ஆடல் வல்லான் - J.K. SIVAN
ஒரு மஹா யோகி. தீர்க்க தரிசி. திருமூலர் தொடாத விஷயமே கிடையாது.
ஆனந்த தாண்டவம், காளி தாண்டவம் அல்லது காளி நிருத்தம், கெளரி தாண்டவம், முனி நிருத்தம், சந்த்யா தாண்டவம்,. சம்ஹார தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க லலிதம் மற்றும் பிட்சாடனம் என்று பல தினுசு.
தஞ்சாவூர் ஜில்லா திருவெண்காட்டிலும், திருச்செ ங்காட்டங்கு டியிலும் கூட ஈசனின் நாட்டியக் கோலங்களைப் பார்க்கலாம்.
திருமூலர் தன் திருமந்திரத்தில் ஈசனின் இந்தக் கூத்தை ஐந்து வகைகளாய்ப் பிரித்துள்ளார். அவை
சிவானந்தக் கூத்து அறிவையும்
சுந்தரக் கூத்து ஆற்றலையும்
பொற்பதிக் கூத்து அன்பையும்
பொற்றில்லைக் கூத்து ஆற்றல் கூடுதலையும்
அற்புதக் கூத்து அறிவு கூடுதலையும்
குறிப்பதாய்ச் சொல்லுகிறார். திருமூலர் பாடல்களுக்கு அர்த்தமே சொல்லவேண்டாம். எளிதாக புரியக்கூடியவை
சிவானந்தக் கூத்து:
"தானந்தமில்லாச் சதானந்த சத்தி மேல்
தேனுந்தும் ஆனந்தமாநடங்கண்டீர்:
ஞானங்கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்தாட ஆடரங்கானது."
சுந்தரக் கூத்து:
"அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பாலும்
உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல்
கண்டங்கரியான் கருணை திருவுருக்
கொண்டங்கு உமை காணக் கூத்து தந்தானன்றே!"
பொற்பதிக் கூத்து:
தெற்கு வடக்கு கிழக்கு மேற்குச்சியில்
அற்புதமானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில் பேரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனி நடஞ்செய்யுமே!"
பொற்றில்லைக் கூத்து:
"அண்டங்கள் ஓரேழும் அப்பொற்பதியாகப்
பண்டையாகாசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டனிற் சத்தி திரு அம்பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்து கந்தானன்றே!"
அற்புதக் கூத்து:
"இருவருங்காண எழில் அம்பலத்தே
உருவோடருவோடு அருபர ரூபமாய்த்
திருவருள் சத்திக்குள் சித்தனாந்தன்
அருளுருவாக நின்றாடலுற்றானே!"
அஜபா நடனம் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மஹாவிஷ்ணு ஈசனோடு, அம்மையையும், கந்தனையும் சேர்த்து நினைத்து வழிபட்டது பற்றி அந்த மூர்த்தம் சோமாஸ்கந்தராக இருப்பின், ஈசனோடு கூட, அன்னையும், குமரனும் கூட பெருமாளின் மனத்தரங்கில் அஜபா நடனம் ஆடியதாக அல்லவா வரும்?
பல தாண்டவ வடிவச் சிற்பங்களிலும், ஈசன் ஆடும்போது அன்னை அருகிருந்து ரசிக்கும்படியான சிற்பங்களைப் பார்த்திருக்கிறோம். அப்படியே இப்போதும் தெரிந்து கொள்ளவேண்டும். மஹாவிஷ்ணுவின் மூச்சுக்காற்றிலே மேலேயும், கீழேயும் ஈசன் எழுந்தாடியதை அருகே இருந்தவண்ணம் உமையும், கந்தனும் பார்த்துக்கொண்டிருந்தனர். இது நம் மனக்கண்ணால் மட்டுமே பார்த்துக் கேட்டு ரசிக்கவேண்டியது.
