Saturday, October 21, 2017

ராமன் தங்கை சீதை. ராவணன் தந்தை ராமன்

ராமன் தங்கை சீதை. ராவணன் தந்தை ராமன்! -- j.k. sivan

தமிழில் அதிசயம் அற்புதம் என்ற வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்ட தனிச்சிறப்பு கொண்ட சில எழுத்துகள் எளிய பாடலாக உள்ளன. யார் எழுதியது? எப்போது? எந்த சந்தர்ப்பத்தில்? இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. நாம் தான் நிறைய நல்ல விஷயங்களை இழந்து விடுபவர்களாயிற்றே. தங்கம் இருக்கும்போது தகரத்தின் பின் ஓடுபவர்களாயிற்றே. !

இன்று காலை சில பழந்தமிழ் பாடல்களை நாடி ஓடினேன்.

பி.நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ். வித்யா ரத்நாகரம் பிரஸ் ஸில் 1940ல் ஒரு அணாவிற்கு ஒரு அரும்பெரும் பரிசை கொடுத்திருக்கிறார். ஓரணாவா? ஆறு பைசாவா? அதற்கு ஒரு புத்தகமா? இப்போது சிரிக்கிறவர்கள் நூறு வருஷங்களுக்கு முன்பு இதை யோசித்தால் ஆஹா ஒரு அணா கிடைக்க எவ்வளவு பாடு படவேண்டும் என்று புரிந்திருக்கும். இதோடு நிறுத்திக் கொள்வோம். inflation, எகனாமிக்ஸ், இதற்குள் போனால் சொல்ல நினைத்தது மறந்து போகும். நீங்களும் மேலே படிக்க மாட்டீர்களே.

இந்த ஓரணா புஸ்தகத்தில் ஈடு இணையற்ற மதிப்பு வாய்ந்த பல தமிழ் பாடல்கள் உள்ளன! யார் யாரோ எப்போதோ எழுதியவை! ''தனிப் பாடல் திரட்டு'' என்று பெயர் கொடுத்து அந்த பாடல்களை ராமநாதபுரம் ராஜா சமஸ்தானத்தை சேர்ந்த மகா ராஜ ராஜ ஸ்ரீ பொன்னுசாமித் தேவர் அனுமதியோடு அந்த தமிழ் பாடல்களை தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் காஞ்சிபுரம் தமிழ் வித்துவான் கச்சபாலய அய்யர் என்பவர் பரிசோதித்ததாக விஷயம் இருக்கிறது !!!

இந்த தனிப்பாடல்களை பற்றி நாலைந்து வருஷம் எழுதும் அளவுக்கு சரக்கு கைவசம் உள்ளது. பார்க்கலாம். இறைவன் சக்தி அளித்தால் முடியலாம். இப்போதைக்கு ஒரு மாடல், ஓர் சாம்பிள் சரக்கு தரட்டுமா? பிடிக்கிறதா என்று சொல்லுங்கள்.

''வீமனுக்கு மைந்தனார் வேதனாகும்
வேதனுக்கு மைந்தனார் ஈசனாகும்
காமனுக்கு மைந்தன் வீமன் தம்பி
கந்தனுக்கு மாமனார் காமன் தானே
மாமனுக்கு முன் தமையன் தந்தை காலன்
வையகத்தில் இம்முறை வழங்கலாலே
ராமனுக்கு சீதை தங்கை தானே?
ராவணனுக்கு தகப்பன் ராமன் தானே ?''

இது என்ன பேத்தல். உனக்கு வேறு வேலை எதுவும் இல்லையா முட்டாளே! என்று என்னை ஏசுவது எளிது. ஆனால் மேலெழுந்தவாறு மனதில் படுவதற்கும் உள்ளர்த்தமும் எனக்கும் ஒபாமாவிற்கு உள்ள பொருத்தம்.

இதோ விளக்கம்:
1. வீமனுக்கு மைந்தனார் வேதனாகும் - வீமனுக்கு மைந்தன்: ப்ரம்மா ! -எப்படி?
வீ =பறவை, மன்= மன்னன் -கருடனுக்கு மன்னன் திருமாலின் பிள்ளை பிரும்மா

2.வேதனுக்கு மைந்தனார் ஈசனாகும் - ப்ரம்மாவின் பிள்ளை :சிவன் - எப்படி?
வேல்+தனக்கு = வேதனுக்கு - வேல்= மூங்கில்
திருநெல்வேலியில் மூங்கில் காட்டில் புதையுண்டு சிவன் வெளிப்பட்டதால் ,மூங்கிலின் மகன் ஆனார்.

3.காமனுக்கு மைந்தன் வீமன் தம்பி - இந்ந்திரனின் பிள்ளை : அர்ஜுனன் - எப்படி?
கா=சோலை ,கற்பகச் சோலையின் தலைவனான இந்திரனின் புதல்வன் வீமனின் தம்பியான அர்ஜுனன்

4. கந்தனுக்கு மாமனார் காமன் தானே - எப்படி
காமன்=சோலையின் தலைவன் இந்திரன் மகள் தேவயானியை மணம் செய்து கொண்டான் கந்தன்
5.மாமனுக்கு முன் தமையன் தந்தை காலன் - இந்த உறவு எப்படி?
மா=குதிரை ,மன்=தலைவன் - குதிரையின் தலைவன் நகுலனின் அண்ணன் தருமனின் தந்தை காலன் (யமன்)
எமதர்மராஜா. தர்ம ராஜா.

6 ராமனுக்கு சீதை தங்கை தானே ? - அக்ரமமாக இருக்கிறதே. எப்படி என்று சொல்லித்தொலையுமே?
ரா +மன் =இரவின் தலைவனாகிய சந்திரன். பாற்கடலைக் கடையும்போது முதலில் தோன்றியது சந்திரன் அடுத்ததாக பின்னால் தோன்றினாள் மகாலட்சுமி .எனவே சந்திரனின் தங்கை மகாலக்ஷ்மியான சீதை

7. ராவணனுக்கு தகப்பன் ராமன் தானே? - இந்த அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு எப்படி உண்மை?
ரா +வண்ணன் =இரவு நிறம் கொண்ட மன்மதன்
மன்மதனுக்குத் தந்தை திருமால் ,அதாவது திருமாலின் அவதாரமாகிய ராமன்

இது மாதிரி தமிழ் பாடல்கள் சொல்ல ஆரம்பித்தேனானால், சட்டையை கிழித்துக்கொண்டு சிரித்துக்கொண்டு தெருவில் ஓடுவீர்கள். சொல்லட்டுமா?

1 comment:

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...