Tuesday, October 10, 2017

ஒரு சாதாரணன் சொல்வது இது


ஒரு சாதாரணன் சொல்வது இது J.K. SIVAN

முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எந்த வீட்டிலும் கிணறு உண்டு. அதை தான் குளிக்க, குடிக்க சமையலுக்கு எல்லாவற்றிற்கும் உபயோகித்தோம். எங்களுக்கு தண்ணீர் அப்போது ஒரு பிரச்சினையாக இல்லை.

எனக்கு மாதம் ஒருமுறை ஞாயிறு அன்று கிணற்றில் இறங்குவது ஒரு வேலையாக இருந்தது. கிணற்றில் ஏதாவது ஒரு பாத்திரம்​ துணியை குழந்தைகள் போட்டு விடும், அல்லது கிணற்றில் சுத்தம் செய்யவேண்டி வரும்.

நிறைய தண்ணீர் இருந்தால் கிணற்றில் இறங்க மாட்டேன். பாதாள கரண்டி என்று கொக்கி கொக்கியாக ஒரு சங்கிலி இருக்கும். ​ எங்கள் வீட்டில் இல்லாததால் எதிர்த்த பக்கத்து வீட்டில் போய் அதை கடன் வாங்கி ​தாம்பு கயிற்றில் கட்டி​ கிணற்று ​ தண்ணீரில் விட்டு அலசி தேடினால் பாத்திரத்தை, கிண​​ற்றில் விழுந்த துணியை அடியில் பாதாள கரண்டியின் கொக்கி ஏதாவது பிடித்துக் கொள்ளும். மெதுவாக அசையாமல் கயிற்றை மேலே இழுத்தால் கொக்கியொடு பாத்திரமோ துணியோ வெளியே தலை காட்டும்.

​​ சில வீடுகளில் பல வருஷங்களாக பாத்திரங்கள் கிணற்றில் அடியே கிடக்கும். தாமிரச்​ செம்பு கிணற்றில்
ஒரு பத்து​ வருஷங்கள் கிடந்து விட்டெதன்றால்,​ ​ அதன் மேல் ஏறியிருக்கும் பச்சை களிம்பை நிறைய தேய்க்க வேண்டும். ஒருநாளில் முடியாது. தேய்க்க தேய்க்க தான் பழைய நிறம் வரும்.

நம்முடைய மனதில் எத்தனை வருஷ களிம்பு சேர்ந்திருக்கிறது. எவ்வளவு நல்ல கர்மாநுஷ்டானங்கள் செ​ய்து அவற்றை நீக்க வேண்டும்.

ஐந்து ஆறுவயது வரை குழந்தைகளை வீட்டில் வைத்துக்கொண்ட காலம் அது. விஷமம் நிறைய பண்ணுவோம். பிறகு ஒண்ணாங்கிளாஸ் படிக்க பள்ளிக்கூடம் அனுப்புவார்கள் அப்போதெல்லாம். இப்போது வயிற்றில் குழந்தை உருவாகும்போதே பள்ளியில் இடம் பெற தேட வேண்டி இருக்கிறதே.

பள்ளிக்கூடம் என்று அனுப்பினால், நேரம் முக்யமாகிவிடுகிறது. இத்தனை மணிக்கு போகவேண்டும், சாப்பிட நேரம். விளையாட நேரம். பள்ளியிலிருந்து திரும்பும் நேரம். வீட்டுப்பாடம் படிக்க நேரம். சாப்பிட தூங்க எல்லாம் நேரம் பிரகாரம் தான்.​ ​ கட்டுப்பாடு இப்படி வந்தபின் விஷமம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் கவலை பொறுப்பு எல்லாம் வந்து விடுகிறது.

சாஸ்திரத்தில் அதனால் தான் நித்ய கர்மாநுஷ்டானம் செய்ய விதி முறை. அதனால் மனதில் கெட்ட எண்ணம் நினைக்கவே நேரம் இருக்காது. மனது முழுக்க பக்தி, சிரத்தை, பூஜை, விரதம் மந்த்ர உச்சாடனம் நிரம்பி விடுகிறதே.

நாம் செய்யும் காரியத்தால் மற்றவருக்கு பிரயோஜனம், உபகரணம் இருந்தால் அதி விசேஷம். இல்லையென்றால் நம்மையே அது திருத்தவாவது உதவும். பிறரிடம் அன்பு கருணை, பரிவு உண்டாக சாஸ்திரங்கள் உதவுகிறது.

மகாபாரதம் ஒன்றரை லக்ஷம் ஸ்லோகம் அர்த்தம் படித்து ஆயிரம் பக்கம் எழுதினேன். ​​ என்ன தெரிந்தது​?​

பொறுமை நேர்மை, நியாயம், தர்மம் சத்யம் இதன் உருவமாக தர்மன். கேட்பதற்கு முன் இடது கை அறியாமல் வலது கையால் தானம் அளித்த கர்ணன். சத்யம் வீரம் வைராக்கியம் உருவில் பீஷ்மன். கம்பீரம் கண்ணியம் தைர்யம் என்று காட்ட ஒருவன் அர்ஜுனன். இது போல் தான் ராமாயணமும் நமக்கு நிறைய ராமன் லக்ஷ்மணன் ஆஞ்சநேயன் மூலம் போதிக்கிறது. எப்படி இருக்க கூடாது என்பதற்கு ஒரு ராவணன் பாத்திரம் வைத்திருக்கிறார் வால்மீகி.

