யாத்ரா விபரம் j.k. sivan
திடீர் புனித பயணம் - 1
விடியற்காலைகளில் சென்னை முக்கிய தெருக்களில் அதிக வண்டி நடமாட்டம் இல்லை என்பதால் தடையின்றி வேகமாக பயணிக்க அனுகூலம். உண்மையில் அது ஒரு இன்ப அனுபவம்
ஒரே நாளில் மூன்று அம்பாள் தரிசனம் செய்வது இப்போதெல்லாம் ஒரு வழக்கமாகி விட்டது. திருவுடை அம்மன்,வடிவுடை அம்மன் கொடியிடை அம்மன்களை மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய ஊர்களில் நானும் இவ்வாறே ஒரே நாளில் தரிசித்து மகிழ்ந்திருக்கிறேன்.
மேலூர் கிராமம் மீஞ்சூரிலிருந்து 3 கி.மீ. தூரம் தான். அங்கு சிவன் பெயர் திருமணங்கீஸ்வரர். அம்பாள் திருவுடை அம்மன். காலையில் பார்க்க வேண்டியவள். இச்சா சக்தி வடிவம். கேட்டதை கொடுப்பவள். திருவொற்றியூரில் இருப்பவள் வடிவுடை அம்மன். ஞான சக்தி வடிவம். மத்தியானம் பார்க்கவேண்டியவள். திருமுல்லை வாயில் என்று சென்னை அருகே முதலில் தென்படுபவள் கொடியிடை அம்மன், கிரியா சக்தி சாயந்திரம் பார்க்கவேண்டியவள். மூன்று ஆலயங்களும் ஒன்றோடொன்று ரகசிய பாதாள பாதையால் இணைந்தவை என்கிறார்கள். யாரும் சென்று பார்க்க இயலாது. மூன்று அம்மன்களையும் பௌர்ணமி அன்று தரிசிக்க வேண்டும் என ஒரு நம்பிக்கை.
மேலூரில் திருவுடை அம்மன் அழகிய நறுமண செடிகொடிகள் இடையே காணப்பட்டவள் என்று ஐதீகம்.
இன்று மீஞ்சூர் அருகே மேலூரில் திருவுடை அம்மனை காலை 8 மணிவரை தரிசிக்க வழியில்லை. இப்போதெல்லாம் கோவில்களை கவனிப்பார் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும். அதற்காக இப்படி கதவை திறக்காமல் பக்தர்களை திருப்பி அனுப்புவார்களா?
எல்லா ஊர்களிலுமே உள்ளூர்க்காரர்கள் பெரும்பாலோருக்கு அவர்கள் ஊரிலிருக்கும் பழைய கோவில்கள் எங்கே இருக்கின்றன என்றே கூட தெரியவில்லை. வழிகாட்டுவோரும் வலது பக்கம் போங்கள் என்று இடது கையை நீட்டுகிறார்கள்.
மூன்று கிலோ மீட்டர் தூரத்து மீஞ்சூரில் பெருமாளும் சிவனும், தனித்தனி கோவில்களில் தான், அற்புத காட்சி கொடுத்தார்கள். பெருமாள் வரதராஜர். 400 வருஷங்களுக்கு மேலான ஆலயம். வட காஞ்சி என ஒரு பெயர் .
பெருமாளுக்கு திருப்பதி பாலாஜி போன்ற அலங்காரம்-- ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக-- அற்புதமாக நின்ற திருக்கோலமாக காட்சி அளிக்கிறார். இன்னொரு விஷயம் இந்த ஊருக்கு வெகு அருகாமையில் இன்னும் ரெண்டு பெருமாள்கள் இருக்கிறார்கள். ஒருவர் வீற்றிருந்த திருக்கோலத்தில், மற்றவர் கிடந்த திருமேனியாக. மூவரையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷமென்றும் சொல்வதுண்டு.
கிடந்த திருக்கோலத்தில் இருப்பவரை தேவதானம் எனும் அமைதியான ஊரில் சுற்றிலும் பச்சை பசேலென்ற வயல்களுக்கு இடையே தரிசித்து ஏற்கனவே நிறைய எழுதியிருக்கிறேன். முழு உருவமும் சாளகிராமத்தால் உருவானவர். ரங்கநாதர். வட திருவரங்கம் என்று அந்த ஊருக்கு பெயர். மரக்காலை தலையணையாக வைத்து நீண்ட அற்புத சயன கோலத்தில் திருவரங்கனை விட அரை அடி அதிகமாக நீளத்தில். அங்கே 18 அடி . இங்கே 18 1/2 அடி நீளம். ''ஜருகண்டி, காசு கொடு கிட்டே போய் பார்க்கலாம்'' க்யூ வரிசை, எதுவுமே கிடையாது. அரை அடி தூரத்தில் நாள் எல்லாம் அருகே நின்று அற்புதமாக சேவிக்க ஏற்றவர். சின்ன கிராமத்தில் பெத்த பெருமாள்.
காட்டூர் எனும் எட்டு கிமி தூர கிராமத்தில் இருப்பவர் இன்னொரு பெருமாள், அவர் வைகுண்ட வாசர் . வீற்றிருந்த திருக்கோலம்.அவரைப்பற்றி அடுத்த யாத்ரா விபரத்தில் சொல்கிறேன்.
மீஞ்சூருக்கு ஏன் அந்த பெயர் ?
மௌஞ்சஆரண்யம் என்ற சமஸ்க்ரித வார்த்தையில் இருந்து வந்தது. முஞ்சி என்று ஒரு தர்ப்பை. அது ஒரே காடாக இருந்த ஊர். மௌஞ்சி ஊர் மீஞ்சூர் ஆகிவிட்டதில் ஆச்சர்யம் வேண்டாம். மீஞ்சூர் பெருமாள் வரதராஜன். தாயார் பெருந்தேவி.
தரிசன நேரம்: : 7am-11am and 5pm-8pm பட்டர்: Jagannathan 99409 84355
மீஞ்சூரில் சிவன் கோவில் பின்னால், வரதராஜர் ஆலயத்துக்கு முன்னால் , இடையில், ஒரு அரசமரத்தடியில் ஒரு ஆஞ்சநேயர் அமைதியாக கதையை தோளில் சுமந்து நிற்கிறார். சிறிய கோவில் என்றாலும் நிறைய பக்தர்கள் சூழ்ந்த ஆலயம்.
மீஞ்சூர் ஏகாம்பரநாதர் ஆலயம் மிக பழைமையானதாக இருந்து சமீபத்தில் புத்துப்பிக்கட்ட ஒரு கஜ பிரஷ்ட அமைப்பு கோவில். கோஷ்டத்தில் அற்புத துர்க்கை, தக்ஷிணாமூர்த்தி, ப்ரம்மா கணேசர்கள் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment