Friday, October 20, 2017

பார் போற்றும் பரம ஹம்சர்

பார் போற்றும் பரம ஹம்சர் - J.K. SIVAN
யானைக்கதை
''எம்'' தொடர்ந்து ராமகிருஷ்ண பரமஹம்சரை கேள்விகள் கேட்டு தெளிவு பெறுகிறார். பதில்கள் எப்படி தங்கு தடையின்றி ராமக்ரிஷ்ணரிடமிருந்து வருகின்றன என்று அதிசயித்தார். உயர்ந்த ஞானியிடம் தெளிவு பெற எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

'M.'' சுவாமி உலகில் எப்படி வாழவேண்டும்?
பரமஹம்சர்: '' கடமைகளை விடாமல் செய்யும்போது கவனத்தை பகவான் மேல் வை. குடும்பத்தில் எல்லோரிடமும் அன்பாக சேர்ந்து வாழ்வதில் அவர்களுக்கு சேவை புரிவதில் தவறில்லை. நெருங்கி பழகும் கே நேரம் உள் மனதில் இவர்கள் எவரும் என்றும் உனைச் சேர்ந்தவர்கள் இல்லை. சந்தையில் கூட்டம். நிரந்தரமற்ற உறவு என்பது அடித்தளமாக இருக்கவேண்டும்.

ஒரு வேலைக்கார பெண்மணி காலையில் இருந்து மாலைவரை உன் வீட்டில் வேலை செயகிறாள். உன் குழந்தைகளை அன்போடும் ஆசையோடும் பார்த்துக் கொள்கிறாள். அவர்களும் ஒட்டுதலாக அவளிடம் இருந்தாலும் அவள் மனதில் இடம் பெற்றவர்கள். ஆனாலும் அவர்கள் தமது குழந்தைகள் இல்லை என்ற உணர்வு உண்டு. அவளுடைய சொந்த குழந்தைகள் மட்டுமே அடிமனதில் உள்ளவர்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ, வேளா வேளை சாப்பிட்டார்களா, தூங்கினார்களா, பசிக்கு யார் உணவு கொடுத்தது என்ற எண்ணங்கள் எப்போதும் அவள் மனதில் ஓடும்.

ஆமை நதியில் நடமாடினாலும் அதன் எண்ணம் கரையில் தான் எப்போதோ இட்ட சினைகள் மேலே தான் இருக்கும். உன் கடமைகளை அதுபோல் செய்து கொண்டே மனதை கடவுள் மீது வை. கடவுள் மீது மனது செல்லவில்லை என்றால் உலக வாதனைகள் உன்னை அலைக்கழிக்கும். மீள முடியாது. உலக ஆசா பாடங்களில் மனம் போய்விட்டால் புதை குழி தான். ஜாக்கிரதை.
பலாப்பழத்தை தோல் உரிக்க கையில் பிசின் படாமல் ஒட்டாமல் இருக்க எண்ணெய் நிறைய தடவிக்கொள்கிறோமே அதே தான். தெய்வீக எண்ணம் தான் எண்ணெய் இங்கே. தனிமை அவசியம் அப்பா. நேரம் ஒதுக்க வேண்டும் அதற்கு. பாலை அசையாமல் உறைய வைத்தால் தான் தயிர். அப்புறம் வெண்ணை.இறை நாட்டத்தில் மனது அசையாமல் இணையவேண்டும். மனித மனதை குரங்காக அலைக்கழிப்பது பொன்னும் பெண்ணும் பற்றிய எண்ணம் ஒன்றே.
உலகம் நீர். மனது பால். நீரும் பாலும் சேர்ந்தால் பிரிக்க முடியாது. ஒன்றே. கலந்த பின் சுத்த பால் எங்கே ?? அதை தயிரானபின் கடைந்தால் நீரின் மேல் வெண்ணை ஒட்டாமல் பிரியும் இல்லையா? ஆன்ம ஒழுக்கம் தனிமை தான் ஞானம் தெளிவு தரும். அது தான் வெண்ணெய். அதை பெற்றால் உலகம் எனும் தண்ணீரோடு ஒட்டாது. பணம் உலக வாழ்க்கைக்கே தவிர ஆன்மீக உலகத்தில் அதற்கு மதிப்பில்லை. தேவையும் இல்லை

M: "சுவாமி கடவுளை கண்ணால் பார்க்க இயலுமா?''
ப: ''ஆஹா நிச்சசயமாக. ஏன் முடியாது? தனிமை. பகவன் நாம உச்சாடனம். சத்தியம் அசத்தியம் பேதம் உணர்தல் அசத்திய உலகத்தோடு ஓடடாமை. இது முடிந்தால் கடவுளைகாண்பது எளிது.

M: "எந்த நிலைமையில் விதிக்கு உட்பட்டு, ஒருவன் கடவுளை காண முடியும் சுவாமி?''
ப: ''மனம் குவிந்து உருகி அவனை உன் இதயத்தில் தேடு.பார்க்கலாம். குழந்தை குட்டி மனைவி வீடு வாசல் என்று பாசமும் நேசமும் கொண்டு உருகி கண்ணீர் விட்டு பணத்தை தேடுபவன் போகாத ஊருக்கு வழி தேடுபவன். கடவுளை நாடி எவன் மனம் உருகி வாடுகிறான். தேடுகிறான்?? சொல்?

பகவானை தேடல் நாடல் என்று சொன்னேனே அதை விடியற்காலையில் சூர்யோதயத்துக்கு முன் தோன்றும் அரை வெளிச்சம் என்று சொல்லலாம்.அதை தொடர்ந்து பளிச்சென்று சூரிய தரிசனம்.

