Tuesday, October 24, 2017

சூர சம்ஹார ஞாபகம்.


சூர சம்ஹார ஞாபகம்... ஹிந்துக்கள் வழிபடும் தெய்வங்களில் இளையோன் என்றும் குமரன் என்றும் பாலசுப்ரமணியன் என்றும் பெயர் கொண்ட ஆறுமுகன், ஷண்முகனை கொண்டாடும் வழக்கம் உண்டு. அது கௌமாரம் எனப்படும். ஷண்மதங்களில் ஒன்று என ஆதி சங்கர் நிர்ணயித்தது. ஸ்கந்தன் எனும் கந்தனுக்கு, ஷண்முகனுக்கு முருகன் என்றும் ஒரு பெயர். அழகு என்றால் முருகன். தமிழ்க்கடவுள். சங்கத்தமிழ் என்றாலே கண் முன்னே தோன்றுபவன் முருகன். அவ்வைக்கு சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என கேட்டு அவளை திகைக்க வைத்தவன். ஷண்முகன் தேவ சேனாபதி. 26.10.2017 அன்று ஸ்கந்தஷஷ்டி என்றும் சூர ஸம்ஹார தினம் என்றும் சைவ ஆலயங்களில் முக்கியமாக முருகன் ஆலயங்களில் திரள் திரளாக பக்தர்கள் குவிந்து சூர பத்மனை சுப்ரமணியன் வதம் செய்வதை கண்ணாரக் கண்டு தரிசிப்பார்கள். சஷ்டிக்கு முதல் நாள் பஞ்சமி திதி அன்று சூரசம்ஹார விரதம் இருப்பார்கள். திருச் செந்தூரில் கோலாகலமாக ஏற்பாடுகள் இன்று நடக்கும். எவ்வளவோ பேர் எங்கிருந்தெல்லாமோ பாத யாத்திரை நடந்து பல மைல்கள் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக கூட்டமாக மஞ்சள், காவி உடை விபூதி அணிந்து கந்தனுக்கு அரோஹரா, முருகனுக்கு அரோஹரா என்று கோஷித்து வருவதை தூத்துக்குடியில் நான் இருந்தபோது நேரடியாக பார்த்து வியந்திருக்கிறேன். தூத்துக்குடியிலிருந்து ஸ்கூட்டரில் திருச்செந்தூர் செல்ல, ஆத்தூர் பாலம் கடந்து, அங்கே குளித்துவிட்டு ஆறுமுகநேரி, காயல் பட்டினம் வழியாக போனது ஞாபகம் இருக்கிறது. உடம்பில் அப்போது தெம்பிருந்தது. சூரன் என்பது அஹம்காரம் (நான்), மற்றும் மமகாரம் (எனது) என்ற ஆணவமலத்தை குறிப்பது அதை போக்குவதே சூர சம்ஹார தத்வம். சூரபத்மனின் தம்பிகள் தாரகாசுரன், சிங்கமுகன் என்பவர்கள். இருவருமே மாயா மலம் கர்மமலம் என்பதை குறிப்பவர்கள். அவர்களையும் தனது வேலாயுதத்தால் வதம் செயகிறான் ஷண்முகன். அதனால் தான் முருகன் வேலுக்கு ''ஞான வேல்'' என்று ஒரு அருமையான பெயர். ஆணவம், மாயை, கன்ம பிடிப்புகளை தான் மும்மலம் என்று வாரியார் அழகாக எடுத்து சொல்வார். ''வாரி வாரி'' யார் வாரியார் போல் கொடுப்பார்கள். வாரிக் கொடுப்பதால் முருகன் வள்ளல், ''அவன் வள்ளல் அவள் வள்ளி'' பொன்னன் பொன்னி என்பது போல் என்பார். அற்புதமாக சொற்பொழிவு. கேட்டது இன்னும் காதில் ஒலிக்கிறது. சின்னதாக ஒரு கதை சொல்கிறேன். பிரமதேவனுக்கு ரெண்டு பிள்ளைகள். தக்ஷன், காஸ்யபன். தக்ஷன் சிவனை நோக்கி தவம் செய்தான். வரம் பெற்றவன் வரம் தந்தவனை இகழ்ந்தான். தக்ஷ யாகத்தில் சிவனால் ஏவப்பட்ட வீர பத்ரனால் கொல்லப்பட்டான். காஸ்யபன் தவம் இருந்து