ஆதி சங்கரர் முப்பத்திரண்டு வருஷங்கள் மட்டுமே வாழ்ந்த கட்டை பிரம்மச்சாரி. அம்பாள், பவானி, கௌரி, லட்சுமி, சிவன், கோவிந்தன், அச்சுதன், கிஷ்ணன், என்று அனைத்து தெய்வங்கள் மேலும் ஸ்லோகங்கள் வர்ஷித்து அருளி இருக்கிறார். பஞ்சகம், ஷட்கம், அஷ்டகம், தசகம், என்று அவை வெவ்வேறு அளவில் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று இந்த தேவி அஷ்டகம் (தேவியின் மேல் எட்டு ஸ்லோகங்கள்).
வேண்டியதை வாரி வழங்குபவள் தேவி பவானி. லோகமாதா. அவளை போற்றி அவர் பாடியிருப்பதை இன்று அறிவோம்.
महादेवीं महाशक्तिं भवानीं भववल्लभाम्।
भवार्तिभञ्जनकरीं वन्दे त्वां लोकमातरम् ॥१॥
மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்
பவார்திபஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்
அம்மா பரமேஸ்வரி, உன்னை மஹா சக்தி வாய்ந்தவள் என்று அறிவேன். சக்தியில்லையேல் சிவன் இல்லையே. அசையாப்பொருளை அசையவைக்கும் தன்மையே நீ தான் அம்மா, பவன் என்று சிவன் பேர் கொண்டவன். அவனை அர்த்த நாரேஸ்வரனாக்கிய பெருமை பாதியுமை பவானி (பவனை உடையவள்) நீ சர்வ வல்லமை படைத்தவள்.
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தேவி, இபிறப்பு நீக்கி மறுபிறப்பு அடைந்து சம்சார நன்றாக துக்கங்களில் வாடும் என்னை தடுத்தாட்கொண்டு நின் திருவடியடைய அருள் புரிவாய் லோகமாதா,உன்னை நமஸ்கரிக்கிறேன்.
भक्तिप्रियां भक्तिगम्यां भक्तानां कीर्तिवधिकाम् ।
भवप्रियां सतीं देवीं वन्दे त्वां भक्तवत्सलाम् ॥२॥
''பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்
பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்
பக்தர்கள் நலம் காத்தருளும் தாயே, பக்தர்களை அன்புடன் ஆதரித்தருளும் அன்னையே, பக்தர்களின் பக்தி அவர்கள் பெருமை, ஒன்றிலேயே பூரிப்படையும் பராசக்தி, பவன் எனும் சிவனின் பூரண பிரேமை கொண்ட பாகம் பிரியாளே, பதிவிரதா பக்திக்கொரு உதாரண தேவி, பக்தனின் அடிமையாக அவன் மேல் பூரண பாசம் கொண்ட லோகமாதா உன்னை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறேன்.
अन्नपूर्णा सदापूर्णा पार्वतीं पर्वपूजिताम् ।
महेश्वरीं वृषारुढां वन्दे त्वां परमेश्वरीम् ॥३॥
அன்னபூர்ணாம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்
மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்
அம்மா, இந்த பிரபஞ்ச ஜீவர்கள் உண்டு உயிர்வாழ அருளும் பூரண அன்பு கொண்டவளே, பர்வத ராஜகுமாரி, பவானி, இந்த உலக இயக்கத்தின் பருவங்களில் எல்லாம் இயக்கமானவளே லோகநாயகி, மஹேஸ்வர ப்ரேமி, நந்தி தேவன் எனும் ரிஷபன் மீது அமர்ந்து காட்சியளிக்கும் சிவனின் பாதி உமையே, முப்பத்து முக்கோடி தேவர்களும் திருவடியில் சரணடையும் சிவனின், பரமேஸ்வரனின் சகியே ஈஸ்வரி உன்னை மனதார வேண்டி வணங்குகிறேன்.
कालरात्रिं महारात्रिं मोहरात्रिं जनेश्वरीम् ।
शिवकान्तां शम्भुशक्तिं वन्दे त्वां जननीमुमाम् ॥४॥
காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்
ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்
சிவராத்திரி, மஹா சிவராத்திரி, யுக சந்திகளில் உண்டாகும் கால ராத்திரி என்பதெல்லாம் நீயே தானே மஹாதேவி. சிவனென சொல்லும்போது மூச்சில் இணைந்தவள் சிவே எனும் நீயே.
