தெரிந்த பழமொழி, தெரியாத அர்த்தம்: - நங்கநல்லூர் J K SIVAN ---
நிறைய விஷயங்கள் நமக்கு தெரிந்தது போல் இருக்கும். ஆனால் நாம் உண்மையில் அர்த்தம் தெரியாதவர்கள் என்று கூட நமக்கு தெரியாது. இது என் சொந்த அனுபவம்.
இதோ இன்று உங்களுக்கு சொல்லும் இந்த சின்ன சின்ன விஷயங்களைப் படியுங்கள், நான் சொல்வது எவ்வளவு சரி என்று புரியும்.
எல்லோருக்கும் தெரிந்த ஒரு பழமொழி இது :
'' ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்''. என்னய்யா இதில் கஷ்டம் புரிந்துகொள்ள, நீயெல்லாம் இது கூட தெரியாமல் எழுத வந்துவிட்டாய் . ரொம்பவே சிம்பிளாக இருக்கிறதே.
''மற்றவர்கள் பிள்ளையை உன் பிள்ளை மாதிரி ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்'' இது உமக்கு தெரியாதா என்கிறீர்களே. இதோ பாருங்கள் அதன் உண்மையான அர்த்தத்தை:
''ஊரான் வீட்டு பிள்ளையாகிய, நீ பொறுப்பேற்று மணந்த உன் மனைவி யாகிய பெண்பிள்ளை, இப்போது கர்ப்பிணியாக வயிற்றில் சுமக்கிறாளே, இந்த ஊரான் வீட்டு பெண்ணான உன் மனைவியை நீ அவளது இந்த நிலையில் ரொம்ப பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயிற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானாகவே வளரும்''. அட இப்படி ஒரு மீனிங் என்று எனக்கு இப்போது தானே தெரியும். அடடா என் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது தெரியாமல் போய்விட்டதே!!!
'' கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?'' இதுவும் ரொம்ப சிம்பிள் மாதிரி ஏதோ கழுதை என்கிற காகிதம் தின்கிற வண்ணார் வீட்டில் விரும்பி வளர்க்கப்படும் பொதி சுமக்கும் விலங்குக்கு கற்பூரம் என்கிற வாசனை திரவியத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது, என்று தான் இதைப் படிக்கும் வரை நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். நான் கழுதையை விட எவ்வளவு தாழ்ந்தவன் என்று இன்று தான் எனக்கு புரிந்தது.
'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'. இப்படி பதம் பிரித்திருக்கிறார் யாரோ ஒருவர்.
கழு என்பது ஒரு வகையான நீளமான , நாணல் மாதிரி வளரும் கோரைப்புல். அதுவே நமக்கு தெரியாது. அந்த வகை புல்லை எடுத்து மெத்து மெத்து வென்று முடைந்து கோரைப்பாய் மாதிரி தைத்து படுத்தால் , மேலே வானத்தில் நக்ஷத்திரங்கள் சந்திரன் தெரிவதுடன், அந்த புல்லால் தைத்த பாய் கம்மென்று கற்பூர வாசனை வீசுமாம். அடாடா, எங்கே கிடைக்கும் இந்த கழு வில் தைத்த பாய்.?
''ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான் '' இந்த பழமொழி உண்மையில் எல்லோரும் அறிந்த பழைய மொழியாக இருந்தாலும் இப்படிப்பட்ட வைத்தியர்கள் நம்மருகிலேயே சிரித்துக்கொண்டு நம்மைத் தோளில் கை போட்டு ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்வார்கள். திரும்பி வர நம்மால் முடியாது, அவர் கை பட்ட ஆயிரம்பேருக்கு மேல் , இப்படி அவருடைய வைத்யம் முடிந்த பின், நாலு பேர் தேவை என்று தான் இதுவரை புரிந்து கொண்டிருந்தேன்.
ஆனால் இதற்கு வேறு அர்த்தம் இருக்கிறது. அந்தக் காலத்தில் மட்டும் அல்ல, இந்த காலத்திலும் கூட நிறைய நோய்கள், மூலிகைகளால் குணமாகிறது என்று அறிகிறோம். நாட்டு வைத்யர்கள் காடுகளில், மலையடி வாரங்களில் எல்லாம் அலைந்து திரிந்து தேடி, பல அபூர்வ மூலிகைகள், வேர்கள், கொடிகள், கிழங்குகள் எல்லாம் சேகரித்து வைத்திருப்பார்கள். எந்த கிழங்கு, வேர், எந்த வியாதிக்கு மருந்து என்று அறிந்தவர்கள். அவர்கள் அனுபவத்தில் ஆயிரக்கணக்கான இப்படிப்பட்ட வேர்கள் வைத்திருப்பார்கள். ஆயிரம் வேர்களை இப்படி வைத்திருப்பவனைக் கூட அரை வைத்தியகனாகத் தான் அப்போதெல்லாம் மதிப்பார்கள் என்றால் முழு வைத்தியன் எப்படி அனுபவஸ்தனாக எவ்வளவு விதமான வேர்களை வைத்திருப்பான்??? எத்தனை வியாதிகளை குணப்படுத்துவான்...
இன்னும் சொல்கிறேன்.
No comments:
Post a Comment