Monday, May 10, 2021

IMAGINATION

 



கதையும் கடவுளும்...   நங்கநல்லூர்   J.K. SIVAN

எழுத்தோ,  பேச்சோ,  நாலு பேரிடம்  அறிவிக்கப்படும்போது,   ஏற்கனவே  தயார் செயது கொண்டு வந்து ஒப்பிப்பது   அஜீரணத்தை வாயில் எடுப்பது போல்.   இயற்கையாக  மனம் நினைப்பதை, எண்ணம் தோன்றுவதை  எழுதடாகவோ, சொல்லாகவோ  கலப்படமில்லாமல் எளிமையாக  வெளிப்படுத்தினால் மற்றவர்களுக்கு பிடிக்கும்.


நமக்குத் தெரிந்ததையே,  ஒருவன் ரொம்ப கஷ்டப்பட்டு  தெரிந்து கொண்டுவந்து  காட்டுவதில்  ஆர்வம் இருக்காது.

அதேபோல் இன்னொரு விஷயம்,  நாம் சொல்வது,  எழுதுவது  நாலுபேருக்கு  விறுவிறுப்பாக , உற்சாகம் ஊட்டவேண்டும்   என்பதற்காக   ''இல்லாததை இருப்பதாக''  காட்டுவது ஏமாற்றத்தில் முடியும்.  எவரும் கிள்ளுக்கீரை இல்லை.  நம்மை விட  அதிகம் தெரிந்தவர்கள்.  ஆகவே உள்ளதை உள்ளபடி உனக்கு முடிந்தபடி உரை என்பது தான் என்  நோக்கம்  லக்ஷியம். 

சிலர்  தனக்கு நிறைய  தெரியும் என்று காட்டிக் கொல்வதற்கு ரொம்ப  கஷ்டப்பட்டு கஷ்டமான வார்த்தைகளை பிரயோகிப்பார்கள்.  அது  எடுபடாது.  நீயே  படித்துக் கொள்  என்று  வாசகர்கள் போய்விடுவார்கள்.  சில சமயம் ரொம்ப நெருடலான  உபநிஷத் விஷயங்களை சொல்லும்போது நான் தயங்குவேன்.  நிறைய பேர் படிக்கவே மாட்டார்கள்.  படித்தால் புரிவதும்  எளிதல்ல.   சில எழுத்துகள் சிந்திக்க வைக்கும்.   அதற்கு யாருக்கு நேரம் இருக்கிறது. 

ஆகவே  என்றும் மனதை பிடித்துக்கொண்டிருக்கும்  சில  எளிய விஷயங்களை சுருக்கமாக சொல்லி நிறுத்துவது விவேகம்.

 வெள்ளைக்கார  அறிவாளி   ரஸ்கின்  ஒரு மணி நேர புத்தகங்கள்,  எப்போதும் வாழும் புத்தகங்கள் (BOOKS  OF  THE  HOUR , BOOKS OF  ALL TIME ) என்று சில வகை புத்தங்களை பற்றி அழகாக எழுதியதை  பள்ளிக்கூட  காலத்தில் படித்தது  நினைவுக்கு வருகிறது.  

எனக்கு  தெரிந்து  விறுவிறுப்பாக  ஏதாவது சொல்லவேண்டும் என்றால் அனாவசியமாக  ராமனையோ, கிருஷ்ணனையோ, பாரதத்தையோ, ராமாயணத்தையோ ஏன் அதில் நுழைக்கவேண்டும் ?  அவர்கள்  அப்படி நடந்துகொண்டார்கள், அதில் அப்படி வருகிறது  என்று ''நடந்தது'' போல் '' அதை நாம்  பார்த்தது போல்  ''சொன்னால்  சிலர்    ஏற்பார்கள்.  விஷயம் அறிந்தவர்கள் நம்புவார்களா?  யாருக்கு காதில் பூ சுற்றி நம்பவைக்க வேண்டும்?  ராமன் சொன்னான், கிருஷ்ணன் சொன்னான், சிவன் சொன்னான், பிரமன் சொன்னான் என்று தெய்வங்களை இப்படி சீரழிக்க வேண்டாமே. அவர்கள் சொன்ன கீதை, உபதேசங்களை, மந்திரங்களை, ஸ்லோகங்களை, அர்த்தம்  தெரிந்துகொண்டு படித்தால் மட்டும் போதுமே, அதற்கு முதலில் அர்த்தம் தெரிந்துக்கொள்வது  தான் மிக மிக  அவசியம்.  அதில் வரும் கதைகளை  உள்ளது உள்ளபடியே விறு விறுப்புடன்  பிரபலப்படுத்தலாமே. நான்  என் சக்திக்கு இயன்றவரை அதைத் தான் செய்ய  முயல்கிறேன்.  

