Saturday, October 21, 2017

உத்தவ கீதை 6

உத்தவ கீதை 6 j.k. sivan

உத்தவா கேட்டாயா ??

உத்தவ கீதையில் இப்போது ஒரு கதையோடு துவங்குவோம்.

விதேக தேசத்தில் ஒரு பரத்தை. பிங்களை என்ற பெயர் கொண்டவள். அவளிடமிருந்து என்ன தெரிந்துகொண்டேன் என்கிறார் ஒரு ஞானி. தன் வீட்டு வாயிலில் நின்று கொண்டு வருவோர் போவோரை பார்த்துக்கொண்டிருந்தாள். யாரா
வது தனவந்தன் வரமாட்டானா. அவன் மூலம் ஏதாவது வருமானம் கிடைக்காதா என்று காத்திருந்து ஒருவரும் வராமல் தூங்க போய்விட்டாள்.அவள் ஏக்கம், பசி, வறுமை அவள் எதிர்பார்த்ததிற்கு ஏமாற்றம் தந்தது. அவளுக்கு தனது வாழ்க்கை மீதே வெறுப்பு வந்தது. ''சே, இது ஒரு வாழ்க்கையா என்று தன் மீதே வெறுப்பு வந்தபோது உள்ளே ஒரு அமைதியும் இன்பமும் உருவானது.

ஆத்ம ஞானம் இன்றி, உலக பந்தங்களில் சிக்கி அதையே மீண்டும் மீண்டும் நாடுபவன் அதிலிருந்து விடுபட முனைவதும் இல்லை. அவனை விட்டு இன்ப துன்பங்களும் நீங்காது. அது போலவே தான் தேகத்தின் மீது பற்று பாசம் கொண்டவனுக்கு ஆசைகளிலிருந்து துன்பங்களிலிருந்து விடுதலை கிடையாது.

பிங்களைக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஞானம் உதயமாகியது. நான் எவ்வளவு முட்டாளாக இருந்து விட்டேன்.மனதை அடக்க வில்லையே. துன்பங்களை நானே வரவழைத்துக் கொண்டு தவித்தேன்.

என் உள்ளே இருக்கும் ஆத்மநாதனுக்கு சேவை புரிய மறந்தேனே. நிலையான இன்பத்தை தரும் அவனை விட்டு நிலையற்ற மாந்தர்களையும் அவர்கள் பொருளுக்கும் ஆசைப்பட்டேனே.

இந்த உடல் ஒரு வீடு. இதில் வசிப்பவன் ஆத்மா. எலும்புகள் தான் வீட்டில் சுமையை தாங்கும் உத்தரம், தூண்கள், சுவர்கள், சட்டங்கள். இதில் சேறும் சாக்கடையும் குப்பையும் கூளங்களும் அநேகம். எல்லாவற்றையும் தோல், முடி, நகம் எல்லாம் ஒருவழியாக மூடி மறைத்துள்ளது. இந்த பொல்லாத வீட்டிற்கு ஒன்பது வாசல்கள் எதற்கோ? எல்லாமே உபயோகமற்றவற்றை உள்ளேயும் வெளியேயும் தள்ளுகின்றன. என்னைத்தவிர இந்த உடலை ஒரு அழகுப் பொருளாக சம்பாதிக்க சிறந்ததாக இதனால் சாஸ்வதமாக இன்பம் சுகம் பெற முடியும் என்று நம்பி ஏமாந்த சோணகிரி யாராவது உண்டா? என்று வருந்துகிறாள் பிங்களை . இந்த விதேக நாட்டின் சிறந்த முட்டாள் பரிசு என் ஒருத்திக்கே. என் உள்ளேயே இருக்கும் அந்த பரமாத்மாவை மறந்து என் வாழ்க்கையை இதுவரை பாழ் படுத்திக்கொண்டேனே.

எனக்கு மட்டுமல்ல. எல்லோருக்கும் அவன் எளிதில் கிடைப்பவன். என்னைப் போல் எத்தனையோர் அவனை அடையாமல் வாடுகிறார்களே. நாம் நினைக்கா விட்டாலும் அவன் நம்மை எப்போதும் நினைத்து நன்மையே புரிபவன் என்றும் உணர்ந்து கொண்டேன்.

வாழ்க்கையே அநித்தியம். குறுகிய காலத்தில் முடிவது என்று ஏன் நிறைய பேர் என் போல் உணரவில்லை?

நல்ல வேளை நான் தப்பித்தேன். இந்த உலகம் அதில் உள்ள மக்கள், அவர்கள் பணம் இது ஒன்றே பிரதானம் என்று என்னையே, என் உடலையே விட்டு நிரந்தரமாக சந்தோஷம் அடைய நினைத்தவளுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடித்து என்னை அறிந்து உள்ளே அவனை உணர முடிந்ததற்கு நான் ஏதோ எங்கோ எப்பவோ தவம் செயதிருக்கவேண்டும். இல்லாவிட்டால் திடீரென்று விஷ்ணுவை நினைப்பேனா?அவனை சரணடைவேனா?
நான் மாறியாச்சு. என் அல்ப எண்ணங்கள் என்னை விட்டு ஓடிவிட்டன. அவனை நினைத்து பாடி பேசி மகிழவதில் உள்ள இன்பம் வேறு எதிலும் இல்லை என்று பரிபூர்ணமாக புரிந்து கொண்டவள் நான். பரம திருப்தி எனக்கு. அவன் கருணையில் முழு நம்பிக்கை.

