ஆயிரம் நாக்கு கொடு
உலகமே அவன். இந்த பிரபஞ்சமே அவன் எண்ணம். சங்கல்பம். அவன் நம்மைப் போன்றவனா? நினைத்த மறுகணமே அதாகிவிடுபவன்.
அவன் என்ன செய்தான் என ஞாபகம் இருக்கிறதா? ராமனாக பிறந்தான். ரகுவம்சத்தில் ராஜாக்களின் ஒருவன். பிரதானமானவன். அந்த குலத்திற்கே பெருமை ஊட்ட.
அடுத்தது நேர்மாறாக. தனது வளர்ச்சியை ஒரு பசுக்களை மேய்த்து வாழும் இடைக் குலத்தில் கோகுலத்தில் அமைத்துக் கொண்டான். அவன் விரும்பி. கட்டாயத்தால் அல்ல. பரம சந்தோஷமாக அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து இன்றும் நம்மை அந்த பேரானந்தத்தில் ஆழ்த்துகிறானே.
ஆஹா என்ன கருணை, பேரன்பு. தயாள குணம். பேதமற்ற மனம். எல்லோரையும் அரவணைத்து போகும் அன்பு.
சொல்ல மறந்துவிட்டேன் பார்த்தீர்களா? அவன் கருணை காட்டியதில் ஒரு சிறுவன் துருவன். ஒரு ராஜ குமாரன். அதே போல் கொஞ்சமும் கம்மியாகாமல் மன நிறைவோடு அருளியது ஒரு ராக்ஷஸ குமாரனுக்கு. என்ன யாரென்று யோசிக்கிறீர்களா? நம்ம பிரஹலாதன் தான். இரணியனின் பிள்ளை. கிருஷ்ணனின் கருணையும் அன்பும் ராஜ குமரனுக்கு ஒன்று ராக்ஷஸ குமாரனுக்கு வேறு என்று எந்த யுகத்திலும் மாறு படவே இல்லையே.
ஹஸ்தினாபுரத்தில் ஒருத்தன் பாக்கி இல்லை. ஆனானப்பட்ட விதுரரை அவன் தாழ்ந்த குலம். வேலைக்காரி பிள்ளை என்று ஏசினார்கள். மகாராஜாக்கள் எல்லாம் வா வா என்று வருந்தி அழைத்தும் விருந்துக்கு கிருஷ்ணன் போன இடம் விதுரன் வீட்டுக்கே. அவனுக்கு விதுரர் மதிப்பு தெரியுமே.தர்ம தேவதை அவதாரம் அல்லவா விதுரர்.
''கிருஷ்ணா, நீ தான் அக்ராசனன். நீ தான் இந்த உலகமே, பூமண்டலமே வியக்கும் மகா பெரிய ராஜசூய யாகத்தில் முதன்மையானவன். நீ தான் துவக்கி வைக்கவேண்டும் என்று பாண்டவர்கள், பீஷ்மர் போன்றோர் வேண்ட ஒத்துக்கொண்டாயே கிருஷ்ணா, நீ செய்ததை எல்லாம் நாங்கள் அறிவோமே.
உன் பக்தர்கள் பாதங்களை நீ ஜலம் விட்டு கையால் கழுவியதை கண்ணால் பார்த்தவர்கள் அத்தனைபேரும். விண்ணிலும் மண்ணிலும். என்ன பெருந்தன்மை. கர்வம் இல்லாத எளிமை. பக்தவத்சலன் என்ற பெயர் அரசியல்வாதி போல் நீ கேட்டுப் பெற்றதா என்ன?
பரந்தாமா, நீ பக்தனின் அடிமை என்பது தெரிந்ததால் தான் உன் மீதுள்ள பாசம், அன்பு, பக்தி கொஞ்சமும் மாறவே இல்லை எங்களுக்கு. பெருகிக்கொண்டே அல்லவா போகிறது நாளாக ஆக.
ஒரு காரியம் செயகிறாயா. என் நாக்கை ஆதிசேஷனின் நாக்காக ஆக்கி விடுகிறாயா?.
ஏன் என்றா கேட்கிறாய்? . ஒரு நாக்கு எப்படி அப்பா போதும் உன் பெருமையை பேச? குறைந்தது ஆயிரம் நாக்காவது வேண்டாமா சொல்? . அது தான் என்னை ஆதிசேஷனாக பண்ணு என்று கேட்டேன்.
உன்னை ஏதோ கொஞ்சம் புகழ இதைச் சொன்னேன் என்று நினைக்காதே. நான் சொல்லவில்லை. இந்த சூர்தாஸ் சொல்லவில்லை. சகல புராணங்களும் இதிகாசங்களும் வேதங்களும் சொல்கிறது இதை . உனக்குத்தெரியாதா என்ன?
Rama was born in the Raghu clan
Krishna found his home in Gokula.
Words fail to tell of
the Lord's love
universal, all-embracing;
Dhruva was a Kshatriya,
Prahlada a demon and Vidura the son of a maid:
yet the Lord gave them his supreme love,
Krishna washed the devotees' feet
at the Rajasuya.
The Lord is the slave
of his devotees
age after age.
The tongue can't relate
his countless deeds.
Says Suradasa, the Puranas and Vedas
are witness to these
No comments:
Post a Comment