Saturday, May 22, 2021

MAHA PERIYAVA




 

பேசும் தெய்வம் --    நங்கநல்லூர்  J  K  SIVAN  

மஹா பெரியவா  பூர்வோத்தரம் 

நீங்க   மஹா பெரியவா வாழ்க்கையைப் பற்றி உங்கள்  நடையில் எழுந்துங்கோ என்ற சிலரின்   விருப்பப்படியே  மஹா பெரியவாளை வேண்டிக்கொண்டு  அவருடைய  மானசீக  அனுக்ரஹத்தோடு   இந்த  கட்டுரைத்தொடர்   ஆரம்பிக்கிறேன். 

அது ஒரு சின்ன அக்ரஹாரம். கோவிந்தராயர் வீடு என்றால் எல்லோருக்கும் தெரியும்.   தெற்கு முனையில் கடோசி வீடு. 
ஜய  வருஷம்   வைகாசி மாசம் அஷ்டமி  ஆங்கில வருஷம்  1894  மே மாசம்  20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை.  அனுஷம் நக்ஷத்திரத்தில்  விழுப்புரத்தில்  நவாப் தோட்டம்  என்ற இடத்தில் மேலே   சொன்ன விலாஸத்தில்  அன்று    சுப்ரமணிய சாஸ்திரிகள், மஹாலக்ஷ்மி தம்பதியருக்கு   ரெண்டாவது மகன்  ஸ்வாமிநாதனாக  காஞ்சி காமகோடி பீடாதிபதி 68வது ஜகத்குரு  நமது  மஹா பெரியவா   ஜனனமானார்.   

அவர்கள்  ஹொய்சள கர்நாடக ஸ்மார்த்த   ஐயர்  குடும்பத்தை சேர்ந்தவர்கள்.    அவரது முன்னோர்கள்  தஞ்சாவூர்  நாயக்கர்  ஆட்சியில் இருந்த போது  கோவிந்த தீக்ஷிதர்  என்பவர்  தஞ்சாவூர் ராஜாவுக்கு  மந்திரியாக  இருந்த காலம்.   காவிரிக்கரை, திருவிடைமருதூரில்  குடியேறியவர்கள்.   மஹா பெரியவா  முன்னோர் களில் சிலர்  தஞ்சாவூர் ராஜா சரபோஜி யின் மாமா  அமரசிம்ஹ மஹாராஜா காலத்தில் அரண்மனை உத்யோகஸ்தர்கள். 

மஹா பெரியவாளின் தாத்தா  கணபதி சாஸ்திரி கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி  மொழிகளில் வல்லுநர். ராஜாங்கத்தில் நல்ல பதவியில் இருந்தவர். 1835ல்  அப்போதைய  காஞ்சி காமகோடி பீட 64வது பீடாதிபதி  சந்திரசேகரேந்திர சரஸ்வதி,  கணபதி சாஸ்திரிகளை மடத்தில் அதிகாரியாக நியமித்தார்.  சாஸ்திரிகள்  ஐம்பது ஆண்டுகள்  மடத்தில்  பணியாற்றியவர். 

 64வது பீடாதிபதி தான்  காஞ்சி  காமாக்ஷி   ஆலய கும்பாபிஷேகம்  1840ல் நடத்தினார்.  1848ல்   திருவானைக் காவல்  அகிலாண்டேஸ்வரி  ஆலயத்தில்  தாடங்க பிரதிஷ்டை  நிகழ்த்தியவர்.  கணபதி சாஸ்திரிகளுக்கு இந்த நிகழ்ச்சிகளில் பெரும் பங்கு உண்டு. 

65வது  பீடாதிபதி  மஹா தேவேந்திர ஸரஸ்வதி கள்  கணபதி சாஸ்திரிகளின்  சகோதரர் மகன்.  இந்த தாடங்க பிரதிஷ்டை  சிருங்கேரி சங்கரமடத்தின் பொறுப்பு என்று  திருச்சி   சத்தார் அமீன் நீதிமன்றத்தில்  சிருங்கேரி சங்கர  மடம் வழக்கு தொடர்ந்தது.  காஞ்சி மடம்  தாடங்க பிரதிஷ்டை செய்யலாம்  என தீர்ப்பு கூறி     சிருங்கேரி மடத்தின் வழக்கு 17.10. 1846ல்  தள்ளுபடி செய்யப்பட்டது.  சிருங்கேரி மடம்  மேல் வழக்கு போட்டு அதுவும் 1848ல்  திருச்சி  நீதிமன்றத்தில்  தோற்றது. சிருங்கேரி மட  சேஷ ஜோசியர்  போட்ட  சென்னை உயர்நீதி மன்ற வழக்கும்  இவ்வாறே தள்ளுபடி ஆயிற்று. அதற்கு பிறகு தான்  காஞ்சி மட  64வது பீடாதிபதி திருவானைக்காவல்  அகிலாண்டேஸ்வரிக்கு  தாடங்க பிரதிஷ்டை செய்வித்தார்.   

காஞ்சி மட நிர்வாகம்  நிதி வசதி இன்றி தவித்த காலம் அது.  நீதி மன்ற  செலவுக்கும்  தாடங்கங்களை புதுப்பித்து   ப்ரதிஷ்டைக்கான செலவுக்கு நிதி தேவையாக  இருக்கிறதே  எப்படி  சமாளிப்பது   என்று  64வது  பீடாதிபதி கணபதி சாஸ்திரிகளிடம்  வருத்தபட்ட  பிறகு   அடுத்த   சில   நாட்கள்  கணபதி திரிகளை மடத்தில் காணோம்.   ஒரு  சில நாட்கள் கழித்து திரும்பி வந்த   சாஸ்திரிகளை   

''எங்கே உங்களைக் காணோம்  ?''என கேட்டார்.

