'நவ இந்தியாவின் சிற்பி. இரும்பு மனிதன். இருநூறு கோடி ரூபாயில் ''ஒற்றுமையின் சிலை'' ஒன்று.
ஏன்யா இந்த பணத்தை உருப்படியாக ஜனங்களுக்கு ஏதாவது செய்யக்கூடாதா? என்று எதிர்ப்பு வேறு.
இந்த ஆசாமியின் கனவில் தேசம் தான் திரும்ப திரும்ப வந்ததே தவிர அவர் நேசம் வேறு எவர் மீதும் சொல்லவில்லையாம். அவர் இன்னும் கொஞ்சம் காலம் இருந்திருந்தால் நாமும் நமது நாடும் எப்படியெல்லாமோ இருந்திருக்கும். சில வம்சங்கள் தலையே தூக்கி இருக்காது. சுபிக்ஷம் பெருகி இருக்கும்.
எப்படி சொல்லமுடியும்? என்று கேட்கலாம்.
அந்த மனிதர் காந்தியவாதி. காந்தி அரசியலில் தலையிடவில்லை. தன்னை இந்த நாட்டின் சுதந்திரம் வேண்டிய தியாகியாக மட்டும் நிறுத்திக்கொண்டார். காங்கிரஸ் என்கிற இயக்கம் கலையவேண்டும் என்கிறார். நடக்கவில்லையே. அவர் பேச்சை யாரும் கேட்கவில்லையே. அதால் வந்த வினை இன்னும் தீரவில்லையே.
இரும்புமனிதர் காந்தியவாதி என்றாலும் சுத்தமான மனதும் கைகளும் கொண்ட தேச தொண்டர். சிறந்த நிர்வாகி. நேர்மையானவர். காந்தியின் வலது கை.
இந்த நாட்டின் உள்துறை மந்திரியாக, உதவி பிரதமராக பணியாற்றி 565 தனித்தனி சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரே வருஷ காலத்தில் இந்தியாவை ஒரு தனி நாடாக்கிய பெருமை அந்த மனிதரை சேரும்.
ஐயகோ இன்னும் சில வருஷங்கள் நீங்கள் இருந்திருக்க கூடாதா?. எத்தனையோ தலைமுறைகள் உங்களை தெய்வமாக போற்றி சுகமாக வாழ்ந்திருப்போமே.
அவர் பிறந்த நாள் 31 அ க்டோபர். எல்லோரும் மறந்த நாள்.
அவர் பெயர் தாங்கி சில தெருக்கள் சர்தார் வல்லபாய் படேல் தெரு என வழிகாட்டுகின்றன. நாட்டுக்கே வழிகாட்டியவர் ரோட்டுக்கு வழிகாட்டியாக நிற்கிறார்.
No comments:
Post a Comment