Tuesday, May 11, 2021

CHATHRAPATHI SHIVAJI


சிவாஜி கதை  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

1. பூர்வோத்தரம் 

சிவாஜி  மஹாராஜா  நமக்கு தெய்வம்  மாதிரி.    ஏனென்றால்  அந்த மஹா புருஷன்  தடுத்து நிறுத்தி இருக்காவிட்டால்  தென்னகம் முழுதுமே  முகலாய பேரரசின்  வன்முறைகளுக்கும்,  மத மாற்றங்களுக்கும்  கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் ,  சிலை உடைப்பு, கோவில் அழிப்பு  போன்ற செயல்களுக்கு  பல நூற்றாண்டுகளுக்கு முன்பே  பாதிக்கப்பட் டிருக்கும்.  

சிவாஜி  ஸ்தாபித்த ஹிந்து சாம்ராஜ்யம்  அனேகருக்கு  நினைவில் இல்லாமல் போனதற்கு நமது  அரசு  பாட திட்டங்கள் தான்  காரணம் என்று சொல்லலாம்.  ஏன் அநேகருக்கு   சிவாஜி மேல் நன்றி உணர்ச்சியே இல்லை? அவரென்ன  மஹாராஷ்டிராவுக்கு மட்டுமா  சொந்தம்?   நாமாவது அவரை அவ்வப்போது நினைப்போம்.
சிவாஜி  மராத்தா என்ற  ஹிந்து சக்தியை உருவாக்கிய  போன்ஸ்லே  க்ஷத்ரிய   குலத்தவர்.  ,முதலில் ராஜபுத்திர  தளபதி தேவராஜ் மஹாராணா மூலம்  மராத்தாவில்   குடியேறிவர்கள்.  அந்த பிரதேசத்தை   ஸஸோதியா  பரம்பரை  ராஜாக்கள் ஆண்டுவந்தனர்.   சூரிய  வம்சத்தை சேர்ந்தவர்கள் என்று  சொல்வதுண்டு.  நர்மதை நதி தென்கரையில் அவர்கள் ராஜ்யம்.  காலப் போக் கில்  இந்த வம்சம் க்ஷீணித்து  அழிய தொடங்கும் போது அந்த நாட்டு  ராணி  ஒரு சிறு குழந்தையுடன் உயிர் தப்பித்து நர்மதையை கடந்து மேவார்  ராணாக்கள்  பிரதேசம் சென்று விட்டாள் . ஒரு ப்ராமண குடும்பம் அவளையும்  அந்த  ஆறு வயது  குழந்தையையும் ஆதரித்தது.  அந்த பையன்  பிராமணரின் பசுக்களை மேய்த்து  காட்டுக்கு செல்வான். ஒருநாள்  ஒரு புதையல் அவன் கண்ணில் தென்பட்டது.  தான் கண்ட புதையலை  பிராமண எஜமானனிடம் கொடுத்து  தான்  ராஜ வம்சம் என்பதை அந்த பையன் அறிவித்தான்.  பிராமணன்  அவன் நேர்மையை பாராட்டி அவனை எப்படியாவது  ராஜாவாக்க விரும்பினான்.  அந்த பிரதேசம்  வன விலங்கு வேட்டையாடும் காட்டு மனிதர்கள் வாழும் இடம்.   அவர்களை வென்று ஒரு கோட்டை கட்டிக் கொண்டான்.  சித்ரகோட்டை என்று பெயர் வைத்தான்.  மலையடிவாரத்தில் ஒரு பழைய பவானி கோவில் உண்டு.   பவானி பக்தனாகி  அந்த  கோவிலை புதுப்பித்தான்,  கோட்டைக்குள் ஒரு சின்ன பவானி கோவில் அமைத்தான்.  அதில் ஏகலிங்க  சிவன் விக்ரஹம்   ப்ரதிஷ்டையாயிற்று. அவன் வம்சம்  500 வருஷங்கள்  ஆண்டது.

அந்த சித்ரகோட்டை தான் பிற்காலத்தில் சரித்திர புகழ் சித்தூர் கோட்டையாயிற்று. வடக்கே  டில்லியில் தலைநகராக கொண்டு  முஸ்லீம் சக்ரவர்த்திகள் ஆண்ட காலம்.   முகலாய அரசை எதிர்க்க  சக்தியின்றி  அதற்கு   கப்பம் கட்டி அடிமைகளாக  வாழ்ந்தார்கள் . ஒரு கால கட்டத்தில் முகலாய  சக்ரவர்த்தியின் சுல்தான் கள் சித்தூர் கோட்டையை  தாக்கிய போது  ராஜபுத்திர ராஜா அவர்களை  வென்றான்.  அது முதல்   சுதந்திரமாக  கப்பம் காட்டாமல் வாழ ஆரம்பித்தான்.   