அசுரப் பெண் மாயையின் கவர்ச்சியில் மயங்கி அவளை மணந்து தவப்பலன் இழந்தான். அவன் பெற்றவர்கள் தான் சூரபத்மனும், அவன் சகோதரர்களும் அஜமுகி என்ற பெண்ணும். முதல் பிள்ளை சூரபத்மன் தவம் செய்து சிவனிடம் வரம்பெற்று 108 யுகம் உயிர் வாழ 1008 அண்டங்களையும் அரசாள சக்தி பெற்றான். எவராலும் அழிக்கமுடியாதவன். அதோடு விட்டானா. புராணங்களில் வழக்கமாக சொல்வது போல் தேவர்களை ரிஷிகளை, முனிவர்களை இம்சித்தான். அவனை அழிக்க சிவனிடம் முறையிட்டார்கள். தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக்கு கண்ணை திறக்க அவனது ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், மற்றும் “அதோமுகம்” (மனம்) என்னும் ஆறு முகங் களிலிருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டு வாயுவால் அவை சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்ந்தன. தீப்பொறிகள் ஆறும் ஆறுமுக குழந்தைகளாக உருவாகி கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு ''அருவமும் உருவமாகி, அநாதியாய் பலவாய் ஒன்றாய் ப்ரம்மமாய் நின்ற ஜோதி பிழம்பதோர் மேனியாகி ஆறுமுகம் கொண்ட திரு முருகனாக வடிவங் கொண்டு இங்கு வந்து உதித்தான்.'' எதற்கு? இந்த உலகம் உய்ய. ப்ரணவஸ்வரூபன். சூரனை அழிப்பது எளிதல்ல. அவன் வரம் பெற்றபடி எந்த தேவர்களும் கடவுளர்களும் அவனை அழிக்க முடியாது. பராசக்தி தனது சர்வ சக்தியை ஒரு வீர வேலாக மாற்றி ''இந்தா முருகா. இதனால் சூரனை அழி'' என தருகிறாள். அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், சூரனின் ஊர் வீர மகேந்திரபுரியை நோக்கி செல்லும்போது வழியில் விந்தியமலை அடிவாரத்து மாயா புரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் எனும் யானைமுக அசுரனை வதைக்கிறான். ஈசனும் முருகனுக்கு சூரனை அழிக்க தனது பாசுபதஅஸ்திரம் வழங்க முருகன் திருச்செந்தூர் செல்கிறான். சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை என்பவர் அற்புதமாக கந்த புராண சொற்பொழிவுகள் புத்தகம் எழுதி அது என் அப்பா வைத்திருந்து நான் பன்னிரண்டு பதிமூன்று வயதில் சூரபத்மன் சூரசம்ஹாரம் கதைகளை படித்து அதிசயித்திருக்கிறேன். பேரிகை, காளம், கரடிகை பல வாத்தியங்கள் முழங்க கந்தன்தனது பூதகண படைகளோடு வீரவாகுவோடு, சூரனை எதிர் நோக்கி வீரமஹேந்திரபுரம் (இலங்கையில் உள்ளது என்பார்கள்) செல்கிறான். கடலில் பூத சேனைகள் இறங்கிய போது கடலே கணுக்கால் அளவுதான். வீரமகேந்திரபுரி சென்று "ஏமகூடம்" என்ற பாசறை அங்கே உருவாகிறது. ஒரு லக்ஷத்து ஒன்பது வீரர்களோடும், தேவர்களோடும் ஷண்முகன் ஏமகூடத்தில் வீற்றிருந்த இடம் தான் இப்போது இலங்கையில் கதிர்காமம். முக்கிய சிவ, ஷண்முக ஸ்தலம். நான் சென்று