ஒவ்வொரு சமயம் நாம் திருமூலரை ரசிக்கிறோமா, சிவவாக்கியாரா இது என்று தோன்றுகிறது. அது எப்படி வெவ்வேறு சமயங்களில், காலங்களில் இருந்தவர்கள் ஒரே மாதிரி சிந்தித்து எழுதவும் முடிகிறது. திருமமூலர் மூத்தவர் எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு இருந்தவர். காலக்கணக்கில் சிவ வாக்கியர் சின்னவர்.
எண்ணத்துக்கு வயதேது?
இன்று நான் ரசித்த சில சிவவாக்கியர் பாடல்கள்.
ஓம் நமசிவாய என்ற பஞ்சாக்ஷரத்தை தமிழில் ஐந்தெழுத்து மந்திரம் என்போம். ஸ்ரீமன் நாராயணன் குழந்தையாக பிறந்தபோது அயோத்தியில் ஒரே கோலாகலம். குழந்தைகள் நாலுபேர் நாலு தொட்டிலில். மூத்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்? தசரதனுக்கு கௌசல்யாவும் மற்ற ரிஷிகளும் அமைச்சர்களும் ஆலோசித்து குலகுரு ராஜகுரு ப்ரம்மஞானி வசிஷ்டரை நெருங்கி வணங்கினார்கள்
''குரு நாதா நீங்களே ஒரு பெயரை என் மூத்த குமரனுக்கு சூட்டுங்கள் ?''
யோசனையே பண்ணவில்லை வசிஷ்டர் ''இவன் ''ராமா '' என்று எல்லோராலும் வணங்கப்படுபவன். என்றார். எப்படி இந்த பெயர் ''ராமா '' வந்தது என்று பலர் சொல்லி எழுதி இருக்கிறார்கள். ஹிந்து சமயத்தை சைவ வைணவர்கள் அதிக பக்ஷம். இருவருமே தொழ ஏற்றது ஓம் நமசிவாய எனும் பஞ்சாக்ஷரமும் ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய என்ற அஷ்டாக்ஷரமும் இரண்டையும் கூட்டி கலந்து ''ரா'' என்ற நாராயணாய மந்திரத்தின் ரெண்டாவது எழுத்தையும் ''நமசிவாய'' எனும் மந்திரத்தன் ரெண்டாவது எழுத்து ''ம'' என்ற அக்ஷரமும் சேர்ந்தது. சிவனும் நாராயணனும், ஹரியும் ஹரனும் சேர்ந்த நாமமாக ' ராம' எனும் பெயரை வைத்தார் வசிஷ்டர்.
சிவனை வணங்க நமசிவாய போதும். இந்த பஞ்சாக்ஷரத்தை சொன்னாலே சிவனை அடைந்த மாதிரி. வாழ்வில் உய்ய என்ன உபாயம் என்றால் இந்த பஞ்சாக்ஷரம் தான். இதற்கு மேல் எதற்கு. ஒன்பது வாசல் வீடான இந்த உடலை விட்டு பிரிந்து வெளியில் கலந்த பிராணன் எனும் ஜீவ வாயு சரியான அட்ரசுக்கு போய் சேர சிறந்த வழிகாட்டி ஓம் நமசிவாய எனும் பஞ்சாக்ஷரம் என்கிறார் சிவ வாக்கியர். இப்போது கீழே கண்ட பாடல் எளிமையாக புரியும்.
''சிவாய மென்ற அட்சரம் சிவனிருக்கு மட்சரம்
உபாய மென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடமுற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாயம் அஞ்சு எழுத்துமே''
அடேயப்பா, நமக்கு அறிவதற்கு ஐந்து கோடி மந்திரங்கள் உள்ளனவே. இதை எல்லாம் எப்படி நமது நெஞ்சுக்குள்ளே அடக்குவது. முடியுமா? நடக்கிற காரியமா இது? அடக்கினால் கூட பரவாயில்லை. நமது நெஞ்சிலிருந்து அவற்றை நினைத்து எடுத்து எப்படி கூறுவது? சாத்தியமா? ஒரு எழுத்தினால் இந்த ஐந்து கோடி மந்திரத்தையும் நினைக்க முடியும் எடுத்து கூறமுடியும் என்று ஒரு வழி சொல்கிறார் சிவ வாக்கியர். ஓம் நமசிவாய என்ற ஐந்து அக்ஷரங்கள் போதுமே ஐயா. ஓம் நமசிவாய என்று ஐந்து கூட சொல்லவேண்டாம், அதை நாலு மூன்றாக குறைத்து 'சிவா'' என்று சொன்னாலே போதும்.
நமது பழைய முன்னோர் எதற்கெடுத்தாலும் 'வார்த்தைக்கு வார்த்தை ''சிவ சிவா'' என்று சொல்லும் பழக்கத்தோடு இருந்ததை என் பாட்டி, அத்தை அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். இதை பற்றி பரமாச்சாரியார் கூட எழுதியிருக்கிறார். அப்புறம் அதை சொல்கிறேன்.
அஞ்கோடி மந்திரமு நெஞ்சுளே யடக்கினால்
நெஞ்சுகூற வும்முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே
'அடே பயலே, எங்கே செல்கிறாய்?
'கோவிலுக்கு''
'எதற்கு ?''
''சாமி பார்க்க கும்பிட''
அப்பனே, கோவில் பள்ளி (பள்ளிவாசல்!) குளம் என்று ஏன் எங்கோ தேடி அலைகிறாய்?
காலையில் இருந்து பெரிய திண்டு துண்டாக புத்தகங்கள் விரித்து மந்திரங்கள் உச்சரிக்கிறாயே!
உனக்குள் இருக்கும் ஞானம் உன்னில் வெளிப்பட வேண்டாமா? அந்த ஆத்மாவை நினைத்து வணங்கினால் போதுமே!
இந்த ஊனாகிய பெரும் உடல் எனும் பெரும் கோவிலில், உள்ளம் எனும் கோவிலில் சிவனைக் காணலாமே'' என்கிறார் சிவ வாக்கியர்.
பெரிய புரட்சி ரிஷியாக இருக்கிறார் இல்லையா இவர்?
‘கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே”
No comments:
Post a Comment