ஒரு கதை யாரோ எழுதி இணையதளத்தில் சுற்றுகிறது எனக்கும் வந்தது.  யார் எழுதியது  என்பதே தெரியவில்லை. FORWARDED  என்று மட்டும் வந்தது.  என் எழுத்துக்கள் என் பெயரில்லாமல்  எத்தனையோ முறை எனக்கே  வந்திருக்கிறது.

அப்படி எனக்கு வந்த   ஒரு  ''FORWARDED'' கதை  இது..  எதற்கு கிருஷ்ணனை இதில் இழுக்கவேண்டும்?  எதிர்காலம் இதை உண்மை என்று நம்பினால் நாம் துரோகம் செய்வதாகிவிடாதா.  தெய்வ  சமாச்சாரத்தை,    அசலை எதற்கு நகலாக்க , நக்கலாக்க வேண்டும்?

நான்  வியாசர் எழுதிய  ஆயிரக்கணக்கான  ஸ்லோகங்களை  அறிந்து அதை தமிழில் ஐந்தாம் வேதம் என்று  புத்தகமாக்கியவன்.  எனக்கு வந்த கதையில்  இப்படி ஒரு  சம்பவம்  எங்கும்  கண்ணில் படவே இல்லை.... எனக்கு வந்த கதையை சுருக்கி  என் வழியில் தருகிறேன்.

கிருஷ்ணன் அர்ஜுனன் ரெண்டுபேரும்  பேசிக்கொண்டே  ஒரு கிராமத்தில் நடக்கிறார்கள்.
''கிருஷ்ணா நீ ஏன் கர்ணனை மட்டும் தானத்திற்கு சிறந்த உதாரணம் என்கிறாய்? என் அண்ணா  யுதிஷ்டிரன், ஏன் நாங்கள் எல்லோரும் கூடத் தான்  நிறைய தான தர்மங்கள் செயகிறோம்''

''அர்ஜுனா  அதோ பார்.  கிருஷ்ணன் எதிரே  ரெண்டு மலைகளை  காட்டுகிறான். 
அர்ஜுனன்  பார்க்கும்போதே  அவற்றை கிருஷ்ணன் தங்க மலைகளாக்கினான்.
'அர்ஜுனா, இந்த ரெண்டு தங்க மலைகளை துண்டாக்கி கிராமம் முழுதும் இருபவர்களுக்கெல்லாம்  இலவசமாக  கொடு. கடைசியில்  இந்த மலைகளில்  ஒரு சிறு கடுகளவு கூட மீறக்கூடாது''

அர்ஜுனன் கிராமத்துக்குள் சென்றான்.''எல்லோரும் வாருங்கள். உங்களுக்கு  தங்கம்  நிறைய தரப்போகிறேன் 'என்றான்.   கூட்டமோ கூட்டம். . புகழாரம் அவனுக்கு. பெரிய பெரிய  பெட்டிகள் பாத்திரங்களோடு  சாக்கு, கோணிகளோடு வந்தவர்களுக்கு   ரெண்டு மூன்று பகல் இரவு பூரா அர்ஜுனன் மலைகளை பிளந்து, தோண்டி, தூளாக்கி, எல்லோருக்கும் வழங்கினான். மலைகள் அளவில் குறையவில்லை. பல நாள் ஆகியும் மலைகள் குறையவில்லை. எடுக்க எடுக்க தங்கம் வளர்ந்து கொண்டே போயிற்று.  

