Sunday, October 22, 2017

பார்போற்றும் பரம ஹம்சர்

பார்போற்றும் பரம ஹம்சர் - J.K. SIVAN

ஒரு பாம்பு கதை


''எம்'' தேன் குடித்த வண்டாகிவிட்டார். விடாமல் பரமஹம்சரை .தொடர்ந்து சென்று தான் கேட்டவை பார்த்தவை எல்லாமே மறக்காமல் எழுதி வைத்தார். புண்ணியவான் அவரால் நமக்கு பரமஹம்சர் அருளிய பொன்மொழிகளை கேட்க முடிகிறது. படிக்க முடிகிறது. நிறைய ''எம்'' கள் நமக்கு தேவைப்படுகிறது. எத்தனையோ இழந்து பரதேசிகளாக நிர்கதியாக நிற்கிறோமே.

பரமஹம்சர்: ''தண்ணீர் கூட ஒருவிதத்தில் கடவுள் என்றாலும் சுத்த புண்ய நதிகளின் ஜலம் வழிபாட்டுக்கு உதவும். மற்றது கை கால் பாத்திரங்கள் அலம்ப துணி துவைக்க மட்டுமே. பகவான் எல்லோர் இதயத்திலும் இருக்கிறான் என்றாலும் தீயவர்கள் என்று அடையாளம் கண்டு கொண்டவர்களோடு பழகுவதோ, தொடர்பு கொள்வதோ கூடாது. பேசவே கூடாது.

பக்தன்: ''சுவாமி ஒரு கெட்டவன் கெடுதல் செய்தால் பொருத்துக் கொண்டு பேசாமல் இருக்கவேண்டுமா?

ப: கெட்டவர்களிடமிருந்து உன்னை காத்துக் கொள்ளலாம். அவர்கள் கெடுதல் செய்தவர்கள் என்பதற்காக நீ அவர்களுக்கு தீங்கு செய்ய கூடாது. ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்:

"சில மாடு மேய்க்கும் பையன்கள் கொடிய விஷ பாம்பு வாழும் இடத்தை காட்டில் பார்க்கிறார்கள். அங்கிருந்து ஓடியவர்கள் வழியில் ஒரு முனிவரை பார்க்கிறார்கள்.

''சுவாமி அந்த பக்கம் போகாதீர்கள் ஒரு கொடிய விஷ நாகம் இருக்கிறது.''

''அதனால் என்ன குழந்தைகளா? எனக்கு பாம்பிடம் பயமில்லை. என்னிடம் பாதுகாப்பிற்கு சில மந்திரங்கள் இருக்கிறது. ''

அந்த ரிஷியின் எதிரே படமெடுத்து பாம்பு நின்றது. மந்திரம் உச்சரித்தார். பாம்பு ஒரு புழுவைப் போல் சுருண்டு அவர் காலடியில் கிடந்தது.

''இதோ பார் பாம்பே, எதற்கு எல்லோரையும் நீ கடிக்கிறாய்? உனக்கு ஒரு மந்திரம் சொல்லித்தருகிறேன். அதை உச்சரித்தால் பகவான் உனக்கு அனுக்கிரஹம் பண்ணுவார். அவர் மீது உனக்கு பக்தியும் பாசமும் உண்டாகும். சில நாளில் உன்னிடம் இருக்கும் கொடிய தன்மை மறைந்து சாத்வீகமாக மாறிவிடுவாய். யாரையும் விஷத்தால் தீண்டி கடிக்காதே.''

சரி என்றது பாம்பு. ரிஷி மந்திரம் சொல்லி தந்தார். ''நான் கொஞ்ச காலம் கழித்து வந்து உன்னை சந்திக்கிறேன் '' என்று சென்றுவிட்டார்.

சில நாட்களில் அந்த மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கு தெரிந்து விட்டது இந்த பாம்பு நல்லது. கடிக்காது என்று.
பயம் இன்றி அதை நெருங்கி ஒருவன் வாலை பிடித்து சுழற்றி தரையில் வீசினான். ஒரு சிலர் கல்லால் அடித்து காயப்படுத்தினார்கள். அவர்கள் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொஞ்சம் கொஞ்சமாக அது உடல் இளைத்து, இறக்கும் தருவாய்க்கு வந்துவிட்டது. பாவம் அவர்கள் துன்புறுத்தியதில் ரத்தம் கக்கியது. சக்தியிழந்து மயக்கமடைந்தது. இறந்து விட்டது என்று எண்ணி அவர்கள் சென்றுவிட்டார்கள்.

