Monday, May 17, 2021

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்    -   நங்கநல்லூர்  J K   SIVAN  


''  அம்மா  பசிக்கிறது மம்மு...''

இதைப் படிப்பவர்கள்  அநேகர்  இதெப்படி சாத்தியம் என்று அதிசயிக்கலாம், நம்பமுடியவில்லையே, யாருடைய கற்பனையோ என்றும் நினைக்கலாம்.  அது  யார் விஷயத்தில் அப்படி இருந்தாலும்  மஹா பெரியவா விஷயத்தில் நூற்றுக்கு  லக்ஷம் சதவிகிதம்  சாத்தியம் சாத்தியம் சாத்தியம் என்று கற்பூரம் ஏற்றி கையாலடித்து  சத்தியமாக கூறலாம்.  அவர் அப்படி ஒரு மஹா தபோ சிரேஷ்டர். சித்தர். ஆனால் தனக்கு அந்த சித்தி இருப்பதை காட்டிக் கொள்ளாதவர், அது பற்றி சொல்லாதவர். பேசாதவர்.  நம்மைப்போலவே  சாதாரண னாக காட்சி தந்தவர்.  அவரை பரிபூர்ணமான  பக்தியோடு  குருவாக  மனதில்  பூஜிப்பவர் களுக்கு  அவரது சக்தி ஓரளவு தெரியும்.  ஓரளவு என்று தான் சொல்கிறேன்.

இந்த சம்பவம் என் கற்பனை இல்லை. யாரோ இது பற்றி எழுதியிருந்ததை படித்தேன். என் வழியில் தருகிறேன் அவ்வளவு தான்.  கூட்டியோ குறைத்தோ  சொல்லவில்லை.
காஞ்சிபுரத்தில் மஹா பெரியவா இதை ஒரு சமயம்.  அவரைப் பார்த்து ஆசி பெற  எண்ணற் றோர்  வருவார்கள்.  அதில்  சைவ வைஷ்ணவ, மத்வ, ப்ராமண, பிராமணரல் லாதார் ஆண்கள்  பெண்கள் என்றெல்லாம் எந்த பேதமும் கிடையாது.   அவர் ஜகத் குரு. இந்த ஜகத்தில் குறிப்பிட்டோர் மட்டுமா வசிக்கிறார்கள். எல்லோரும் தானே  இருக்கி றார் கள்.    அவர்கள் அத்தனைபேரையும்  ரக்ஷிப்பவர் அல்லவா ஜகத் குரு. 

அன்று ஒரு  வைஷ்ணவர் தனது மனைவி  குழந்தைகளோடு  காஞ்சி பெரியவா தரிசனத் துக்கு வந்தார்.. இந்த வைஷ்ணவருக்கு  மஹா பெரியவா மீது தனி  பக்தி. தேவதா விஸ்வாசம்.
அவருக்கு நல்ல உத்யோகம், வருமானம், சந்தோஷமான குடும்ப வசதி எல்லாம் இருந்தும் ஒரு பெரிய  குறை. அவருடைய ரெண்டாவது பெண் குழந்தைக்கு, மூணு வயஸ் ஆகியும் பேச்சு வரவில்லை. டாக்டர்க ளிடம்  காண்பித்தார்.  
“இது…. Genetically Predetermined case…. பிறவிக் கோளாறு ஸார்! ஒண்ணுமே பண்ண முடியாது…”
பெரிய பெரிய specialists-களும் கைவிரித்து விட்டார்கள்.
மனசு நொந்து போன நிலையில்  அந்த  வைஷ்ண வருக்கும் அவர் மனைவிக்கும்  கண்ணீர் வெள்ளத்தில்  மனஸில் நீர் வார்த்து, பசமையிட்டது….. ஒரே ஒரு நம்பிக்கை!….

“பிறவியையே வேரறுக்கும் நம்மளோட மஹா வைத்யநாதஸ்வாமி இருக்கறச்சே, பிறவிக் கோளாறு ஒரு பெரிய விஷயமாக்கும்? … அவர் பாத்துக்க மாட்டாரா என்ன?”  நேரே  அவர் கிட்டே யே  போவோம். காலில் விழுவோம். அந்த பரமாத்மா  நம் மீது கருணை கொள்வார். காப்பாற்றுவார். குறை தீர்ப்பார்  என்ற அசாத்திய நம்பிக்கை.

அவர்  மனைவிக்கும்  அந்த   நம்பிக்கை  ஆகவே  இருவரும்  ஆழமான  பக்தி, நம்பிக் கையோடு  ஒரு குடும்பமாக  பெரியவாளை தர்ஶனம் பண்ண  காஞ்சிபுரம் வந்திருந் தார்கள்.  

வைஷ்ணவர்  செய்த  பூர்வ ஜென்ம சுகிர்தம் , அன்று என்னவோ அதிஸயமாக   காஞ்சிபுரம் ஶ்ரீமடத்தில் அதிக   கூட்டமே இல்லை. குழந் தையுடன் நமஸ்காரம் பண்ணிவிட்டு   பெரிய வா எதிரில் கண்ணீரும் கம்பலையுமாக   நின்றார்கள்.

ஸ்ரீ மூக கவியை பேச வைத்த காமாக்ஷி, இங்கே கரும்பு வில்லுக்கு பதில் தண்டத்தை வைத்துக் கொண்டு, பற்றற்ற ஸன்யாஸத் திருக்கோலத் தில், தன் ஸ்வரூபத்தை முற்றிலும் மறைப்ப தாக காட்டிக் கொண்டாலும், அவளையும் மீறி, அவளுடைய கருணை நயனங்கள்….”இதோ! இதோ! இவளேதான்!” என்று, அவளைக் காட்டிக் கொடுத்துவிடும். இல்லையா?

