ஸூர்தாஸ் - நங்கநல்லூர் J K SIVAN
40 ''வாழ்க்கை எனும் ஓடம்''....
''ஹே, கிருஷ்ணா, நான் எதைச் சொல்வேன், என்னத்தைச் செய்வேன் சொல்? என் அகம்பாவம் என்னை ஆட்டிவைக்கிறது. என் செயலுக்கு நீ தான் பொறுப்பேற்க வேண்டும். உனக்கு தான் எல்லாமே தெரியுமே. என் செயலால் எது ஆகும்? என் தகுதி என்ன? என்னால் இயன்றது என்ன? நானாக நினைத்தது எல்லாம் நிறைவேறவா முடியும்?
பெண்டாட்டி, பிள்ளை, சுற்றம் உறவு, எல்லாமே சந்தையில் கூட்டம் -- ஏதோ கொஞ்சநாள் ரயில் சம்பந்த உறவு. காலம் தான் தலை தெறிக்க வேகமாக ஓடுகிறதே. எல்லாமே எனக்கு மறந்து போயிற்றா, மறைந்து போயிற்றா?
என்னை இங்கேயிருந்து கழற்றி விட்டு விடப்பா, கண்ணப்பா, என் வாழ்க்கைத் தோணி நிறைந்து போய்விட்டது இனி எதற்கும் இதில் இடமில்லை. ஒரு சிறு கடுகை ஏற்றினால் கூட முழுகி விடும்.
ஸூர் தாஸ் அற்புத கிருஷ்ண பக்தன். தன்னையே அர்ப்பணம் பண்ணிக்கொண்டு எவ்வளவு அழகாக பாடியிருக்கிறார் பாருங்கள்.';'
நாம் ஆச்சர்யம் மேலிட்டு ஆச்சர்யத்தோடு சந்தோஷமாக இருப்பதை ''மூக்கின் மேல் விரலை வைத்து'' என்று சொல்வோமே ஞாபகமிருக்கிறதா? என்னை ஆட்கொண்ட மிகப் பெரிய ஆச்சர்யம் ஒரு ஓவியனின் கற்பனா சக்தி . கண் பார்வை அற்ற ஸூர்தாஸ் மூச்சுக்கு முன்னூறு அல்ல மூவாயிரம் கிருஷ்ண நாம ஜபம் செய்பவர். அதை அழகிய கவிகளால் வெளிப் படுத்துபவர். அதை கேட்கும்போது நம்மை எங்கோ தேவ லோகத்தில் கொண்டு செல்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். குட்டியாக கிருஷ்ணனே நேரில் வந்து அவர் எதிரில் வந்து சப்பளாங்கால் கட்டிக்கொண்டு பதவிசாக அமர்ந்துகொண்டு இடது கன்னத்தில் கை வைத்து குனிந்து அவர் கவி பாடுவதை ரசித்துக்கொண்டிருக்கிற மாதிரி எப்படி அந்த ஓவியனுக்கு வரையத்தோன்றியது. யார்நத பாக்கியசாலி ஓவியன்? கிருஷ்ணன் கண்களில் ஆச்சர்யம், புன்முறுவல்.
'ஹே ஸூர்தாஸ் தாத்தா, நான் செய்தது பெரிதல்ல, நீ அதை ராகமாக செவியினிக்க பாடி நேரில் நடந்ததைப் பார்த்தாற்போல் பாடுவது தான் அபூர்வம்'' என கிருஷ்ணன் சொல்வதைப் போல் ஓவியம் தீட்டிய நீ யார் அப்பா? ஆனால் நீ மிக உயர்ந்த கிருஷ்ண கடாக்ஷம் பெற்றவன் என்று மட்டும் நிச்சயமாக சொல்வேன்''
No comments:
Post a Comment