சோகம் தனை போக்கி மோகம் தந்து உயிரினங்கள் உன்னில் கலந்து இன்புட வாழ்ந்திட அருளும் மோஹ ராத்திரியும் நீயே. எந்த தெய்வத்திடம் சர்வ ஜனங்களும் தம்மை இழந்து மகிழ்கிறார்களோ அந்த ஜன ஈஸ்வரி நீயல்லவா? சிவனையே காந்த சக்தியாக ஈர்ப்பவளான சிவகாந்தா நீயே. சம்போ மகாதேவா என்று மூவுலகும் பணியும் சம்புவின் மனம் கவர் பராசக்தி நீயே. அம்மா, ஜகத் ஜனனீ, உலகின் உயிரே, உன்னை நமஸ்கரித்து வணங்குகிறேன் தாயே காத்தருள்வாய்,
जगत्कत्रीं जगद्धात्रीं जगत्संहारकारिणीम् ।
मुनिभि: संस्तुतां भद्रां वन्दे त्वां मोक्षदायिनीम् ॥५॥
ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரணீம்
முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம் வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்
யார் இந்த மூவுலகும் சிருஷ்டி பெற காரணம்? யார் இந்த மூவுலகின் மொத்த உயிர்களும் கடைசி வரையில் உயிர்வாழ அருள்பவள். பண்ணுகிறவளும், ஜகத்தை ரக்ஷிப்பவளும், உலகத்தை கடைசியில் சம்ஹரிப்பவளும், ரிஷிகளாலும், முனீஸ்வரர்களாலும், தேவர்களாலும் விண்ணவர்கள் அனைவராலும் பூஜிக்கப்பட்டு மனமுவந்து பல பாடல்களில் போற்றப்படும் மகா காரணி நீயே. உன்னை சரணடைந்து வேண்டுகிறேன் அம்மா, எம்மை காத்தருள்வாய்.
देवदु:खहरामम्बां सदा देवसहायकाम् ।
मुनिदेवै: सदा सेव्यां वन्दे त्वां देवपूजिताम् ॥६॥
தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்
முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம்
விண்ணுலகம் முழுதும், தேவர்கள் முனிவர்கள் எவரானாலும் அம்மா இந்த திருப்பாதம் ஒன்றே கதி என்று நம்புபவர்கள் துயர் துடைக்கும் தெய்வமே, மூவுலகும் பூஜிக்கும் தாயே, உன்னை போற்றி வணங்குகிறேன் தேவி மாதா.
त्रिनेत्रां शंकरीं गौरीं भगमोक्षप्रदां शिवाम् ।
महामायां जगद्वजां वन्दे त्वां जगदीश्वरीम् ॥७॥
த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்
மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம்
எவள் ,முக்கண்ணுடையாளோ, எவளால் இந்த பிரபஞ்ச ஜீவர்கள் மோக்ஷம், சுபிக்ஷம், சர்வ போகங்களை பெறுகிறார்களோ, அந்த சங்கரி, பரிபூர்ண கடாக்ஷம் வழங்கும் கௌரி மாத, சிவை, மஹா மாய ஸ்வரூபம், உலகத்துக்கே சர்வ ஆதார வித்து நீயே தான் ஜெகதீஸ்வரி. உன்னை வணங்குகிறேன். அருள்புரிவாய்.
शरणागतजीवानां सर्वदु:खविनाशिनीम् ।
सुखसम्पत्करीं नित्यां वन्दे त्वां प्रकृतिं पराम् ॥८॥
ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்
ஸுக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்
தாய் ஒருவள் சேயின் நலம் அறிபவள். அம்மா நீயே, நின் திருவடியே சரணம் என்று உன்னை அண்டியவர் எவராயினும் அவர் துயர் தீர்க்கும் பர்ஸாக்தி, எது சுகம் எது நித்ய இன்பம் என அறியாதவர்களுக்கு அதை வாரி வழங்கும் பரிபூர்ண அன்புடைய தாயே, பிரபுஜத்தின் இயக்கத்துக்கு காரண சக்தியே, உன்னை வணங்குகிறேன். தயை புரிவாய், தயாபரி.
No comments:
Post a Comment