இதோ! பெரியவாளுடைய கருணைவிழிகள் அந்தக் குழந்தையை பார்த்தன……

“கொழந்த யாரு?”

“அடியேனோட கொழந்தை  ஸ்வாமி. . இன்னும் பேச்சு வரல! மூணு வயஸாறது… டாக்டர் கள்ளாம் பொறவிலேயே அப்டி…ங்கற துனால ஒண்ணும் பண்ண முடியாதுன் னுட்டா….! என்னோட ஆத்துக்காரி பெரியவாகிட்ட ப்ரார்த்தனை பண்ணிக்கச் சொன்னா….”

“ஏன்? ஒனக்கு அந்த ஆசை இல்லியோ?”

மஹா  பெரியவா  கிண்டலாக  ஒரு புன்னகையோடு கேட்டார்.  .

வைஷ்ணவர்  என்ன பதில் சொல்வது என்று திணறி  அசடு வழிந்தார்.

 பெரியவா  தனது  திருக்கரங்களை தூக்கி ஆஶீர்வதித்தார்….

“ஏன் கவலைப்படறே? கொழந்த…. நன்னா பேசுவா…. நெறைய பேசுவா….. போ!”

ஆஹா! இதைவிட வேறு உத்தரவாதம் என்ன வேண்டும்?
இது எல்லாமே  ஐந்து நிமிஷத்துக்குள் நடந்த  சமாச்சாரம்.  

காஞ்சி புரம் ஶ்ரீமடத்துக்குப் போய்விட்டு வீடு திரும்புவதற்கு கிட்டத்தட்ட மூணு-நாலு மணிநேரம் ஆகியிருக்கும். பாவம், குழந்தைக்கோ நல்ல பசி!

பெரியவாளுடைய அருட் கடாக்ஷத்துக்காக, ஆஜ்ஞைக்காக மட்டுமே காத்திருந்ததுபோல், வீடு வந்ததும் ஒரே ஓட்டமாக ஸமையல் கட்டுக்குச் சென்று, ஸாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு வந்தாள் அந்தக் குழந்தை.

அடுத்த க்ஷணம்…. பெற்றவர்களையும், மற்றவர்களையும் மயக்கம் போட வைத்தாள்…. தன் மதுரக் குரலால்…..

“அம்மா! பசிக்கறது…. மம்மு போடும்மா….!” ………

முதல் முதலாக பேசப் பழகும் திக்கல் திணறல் எதுவுமில்லாமல், ஸ்பஷ்டமாக குழந்தை குரல் குடுத்தாளோ, இல்லையோ அவ்வளவுதான்!……குழல், யாழ்… இன்னும் என்னென்னவெல்லாம் மதுரமானதோ, அத்தனையும் ஒரு சேர உள்ளே வார்த்ததுபோல் திகட்டாமல் இனித்தது பெற்றவர்களுக்கு!

காஞ்சிபுரம்  இருந்த  திக்கை நோக்கி நன்றியோடு நமஸ்கரித்தனர்.

மறுநாளே ஓடிப்போய் பெரியவாளிடம் பேசமுடியாமல், கண்களில் நீர்மல்க,   இப்போது குழந்தை பேசினாலும்  அந்த  வைஷ்ணவ பெற்றோர்கள்   இருவரும்   ''ஊமைகளாக''   நின்றார்கள்.!

எதுவும் பேசாமல், சிரித்தபடி அவர்களை யதார்த்த நிலைக்கு பெரியவா கொண்டு வந்ததும், குழந்தை பேசிவிட்டதைச் சொல்லி சொல்லி மாய்ந்து போனார்கள்.

ஆம்! கஷ்டத்தைக் கூட தாங்கிக் கொள்ளலாம், ஆனால் மஹான்களின் கருணையை மட்டும் தாங்கிக் கொள்ளவே முடியாது! எண்ணி எண்ணி மாளாது!

பகவானின் பேரன்பு, ஊமைகளை பேசவும் வைக்கும்; பேசுபவர்களை ஊமையாகவும் வைக்கும். ஏனென்றால், அந்த அவ்யாஜ காருண்யத்தை பற்றி பேச முடியுமா? பேசித்தான் முடியுமா?

அழகாக சிரித்துக் கொண்டே ப்ரஸாதம் குடுத்தார்…..

“நன்னாப் பேசுவா! நன்னா இருப்பா….. ஸெரி….. நீ ஒரு கார்யம் பண்ணனும்….”

“காத்துண்டு இருக்கேன் பெரியவா…..”

“காமாக்ஷி கோவில்ல நவராத்ரிக்கு ஜானகி ராமையாவும், டாக்டர் ராஜப்பாவும் ஸங்கீத கச்சேரிகள் ஏற்பாடு பண்ணிண்டு வரா….. ராஜப்பாக்கு கண்ணு ஸெரியாத் தெரியல…. நீ… ரேடியோலதான…. வேலை பண்ற? ஸங்கீத வித்வான்களுக்கு, ஸம்பாவனையை விட, உபசாரம்தான் ரொம்ப முக்யம்! நவராத்ரி ஸமயம்… நீ எங்க இருந்தாலும்…. லீவு போட்டுட்டு அம்பாள் ஸன்னதில… நவராத்ரி கச்சேரிகளைப் பாத்துக்கணும் ..”

“அடியேன்… தாஸன்…. பரம பாக்யமா பண்றேன்… பெரியவா…”

கண்களில் பெருகும் கண்ணீரை துடைத்து மாளவில்லை! மஹாகுருவின் கைங்கர்யத்தை இன்றளவும் ஆனந்தமாகப் பண்ணிவருகிறார் அந்த வைஷ்ணவ பக்தர்  என்று  முடித்திருக் கிறார் இந்த  சம்பவத்தை எழுதியவர். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...