ஒரு உதாரணம் சொல்கிறேன் கேள். நீ பகவானை தேடுவது எது போல் இருக்கவேண்டும் என்றால், இரவும் பகலும் இடைவிடாமல் நீ உலக சாதனங்கள் மேல் கொள்ளும் பற்றை போல, தாயின் குழந்தை பாசம் போல், ஒரு உத்தம மனைவி தனது பர்த்தாவை நேசிப்பது போல்., இந்த மூன்றின் மேல் உலகத்தில் வைக்கும் பற்றை அப்படியே இறைவன் மேல் வைத்தால் கடவுளை காணலாம்.

"பூனைக்குட்டி ஒன்றுமட்டும் தான் தெரியும் மியாவ் என்று கத்த. அதன் அம்மா பூனை வசம் தன்னை பூரணமாக சரணடைந்து விடுகிறது. அம்மா பூனை அதை கவ்வி சமையல் அறையில் கொஞ்ச நேரம்,சில சமயம் பரணில், சில சமயம் படுக்கை அறையில் அலமாரியில் கொண்டு வைக்கிறது. பூனைக்குட்டியின் ''மியாவுக்கு'' அம்மா பூனைக்கு அர்த்தம் நன்றாக புரியும். நமது வேஷமில்லாத உண்மையான பிரார்த்தனை பகவானுக்கு நன்றாக அதே போல் புரியும். நமக்கு எது எப்போது தேவையோ அதை கொடுப்பான்.''

''எம்'' முக்கு பரமஹம்சரை ரொம்ப பிடித்துவிட்டது. இனி அடிக்கடி வர ஆரம்பித்தார். இதுபோன்ற எளிய அழகாக புரியும்படி போதிக்கும் ஞானியைப் பற்றி கேள்விப்பட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை.

சிலநாள் கழித்து ஒரு ஞாயிறு மாலை. ராமகிருஷ்ணரின் அறையில். நிறைய பக்தர்கள் அமர்ந்திருக்க ஒரு 19வயது காலேஜ் மாணவனும் இருந்தான். பெரிய கண்கள்.துறுதுறுவென்று இருந்தான். பேச்சு கணீரென்று.

உலக வாழ்க்கை பற்றியும் , நாம் எப்படி வாழவேண்டும் என்றும் பரமஹம்சர் பேசிக்கொண்டிருந்தார்.''யார் யார் என்னென்னவோ சொல்வார்கள் அதெல்லாம் லட்சிய படுத்த கூடாது. தெருவில் ஒரு பெரிய யானை நடந்து போகும்போது சில நாய்கள், எதிர்த்து குறைக்கும், யானை அதைப் பார்ப்பது கூட கிடையாது. தான் பாட்டுக்கு போகும். நரேந்திரா, நீ என்ன சொல்றே? என்று அந்த காலேஜ் மாணவனைப் பார்த்து கேட்டார்.

நரேந்திரன்: ''நாய்கள் என்னைப் பார்த்து குறைத்துவிட்டு போகட்டுமே''

பரமஹம்சர் சிரித்துக்கொண்டே ''பகவான் எல்லோரிலும் இருக்கிறார். நல்லவர்களோடு மட்டும் நாம் சத்சங்கம் வைத்துக் கொள்ளவேண்டும். துர் சகவாசம் வேண்டாம். புலியிலும் பகவான் இருக்கிறான்.அதற்காக புலியை போய் கட்டிக்கொஞ்ச முடியுமா? புலியிலும் தானே கடவுள் என்று நீ சொன்னால் அதே நேரம், புலி கிட்டே போகாதே என்று சிலர் உனக்கு எச்சரிக்கை கொடுக்கிறார்களே அவர்களிலும் தானே கடவுள் இருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும் .அவர்கள் சொல்லை இகழலாமா?

ஒரு கதை. காட்டிலே ஒரு ரிஷி அவனுக்கு நிறைய சிஷ்யர்கள். ''எல்லோரிலும் கடவுள் இருக்கிறார் நமஸ்காரம் பண்ணு'' என்கிறார். ஒரு சிஷ்யன் காட்டில் விறகு சேகரிக்கப்போனவன் எதிரே ஒரு மதம் பிடித்த காட்டு யானை. ''யானை வருது. ஓடு ஓடு ' என்று அதன் மேல் இருந்த மாவுத்தன் கத்தினது காதில் விழுந்தாலும் குரு உபதேசம் அவனை யானைக்கு முன் நமஸ்காரம் பண்ணவைத்து யானை அவனை தும்பிக்கையால் தூக்கி தூர எறிந்தது. எலும்புகள் முறிந்து மயங்கி விழுந்து கிடந்தான்.

அவனுக்கு சிச்ருஷை செய்தவர்கள் '' ஏண்டா மதயானை வருதுன்னு தெரிஞ்சவுடனே ஓடி இருக்கலாமே நீ''
''என் குரு பகவான் எந்த ரூபத்திலும் வருவார் என்று சொன்னது ஞாபகம் வந்து ஓடாமல் எதிரே வணங்கினேன் ''

''வாஸ்தவம். ஆனால் யானை மேலிருந்த ஒருவன் ''ஓடு தூரப்போ என்று சொன்னதை நீ கேட்கவில்லையே. கடவுள் அவன் ரூபத்திலும் வந்து உபதேசித்ததை ஏன் அலட்சியம் செயது இந்த அவஸ்தை பட்டாய் '' என்றார்கள் மற்றவர்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...