மெதுவாக நினைவு திரும்பி தனது பொந்துக்குள் ஊர்ந்து சென்று ஒளிந்துகொண்டது. சில எலும்புகள் முறிந்துவிட்டன. நகரவே முடியவில்லை. ஆகாரம் தேட முடியாமல் மரணத்தை எதிர் நோக்கி காலம் சென்றது. தோல் போர்த்திய எலும்புக்கூடாகிவிட்டது.

மந்திரம் கற்றதிலிருந்து யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. துன்பங்களை தாங்கி பசியோடு வாடியது.
இப்படி காலம் சென்ற சில நாட்கள் கழித்து அந்த ரிஷி மீண்டும் காட்டுக்கு வந்த போது அந்த சிறுவர்கள் அவரை சந்தித்து வணங்கினார்கள்.

''சிறுவர்களே, அந்த பாம்பு உங்களுக்கு இப்போதெல்லாம் தொந்தரவு செய்கிறதா, யாரையாவது கடிக்கிறதா?''
என்று விசாரித்தார்.

''அது எப்போதோ இறந்துவிட்டதே சுவாமி ''

''ஓ அப்படியா'' என்று சொல்லிவிட்டு ரிஷி காட்டுப்பக்கம் சென்றார். அந்த பாம்பு அவரது வருகையை தெரிந்து வழியில் காத்திருந்தது.

''அட என்ன இப்படி ஆகிவிட்டாய் பாம்பே? என்ன காரணம்?''

''முனிவரே, தாங்கள் உபதேசித்தபடியே அன்று முதல் நீங்கள் சொல்லிக்கொடுத்த மந்திரத்தை விடாமல் சொல்லி வருகிறேன். யாருக்கும் துன்பமோ கெடுதலோ விளைவிக்க வில்லை. நான் தான் அதனால் சித்ரவதை பட்டு இப்படி மரணத்தை எதிர் நோக்கி காலம் தள்ளி வருகிறேன்.

''ஆஹா பாம்பு தமோ ரஜோ குணத்தை விட்டு சத்வ குணத்தை கடைபிடித்திருக்கிறது. ஏ பாம்பே உன் குணம் மட்டுமே உன் உடல் துன்பத்துக்கு இளைப்புக்கும் காரணம் இல்லை. வேறு ஏதோ இருக்கிறது. யோசித்து சொல் எது என்று?'' .என்கிறார் ரிஷி.

''ஆம் ரிஷி இப்போது கவனத்துக்கு வருகிறது. அந்த சிறுவர்கள் நான் சாது, கடிக்க மாட்டேன் என்று தெரிந்து என்னைக்கண்டு பயப்படாமல் என் வாலைப் பிடித்து இழுத்து கல்லின் மீது வீசி அடித்து என் எலும்புகளை நொறுக்கிவிட்டார்கள். அது தான் உண்மை காரணம் ''

''உன்னை போல் ஒரு சர்வ முட்டாளை நான் பார்த்ததே இல்லை பாம்பே. உன்னை காப்பாற்றிக் கொள்ளக்கூட அறியாத முட்டாள் நீ. நீ யாரையும் விஷம் தீண்டி கடிக்காதே என்று தானே உனக்கு உபதேசம் செய்தேன். புஸ் என்று சீறி அவர்களை பயமுறுத்தி அருகில் நெருங்காமல் பார்த்துக்கொள்ளாதே என்றா சொன்னேன் ''

உனக்கு கெடுதல் செய்பவர்களை நீ பயமுறுத்தி உன்னை பாதுகாத்துக் கொண்டு இருக்கலாமே'' என்கிறார் ரிஷி.

பரமஹம்சர் இந்த கதையை சொல்லிவிட்டு மனிதர்களாகட்டும், விலங்குகளாகட்டும், பறவைகள், மரங்கள் எதுவானாலும் நல்லது கெட்டது இருக்கிறது. பயமுறுத்தும் கோபமான புலி இருக்கிறது, மரங்களிலும் விஷ காய் கனிகள், நல்ல இனிய கனிந்த பழ மரங்கள் இருக்கிறது. மனிதர்களிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். பகவான் மேல் பற்று கொண்டவர்களும் உண்டு. உலக இயல்பு வாழ்க்கையில் வீழ்ந்து அற்ப சுகம் தேடுபவர்களும் உண்டு'' என்கிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...