Saturday, May 29, 2021

PESUM DEIVAM

 



பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN

18.  யாத்ரா விபரம் 


 மஹா  பெரியவாளின்  கால் படாத  கிராமமே   இல்லை என்று சொல்லும்  அளவுக்கு  எல்லா  நகரங்களுக்கும்  கிராமங்களுக்கும் சென்று தரிசனம் தந்திருக்கிறார்.  

1920  மார்ச் மாதம்  தஞ்சாவூரில்  சிறுகுளத்தூர்  கிராமத்தில் அவரை கல்கத்தா   N  R  ஐயர்  எனும் கிராம நிலச்சுவான்தார் தலைவராக  வரவேற்று   உபசரித்து  அவரது இல்லத்தில்  பெரியவா தங்க வசதிகள் செய்து  கொடுத்தார்.   விஷயம் தெரிந்து ஊர்  மக்கள் திரண்டு வந்து  பெரியவாளை   வணங்கி தரிசனம் பெற்றார்கள்.  பெரியவாளின் விஜய  யாத்ரையை  விமரிசையாக  அந்த கிராமத்தில் கொண்டாடினார்கள். 

அங்கிருந்து   திருவாரூர் சென்றார். தியாகராஜ சுவாமி தரிசனம்  செய்த பெரியவா பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.  அந்த கிராமத்தில் ஒரு சில நாட்கள்   தங்கினார்.

ஒரு வார காலம் வேதாரண்யத்தில் வாசம்.  கோடிக்கரையில்   புண்ய ஸ்னானம். அகத்தியம் பள்ளி கிராமம் விஜயம்செய்தபின்  அங்கிருந்து நாகப்பட்டினத்துக்கு    யாத்திரை தொடர்ந்தது.  எங்கு சென்றாலும்   ஜன வெள்ளம்  காத்திருந்து வரவேற்றது.   நாகப்பட்டினம் நீலாயதாக்ஷி அம்மன் ஆலயத்தில்  பெரியவா தங்கினார் நாகை  G   சதாசிவம் பிள்ளை  அவரை வரவேற்று,   தான்  மஹா பெரியவா மேல் இயற்றிய  ஐந்து பாடல்களை  பெரியவாளிடம் சமர்ப்பித்து   நமஸ்கரித்தார்.    

1920ம் வருஷம்  வியாச பூஜை  மாயூரத்தில்  நடை பெற்றது.   மூன்று மாத காலம் அங்கே வாசம்.   பள்ளி செல்லும் மாணவர்கள் 300    ப்ரம்மச்சாரிகளைக் கொண்ட  ஒரு வேத பாடசாலை வகுப்பு உண்டாயிற்று.   எல்லா  மாணவர்களும்   காவேரியில் விடிகாலை  சூர்யோதயத்துக்கு முன்பே  ஸ்னானம் செய்துவிட்டு  நித்யானுஷ்டானம் செயது முடித்தபின்  ராஜன் தோப்பில்  பந்தல் போட்டு  தயாரான  ஹோம குண்டத்தில்  சமித்தா தானம்  செய்வார்கள்.  அப்புறம் தான் வேத பாடசாலை செல்வார்கள்.   அந்த இடமே  வேதகாலத்தில்  ரிஷிகள் வாழ்ந்த கிராமம் போல் காட்சி அளித்தது.

1920 நவம்பர்  2ம் தேதி அன்று  தர்மபுர  ஆதீன கர்த்தர்,   மடாதிபதி,   மஹாபெரியவாளை  சந்தித்து  மரியாதைகள் செலுத்தினார். 

மாயூரத்தில் மஹா பெரியவா  தங்கியிருந்த போது  ஒரு வயதான  முஸ்லீம்  பண்டிதர்   அவரை சந்திக்க  விரும்பினார்.  அந்த முஸ்லீம்   குரான் நன்றாக அறிந்தவர்.  இரு கண்கள் பார்வை இழந்தவர்.  

 ''நாலு மணிக்கு சாயந்திரம்  அழைத்து வாருங்கள் '' என்று  அனுமதித்தார்  மஹா பெரியவா.  
அப்போது ஒரு ஸதஸ்  நடந்தது.  ஹிந்து தர்ம தத்வம் அறிந்த பல சாஸ்த்ரிகள், கூடி   ஹிந்து சனாதன தர்ம தத்வம்  பற்றிய  ஒரு கலந்துரையாடல்,  விவாதம்  செய்து கொண்டு இருந்த சமயம்.     ஏராளமான பக்தர்கள் அதில்  பங்கேற்று  அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள்.  