ராஜராஜ சோழனின் சிவபக்தி ஈடு இணையற்றது. தன் தலையில் சூடிக்கொண்டிருந்த சோழநாட்டு மணிமகுடத்தை விடவும் அவன் பெரியதாய் மதித்தது ஈசன் திருவடி நிழலையே. எவருக்கும் வணங்கா அவன் சிரம் ஈசன் திருவடியில் தோய்ந்து பதிந்து காணப்படுவதில் பெரு மகிழ்ச்சியும், உவகையும் கொண்டான் அவன். குறிப்பாய்ச் சிதம்பரம் நடராஜாவிடம் பெரும் பக்தி பூண்டவன். தில்லை அந்தணர்களே பரம்பரை, பரம்பரையாகச் சோழ அரசர்களின் தலையில் மகுடம் சூட்டும் உரிமையைப் பெற்றிருந்தது மட்டும் இதன் காரணம் அல்ல. ஆடவல்லான் என அப்பர் ஸ்வாமிகள் அன்புடன் அழைத்த தில்லை நடராஜனின் ஆநந்தக் கூத்தில் மெய்மறந்தான் ராஜராஜன். வடநாட்டிலிருந்து வெற்றி கண்டு வந்த ராஜராஜன் தன் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருக்க விருப்பமின்றி, அனைத்துப் பெருமையையும், வெற்றியையும் ஈசனுக்கே அர்ப்பணித்துத் தஞ்சைப் பெருங்கோயிலை உருவாக்கினான்.
அங்கே எல்லாமே பெரிது பெரிதான சிற்பங்கள் தானே. பெரிய நந்திகேஸ்வரர், பெரிய ஆவுடையார், பெரிய லிங்க பாணம், பெரிய கருவறைக் கோபுரம் சுற்றுப் பிராஹாரங்களிலும் ஈசனின் பல்வேறு வடிவங்களில் பெரிய சிற்பங்கள் அமைத்தான். பெரிய கோவில் விமானத்தை இருநூறு அடிக்கு மேல் உயரமாய்க்கட்டி தக்ஷிணமேரு என்றும் பெயர் வைத்திருக்கிறான். உள்ளேயும் தக்ஷிண விடங்கர் என்ற பெயரில் ஒரு மூர்த்தம் உண்டு. சோமாஸ்கந்தர் தான் அவர். மூலஸ்தான மூர்த்தியான அருவுருவான லிங்கத்தின் பிரதிநிதியாக அனைத்துச் சிவன் கோயில்களிலும் காணப்படும் சோமாஸ்கந்த மூர்த்திக்கு இந்தத் தஞ்சைப் பெருங்கோயிலில் விடங்கர் என்றும் ஒரு பெயர். தக்ஷிண விடங்கர் என்றாலே வீதி விடங்கரும், திருவாரூரும் தான் நினைவில் வரும். சப்த விடங்க ஸ்தலம் இருந்தாலும் பெருமையும், பெயரும் பெற்ற தலம் திருவாரூரே ஆகும்.
சமீபத்தில் தான் சப்த விடங்க க்ஷேத்திரங்களை சென்று தரிசித்து அவற்றை பற்றி யாத்ரா விபரங்கள் கொடுத்தேன்.
திருவாரூர் ஒரு காலத்தில் சோழநாட்டுத் தலை நகரமாகவும் இருந்து வந்தது. ஆகவே பழைய தலைநகரான திருவாரூரை நினைவு கூர மட்டுமின்றி, தன் குலத்து முன்னோர்களான மனுநீதிச் சோழனிலிருந்து திருவாரூரைத் தலைநகராய்க் கொண்டு ஆட்சி புரிந்த அனைத்துச் சோழ மன்னர்களின் நினைவாகவும் இங்கே உள்ள மூர்த்தத்துக்கும் விடங்கர் என்ற பெயரை ராஜ ராஜ சோழன் சூட்டினான்.
