தெரியாத விவரங்கள்: நங்கநல்லூர் J K SIVAN
ப்ரம்ம தேவன்:
ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில் புரியும் திரி மூர்த்திகள் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்போர் கலைமகள், அலைமகள் மலைமகள் எனும் முத்தேவியரோடு ஹிந்துக்களால் வணங்கப்படும் பிரதான தெய்வங்கள். விஷ்ணுவை பின்பற்றுவோர் வைஷ்ணவர், சிவனை வணங்குவோர் சைவர் என்று ஒரு பிரிவு நமக்குள் உண்டு. எண்ணற்ற பெருமாள் கோவில் எனும் விஷ்ணு கோவில்கள் சிவாலயங்கள் நாடு முழுதும் இருந்தபோது பிரம்மாவிற்கு கோவில்களோ, பக்தர்களோ கிடையாது. மூவரில் அதிக சாபம், தண்டனை பெறுபவர் ப்ரம்மா தான். இன்று அவரைப் பற்றிய ருசிகர தகவல்கள் சிலவற்றை அறிவோம்.
பிரம்மாவை இருபத்தொரு ப்ரம்மாண்டங்களை உடைய பிரம்மாண்ட காலன் துர்கை தம்பதிகளின் ஒரு
மகன் எனக் கூறுவார்கள். சிவன் விஷ்ணு ஆகியோர் அவன் சகோதரர்கள் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது.
வேதங்களை முதலில் உலகில் பரவச்செய்தவர் ப்ரம்மா.
ப்ரம்மாவுக்குள்ள மற்ற பெயர்கள்: சுர ஜ்யேஷ்டா, சதுர்முகன், பரமேஷ்டி, வேதநாதன், ப்ராஹ்மணன், பிதாமஹன் , ப்ரம்ம நாராயணன், ஹிரண்யகர்பன், ஆத்மபூ , லோகேசன் , ஸ்வயம்பு, ஞானேஸ்வர், ப்ரஜாபதி, தர்ம பிதா. பிரம்மபுரியில் வசித்து வேதங்களை உபதேசிப்பவர்.
பிரம்மாவுக்கு நூறு வயசு என்றவுடன் அவ்வளவு தானா என்று முகத்தை சுழிக்காதீர்கள். கணக்கே வேறே.
பிரம்மாவுக்கு 1 நாள்: 1000 சதுர்யுகங்கள். இது பகல் நேரம். இதே போல் இரவும் சேர்த்துக்கொள்ளவும்.
அதாவது. 14 இந்திர ஆட்சிக்காலம்: ஒரு இந்திர ஆட்சி: 72 சதுர்யுகங்கள். இந்த நம்பர்களை பெருக்கினால் 72 × 14 = 1008 சதுர்யுகங்கள் X 2 (இரவையும் சேர்க்கவேண்டாமா?) சரி இந்த சதுர் யுகங்கள் நமது கணக்கில் எத்தனை வருஷங்கள் ஸார் என்கிறீர்களே. கேளுங்கள்:
1. சத்ய யுகம்: 17,28,000 வருஷங்கள் ,
2. த்ரேதா யுகம்: 12,96,000 வருஷங்கள்
3. துவாபர யுகம் 8,64,000 வருஷங்கள்
4. கலியுகம் 4,32,000 வருஷங்கள்
ஒரு மாசத்துக்கு 30 × 2000 = 60000 சதுர்யுகங்கள்
ஒரு வருஷத்துக்கு 12 × 60000 = 720000 7 லக்ஷத்து 20 ஆயிரம் சதுர்யுகங்கள். இது மாதிரி 100 வயசு 720000 × 100 = 72000000 சதுர்யுகங்கள் பிரம்மாவுக்கு வயசு. போதுமா??
பிரம்மனின் ஆயுதம் பிரசித்தமானது: ராமாயணம் பாரதம் இதில் எல்லாம் வரும் பிரம்மாஸ்திரம். ஆனால் ப்ரம்மாவின் நான்கு கரங்களில் நாம் காண்பது: பத்மம், ஜபமாலை, வேத சுவடிகள், கமண்டலம், தண்டம், நெய்யை யாகத்தில் வழங்கும் கரண்டி .
ப்ரம்மாவின் வாஹனம்: ஹம்சம் எனும் அன்னப்பறவை.
ப்ரம்மாவின் படைப்பு: பிரம்மாண்டம். (மண், விண் , பாதாளம்)
ப்ரம்மாவின் மக்கள்: மூவுலகிலும் சேர்த்து கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், பைசாசங்கள், தேவர்கள்,
நாகர்கள், சுபர்ணர்கள், அசுரர்கள், கிம்புருஷர்கள், மனிதர்கள்.
ப்ரம்மாவின் மகன்: மனு என்று சில புராணங்கள் சொல்கிறது.
இன்னும் ப்ரம்மாவைப் பற்றி சொல்ல கொஞ்சம் இருக்கிறது. அது அடுத்த பதிவில்.
No comments:
Post a Comment