வித்வான்கள்  பேச்சுகள் முடிந்தபின்  மஹா பெரியவா  அந்த  முஸ்லீம்  வயோதிகரை அழைத்து வரச் சொல்லி,  உங்கள்  மதத்தின்  பொது  நோக்கங்கள், தத்துவங்களை  எங்களுக்கு விளக்குங்கள் என்று கூறினார். 

அவர் பார்வையற்ற கண்களில் நீர் வழிந்தோட ''ஐயா எவ்வளவு பெரிய   ஞானி நீங்கள். நான் இதைச் சொல்வேன்?  எல்லா மதங்களும்  கடவுளை அடையும் ஒரு வழிப்பாதைகள் தானே.  உங்களிடம் உள்ள தெய்வீகத்தை நான்  பார்வையின்றியே  அறிகிறேன்.  அதை என் இதயத்தில் நிரப்பிக்கொள்கிறேன்.   எங்கெல்லாம் அன்பு ஊற்றெடுக்கிற மனம் உண்டோ அங்கெல்லாம் கடவுள் நிச்சயம் இருக்கிறார். '' என்றார் அந்த முஸ்லீம் வயோதிகர்.    அங்கே கூடியிருந்த அனைத்து சாஸ்திர நிபுணர்களும்  அவரது பக்தியை மெச்சி  புகழ்ந்தனர்.  

அந்த வருஷம் நவராத்ரி பூஜை    மாயூரத்தை அடுத்த   ஆனை தாண்டவபுரத்தில் நடந்தது.  மஹா பெரியவா ஒரு யாத்திரை அங்கிருந்து சென்றார்.  திருக்கடையூர்,  திருப்புன்கூர், வைத்தீஸ்வரன் கோவில்  ஆகிய  ஸ்தலங்களில்    ஸ்ரீ சோமசுந்தர தம்பிரான் தலைமையில்  ஆலய அதிகாரிகள், நிர்வாகிகள்  பூரண கும்ப மரியாதையோடு  மஹா பெரியவாளை  வரவேற்று  அழைத்து தரிசனம் செய்தார்கள்.   பெரியவா  அங்குள்ள கோயில்கள் சென்று  தரிசித்தார்.

மார்கழி பூஜை   சீர்காழியில் நடந்தது.

மஹா பெரியவாளை  சீர்காழியில்   சிதம்பரநாத முதலியார்  வரவேற்று  அவர் நடத்தி வந்த பள்ளிக் கூடத்திற்கு  அழைத்தார்.  அங்கே  சென்ற பெரியவா ஆசிரியர்கள்,  அவர்கள்குடும்பம், பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவரையும்   வாழ்த்தி  ஆசிர்வதித்தார்.  

சீர்காழி விஜயத்தின் போது  குன்னம் சுப்ரமணிய ஐயர் ,  தென்பாதி திருநாராயண பிள்ளை,  மற்றும் பலர்  மகா பெரியவா தரிசனம் பெற்று,  மடத்திற்கு தம்மாலான  உதவிகள்  செய்தனர்.

பிறகு  திருவெண்காடு சென்று  அங்கே  ஸ்வேதாரண்யேஸ்வரரை  தரிசித்தார்.   அங்கே  தான்  57வது பீடாதிபதி  ஆச்சார்யர்  ஸ்ரீ பரசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்  அதிஷ்டானம் இருக்கிறது என்பதால்  அங்கே சென்று குரு  வந்தனம்  செய்தார்.  இந்த பரசிவேந்திரர்  தான்  ப்ரம்ம ஞானி  ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராளின் குரு. சீர்காழியைச் சுற்றி   பன்னிரண்டு   வைஷ்ணவ திவ்ய தேசங்கள் உள்ளன.    அந்த பன்னிரண்டு ஸ்தலங்களுக்கு சென்று பெருமாள் தரிசனம் செய்தவர்  மஹா பெரியவா.   அந்த பன்னிரண்டு ஸ்தலங்கள் பெயர் தெரியுமா. இதோ சொல்கிறேன்:

1.தாடாளன் கோவில், சீர்காழி,  திருநகரி, திருநாங்கூர்,  வைகுண்ட விண்ணகரம், அரிமேய விண்ணகரம், செம்பொன்செய் கோயில், திருத்தெற்றி அம்பலம், திருமணிக்கூடம்,  பார்த்தன் பள்ளி. திருக்காவம்பாடி,  திருவெள்ளக்குளம் , திருத்தேவனார் தொகை  ஆகியவை.  இவற்றிற்கு சென்று தரிசிக்கும் பாக்யம் எனக்கு  கிடைத்தது.

அங்கிருந்து மஹா பெரியவா காவிரிப்பூம்பட்டினம் சென்று  அங்கே  சமுத்திர சங்கமத்தில் ஸ்னானம் செய்தார்.

தொடரும்  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...