போயிற்று. அதோடு பேசுவானேன்? என்று வருந்தியது. 

விவேக சிந்தாமணி கவிஞர்  என்ன சொல்கிறார்?

'' கீழான குணம் கொண்ட அறிவில்லாதவர்க்கு கல்வியால் தான் பயின்ற நூல்களின் ஞானத்தை உபதேசம் செய்தால் அது துன்பத்தை உண்டாக் கும். 

அட்வைஸ் எவருக்கும்   அவர்கள்  கேட்காத  போதே நிறைய  நாம்  கொடுக்கிறோம். அதால்  அவதியுண்டாகும். ஜாக்கிரதை. ஆங்கிலத்தில்  advice is  the  worst  form  of  vice   என்று சொல்வதுண்டு.

''வேதம் ஓதிய வேதியர்க் கோர்மழை, நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை,
மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை, மாத மூன்று மழையெனப் பெய்யுமே.

பெண்களை எவ்வளவு உயர்வாக சொல்கிறார் பாருங்கள் இந்த கவிஞர்.   அவர்  மேல் கோபப்பட் டீர் களே. 

அந்தக்காலத்து  ராஜா  மழை பெய்வது  கூட தெரியாமல்  மந்திரியைப்  பார்த்து  அடிக்கடி  ''மந்திரி நமது  ராஜ்யந்தனிலே மாத மும்மாரி மழை பொழிகிறதா?''  என்று கேட்பானாம் . இந்த   ''மாத மும்மாரி'' எது தெரியுமா?

வேதத்தை நாள்தோறும் தவறாமல் ஓதுகின்ற அந்தணர்க்காக ஒருமழையும், நீதிமுறை தவறாமல் ஆட்சி செய்யும் மன்னனுக்காக ஒருமழையும், கற்புடைய பெண்களின் மாண்பிற்காக ஒருமழைஇவர்கள் இருப்பதால்  ஒவ்வொருமாதமும் கோடையில் கூட  மாதம் மும்முறை மழை பெய்தது. 

  இப்போது ஏன் அப்படி பெய்யவில்லை. ஏன் வருஷத்துக்கு ஒரு மூன்று மழை?  என்று பாடுகிறார்.

அரிசி விற்றிடும் அந்தணர்க் கோர்மழை, வரிசை தப்பிய மன்னருக் கோர்மழை,
புருஷனைக் கொன்ற பூவையர்க் கோர்மழை, வருஷ மூன்று மழையெனப் பெய்யுமே.

தானமாகப் பெற்ற   ரேஷனில்   இலவசம் போல   கிடைத்த  அரிசியை விற்பனை செய்த அந்தண ருக்காக ஒருமழையும், அறம் தவறி ஆட்சி செய்யும் அரசனுக்காக ( நாடாளும்   அரசாங் கத்தாருக்காக  ஆட்சியர்க்காக) ஒருமழையும், ஒழுக்கம் தவறிய பெண்களுக்காக ஒரு மழையும்   என்று   வருடம் மூன்று முறை மட்டுமே மழை பெய்து நாட்டின்  வளமை குன்றி இருக்கிறது என்கிறார். 

இன்னும்  படிக்கலாம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...