ஸ்த்ரீ தர்மத்துக்கு சீதையும் ராக்ஷஸன் மனைவியாக இருந்தாலும் மண்டோதரி என்று வைத்திருக்கிறார். ராமாயண பாரதங்களை படிப்பதால் இதெல்லாம் நமக்கு பாட மாகிறது. அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை என்று ஆகிறது. நமது தர்மம், பண்பாடு பக்திக்கு இவை அச்சாணி.
ஸ்லோகங்கள் படிக்கும்போது மனப்பாடம் செய்யும்போது அர்த்தம் கட்டாயம் புரிந்து கொள்ளவேண்டும். எனக்கு முடிந்ததை சொல்லி வருகிறேன்.

மௌனம் அதேபோல் நிஜ வாழ்க்கையில் அவசியம். ஒருமணி நேரமாவது தனியே இருக்க வேண்டும். நம்மை நாமே அலச வேண்டும். பேச்சு குறைய வேண்டும். ஆத்ம சிந்தனை இறை சிந்தனையில் மனம் ஈடுபட வேண்டும்.
விசேஷகாலங்களில் நல்லதோ கெட்டதோ அப்போது உச்சரிக்கும் மந்திரங்களின் அர்த்தம் அவசியம் தெரிய வேண்டும்.
அசிரத்தை கூடாது. ஹிந்து மத குடும்ப பெண்கள் முக்கியமாக இவற்றில் அக்கறை காட்டவேண்டும். ​அவர்களால் தான் அடுத்த சமுதாயம் குழந்தை பருவத்திலிருந்து பாடம் பெறும் .​

ஒன்பது கஜம் புடவை, பஞ்சக்கச்ச வேஷ்டி எல்லாம் ஏதோ வேஷம் அல்ல. விபூதி, நாமம் சந்தனம், எல்லாம் பண்ணி வைக்கிற வாத்தியாருக்காக அல்ல. அவர் காசு வாங்குவதற்காக அவர் மட்டுமே அவசியம் சொன்னால் போதும் என்று நினைப்பதே மஹா பாபம் .

அர்த்தம் தெரிந்து செய்கிற காரியத்தில் ஈடுபாடு சந்தோஷத்தை ஞானத்தை கொடுக்கும். நன்மை தரும்.
நாம் வழிபடுவது என்பது ஒரு பயிற்சி. நம்மை தீய எண்ணங்களிலிருந்து, செயல்களிலிருந்து திருத்தி நல்வழிப் பாதையில் செல்ல. இது ஒரு கற்க வேண்டிய பாடம். நம்முடைய க்ஷேமத்தை பகவான் பொறுப்பில் விட வேண்டும். நம்முடைய கடமை மட்டுமே நாம் செய்யவேண்டியது. பலன் பகவான் பார்த்து கொடுப்பது. கிருஷ்ணன் தான் அழகாக இதை எடுத்து கிளிப்பிள்ளை மாதிரி சொல்கிறானே.

மேலை நாட்டு விஞ்ஞானிகள் இந்திய சாஸ்திர வேதாந்த கருத்துகளை அப்படியே லட்டு மாதிரி விழுங்கி மேம்படுகிறார்கள். நாம் வைரத்தை கண்ணாடிக்கல்லாக வெளியே தூக்கி எறிகிறோம்.

உலக வாழ்வின் சுக துக்கங்கள் நம்மை பாதிக்காமல் செய்யும் கடமை மூலம் வேற்றுமை அகன்று உலகில் ஒற்றுமை பரவும். எல்லாவற்றிலும் எங்கும் எப்போதும் இருக்கும் கிருஷ்ணன் புரிவான். கருணை, தியாக நேர்மை உணர்வு மேம்படும்.

நமக்கு தெரியாத இதையெல்லாம் கற்றுத் தருபவர் தான் ஆசார்யன். குரு. சம்பாதிக்க இதை தொழிலாக கொண்டவன் குரு அல்ல. ஜாக்கிரதை.

பரிசுத்தமான இதயத்தில் பகவான் நிச்சயம் குடி கொள்வார். நம்மை வழி நடத்துவார். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் உயர்வது அவர்களது சொந்த முயற்சியும் பயிற்சியாலும் தான். உனக்காக மற்றவன் சாப்பிட முடியாது. மற்றவன் தண்ணீர் குடித்தால் உன் தாகம் தீராது.
நான் ​​நிறைய மகான்களை பற்றி எழுதுவது அவர்கள் வாழ்வு நமக்கு ஒரு நல்ல பாடம் என்று​ ​உணர்த்தவே தான். ​சரிதானே?​

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...