தரிசனம் செய்த ஒரு பாக்கியவான். கதிர்காமம் = ஒளிமயமான விருப்பம் நிறைவேறுவது என்று அர்த்தம். சுப்பிரமணியன் அங்கே ஒளிமயமாக விளங்குவதால் நேரே தரிசிக்க இயலாது. திரை தான். கற்பூர தீப ஒளியை மட்டும் தரிசனம் பெறலாம். கதிர் காமத்தில் கந்தன் சூரன் போர் துவங்குகிறது. பல வீரர்கள் மடிய சூரன் மகன் பானுகோபன் வீர சாகசமாக போர் புரிந்து முருகன் வேலுக்கு பலியாகிறான். சூரன் எளிதில் மசிவானா? அவனது மற்றொரு தம்பி சிங்க முகா சுரன் போரிடுகிறான். பல மாய வித்தைகள் செய்தும், பல விதமாக முயன்று தோற்று முருகனால் சம்ஹாரம் செய்யப்படுகிறான். ராமாயண கதை போல், ராமன் ராவணன் யுத்தம் போல் சூரன் முருகன் யுத்தம் தொடர்கிறது. சூரன் தனது மாய ஜாலங்களினால் பலவாறாக உருமாறி தோன்றி போர்செய்தான். அப்போதும் முருகன் சூரனை நோக்கி ''சூர பத்மா, இப்போதும் நீ உயிர்வாழலாம் . தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு'' என்று அறிவுறுத்தினார். அப்படி எளிதில் கேட்க கூடியவனா சூரன்? அப்போதும் அவனின் ஆணவம் அடங்கவில்லை. நீண்ட போர் தொடர்கிறது. முடிவில் தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான். முருகனின் வேல் அவன் ஆயுதங்களை, படைகளை பொடிப்பொடியாக்க கடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை இருகூறாக்கி சூரனை சங்காரம் செய்தார் முருகன். முருகன் மஹிமையை உணர்கிறான் சூரன். மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி முருகனை வேண்ட இரக்கம் கொண்டு; பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார். அந்த நாள் தான் சஷ்டி. சூர சம்ஹாரம் முடிந்து ஷண்முகன் ஜெபமாலையோடு சிவனை வணங்கி நிற்பதை இன்றும் நாம் திருச்செந்தூர் கருவறையில் ஒரு சிவலிங்கத்தோடு காணலாம். திருச்செந்தூர் அற்புதமான ஒரு ஆலயம். எந்த சுனாமியாலும் பாதிக்கப்படாத அதிசய கடற்கரை கோவில். சமீபத்தில் சிவப்பு நிற அலைகள் தோன்றி கரை நோக்கி வந்த படம் பார்த்திருக்கலாம். கடல் உள் வாங்கி நிற்கிறது. கிழக்கே கடலைப் பார்த்த முருகனின் திருமுகம். ஒருமுகம். சிரிமுகம். பாலமுகம். சிறு பாலகன் உயரம் தான் மூல விக்ரஹம்.. சூரசம்ஹாரம் அன்று திருச்செந்தூர் கடல் உள் வாங்கி செல்லும். சூரசம்ஹாரம் முடிந்தபின் பழையபடி ஆலயம் வரை கடல் நீர் காணப்படும். மூலவர் சுப்பிரமணியன் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளை காணலாம். சிக்கலில் இந்த அதிசயம் கண்டிருக்கிறேன். அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும். வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன். ஒரு அற்புதமான எளிய அர்த்தம் கொண்ட நாவினிக்கும் பாடல்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...