யாத்திரா விபரம் J.K. SIVAN
AUGUST 15, 2017 -- நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததாக பெரியவர்கள் எல்லோரும் சொல்லி நாம் சந்தோஷமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளும் நாள். நான் சின்ன பையனாக இருந்தபோது அதிகமாக சந்தோஷம் எனக்கு இருந்த நாள். அப்போது எனக்கு எந்த பொறுப்பும் இல்லாமல் பள்ளிக்கூடம் வீடு சாப்பாடு விளையாட்டு தூக்கம் மட்டுமே இருந்ததால் வெளியேயும் உள்ளேயும் சுதந்திரமாக இருந்திருக்கிறேன். அதற்கு மேல் சுதந்திரத்தை பற்றி சொல்ல ஆன்மீகத்தில் இடம் கிடையாது.
காரைக்குடி கூப்பிட்டு இருந்தார்கள். ராமாநுஜரைப் பற்றி நான் பேசினேன். வீரவாலிபன் வாஞ்சி, கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி, பாரதி பற்றி எல்லாம் மற்றோர் பேசினார்கள். கேட்டேன். தெரிந்ததையே மீண்டும் கேட்க சந்தோஷமாக இருந்தது. அன்று காலை என்னை காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து தனது வீட்டுக்கு வரவழைத்து நல்ல உபச்சாரத்தோடு காலை மாலை இரவு உணவு கொடுத்த ஒய்வு பெற்ற டெபுடி கலெக்டர் ஸ்ரீனிவாசன் காரில் காலையில் திருமெய்யம் கோயிலுக்கு அழைத்து சென்றார். அது பற்றி ஏற்கனவே உங்களுக்கு யாத்ரா விபரத்தில் எழுதிவிட்டேனே . திரும்பும் வழியில் ஒரு இடத்தில் கார் நின்றது.
அதோ பாருங்கள் இங்கே ஒரே இடத்தில் 108 பிள்ளையார்கள் உள்ள எங்க ஊர் கோயில் என்று ஒரு மண்டபத்தை காட்டினார். அருகே சென்று பார்த்தால் அடேயப்பா!
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி நகரத்தில் நகரத்தார் அமைத்த இக்கோயில், சிவன் மற்றும் பார்வதி தம்பதியினரின் மகனாகிய கணேசருக்காக எழுப்பப்பட்டதாகும். இக்கோயில், 108 கணேச மூர்த்திகள் என்றழைக்கப்படும் 108 சிலைகளைக் கொண்டுள்ளதால், இது நாடெங்கிலும் புகழ் பெற்று விளங்குகிறது. பக்தர்கள் பல ஊர்களில் இருந்து இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
கணேசர் வழிபடுவோரின், வாழ்வில் வரக்கூடிய அனைத்து இன்னல்களையும், தீர்க்கவல்லவர் (விக்ந விநாயகர்) என்பதால் உள்ளூர் மக்களும் அதிக அளவில் வருகின்றனர். எந்த காரியம், புது முயற்சிகள் எதுவும் எடுப்பதற்கு முன், இங்கு வந்து கணேசரை பிரார்த்தித்து விட்டு, அதற்குப் பின்பே ஆரம்பிக்கின்றனர். கணேசனை கும்பிட்டு துவங்கினால் அம்முயற்சிகள் தடங்கல்கள் ஏதுமின்றி, நல்ல பலனைக் கொடுக்கும் என்று நமது நம்பிக்கை.
கணேசரை மகிழ்விக்க அவருக்கு மிக விருப்பமான ‘லட்டு’ மற்றும் ‘மோதகம்’ ஆகியவைகளை 108 பிழையார்களுக்கும் நைவேத்யம் செயது விநியோகம் செயகிறார்கள்.
அங்கிருந்து சற்று தூரத்திலேயே இன்னொரு கோவில் பிரபலமானது இருக்கிறது. சக்தி உருவான கொப்புடைய நாயகி அம்மன் கோயிலில் எப்போதுமே நிறைய பக்தர்கள் புடை சூழ தரிசனம் செய்ய வருகிறார்கள். சுமார் 500 வருஷ கோவில். சித்திரை ரெண்டாம் செவ்வாய் கிழமை அன்று அடேயப்பா, பூச்சொரிதல் விழா கொண்டாட கூட்டம் அம்மும். இப்போது புரட்டாசி நவராத்திரி நீங்கள் இல்லாமல் போய்விட்டீர்களே என்று ஒருவர் எனக்கு டெலிபோன் செய்தார். பிரமாதமான அலங்கார அர்ச்சனை ஏற்பாடுகள் பற்றி சொன்னார். மனக்கண்ணால் தரிசித்தேன். அம்மன் வரப்பிரசாதி. முக்கால்வாசி நகரத்தாருக்கு குல தெய்வம். கொப்புடைய நாயகி கோவில் தூண்களில் அற்புத சித்திரங்கள் நடித்திருக்கிறார்கள். சிலவற்றை கிளிக்கிட்டேன். இணைத்துள்ளேன். நண்பர் சுகவனம் சென்னையிலிருந்து என்னோடு வந்து இந்த யாத்திரையிலும் பங்கு கொண்டார்.
கொப்பு என்றால் கிளை. நாம் பேச்சு வழக்கில் கப்பும் கிளையாக என்று சொல்கிறோம். அது கப்பு அல்ல கொப்பு. பஞ்ச லோக விக்ரஹம். அக்னி கிரீடம். வலது மேற்கரத்தில் திரிசூலம். கீழ்கரம் அபய ஹஸ்தம். இடது மேற் கரத்தில் பாசக்கயிறு.இடது கீழ்கரத்தில் மண்டை ஓடு. ஆதி சங்கரர் விஜயம் செயது ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்ததாக அம்மன் அதில் ஸ்தாபிக்கப்பட்டு சர்வ சக்தி உக்ர நாயகி என சொல்கிறார்கள்.
ஒரு காலத்தில் காரை மரங்கள் அடர்ந்த காடு. அவற்றை அழித்து மக்கள் குடியேறி இப்போது காரைக்குடி....
சிதம்பரம் நடராஜருக்கு அடுத்தபடியாக இந்த கோவிலில் தான் மூலவரான அம்மன் உற்சவ விகிரஹமாக ஊர்வலத்தில் தரிசனம் தருகிறாள்.
காவல் தெய்வம் கருப்பண்ண சாமி குதிரை மேல் ஜம்மென்று காட்சி அளிக்கிறார்.
கோவில் நேரம் 6.00 a.m. to 11.00 a.m.- 4.00 p.m. to 8.00 p.m.
Koppudai Nayaki Amman Temple, Karaikudi – 630 001, Sivaganga district. +91 -4565 2438 861, 99428 23907
No comments:
Post a Comment