'கும்பகோணத்திலிருந்து  திருவானைக்கா வலுக்கு தஞ்சாவூர் வழியாக  சென்று  அரண்மனையில் தங்கி  மக்களிடம் நிதி உதவி பெற முயன்றேன். ராஜா ஒத்துழைப்போ,   அனுமதியோ   தரவில்லை. ஏமாற்றத்தோடு  பொருளுதவி பெறமுடியாமல் திரும்பி வந்தேன்''.  

ஆகவே பீடாதிபதி  கும்ப கோணத்திலிருந்து திருவையாறு வழியாக  திருவானைக்காவல்  செல்ல முடிவாகியது.  குறிப்பிட்ட நாளில் யானை, குதிரை, ஒட்டகம், பக்தர்கள் புடைசூழ  ஊர்வலம்  திருவையாறு நோக்கி சென்றது.  வழியில் தஞ்சாவூர் சமஸ்தான அதிகாரிகள்  அவர்களை தடுத்து நிறுத்தி, தஞ்சாவூர் மார்க்கம் செல்ல  வேண்டிக்கொண்டார்கள். 

 தஞ்சாவூர்  அரண்மனைக்கே  அழைத்து சென்றனர்.திருவையாறு தஞ்சாவூர் எல்லையில்  சமஸ்தான அதிகாரிகள்  பெரியவாளை  பூர்ண   கும்ப  ராஜ மரியாதைகளோடு உபசரித்து வரவேற்றனர். 

தஞ்சாவூரில் ஒரு வார காலம் பெரியவா தங்கினார்.    மடத்தை  சேர்ந்தவர்கள்  எல்லோருக்கும்  சிறப்பு   விருந்து  ஷ்ரேயஸ் சத்ரம்,  வெண்ணாத்தங்கரை சத்திரம், ராத்திரி  சத்திரங்களில் தஞ்சாவூர்  சமஸ்தானம் ஏற்பாடு செய்தது.

தஞ்சாவூரை விட்டு   புறப்படுவதற்கு முந்தைய நாள்   மாலை,  பெரியவாளை   தஞ்சாவூர் சிவாஜி  ராஜா  அரண்மனை யானை மேல்  அமர்த்தி ஊர்வலம்  நடந்தது . பின்னால் இன்னொரு யானையில் ராஜா,  கணபதி சாஸ்திரிகள் ஆகியோர்    அமர்ந்து தஞ்சாவூர்  நான்கு  பெரிய வீதிகளில்  யானைகள்  ஊர்வலமாக  சென்றன.  
மறுநாள் காலை  அரண்மனையை விட்டு  பெரியவா  கிளம்பியபோது  ஒரு பெரிய  மரத்தடி யில்  ஒரு விழா ஏற்பாடு.   பெரியவா  ஒரு  ஆசனத்தில் அமர்ந்தார்.  சிவாஜி ராஜா  பெரியவா ளுக்கு  தங்க புஷ்பங்களால்  கனகாபி ஷேகம் செய்வித்தார்.  கழுத்து வரை  தங்க புஷ்பங்கள் பெரியவாளை மறைத்தன.
எப்படி  முதலில்  கணபதி சாஸ்திரிகள்  பெரியவா  தஞ்சாவூர் வழியாக   செல்வதற்கு அனுமதி கேட்டபோது மறுத்த இதே  சிவாஜி ராஜா, இப்படி மனம் மாறி, ஏற்பாடுகள்  நிறைய  செய்து   பொருளுதவி   செய்தார்?   காரணத்தை ராஜாவே  எல்லோருக்கும்  விளக்கினார்.

பெரியவா  திருவானைக்காவலுக்கு  கும்பகோ ணத் திலிருந்து கிளம்பியதற்கு ரெண்டு நாள் முன்பு  தஞ்சாவூர் சிவாஜி மஹாராஜா வுக்கு ஒரு கனவு.    ''எப்படி  நீ    உனக்கு இவ்வளவு அருகில்     இருக்கும்  சந்திரமௌலீஸ் வரருக்கும், பெரியவா ளுக்கும்  மரியாதை  செய்து பூஜிக்க  தவறினாய்?
உடனே உன்  தவறைத் திருத்தி,  அவரை தஞ்சாவூ ருக்கு  வரவேற்று  ராஜமரியாதைகள் செயது அவருக்கு தக்க உதவி செய்''  என்று  பகவானின் கட்டளை.   

ஆகவே தான் உடனே  விறுவிறுவென்று ஏற்பாடுகள் நடந்து திருவையாற்றிலிருந்து  வரவழைத்து அரண்மனையில்  ஒரு வாரகாலம்  உபசரித்து,  கனகாபிஷேகம் செய்து   ராஜா  தனது தவறைத் திருத்திக் கொண்டார்.

கணபதி சாஸ்திரிகள்  கனகாபிஷேக  நிதி உதவியிலிருந்து   மடத்தின்  வருமானம் செலவினங் களுக்காக    கருப்பூரில்  250 ஏக்கர்  விளைச்சல் நிலத்தை ஆனைக்குடி   ராமசாமி  பிள்ளையிடமிருந்து  பெற்று தந்தார்.  இதற்கு பெரும்  உதவி செய்தவர்  கபிஸ்தலம் பெருநிலக் கிழார் மூப்பனார்.  இது தஞ்சாவூரிலிருந்து ரெண்டு மைல் தூரத்தில் உள்ள விளைநிலம்.


தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...