''கிருஷ்ணா, என்னால் இந்த  தங்க மலைகளை முழுதுமாக  குறைத்து ஒரு துண்டு பாக்கி இல்லாமல் வழங்க  முடியும் என்று தோன்றவில்லையே?  எப்படி அப்பா  இதை எல்லாம் ஒரு துளி இல்லாமல் பண்ணுவது?''

 ஓஹோ, அப்படியா, சரி இரு, கர்ணனை கூப்பிடுகிறேன்.  கர்ணன் வந்தான்.

''கர்ணா, இந்த தங்க மலைகளை உனக்கு அளிக்கிறேன்  ஒரு சிறு கடுகளவு கூட மீறாமல் எல்லாருக்கும் தானமாக வழங்க முடியுமா உன்னால்?

கர்ணன்  கிராமத்து மக்களை அழைத்தான். ''அதோ அந்த தங்கமலைகள் உங்களைச்சேர்ந்தது.  யாருக்கு  எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று  சொல்லிவிட்டு போய்விட்டான்.  

லட்டுவின் மேல் எறும்புகள் போல் மக்கள் வெள்ளம் அந்த மலைகளை கரைத்து எடுத்துக் கொண்டு போய்விட்டது.   சிறிது நேரத்தில்  ரெண்டு மலைகளும்  இருந்த இடமே தெரியவில்லை.

அர்ஜுனன் பிரமித்தான்.  ஏன் எனக்கு இப்படி செய்ய தோன்றவில்லை?

'' அர்ஜுனா,  நீ இந்த மலைகளை உனதாக பாவித்து எல்லோருக்கும் விநியோகம் செய்ய முற்பட்டாய். கர்ணனோ இதை தனதாகவே எண்ணவில்லை.பாவிக்கவில்லை. தானம் செய்யவேண்டிய தங்கமலை அவர்களை சேர்ந்தது என்று அவர்களுக்கே அளித்துவிட்டு சென்றான். கர்ணனைப் பொறுத்தவரை தங்கமோ வெள்ளியோ  தனதாக மனதாலும் நினைக்கவில்லை.  தானம் தர்மம் அதை கொடுக்கும் மனது தான். நீ  உனதாக நினைத்து வெட்டி தானம் செய்ய முனைந்தாய்.  சுயநலமில்லாத பலனெதிர்பாராத தான தர்ம மனத்தினன் கர்ணன் முன் நீ எங்கே?  வாழ்க்கையை எளிதாகவோ, சிக்கலாகவோ மாற்றிக்கொள்வது அவரவர் மனப்பான்மை.''

இது நல்ல  நீதி கதை தான்.  ஒரு முல்லா, ஒரு ரிஷி, ஒரு யோகி சொன்னதாக சொன்னாலும் அது அருமையானதாகவே தானே இருக்கும். எதற்கு கிருஷ்ணன்?..... இங்கு தான் கொஞ்சம்   இடிக்கிறது.  தயவு செயது கடவுள்களை,  சாமானியர்களாக  சித்தரிக்க வேண்டாமே.   கிருஷ்ணன் ராமன்  பலராமன்,  பரசுராமன்  வாமனன் என்று   கடவுள் 
மனிதனாக அவதரித்தது  ஏதோ ஒரு காரியத்துக்காக, இந்த மாதிரி கதைகளுக்காக இல்லை. இன்னும் பின்னால்  வரும் சில தலைமுறைகள் இது  கீதையில், பாரதத்தில்,  வருவதாக சத்தியம் செய்யும்.   வேண்டவே வேண்டாம் அந்த அபச்சாரம்.  

சாதாரண உண்மைகளை வலியுறுத்த,   இல்லாத ஒரு கற்பனை, கதைக்கு,   வேத நூல்களை, உயர்ந்த தெய்வங்களை, ஆச்சார்யர்களை, மகா புருஷர்களை  பாத்திரங்களாக்கினால்  யமன் கோபம் வந்து கொதிக்கும் பாம் ஆயில் சட்டியில் போட்டு நம்மை  அப்பளமாக, வடாமாக ,மோர் மிளகாயாக  பொறித்து விட வழி  வகுக்க வேண்டாம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...