1275ல் அப்படி  ஆண்ட ராஜா  மஹாராணா  லக்ஷ்மன் சிங்.    அவன் மாமா  மகாராணா  பீம்  சிங்  நிர்வாகத்தை கவனித்துக் கொண்டான்.   லக்ஷ்மண்  சிங்  மனைவி தான்  சித்தூர் ராணி பத்மினி.   அவள் அழகு  டில்லி  முகலாய ராஜா அல்லாவுத்தின் கில்ஜி காதுக்கு எட்டி அவளை உடனே  கொண்டு வர உத்தரவிட்டான்.  பெரிய  முகலாய  படை  சித்தூர்  கோட்டையை முற்றுகை யிட்டு  பலநாள்  ராணாக்கள்  தாக்கு பிடித்து துவண்டனர். பிறகு வெளியே வந்து வாழ்வா சாவா யுத்தம் நடத்தினார்கள்.  வம்சம்  அழியக்கூடாது என்று  லக்ஷ்மண் சிங்  தீர்மானித்தான்.  அவனுக்கு 11 பிள்ளைகள். 

ரெண்டாவது பிள்ளை  அஜய் சிங்கை தனியாக அழைத்து நிலைமையை விளக்கி  ஆரவல்லி மலைகளுக்கு  இரவோடு இரவாக ஓடி சென்று தப்பிக்க  உத்தரவிட்டான்.  அவனும் தப்பினான். மற்றவர்கள் 1400 வீரர்கள்  சண்டையிட்டு உயிர் துறந்தனர்.   சித்தூர்  கோட்டை முகலாயர் வசம் வீழ்ந்தது.

உயிர் தப்பி ஆரவல்லி  மலைகளுக்கு ஓடிய  அஜய் சிங்  போகும்போது  மூத்த அண்ணன் மகன்  ஹம்பிர் சிங் என்ற சிறுவனையும் அழைத்துச் சென்றான்.  கொஞ்சம் கொஞ்சமாக  படை வீரர்களைச் சேர்த்து  சிறிது காலத்தில்  ஹம்பிர்  சிங் சிறந்த தலைவனானான். ராஜநகர்  கோட்டை என்று ஒன்றை ஸ்தாபித்து  அஜயசிங் அவனை ராஜாவாக்கினான்.  

அஜயசிங் மரணத்துக்குப் பின் அவன் மகன் புது  ஊர்களுக்குச்  சென்று வென்று ராஜாவாகி  ஒரு வம்சம்  தொடர்ந்தது.அதில் சில பெயர்கள்   திலிப் சிங் மஹாராணா,   சிங்ஜி  மஹாராணா,  போசாஜி மஹாராணா தேவராஜ் ஜி மஹாராணா.   

தேவராஜ் ஜி காலத்தில்   முகலாயர்களோடு போரிட்டு தோற்று ராஜ்யமிழந்து  தெற்கே   கிருஷ்ணா பீமா பள்ளத்தாக்குகளுக்குச் சென்றான். முகலாயர்களிடம் பிடிபடாமல்  போசாவந்த்  போன்ஸ்லே என்று பெயர் மாற்றிக் கொண்டான்.

அவன்  வம்சம்  தொடர்ந்து கடைசியில் பாபாஜி என்று ஒருவன் எப்படியெல்லாமோ  சமாளித்து  முகலாயர் களை எதிர்ப்பதில் ஆர்வமாக  முனைந்தான்.  அவன் மகன்கள்  மாலோஜி,  வித்தோஜி.   மாலோஜி  நிஜாம் அரசாங்கத்தில்  குதிரைப் படை தலைவனானான். மாலோஜிக்கு   வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு பிள்ளை பிறந்து  ஷாஹாஜி என்று பெயரிட்டான்.   ஜாதவ் ராவ் எனும்  தலைவனுக்கு  ஷாஹாஜியை ரொம்ப பிடிக்கும். அவனுக்கு  ஜிஜா என்று பெண். இரு குழந்தைகளும் இணைபிரியா நண்பர்கள்.  இளம் வயது கல்யாணம் நடை முறையில் உள்ள காலம். ஆகவே என் பெண்ணை  ஷாஹாஜி க்கு தான் மணமுடிப்பேன் என்று வாக்கு கொடுத்தான்.  அது வினையாக முடிந்தது.....

. தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...