சில எண்ணச் சிதறல்கள். நங்கநல்லூர் J K SIVAN
நம்மில் பலர் சந்தோஷமாக இருக்க முடியாத ஒரு முக்கிய காரணம் என்ன தெரியுமா? நாம் நாமாக இயற்கையாக இருக்காமல் பிறர் எப்படி நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்களோ அப்படி இருக்க முயல்வது தான். இது தன்னைத் தானே மாற்றிக்கொண்டு ஏமாறுவது. முட்டாள்தனம். எதற்கு மற்றவர்களை அவர்கள் வழியில் சென்று ஈர்க்க வேண்டும்? அவர்கள் மெச்சுவதற்காக நாம் வாழ முற்படுவது அடுத்தவன் பசிக்கு நாம் சாப்பிடுவது போல. திருப்தியை தராது.
வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் ஆனந்தமாக நாம் வாழ கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது கவனத்தில் இருக்கவேண்டும். அதை ஒவ்வொருவரும் அவர் வழியில் வாழ்ந்து அனுபவிக்கவேண்டும். நல்லது கெட்டது எது என்று நமது மனச்சாட்சியே அறிவுறுத்துமே . வாழ்க்கை நடிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு நாடக மேடை அல்ல. நாம் சந்தோஷமாக வாழ, முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது நமக்கு எது தேவையானதோ அவசியமோ அதை தேடுவது, நாடுவது தான், எதை எல்லாம் விரும்புகிறோம் என்பது வேறு.
மழை நீர் கடலில் ஏரியில், குளத்தில், ஆற்றில் விழுந்தால் அதன் அடையாளம் அழிந்து போகிறது. அதே மழை ஒரு துளி ஒரு இலையின் மேல் விழுந்து முத்தாக ஒளிவீசி கண்ணைப் பறிக்கிறது.நீ வாழ்வில் எந்த துறையில் சிறந்து விளங்குவாய் என்பதை நீயே உன் தகுதிக்கேற்ப தேர்ந்தெடுத்து முயன்று வெற்றி பெறமுடியும். மற்றவன் வழி ஒருவனை அவன் லட்சியப்பாதையில் கொண்டு சேர்க்காது.
உன் வழியில் நீ ஒளி வீசினால் உன் நண்பர்கள் ஆதரவாளர்கள் உன்னோடு சேர்ந்து மகிழ்வார்களே. நீ தோல்வியை சந்திக்கும்போது உன் உண்மையான நட்பு ஆதரவாளர் யார் என்பது வெட்ட வெளிச்சமாகும்.
ஒருவன் எத்தனை மூச்சுக்கள் விட்டு வாழ்கிறான் என்பதை விட எவ்வளவு அற்புதமான கணங்களில் அவனது மூச்சுகள் செலவழிந்து அவனுக்கு பெருமை சேர்த்தது மற்றவர்களை மகிழ்வித்தது என்பது தான் முக்கியம். அது தான் ஒருவனது வாழ்க்கையின் அர்த்தம், மதிப்பு.
உண்மையான நம்பிக்கையுள்ள நண்பன் ஒருவனது குறைகளை குற்றங்களை சுட்டிக்காட்டி சரியான பாதையில் அவனைச் செலுத்துபவன். தனது குறைகளை, தவறுகளை உணர்ந்து ஒப்புக்கொள்பவனே தைரியசாலி.
முயற்சி என்பது அவசியம் தான் எல்லோருக்குமே. எந்த விதத்தில், வழியில், எந்த லட்சியத்தை நோக்கி அது செலுத்தப்படுகிறது என்பதில் தான் ஒருவனின் வாழ்க்கை வெற்றி பெறுகிறது.
எவரையும் உதாசீனமாக கருதவே கூடாது. ஆஹா இந்த வைரக்கல், ரத்தினம் நமக்கு அருகில் இருந்தும், கிடைத்தும் அதை உபயோகிக்கத் தவறிவிட்டோமே , பளபளக்கும் கண்ணாடித்துண்டுகளை சேர்த்துக் கொண்டோமே என்று பின்னர் வருந்த இடம் கொடுக்கக்கூடாது.
வலியைப் பொறுத்துக்கொள்வது வீரமோ, பலமோ ஆகாது. வலி ஏன் வந்தது, எதற்கு அதைத் தாங்கிக் கொள்ளவேண்டும், எவ்வளவு காலம், என அதை உணர்ந்து அதை தாங்கிக்கொண்டு, அவசியம் என்று ஏற்றுக்கொள்பவனே உறுதியானவன்.
வலி என்பது பிறரின் சிரிப்புக்கு காரணமாக இருக்கலாம். சினிமாவில் வழுக்கி விழுவது, மற்றவனை அடிப்பது எல்லாம் ஒரு காமெடி என்று காட்டுவார்கள். ஒருவனின் வலி, துன்பம், அடுத்தவனுக்கு சிரிப்பை தரலாம். ஆனால் சிரிப்பது ஒருபோதும் அடுத்தவனுக்கு வலியை , துன்பத்தை தரும்படியாக இருக்கக்கூடாது.
எதிர்பார்ப்பவைகளோ, அதற்கான சந்தர்ப்பங்களோ தானாக நம்மைத் தேடி வருவதில்லை . நாம் கஷ்டப்பட்டு, பிரயாசைப் பட்டு தேவையானவற்றைப் பெற சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ள முயல வேண்டும். நமது மதிப்பு உயர நாம் தான் பாடுபடவேண்டும் அல்லவா? குழந்தைகளையும் அவ்வாறே பழக்கவேண்டும். எதுவும் எளிதில் கிடைத்துவிட்டால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விடும், அதற்காக பின்னால் வருந்தவேண்டாமே.
No comments:
Post a Comment