அஞ்ஞானத்தில் மூழ்கி உலக இன்பங்களில் மயங்கி, புலன்களின் அடிமையாகி பாழுங்கிணற்றில் விழுந்தவனை அந்த பரமாத்மன் ஒருவன் தான் மேலே கொண்டுவரமுடியும்.

பிங்களை போல் அஞ்ஞானியாக எத்தனையோ பேர் உலக ஆசா பாசங்களில் இன்பம் தேடி கெட்டழிந்து, கெட்டலைந்து வாடி பின்னர் அதே ஜென்மத்திலோ அடுத்தடுத்த எத்தனையோ ஜென்மத்திலோ உண்மையை தங்கள் அனுபவத்தால் உணர்பவர்கள் பலர்.

அவதூதர்கள் நம் போல குடும்ப வாழ்க்கையில் திக்கி திணறும் பெற்றோர் போல் இல்லை. குழந்தை, எதிர்காலம், பணம், வசதி புகழ், பெருமை, வீடு வாசல், கார், கௌரவம் என்று காலத்தை வீணாக்காதவர்கள். ஆத்ம இன்பத்திலேயே சதா திளைப்பவர்கள். எனவே பிறந்த குழந்தையாக உலகத்தில் நடமாடுபவர்கள்.

தன்னை மறந்த, உலகத்தோடு ஒட்டாத இருவர்களை உங்களுக்கு தெரியும். ஞாபகப் படுத்துகிறேன். ஒன்று குழந்தைகள். கத்தியை கழுத்தில் வைத்தாலும் சிரிப்பவர்கள். உடல் புலன் ஆசை பாசம் ஏதும் அறியா அன்பு ஒன்றோடு மட்டுமே பழகுபவர்கள். மற்றொன்று உலகத்தில் இருந்தே வேறுபட்ட சித்த ஸ்வாதீனமானவன். பித்தன். எது நல்லது கெட்டது, யார் சொந்தம் எதிரி, எது பணம், எது விஷயம் விஷம் என்று ஒன்று மே மாறுபாடு தெரியாதவன்.

ஞானி பரமனை, ஆத்மாவை உணர்ந்தவனுக்கு இரண்டு கிடையாது. எல்லாம் ஒன்றே. அது அந்த பரமாத்மாவே.

சந்நியாசி, துறவி, எல்லாம் விடுபட்டவனுக்கு வீடு இல்லை. வாசல் இல்லை. உற்றார் உறவு எதுவுமில்லை. சுதந்திர புருஷன். பேச்சும் இல்லை. பேச்சு மற்றவரோடு தொடர்புக்கு தானே. அவன் பேச்சு ஆத்மாவுடன். அங்கே பேச்சு தேவையே இல்லையே. நினைப்பு ஒன்று தானே.

காலத்தை வென்றவன், மூன்று நிலைகளை துறந்தவன், ( விழிப்பு, கனவு, தூக்கம்) உலகை துச்சமாக கருதுபவன். மஹத் தத்வம் என்ற சூத்ர நிலை அடைந்த ஜிதேந்திரியன்.

என் உடம்பே எனக்கு ஒரு குருவும் கூட. அது இல்லையென்றால் நான் என்னை உணர்ந்திருக்க முடியுமா. அது அநித்தியம் என்று உணர்ந்து அதை நிராகரிப்பதன் மூலம் அல்லவோ நான் ஞானம் அடையமுடியும்.
இந்த ஐம்புலன்கள் உடம்பின் பிடியில் சிக்கியன் பல பெண்டாட்டி காரன். ஒவ்வொருவரும் அவனை ஒவ்வொரு வழியில் பிடித்திழுத்து அவன் அல்லல் படும்போது தான் புரியும் அவன் தவறு அவனுக்கு.

எத்தனையோ பிறவிகளுக்கு அப்புறம் கிடைத்தது இந்த மானுட ஜென்மம். அதை மறக்காமல் சரியுமாக புரிந்துகொண்டு ஒவ்வொருவனும் தன்னை தனது முயற்சியால் மட்டுமே உயர்த்திக் கொள்ள முடியும். வேறு வழியில்லை.

''உத்தவா, கேட்டாயா அப்பனே, இதுவரை உனக்கு தத்தாத்ரேயர் என்ற அவதூதர் யது மகாராஜாவுக்கு சொன்ன அறிவுரைகளை எடுத்துச் சொன்னேன்'' என்கிறார் கிருஷ்ணன் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...