தியாகராஜாவை இப்படிப் பெருமைப் படுத்திய ராஜராஜன், நடராஜாவையும் பெருமைப் படுத்தி உள்ளான். இங்கே உள்ள நடராஜருக்கு “ஆடல்வல்லான்” என்ற பெயர். இந்தக் கோயிலின் ஆடவல்லானுக்காக வழிபாட்டில் ஏற்படுத்தப் பட்ட பல வகை உபசாரங்களில் ஆட்டமும், பாட்டமும் முக்கியமாக இருந்து வந்திருக்கிறது. அதிலே சாந்திக் கூத்து என்ற ஒன்றும் இருந்திருக்கிறது. அது என்ன என்றால் உக்ரகாளியை அடக்கிய ஆடவல்லான், அவளைத் தோற்கடித்து, அவளுடைய உக்ரத்தை சாந்தப் படுத்தியதே சாந்திக்கூத்து என்ற பெயரில் வழங்கி வந்ததாய்த் தெரியவருகிறது. அது பற்றிக் கொஞ்சம் சொல்லட்டுமா?
இந்த சாந்திக் கூத்தை தான் மலையாள நாட்டிய நாடக கதகளி ஆட்டம் என்று பரமாசாரியாள் சொல்வார்.
இவை நாட்டியம் கலந்த நாடக வகையைச் சார்ந்தது என்றும் சொல்கிறார். நாட்டிய, நாடக வகைகள் சாந்திக் கூத்து, விநோதக் கூத்து என இருவகைப் பட்ட்து என்றும், விநோதக் கூத்தில் கொஞ்சம் ஹாஸ்யம், விநோதம், கலந்து பொம்மலாட்டம், கழைக்கூத்து, குடக்கூத்து (நம்முடைய கரகாட்டம் மாதிரி) இவை எல்லாமும் கொஞ்சம் வேடிக்கை, விளையாட்டு கலந்து ஆடப் பட்டதாயும், சாந்திக் கூத்து இவற்றிலிருந்து வித்தியாசப் பட்டதாயும் கூறுகின்றார். சாந்தி கூத்து நாலு வகைகள் என்று தெரிய வருகிறது. ஒவ்வொன்றாய்ப் பார்ப்போமா?
சொக்கம்: சுத்த நிருத்தம் என்று சொல்லப் படும் இதில் பாட்டுக்கு அபிநயமாக இல்லாமல் தில்லானா, ஜதிஸ்வரம் போன்ற அடவுகளைப் பிடித்து மனசை உயர்த்தும் வண்ணம் நளினமாய் உடலை வளைத்துக் கொண்டே அதற்கேற்றவாறு கை, கால்களையும் வளைத்துக் காட்டவேண்டும். இவற்றில் 108 கரணங்கள் உண்டெனத் தெரிய வருகிறது. அந்தக் கரணங்களை ஈசன் ஆடும் கோலத்தில் தஞ்சைப் பெருங்கோயிலின் கர்ப்பகிருஹத்தைப் பிரதக்ஷிணம் செய்யும் போது விமானத்தில் இரண்டாம் தளத்தில் அமைக்கப் பட்டிருக்கின்றன. கூர்ந்து கவனிக்கவேண்டும், நாட்டிய சாஸ்திரத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் 108 கரணங்களும் சொல்லப் பட்டிருக்கிறதாயும் தெரிய வருகிறது.
அடுத்து மெய்க்கூத்து: இதில் நாயகன், நாயகி பாவத்தில் இறைவனை வழிபடுவது பற்றியே சொல்லப் படும். ஜீவாத்மாவும், பரமாத்வாவும் ஐக்கியமாகும் பாவத்தில் பாடல்கள் அமைந்துள்ள தேவார, திருவாசகப் பாடல்களைக் கொண்டு அமைக்கப் படும்.
மூன்றாவது அவிநயம்: கவனிக்கவும் அவிநயம். விநயம் என்றால் என்ன அர்த்தமோ அதற்கு மாற்று என இங்கே அர்த்தம் கொள்ளக் கூடாது. அபிநயமே, அவிநயமாக இங்கே ஓரெழுத்து மாற்றிச் சொல்லப் படுகிறது. நவரசங்களையும் அபிநயம் மூலம் வெளிப்படுத்திக் காட்டுவதும் இதன் கீழே வரும். பல்வேறு விதமான அபிநயங்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள்.
No comments:
Post a Comment